சு.கோதண்டராமன்

அம்மையாரின் அன்பு வழி

அம்மையாருக்கு இறைவன் மேல் அன்பு ஏற்பட்டது எப்பொழுது? பிறந்தது முதலே என்று அவர் கூறுகிறார். மழலை பேசத் தொடங்கியதிலிருந்தே இறைவனுக்கு நாமாலை சூட்டத் தொடங்கினார் அவர். ‘எனக்கே அருளாவாறு என்கொல்’ என்று உரிமையோடு சண்டைக்குப் போகிறார். ஆனால், “இறைவன் என் துன்பத்தைக் களையாமல் மீண்டும் பிறக்க வைத்தாலும் என் அன்பு அறாது, அவனல்லாத பிறர்க்கு ஆளாக மாட்டேன், எழுபிறப்பும் அவனுக்கே ஆளாவேன்” என்கிறார்.

இவ்வாறு, தான் அம்மானுக்கு ஆட்படக் கிடைத்த வாய்ப்பு, தன் தவப் பயனாய்க் கிடைத்தது என்றும் இது பெறற்கரிய பேறு என்றும் அவர் மகிழ்கிறார். “உன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன். உன்னை அன்பாலே போர்த்து நெஞ்சினுள் அடைத்து வைத்து விட்டேன். அதில் வேறு யாருக்கும் இடமில்லை. என் நெஞ்சம் நல்ல நெஞ்சம். தனக்கு நன்மை தருவது எது என்று அறிந்து கொண்டு விட்டது. அதனால் காலனையும் வென்றோம், கடுநரகம் கை கழன்றோம், பிறவிக் கடலை நீந்தி விட்டோம்” எனப் பெருமைப்படுகிறார். இந்தப் பெருமித உணர்ச்சி வளர்ந்து செருக்காகவே ஆகிவிட்டதாம். “எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இது கொலோ சிந்தையார்க்கு உள்ள செருக்கு” என்று தன் சிந்தையைப் பார்த்து வியக்கிறார்.

பாரதியின் உள்ளத்தில் இருந்த நந்தலாலா காக்கைச் சிறகினிலும் பார்க்கும் மரங்களிலும் தோற்றம் காட்டியதைப்போல, அம்மையாருக்கும் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் செஞ்சடைப் பெம்மானாகவே தோன்றுகிறது. கார் கால வெள்ளம் அவருக்குக் கங்காதரனை நினைவூட்டுகிறது. பூத்துச் சொரிகின்ற கொன்றை மரம் அவருக்குக் கொன்றை மாலை அணிந்த குழகனாகக் காட்சியளிக்கிறது. கிரகண வேளையில் நிலவையும் அதை விழுங்க வரும் பாம்பையும் பார்த்ததும் ஆகாயம் விண்ணோர் பிரானின் விரிசடையாகவே தோன்றுகிறது. மேகங்கள் கங்கையாறு போன்று தோன்றுகின்றன. காலை இளஞ் சூரியனின் செந்நிறத்தில் அவர் செம்மேனிப் பெம்மானைக் காண்கிறார். கடும்பகலின் வெய்யில் அவருக்கு வேத முதல்வனின் வெண்ணீறாகத் தெரிகிறது. மாலைச் சூரியனின் பொன்னிறம் சங்கரனின் சடையாகத் தெரிகிறது. இரவின் இருளோ கறைமிடற்றன் கண்டத்தை நினைவூட்டுகிறது.

அம்மையாரின் உறவினரும் சுற்றத்தாரும் அவருடைய இந்தப் பேய்த்தனமான பக்தியைப் பார்த்து குறை கூறினர் போலும். அவர்களைக் குறித்து, “இந்தப் பேய்க் கோலம் எனக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இறைவனிடம் ஆட்பட்ட அன்பு காரணமாக எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் தேவையானது எல்லாம் கிடைத்து விட்டதே. உங்கள் குறை கூறலால் எனக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை” என்கிறார்.

உலகியல் ஆசைகளை எல்லாம் துறந்து இறைவனை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த அம்மையாருக்கும் ஒரு ஆசை இருக்கிறதாம். சாதாரண ஆசை அல்ல, பேராசை. ஈமப் பெருங்காட்டில் இறைவன் பேய்களோடு நடனமாடுவதை ஒரு நாள் காண வேண்டும் என்பது தான் அது. “இறைவனது பேயாய நற்கணத்தில் ஒன்றாக நான் இருந்து அவனுக்குக் கைப்பணி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும். அண்டம் பெறினும் வேண்டேன். பிறிது யாதும் வேண்ட மாட்டேன்” என்கிறார் அவர்.

அம்மையார் நமக்கு அளிக்கும் செய்தி என்ன?

“இறைவனை அடைவதற்கென்று ஒரு முறை உண்டு. அது இல்லாமல் அவனை நீ பெற முடியாது. அவன் புகழை ஓயாது உரை. மனைவி மக்களைச் தஞ்சமென்று எண்ணி அவனடி நினையாது அழிகின்றாய். சாவு வருமுன் நெய்யாடியின் திறம் கேட்டு உய்க. நீ கருதியது எல்லாம் உடனே நிறைவேறும். அவன் இரக்கம் காட்டிவிட்டால் எந்த உயர் நிலையிலும் வைப்பான், எவ்வுலகம் வேண்டுமானாலும் ஈந்தளிப்பான். அவனடியாரை வினைகள் தீண்டா, ஈசனது தொண்டர் பாதத்தைக் குறிக்கோளாகக் கொள்க. அவனடி நினையாதாரை விட்டு நீங்கு” என்று தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவது போல மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.