கரையும் காலம்
பாஸ்கர்
நாற்பது வருடங்கள் கழித்துப் பள்ளியில் கூட்டம்
வந்தோர் எல்லோரும், கூடப் படித்தவர்கள்
எவர் பெயரும் நினைவில்லை முகமும் புரியவில்லை
முட்டியிட்ட கால்களும் பிரம்படியும் இன்றும் வலித்தன
வகுப்பறை ஈரப்பதம் இன்னும் அப்படியே இருக்கிறது
பெரிய வாத்திகளின் புகைப்படம் சற்று மிரள வைக்கிறது
மணியடிக்கும் கண்ணையா முகம் மனத்தில் நிற்கிறது
வேல்முருகன் ஐஸ் ஆயா என் தாயார் போலிருப்பாள்
எவ்வளவோ குட்டு பட்டும் புத்தி மட்டும் உசரவில்லை
வந்தோர் யாவரும் குழுக்குழுவாய் பிரிந்தனர், பேசினர்
அன்று போலவே இன்றும் தனியாய் நின்று இருந்தேன்
போட்டோ என்ற போது ஓரத்தில் நிற்க வைத்தார்கள்
ஒருத்தர் மட்டும் முதுகில் தட்டி, சாப்பாட்டு ராமா என்றார்
சிரித்துவிட்டுப் பெயர் கேட்க யாரையோ கட்டிப் பிடித்தார்
யாரோ பழம் கொடுத்தார், எவரோ பூ கொடுத்தார்
வாத்திகள் மலர்ந்தனர், மாணவர்களாக மாறினர்
வாசனைகள் மாறின – கார்கள் திரும்பப் பறந்தன
கட்டடத்தைப் பார்த்தவாறு கால்கள் இயங்கின
பேருந்தில் அமர்ந்த பெரியவரிடம் சொன்னேன்
“நல்லா படிச்சிருக்கலாம் இல்ல”