குறளின் கதிர்களாய்…(394)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(394)
தன்னூண் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.
– திருக்குறள் – 251 (புலால் மறுத்தல்)
புதுக் கவிதையில்…
பெருக்கிடத் தன்னுடலை,
பிறிதோருயிரின் உடலைப்
பிடித்தே யறுத்துப்
புசிப்பவன் எப்படிப்
பேரருளை
ஆள்பவன் ஆவான்-
ஆகமாட்டான்…!
குறும்பாவில்…
தன்னுடலைப் பெருக்கவைக்க
அடுத்தோருயிரின் உடலையுண்பவன் எவ்வாறு
அருளை ஆள்பவன் ஆவான்..!
மரபுக் கவிதையில்…
தன்னுடல் தன்னைப் பெருக்கிடவே
தானே பிடித்து மற்றுளவோர்
இன்னுயி ரதனின் உடலினையே
எடுத்து வெட்டி யுணவாக்கித்
தின்றிடு மொருவன் செய்கின்ற
தீய செயலா லன்னவனே
நன்றெனும் அருளா மறத்தினையே
நடப்பி லாள்வான் ஆகானே…!
லிமரைக்கூ…
பிறவுயி ருடலைத் தின்றே
தன்னுடல் வளர்ப்பவனிடம் அருளதன் ஆட்சி
நிலைக்காது என்றும் நின்றே…!
கிராமிய பாணியில்…
கொல்லாத கொல்லாத
அடுத்த உயிரக் கொல்லாத,
அடிச்சி அதயே திங்காத..
தனக்க ஒடம்பப் பெருக்கவைக்க
அடுத்த உயிரக் கொன்னு
அந்த ஒடலத் திங்கிறவன்
மனசுல நல்ல கொணமான
எரக்கம்
எப்புடி நெறஞ்சிருக்கும்,
ஒருநாளும் நெறயாதே..
அதால
கொல்லாத கொல்லாத
அடுத்த உயிரக் கொல்லாத,
அடிச்சி அதயே திங்காத…!