எளிய மக்களின் பண்பாட்டை வெளிச்சப்படுத்திய மானுடவியல் ஆய்வாளர் 

-மேகலா இராமமூர்த்தி

தமிழகத்தின் பண்பாடு மிகப் பழமையானது, செழுமையானது என்பதற்குச் சங்க நூல்கள் சுட்டிக்காட்டும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் சான்றாய்த் திகழ்கின்றது. காலப்போக்கில் தமிழரல்லாதோரின் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதன் மூலமாகவும் வடநாட்டுச் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொண்டதன் காரணமாகவும் தமிழ்மக்களின் வாழ்விலும் பண்பாட்டுக் கூறுகளிலும் மாற்றங்கள் பல ஏற்பட்டன.

இவ்வாறு நம் மக்களிடையே ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள் என்னென்ன என்பதை மானுடவியல் நோக்கில் ஆய்வுசெய்து ஆவணப்படுத்தியவர்கள் நம் தமிழகத்தில் வெகுசிலரே ஆவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மயிலை சீனி வேங்கடசாமி, நா. வானமாமலை போன்ற அறிஞர்கள். அவ்வரிசையில், நம்மிடையே வாழ்ந்து அண்மையில் மறைந்த, தொ.ப. என்று சுருக்கமாய் அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

”வரலாறு என்பதே சாமானிய எளிய மக்களின் வரலாறுதான்” என்பார் நாட்டார் வழக்காற்றியலுக்கு வெளிச்சம் பாய்ச்சிய பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அந்தச் சாமானிய மக்களின் வரலாற்றை – வாழ்வியலை அதற்குள் புதைந்துகிடக்கும் பண்பாட்டு அசைவுகளைத் தேடித் தொகுப்பதையும் அவை குறித்து உரையாடுவதையுமே தம் வாழ்நாள் நோக்கங்களாகக் கொண்டிருந்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். அந்த ஆய்வியல் அறிஞரின் வாழ்வையும் பணிகளையும் சிறிது சிந்திப்போம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950இல் பிறந்த தொ.பரமசிவன் அவர்கள்,  மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொருளாதாரமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் பயின்றார். அதன்பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராய்ப் பணியாற்றிய அவர், 1976இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மாணவராய்ச் சேர்ந்தார்.

முனைவர்ப் பட்டம் பெறுவதற்கு புதுமைப்பித்தன் குறித்து ஆய்வுசெய்ய அவர் எண்ணியிருந்த நிலையில், அவருடைய ஆய்வுநெறியாளர் மு. சண்முகம் பிள்ளையவர்கள், கோயில் குறித்துஆய்வு மேற்கொள்ளும்படிக் கூறவே, மதுரையிலுள்ள அழகர் கோயிலைத் தமது ஆய்வுப் பொருளாய்த் தெரிவுசெய்தார் தொ.ப.

அழகர் கோயில் எனும் அவருடைய ஆய்வேடு, கோயில் குறித்து அதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த ஆய்வுகளைப் போல் கோயிலின் வரலாற்றையும் அதன்மேல் பாடப்பட்டுள்ள தலபுராணங்களையும், அக்கோயிலைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ள பனுவல்களையும் பட்டியலிடும் பணியைச் செய்யவில்லை. மாறாக, அக்கோயிலைச் சுற்றி வாழ்ந்த எளிய மக்களைப் பற்றியும் அம்மக்களுக்கும், அழகர் கோயிலுக்கும் இருந்த பண்பாட்டுப் பிணைப்பையும் வெளிப்படுத்தியது. ஊகங்களின் அடிப்படையிலோ வேறு நூல்களின் கருத்துக்களை வழிமொழிந்தோ எழுதப்பட்ட ஆய்வேடு அன்று அது! அழகர்கோயில் பகுதியில் தங்கியிருந்து கள ஆய்வுசெய்து திரட்டிய உண்மைகளையே அதில் வகுத்தும் தொகுத்தும் தந்திருக்கின்றார் தொ.ப.

அவ்வகையில் ஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை எப்படி உழைத்து உருவாக்கவேண்டும்  என்பதற்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாய் விளங்குகின்றது. இந்த ஆய்வேட்டை ஏற்று தொ.ப.வுக்கு முனைவர்ப்பட்டம் வழங்கிய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமே இதனை நூலாகவும் வெளியிட்டிருப்பது இந்நூலின் தரத்திற்கும் தனித்தன்மைக்கும் சான்று பகர்கின்றது.

பேராசிரியர் தொ.ப. அவர்கள் இளையான்குடி ஜாகிர் ஹுசேன் கல்லூரி, மதுரைத் தியாகராசர் கல்லூரி, அதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர்.

தொ.ப.வின் குறிப்பிடத்தக்க படைப்புக்களாக விளங்குபவை தெய்வம் என்பதோர், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், சமயம் – ஓர் உரையாடல், பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு, சமயங்களின் அரசியல், உரைகல், மரபும் புதுமையும், இதுவே சனநாயகம், தொ.பரமசிவன் நேர்காணல்கள் முதலியவை.

இவற்றில் ‘தெய்வம் என்பதோர்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பழந்தமிழரின் தாய்தெய்வ வழிபாடுகள் குறித்தும் அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விளக்குகின்றார் தொ.ப.

குறிஞ்சி நிலத்தில் முருகு எனும் இயற்கை அழகு முருகனாக வளர்ச்சிபெற்றபோது அங்குள்ள நிலப்பகுதிகளில் செழுமையின் அடையாளமாய் எங்கும் வளர்ந்திருந்த வள்ளிக்கொடி வள்ளி எனும் பெயரில் அவனுக்கு மனைவியாக்கப்பட்டாள் என்கின்றார்.

நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் மலைப்பகுதியிலுள்ள பகவதியம்மன் கோயில் அடிப்படையில் அம்பிகா யட்சி எனும் சமணப் பெண் தெய்வத்தின் கோயிலாகும் என்கின்ற உண்மையை ‘ஒரு சமணக் கோயில்’ எனும் தலைப்பில் விளக்குகின்றார்.

சடங்கியலில் தலைமை இடம்பெற்றிருந்த முடிதிருத்துவோர், வண்ணார், வள்ளுவர் முதலிய சாதியார் தம் தலைமையைப் பார்ப்பனரிடம் பறிகொடுத்துக் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட சாதியார் ஆயினர் என்கின்ற வரலாற்றை இந்நூல் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

சிறு தெய்வங்கள் என வகைப்படுத்தப்பட்டுவிட்ட நாட்டார் தெய்வங்களுக்கும் வைதிக நெறியில் வளர்ச்சிபெற்றிருக்கும் பெருந்தெய்வங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை விளக்கவரும் தொ.ப., நாட்டார் தெய்வங்கள் சுதந்தரமானவை; ஒரு குறிப்பிட்ட சாதியாருக்கு மட்டுமே சொந்தமானவை என்ற கட்டுக்குள் அடங்காதவை. நிறுவனப்படுத்தப்பட்ட அதிகார மையம் என்று அவற்றுக்கு எதுவும் இல்லை. ஆனால், பெருந்தெய்வங்களின் நிலைவேறு. அவை நிறுவனப்படுத்தப்பட்ட தலைமைப் பீடம், வழிபடுநூல், புனித வழிபாட்டுத் தலங்கள், பொதுவான பூசைமுறை என்று பல அடிப்படைத் தேவைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அத்தோடு நாட்டார் தெய்வங்களெல்லாம் காவல் தெய்வங்களாக நிற்பவையே அன்றி வரமளிக்கும் தெய்வங்களாக முன்னிற்பவை அல்ல என்று பல செய்திகளைத் தம் கள அனுபவங்களின் அடிப்படையில் நமக்கு அறியத் தருகின்றார்.

பேராசிரியர் தொ. பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’ என்ற நூல் அவருக்கு நல்லதோர் அறிமுகத்தையும் பரவலான வாசகர் வட்டத்தையும் தமிழ்கூறுநல்லுலகில் உருவாக்கித் தந்தது எனில் மிகையில்லை.

இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரும், வரலாற்றுப் பேராசிரியருமான முனைவர் ஆ. இரா வேங்கடாசலபதி அவர்கள், தொடர்ந்து வாசிக்கவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வலிமை இழந்துபோன நம் இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. முற்போக்காளர்கள் சிலர் கருதுவதுபோல் இது பழமை பாராட்டுதல் அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான் என்கிறார் நச்சென்று!

தொ.ப.வின் எழுத்துப்பணி மட்டுமல்லாது அவருடைய உரையாட்டுத் திறமும் சிறப்புவாய்ந்தது என்று குறிப்பிடும் வேங்கடாசலபதி, தொ.ப.விடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்துபெற்ற பட்டறிவும் உடன் உரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சுவதும், பழகிப்பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்லிலிருந்தோ தொடரிலிருந்தோ சமூகப் புரிதலைச் சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப.வின் கருத்துப் புலப்பாட்டு முறையாகும். விண்ணிலும் மண்ணிலுமாக மாறிமாறி மாயஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையோடு ஒப்பிடத் தகுந்தது தொ.ப.வின் கருத்துப் புலப்பாடு எனக்கூறி வியக்கின்றார்.

ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு ஊடும் பாவுமாகப் பிணைந்திருக்கின்றன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது என்று வேங்கடாசலபதி உரைப்பது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்பதனை அறியப்படாத தமிழகம் நூலை வாசிப்போர் ஐயமின்றி அறிந்துகொள்ளலாம்.

சான்றுகளாகச் சிலவற்றைச் சுட்டுகின்றேன்.

நீரானது வானிலிருந்து சுரந்து உலக மக்களைப் புரந்துவருவதால் அதனை அமிழ்தம் என்று போற்றும் நம் வள்ளுவர், மழைதருகின்ற மேகத்தை எழிலி என்ற அழகிய சொல்லால் குறிப்பிடுவார்.

அதுபோலவே நீர்நிலைகளுக்கும் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பலவாகும் எனக் குறிப்பிடும் தொ.ப., சுனை, கயம், ஊற்று, பொய்கை முதலியவை தாமே நீர்கசிந்த பகுதிகளாகும்; குட்டை என்பது மழைநீரின் சிறிய தேக்கமாகும்; குளித்து உடலைக் குளிர்விக்கப் பயன்படும் நீர்நிலை குளம்; ஊர்மக்கள் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி; ஏர்த்தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி; மழைநீரை மட்டுமே ஏந்திநிற்கும் நீர்நிலை ஏந்தல்; கண்ணாறுகளை உடைய நீர்நிலை கண்மாய் என்று விவரிக்கும்போது நம் தமிழ்மக்களின் நுண்மாண் நுழைபுலத்தையும் அதனை எடுத்துவிளக்கும் தொ.ப.வின் ஆராய்ச்சித் திறத்தையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.

தமிழர்தம் உணவுமுறையை விளக்குமிடத்து, பண்டைத் தமிழர் உணவு வகைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் உணவில் சுட்டும் அவித்தும் வேகவைத்தும் வறுத்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே மிகுதி.

எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, பகோடா, வடை, காரச்சேவு போன்றவையெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பழக்கங்களே. குறிப்பாக விஜயநகர ஆட்சிக்காலத்தில்தான் பொரிப்பதற்கு நாம் பெரிதும் பயன்படுத்தும் கடலை எண்ணெய் தமிழகத்தில் அறிமுகமானது என்கின்றார் தொ.ப.

ஈதொப்பவே, சமையலில் காரத்துக்கு அன்று மிளகைத்தான் கறி என்ற பெயரில் பழந்தமிழர் பயன்படுத்தி வந்தனர். யவனர் என்று அழைக்கப்பட்ட கிரேக்கரும் உரோமரும் தங்கள் நாட்டிலிருந்து பொன்னையும் மதுவையும் தம்முடைய மரக்கலங்களில் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கிவிட்டுச் சேரநாட்டு முசிறித் துறைமுகத்திலிருந்து ’கறி’யை அதாவது மிளகை தம் நாட்டுக்குக் கொண்டுசென்ற செய்தியை அகநானூறு,

”யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”
(அகம்: 149)

என்று குறிப்பிடுவது தமிழகத்து மிளகின் சிறப்பைப் புலப்படுத்துகின்றது. இறைச்சி உணவு சமைப்பதற்கு இந்தக் கறியைத் துணைப்பொருளாகத் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தியமையால் இறைச்சியே பிற்காலத்தில் கறி என்று பெயர்பெற்றது என்கின்ற தொ.ப.வின் கூற்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

கி.பி. 15ஆம் நூற்றாண்டளவில்தான் சிலியிலிருந்து (Chile) மிளகாய் தமிழ்நாட்டில் நுழைந்தது என்பதையும் இந்நூல் வாயிலாய் அறிகின்றோம்.

சோறிடுதலை ஓர் அறமாகவே நெடுங்காலம் செய்துவந்தவர்கள் தமிழர்கள். ”உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” எனும் கோட்பாட்டினர். சோற்றையும் நீரையும் விற்பதில்லை என்பது தமிழர் பண்பாடு. அந்தப் பண்பாட்டைச் சிதைத்த பெருமை ஆங்கிலேயரைச் சாரும். அவர்கள் ஆட்சியில்தான் ஹோட்டல் எனப்படும் உணவு விற்கும் விடுதிகள் தமிழகத்தில் அறிமுகமாயின என்று வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு எத்தனையோ அரிய செய்திகளை எளிய சொற்களில் தாங்கிநிற்கின்றது அறியப்படாத தமிழகம் எனும் தொ.ப.வின் நூல்.

தமிழ் வைணவத்தைத் தூக்கிப் பிடிக்கின்றார் தொ.ப. என்ற விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டதுண்டு. ஆனால், அழகர் கோயில் என்ற தம்முடைய ஆய்வேட்டில் புகழ்பெற்ற திருமால் கோயிலாக இன்று திகழ்கின்ற அக்கோயில் முன்பு பௌத்தக் கோயிலாக இருந்தது என்று அவர் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்து, சமயப்பற்றைக் கடந்த அவரின் ஆய்வு நேர்மையையும், காய்தல் உவத்தலற்ற நடுவுநிலையான அணுகுமுறையையும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம், அரசியல் போன்ற பல்துறைசார்ந்த செய்திகளையும் கள ஆய்வுகளின் அடிப்படையிலும் தாம் கற்றறிந்தவற்றின் அடிப்படையிலும் நேரிய முறையில் பதிவுசெய்துவிட்டு மறைந்திருக்கின்றார் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள்.

அவர் தமிழர்க்கு அளித்துச் சென்றிருக்கும் இந்த அறிவுக் கருவூலம் மகத்தானது. அரிதின் முயன்று அவர் உருவாக்கியிருக்கும் அவருடைய படைப்புக்கள், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடங்களாக வைக்கப்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை பரவலாக மக்கள் திரளைச் சென்றடையும். அவரை அடியொற்றிப் பல ஆய்வாளர்கள் உருவாவதற்கும் அவை வழிவகுக்கும். அதுவே அவர் தமிழ்மக்களுக்குச் செய்திருக்கும் மகத்தான தொண்டுக்கு நாம் செய்கின்ற சிறிய கைம்மாறாகவும் இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எளிய மக்களின் பண்பாட்டை வெளிச்சப்படுத்திய மானுடவியல் ஆய்வாளர் 

  1. வணக்கம்! வல்லமைக்கு வாழ்த்துக்கள்!
    கடலைச் சுருக்கித் தந்திருக்கிறார் கட்டுரையாளர். பயன் தெரிவார் எண்ணிக்கையில் குறைவெனினும் என்னைப் போன்ற முதியவர்களுக்கு இது ஒரு சத்து மாத்திரை.
    அறிஞர்களை அறிவதும் அவர் எழுதிய நூல்களைக் கற்பதும், அவர் பற்றிக் கேட்டறிவதும் அவர் பற்றி எழுதியவற்றைப் படிப்பதும் எண்ணுவதும் முதுமைக்கு மருந்து.
    கட்டுரையாளர் ஐயா தொ.ப. அவர்களின் நூல்களைக் கல்வி நிலையங்களுக்குப் பாடமாக வைக்கச் சொல்லுவது தமிழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்களின் நிலையைப் புரிநது கொள்ளாமல் செய்யப்பட்ட பதிவாகவே நான் எண்ணுகிறேன். இது என் கருத்து.
    இங்கே எந்தப் பேராசிரியரும் படிப்பதில்லை.
    இலட்சக்கணக்கில் ஊதியம் பெறும் பேராசிரியர்களில் வீட்டு நூலகம் வைத்திருப்போர் ஒரு விழுக்ககாடு கூடத் தேராது!
    அது மட்டுமன்று தமிழத்துறை சார்ந்த எதிலும் யார்க்கும் ஆர்வமோ பிடிப்போ இல்லை. எல்லாமே வேலைவாயப்பாகப் போய்விட்டதால் ஒரு வையாபுரிபிள்ளையையோ ஒரு உவேசாவையோ ஒரு பாவாணரையோ ஒரு வாரியார் சுவாமிகளையோ ஒரு கிவாஜவையோ ஒரு சதாசிவப் பண்டாரத்தாரையோ இனிப்பார்ப்பது அவ்வளவு எளிதன்று
    ஒரு நல்ல நூலை நலல முறையில் அறிமுகம் செய்தாலே போதும். கண்ணதாசன் கவிதையை அல்லது திரையிசைப பாடல்களைப் பாடமாக வைத்தால் பல பேர் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் வாங்க மாட்டார்கள்.
    ஒரு நூலின் வெற்றி கல்வி நிலையச் சுற்றுச் சுவருக்குள் இல்லை!
    அது பொதுமக்களின் சங்கமத்தில் இருக்கிறது.

    ஐயா தொ.ப.வை பற்றிய இந்தக் கட்டுரை ஆயிரம் பெறும்!
    கட்டுரையாளர்க்கு நன்றியும் வணக்கமும்!

    மாறா அன்புடன்
    ச.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *