வித்யாசாகர்

முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்;

என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாதத் தவணையில் பணம் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்;

முடியாவிட்டாலும்
எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;

உதவி செய்யப் போனால் கூட
“வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா?”
என்பாள்.

என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து “எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையா”யென்று கேட்பாள்;

இப்போது எனக்கென்று யாருமேயில்லை.

நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???

அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கே சென்று
அவள் இருந்த இடத்தை, தொட்ட பொருட்களை யெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாளென்று கூட நினைப்பேன்.

ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்’

இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்து வைத்து
அழுதிருப்பாள்??

அந்த ஒரு சொட்டுக்கண்ணீரேனும்

ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? எனத்
தோன்றும்.

ஆனால்,
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
“அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலை”யென்று!!

 

படத்திற்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க