அயோத்தி தீர்ப்பு
நாகேஸ்வரி அண்ணாமலை
1950இல் தாக்கல் செய்யப்பட்ட அயோத்தியில் இருக்கும் ராமஜென்மபூமி / பாபர் மசூதி பற்றிய, அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் இந்தியாவிற்கே உரிய சிறப்பான முறையில் – எந்த வழக்கையும் இரண்டு தலைமுறைகளுக்காவது இழுத்துவிடும் இந்திய நீதிமன்றங்களின் நடைமுறைப்படி – அறுபது வருஷங்களுக்குப் பிறகு தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பல கட்சித் தலைவர்களும் என்ன ஆகுமோ என்று பயந்து அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு அறிக்கை விட்டிருந்தனர். அவர்கள் பயந்தது பொய்த்துப் போய்விட்டது. ஆனால் மக்கள் அமைதி காத்ததற்கு அவர்கள் கூறும் காரணம்தான் சரியாகப்படவில்லை.
பாபர் காலத்திலிருந்து முஸ்லீம் அரசர்கள் ஆண்டுவந்த போதிலும் பொதுமக்கள் – இந்துக்களும் முஸ்லீம்களும் – எந்த வித பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக தங்கள் தங்கள் கடவுள்களை வழிபட்டு வந்திருக்கிறார்கள். காசியில் இருக்கும் விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஒரு மசூதி இருப்பதே இதற்கு ஒரு சான்று. பாபர் தன்னுடைய இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்ப முயன்றாலும் இந்துக்களையும் அவர்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கு அனுமதித்தது வரலாறு.
வழி வழியாக இந்துக்களும் முஸ்லீம்களும் அயோத்தியில் இருக்கும் இந்தப் பிரச்சனைக்குரிய இடத்தில் அருகருகே வழிபட்டு வந்திருக்கிறார்கள். ஒரு முறை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தகராறு ஏற்படலாம் என்ற நிலை வந்த போது பிரிட்டிஷ் அரசுதான் முதல் முதலாக இந்துக்களும் முஸ்லீம்களும் தனித் தனியாக வழிபடுவதற்கு வழி செய்தது. முஸ்லீம்கள் வழிபாட்டு இடத்திற்கு உள்ளேயும் இந்துக்கள் வெளியேயும் வழிபடுவதற்கு வழி செய்தது. பாபர் இந்த இடத்தில் மசூதி கட்டிய 1528அம் ஆண்டிற்கும் பிரிட்டிஷ் அரசு இரு மதத்தாரும் தனித்து வழிபட வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததற்கும் இடையில் இந்த இடம் பற்றி யாரும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு 1949ஆம் ஆண்டு யாரோ ஒரு இந்துமத அடிப்படைவாதி குழந்தை ராமர் சிலையைத் திருட்டுத்தனமாக இந்தக் கோவிலுக்குள் வைத்து அங்கு ராமர் பிறந்திருக்கிறார் என்று இந்துக்களை நம்பவைத்த வரையும் கூட இந்த இடத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அதற்கு மறு ஆண்டு இந்துமத அடிப்படைவாதிகள் அந்த இடம் இந்து மதத்திற்குச் சொந்தமானது என்று கோரி வழக்குப் போட்டனர். அப்போது ஆரம்பித்த இந்த வழக்கு, இரண்டு மதத் தலைவர்களும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால் இன்னும் பல காலம் தொடர வாய்ப்பிருக்கிறது.
ஷாபானு வழக்கில் முஸ்லீம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் கிடைக்க வழிசெய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நீர்த்துப் போகும்படி கணவன்மார் விரும்பினால் மட்டுமே ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஒரு சட்டத்தை இயற்றினார். முஸ்லீம் அடிப்படைவாதிகளை இது திருப்திப்படுத்திய அதே சமயத்தில் இந்துமத அடிப்படைவாதிகளின் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இரு தரப்பு வாக்காளர்களின் ஓட்டுகளும் வேண்டும் என்பதற்காக இந்துக்களைத் திருப்திப்படுத்த இந்துக்களுக்கு இந்த இடத்தைத் திறந்துவிட்டது இந்தப் பிரச்சினையை மேலும் அதிகரித்தது.
1950-லிருந்து 1985 வரை அவ்வளவாக அக்கறை காட்டப்படாமல் இருந்த இந்த இடம் 1992இல் பி.ஜே.பி. கட்சியின் ஆதரவாளர்கள் மசூதியை இடித்துத் தள்ளிய பிறகு இரு மதத்தாருக்கும் இடையே பகைமை வளரக் காரணமாக அமைந்தது. மேலும் இதன் விளைவாக ஏற்பட்ட பம்பாய் கலவரத்தில் பல முஸ்லீம்கள் உயிர் இழந்தனர்.
இப்போது, மக்கள் பக்குவம் அடைந்துவிட்டார்கள், இளைய தலைமுறைக்கு இந்த மாதிரி விஷயங்களில் அக்கறை இல்லை என்று அரசியல்வாதிகள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை. இவர்களும் மதத் தலைவர்களும் மீடியாக்களும் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் இருந்தாலே பொதுமக்கள் இதைப் பற்றி யோசிக்காமல் இருப்பார்கள்.
பிரச்சினைக்கு உரியதாகக் கருதப்பட்ட இந்த இடத்தைப் பகிர்ந்து இரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுத்திருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு சர்ச்சைக்குரியது. மசூதி இருந்த இடத்திற்குக் கீழே கோவில் இருந்தது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் மசூதி இருந்த இடத்தை இந்துக் கோவில் கட்டுவதற்குக் கொடுத்திருப்பது சரியாகப்படவில்லை. மசூதி இருந்த இடம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது எங்கள் வெற்றிக்கு ஒரு அடையாளம் என்று இந்து மதத் தலைவர்கள் பீற்றிக்கொள்ள வேண்டியதில்லை. மேலும் முழு இடமும் வேண்டும் என்பதற்காகத் தலைமை நீதிமன்றத்தில் முறையிடப் போகிறார்களாம். எல்லா மதத்தினரும் வழிபடும் இடமாக இதை மாற்றியிருக்கலாம் என்பது என்னுடைய ஆசை. அல்லது பிரச்சினைகள் நிறைந்த இந்தியாவில் அறுபது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை இரு தரப்பாரும் ஏற்றுக்கொண்டு இதோடு விட்டுவிடலாம்.
மதங்களின் பெயரால் எத்தனை கொடுமைகள் உலகில் நடந்திருக்கின்றன? மக்களுக்கு முதிர்ச்சி ஏற்பட்டிருப்பதால் அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லும் அரசியல்வாதிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் என்று முதிர்ச்சி ஏற்படும்? இருபத்தோரம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மக்கள் எப்போது அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் தங்களின் நன்மைக்காக மட்டுமே மக்களைத் திசை திருப்புகிறார்கள் என்பதை உணரப் போகிறார்கள்?
எப்படி எந்த இனமும் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததில்லையோ அதே மாதிரி எந்த மதமும் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததில்லை என்ற எண்ணம் மக்களுக்குப் புரிய வேண்டும். எந்த மதமும் பிறருக்குத் தீங்கு இழைக்கும்படி உபதேசிப்பதில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த மதம் பெரும்பாலானவர்கள் பின்பற்றும் ஒரு மதமாக வளர்ந்திருக்காது. அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அந்த மதத்தின் கோட்பாடுகளைத் திரித்திருக்கிறார்கள். எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் தோன்றியவைதான். இதை எல்லோரும் உணர்ந்தாலே உலகில் மத இணக்கம் எளிதாக ஏற்பட்டுவிடும்.
மனிதனுக்கு – அல்லது மனிதர்களில் பலருக்கு – இறைவன் தேவைப்படுகிறது. இறைவனிடம் முறையிடுவதற்கோ பாராட்டுவதற்கோ அல்லது நிந்திப்பதற்கோ எந்த மதத்தின் மூலமாகவும் மனிதன் இறைவனிடம் தொடர்பு கொள்ளலாம். இதில் மதத் தலைவர்கள் எதற்கு? உலகின் மத சம்பந்தப்பட்ட முக்கால்வாசிப் பிரச்சினைகள் மதத் தலைவர்களால் ஏற்பட்டவைதான். இவர்கள் உதவி தேவையில்லை என்னும் பக்குவம் மனிதர்களுக்கு ஏற்படும் நாள்தான் மனித குலத்தின் பொன்னான நாள்.