குறளின் கதிர்களாய்…(400)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(400)
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை.
-திருக்குறள் -153 (பொறையுடைமை)
புதுக் கவிதையில்…
வறுமைகள் பலவற்றுள்ளும்
வலிமை மிக்க வறுமை,
வந்த விருந்தினரை
வரவேற்று
உபசரிக்காது நீக்கும் நிலையே..
வலிமைகளிலெல்லாம் சிறந்த
வலிமை,
அறிவிலார் செய்த
தவறுகளை
அவரை ஒறுக்காது
பொறுத்துக்கொள்வதே…!
குறும்பாவில்…
வறுமையிலெல்லாம் வறுமை
வரவேற்று விருந்தினரை உபசரிக்காததே, மிகச்சிறந்த
வலிமை அறிவிலார் பிழைபொறுத்தலே…!
மரபுக் கவிதையில்…
வாட்டும் வறுமை பலவற்றுள்
வலிதா யுள்ள வறுமையது
வீட்டில் விருந்தாய் வந்தவரை
விருந்து கொடாமல் விலக்குவதே,
ஈட்டும் வலிமை யனைத்திலுமே
இயல்பில் உயர்வு மிக்கதுவாம்
காட்டும் பொறுமை யதுதானே
கல்லார் செய்யும் தீங்கிலுமே…!
லிமரைக்கூ…
வறுமையில் கொடிய வறுமையே
வருவிருந் தோம்பாமல் விலக்குவதே, வலிமையிலுயர்வு
வஞ்சித்தாரையும் ஒறுக்காப் பொறுமையே…!
கிராமிய பாணியில்…
பெருசு பெருசு
எல்லாத்திலயும் பெருசு,
பொங்காம பொறும காக்கிறதே
எல்லாத்திலயும் பெருசு..
வறுமயிலயெல்லாம் பெரிய வறும
வூட்டுக்கு வாற விருந்தாளிய
ஓபசரிக்காம
ஒதுக்குறதுதான்..
அறிவில்லாமக்
கெடுதல் செஞ்சவனயும்
தண்டிக்காம
பொறுமயா இருக்கிறதுதான்
வலிமயிலயெல்லாம்
ஒசந்த வலிம..
தெரிஞ்சிக்கோ
பெருசு பெருசு
எல்லாத்திலயும் பெருசு,
பொங்காம பொறும காக்கிறதே
எல்லாத்திலயும் பெருசு…!