ஏறன் சிவா

முன்னொரு நாளில் வானத்தில்
முழுமதி உலவும் நேரத்தில் — உன்
கண்ணிரண் டில்நல் ஒளிகண்டேன்
காதல் என்னும் வழிநடந்தேன் — உன்
பொன்னிரு கைகள் தீண்டியதால்
பொழில்தரு மயக்கம் நானுணர்ந்தேன் — என்
விண்ணிரன் டாகி விரிந்ததடி — பெரு
வியப்பினில் உள்ளம் குளித்ததடி!

பின்னொரு நாளில் வானத்தில்
பிறைமதி உலவும் நேரத்தில் — நீ
தனியோர் இடத்தில் தவித்திருந்தாய்
தாமரை முகமாய்ச் சிவந்திருந்தாய் — உன்
பண்செவிக் குழியில் பாய்ந்ததடி — உன்
பார்வையில் உள்ளம் சாய்ந்ததடி! — அன்று
பன்னிரு கோணம் உனில்கண்டேன்
பனிநில வடியில் உனையுண்டேன்!

இன்னொரு நாளில் வானத்தில்
இருள்மதி சூழ்ந்த நேரத்தில் — உன்
கண்ணொரு குளமாய் மாறியதேன்? — அது
கடல்தரு நீராய்க் கரித்ததுமேன்? — அடி
என்னொரு இதயம் பறித்தவளே
எதற்குளங் கலங்கி இருக்கின்றாய் — சொல்
உன்னொருத் திக்கே வாழ்கின்றேன் — உன்
ஒளிமுகத் தால்தான் நீள்கின்றேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *