Ajai Prasad

Ajai Prasad

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் பிரசாத்

பி.அஜய் பிரசாத் (முழுப் பெயர் – பாதர்ல பிரசன்ன அஜய் பிரசாத்) ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு”  என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள், ஆங்கிலம், இந்தி, வங்காளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.

 

மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்

பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திர மாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பியலாளர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

 

இரசவாதம்

 

தெலுங்கில்     : பி.அஜய்பிரசாத்

தமிழில்            : பொருநை க.மாரியப்பன்

 

அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

சாலையோரம் இருக்கும் இந்தப் புத்தகக் கொட்டகையின் பின்னால் கிருஷ்ணா வாய்க்கால். கொட்டகை முன்பும், சாலை மீதும் பெரிய ஆரவாரம் இருக்காது. இந்தக் கொட்டகைகளை எல்லாம் பதினைந்து வருடங்களாக, அதாவது என் கல்லூரி நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்துக் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு எங்கள் ஊர் அத்தங்கியை விட்டுவிட்டு இந்த விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தேன். பல ஆண்டுகளாக இந்தக் கொட்டகை அப்படியே இருக்கிறது.

முதல் முறை பார்த்தபொழுது அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் புத்தகங்களைப் படிக்காவிட்டாலும் எந்தெந்தப் புத்தகங்கள் யார் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார். வாங்குபவர்களின் அவசரத்திற்குத் தகுந்தவாறு அப்போதைக்கு அப்போதே விலை நிர்ணயித்துவிடுவார். அவரிடம் ஆரம்பத்தில் ஒன்றே கால் காசு விலையுள்ள ஒரு பழைய புத்தகத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன். புத்தகங்கள் விற்பதில் அவர் பேராசைப்படுபவர் என்று நானும், புத்தகம் வாங்குவதில் நான் பரமகஞ்சன் என்று அவரும் வாதிடுவோம். எங்கள் இருவரின் அறிமுகம் அவ்வளவுதான். அதற்கு மிஞ்சி வளரவில்லை.

அவர் பலரிடம் வாதிடுவதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன். விலை சொல்வதில் எள்ளளவும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை.  ஆத்திரத்தில் பொங்கியெழுந்து என்ன பேசுவாரோ தெரியாது. பேசும்பொழுது எழுந்து கத்திக்கொண்டு கடைக்குள்ளேயே அடியெடுத்து வைத்து அங்கும் இங்கும் நடப்பார். அவரின் குரல், கனத்த குரல். பேசும்பொழுது இரண்டு வீதிகளுக்கு அப்பாலும் அவரின் குரல் கேட்கும்.

அப்படிப் பேசும் பொழுது ஒரு சில சமயம் யாரும் தடுக்காமல் இருந்தால் பேச்சு தானாகவே அரசியலை நோக்கிப் போகும். ஆவேசம் மேலும் அதிகமாகும். சாதாரணமாக எப்பொழுது பார்த்தாலும் கொட்டகை முன்பு பாயை விரித்துப் பழைய புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக்கொண்டும், கிழிந்துபோன காகிதங்களை ஒட்டிக்கொண்டும் இருப்பார்.

ஒருமுறை அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, வழக்கம் போல அவரின் மனைவி போன் செய்தாள்.

அவர் ஒரு பக்கம் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது போனில் ஸ்பீக்கர் ஆன் ஆனது.

அந்தப் பக்கத்திலிருந்து, ‘என்ன பேசிட்டிருக்குற? பேரம் பேசும்பொழுது வாதம் செய்யாத. அதெல்லாம் உனக்கெதுக்கு?’ என்ற பேச்சு வெளியே கேட்டது.

அவர் அவசரமாக, ‘அம்மா தாயி.. அதெல்லாம் ஒன்னும் பேசல. வாதம்லா இல்ல… இருக்குற சங்கதியதான் சொன்னன். அப்படில்லாம் எதும் இல்ல’ என்றார்.

உச்சி வெயில் மத்தியான புழுக்கத்தில் அந்தப் பழைய புத்தக அலமாரிகளுக்கு இடையில் நின்று அப்படியே தேவையான புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, வெளியிலிருந்து, ‘இரசவாதம் இருக்கா?’ என்று கேட்டது காதில் விழுந்தது.

நான் கொஞ்சம் இந்தப் பக்கமாக முன் நகர்ந்து வெளியே பார்த்தால் யாரோ ஒருவர்  வெயிலில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் தண்ணீரால் முகம் கழுவியதுபோல் கன்னத்தில் வியர்வை வழிந்தது. அந்த வெயிலிலும் அவர் சிரித்துக்கொண்டிருந்தார். அவரின் உடல்மேல் கறை படிந்த சட்டை, இடது தோளில் தொங்கும் துணிப் பை. அதற்குப் பின்னால் கயிற்றில் தொங்கும் தண்ணீர் பாட்டில்.

அவரைப் பார்த்தால் சிறுவயதில் நன்றாகத் தெரிந்த மனிதர், பெரியவர் ஆனதும் உருவ மாற்றத்துடன் எவ்வாறு இருப்பாரோ அப்படித் தெரிந்தது. பார்க்கப் பார்க்க நன்றாக அறிந்த முகமாகவே பட்டது. அடையாளம் காண முடியாத, தெரிந்தும் தெரியாத ஒப்பீடுகள்.

மர ஸ்டூலில் அமர்ந்திருந்த கடை முதலாளி அவர் சொன்னதைக் கேட்டுப் புரியாத மாதிரி, “என்ன வேணும் மறுபடியும் சொல்லுங்க’ என்று சத்தமாகக் கேட்டார்.

வெளியில் நிற்கும் மனிதர் இன்னும் அதே சிரித்த முகத்துடன் ‘இரசவாதம் வேணும்’ என்றார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரர் போல் தோன்றியது. தோன்றுவது என்ன, பைத்தியக்காரர்தான்.  சற்று நெற்றி ஏறிய நடுத்தர வயது முகம். அந்த முகத்தில் இருந்த கீறல்களைப் பார்த்து இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த மனிதர் என்று நினைவுப்படுத்திப் பார்க்க முயன்றேன்.

கடை முதலாளி அவர் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டு “இரசவாதமா?” என்று, வந்த மனிதரை விசித்திரமாகப் பார்த்தார். அவருக்கு இந்தப் பக்கமாகப் பெஞ்ச் மீது தன் கனமான உடலைக் கைகளில் வைத்து முன்னோக்கி வளைத்து அமர்ந்து அரட்டையடிக்கும் சிவப்புச் சட்டை அணிந்த வெள்ளைத் தாடி மனிதர்கூட ஒரேயடியாக இதயம் வெடித்தது போன்று அதிர்ந்துபோனார். அவர்கள் இருவரும் மிரண்டுபோனதைப் பார்த்துக் கொஞ்சம் இந்தப் பக்கமாக வந்து வெளியே நின்றிருக்கும் மனிதரை நான் ஒரு பார்வை பார்த்தேன். அவர் அப்படியே நின்று சிரித்த முகத்துடன் மறுபடியும் “ஆமா.. எனக்கு இரசவாதமே வேண்டும்’ என்றார்.

கடை முதலாளி ஸ்டூல் மீதிருந்து தடால் என்று வெளியே வந்து நின்று அவரை அடிப்பது போல் கீழே வரை கிடந்த வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சரிசெய்து ‘போய்யா.. போ…இரசவாதமும் இல்ல ஒன்னும் இல்ல.. அது இருந்தா நா எதுக்கு இங்க இருக்கன்’ என்றார்.

வெளியே நிற்கும் மனிதர் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, “போய்யான்னு சொன்னா புரியாதா” சிவப்புச் சட்டை மனிதரும் கர்ஜித்தார்.

கடை முன்பிருக்கிற வெயிலின் நிழல் அந்தப் பக்கமாக நகர்ந்தது. யாரோ கூப்பிடுவது போல் இருந்ததால், அந்தப் பக்கம் போனதும், எனக்கு எங்கள் ஊரில் எப்பொழுதும் நூலகத்திலேயே அமர்ந்திருக்கும் சிவலிங்கம் சட்டென்று நினைவுக்கு வந்தார். சந்தேகம் இல்லை… அவர் சிவலிங்கம் தான். அவரே இவர்..!

பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சிவலிங்கம் இன்று தற்செயலாகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் அகப்பட்டார். சிவலிங்கம் நினைவுக்கு வந்தாலும் விசாரிப்பதற்கு அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அத்தங்கியில் என் படிப்பு தொடர்ந்த பொழுது அவரைத் தினமும் நூலகத்தில் பார்த்திருக்கிறேன். அந்த ஊரைவிட்டு வந்ததும் அவரைப்பற்றிய நினைப்பும் படிப்படியாக மறந்துபோய்விட்டது.

என் ஊரில் அமைதியாக இருக்கும் வீதியின் கடைசியில் ‘கிளை நூலகம்’ இருந்தது.  அது எங்கேயோ நடு வீதியிலோ அல்லது அரசு அலுவலகம் மத்தியிலோ இல்லாமல் தெருக் கடைசியில் வீடுகளின் மத்தியில் இருந்தது. நூலக உதவியாளர் வெள்ளைத் தலைப்பாகையுடன் பெஞ்சில் அமர்ந்து சுவரில் சாய்ந்து எப்பொழுதும் கீழே குனிந்துகொண்டே இருப்பார். உள்ளே நுழையும் முன்பே வரண்டாவின் ஒரு பக்கம் செய்தித்தாள் பிரிவு, மறுபக்கம்  அகலமான  மேசையின் மேல் இதழ்கள் இருக்கும்.

மனிதர்கள் அமர்ந்து அமர்ந்து அந்த மரப் பலகை, பெஞ்சுகள் தேய்ந்து ஒரு விசித்திரமான பழுப்பு நிறத்தில் ஒளிர்ந்தன. சிவலிங்கம் இரண்டு வேளையும் நூலகம் திறந்ததில் இருந்து மூடும் வரைக்கும் தினசரி, வாரப் பத்திரிகைப் பிரிவில் அமர்ந்திருப்பார். அவரின் பணி பேப்பர்களைப், பத்திரிகைகளைப் படிப்பது இல்லை. சுற்றி வருவது மட்டுமே. காகிதங்களுக்கு இடையில் தேடுவது… சும்மா ஒன்று மாற்றி ஒன்று. அதே வேலையாகப் பக்கங்களைத் திறந்து  கண்களைச் சுழற்றி, கொஞ்சநேரம் அங்கும் இங்கும் பார்த்து.. மறுபடியும் ஆட்காட்டி விரலால் நாக்கில் எச்சில் தொட்டுப் பக்கங்களைத் திருப்பியவாறு அப்படியே.

அவர் பைத்தியம் பிடித்திருப்பவரும் இல்லை. நூலக உதவியாளருக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது. பத்திரிகை மேசை அருகிலேயே நாற்காலி மீது அமர்ந்து சுவரில் தலை சாய்த்துத் தூங்கும் அந்த நூலகத்தின் உதவியாளர் ஒவ்வொரு முறையும் இருந்தாற்போல் கண்களைத் திறந்து சிவலிங்கத்தையே பார்ப்பார். ஒவ்வொரு முறையும் சிவலிங்கத்தின் கைகளில் இருந்த பேப்பரைப் பிடுங்கி டேபிள் மேல் தூக்கி எறிவார். சிவலிங்கம் மறுபடியும் அந்தப் பேப்பரை திரும்ப எடுத்து வருவார்.

நூலகத்திற்கு நிறைய இதழ்கள் வந்துகொண்டிருந்தன. நான் கொஞ்ச நேரம் பேப்பரைப் பார்த்து, இதழ்களை மேலோட்டாமாகப் பார்த்துப் புத்தகத்தைத் தேடி உள்ளே போவேன். அவர் யாரிடமும் பேசுவது கிடையாது. நான் தினந்தோறும் அவரைப் பார்ப்பேனே தவிர நூலகத்தின் அமைதி அவரிடம் பேச அனுமதிக்கவில்லை. ஒருமுறை பார்வையாளர் பதிவேட்டில் அவர் ‘சிவலிங்கம்’ என்று கிறுக்கலான தெலுங்கு எழுத்துகளிலே கையெழுத்துப் போடுவதைப் பார்த்தேன். எப்பொழுதும் சுத்தமாகத் துவைத்த, சாதாரணத் துணிகளை அணிந்திருப்பார்.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே இப்படிப் பார்க்கிறேன் சிவலிங்கத்தை. இந்த நடுத்தர வயது மனிதரை அந்த நாள் தோற்றத்தோடு என்னால் ஒப்பிட முடிந்தது. பாதி முடி காணாமல் போயிருந்தது.

‘என்கிட்டமட்டும் இரசவாதம் இருந்துச்சுனா… அதுக்காக ஐனங்க இங்கயிருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் வரிசை கட்டி நிப்பாங்க. ஆ..’ என்று பின்னால் திரும்பி நாற்காலியில் அமர்ந்தார் கடை முதலாளி.

பெஞ்ச் மீது அமர்ந்திருக்கிற சிவப்புச்சட்டை வெள்ளைத்தாடி மனிதர் “ஆ..ஆ.. வாங்க வேணாம்.. அத  அஞ்சு நிமிஷம் பாக்குறதுக்குக் குடுத்தாலே போதும்… ஜனம் கூடிரும்” என்று வயிறு குலுங்கச் சிரித்தார்.

“ஆமா… ஆமா…  பார்க்கக் குடுத்தா போதும்” என்று கடை முதலாளி மீண்டும்  பழைய புத்தகத்தைத் தைக்கும் வேலையில் மூழ்கினார்.

நான் புத்தகத்தைத் தேடுவது முடிந்தது. எடுத்துக்கொண்ட புத்தகத்திற்கு விலை சொல்லவேண்டுமென்று அவரின் மேசையின் மேல் வைத்து ‘இத்தனைக்கும் அந்த இரசவாதம்னா என்னங்க?’ என்றேன்.

கடைமுதலாளி என்னை விந்தையாகப் பார்த்தார். சிவப்புச்சட்டை மனிதர் இடைமறித்து, ‘ஒங்களுக்குத் தெரியாம இருக்கும். இரசவாதம் எப்ப இருந்தோ இருக்கு, சுதந்திரத்திற்கு முன்னாடி… யோகி வேமனாவிற்கு முன்னாடி, இல்ல இல்ல அதுக்கும் முன்னாடி… அந்தப் பேச்சை எடுத்தா எப்பயிருந்தோ யாருக்குத் தெரியும்?..”

புத்தகத்துக்கான விலையைக் கொடுத்துவிட்டு கடையிலிருந்து வெளியே வந்தேன். சிவலிங்கம் அந்தப் பக்கத்தில் இருந்த வேறொரு புத்தகக் கடை முன்பு நின்று அதே புத்தகம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அதே சிரித்த முகம். அவர் என்ன பதில் சொன்னாரோ என்னமோ சிவலிங்கம் இன்னும் எங்கும் நிற்காமல் கடகடவென்று முன்னே போனார்.

அப்படிப் பின்னால் நின்று பார்த்தால் அவர் நடை விசேஷமாகத் தெரிந்தது. அவர் கால்களைத் தூக்கி நடந்தார். பக்கவாட்டில் தொங்கும் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கால்களுக்குத் தடையாக அவர் நடக்கும்பொழுதெல்லாம் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே மக்கள் கூட்டத்திற்கு நடுவில் அவர் மறைந்துபோனார்.

ஆனாலும் சிவலிங்கம் தேடுவதை இன்னும் நிறுத்தமாட்டார் என்றே தோன்றியது. அவர் காகிதங்களுக்கு இடையில்… பத்திரிகைகளின் இடையில் இன்னும் எதற்காகவோ தேடிக்கொண்டே இருக்கிறார். நான் புத்தகங்களுக்காக இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

நாங்கள் இருவரும் சில ஆண்டுகளாக இதே வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். இருவரும் மாறவில்லை.

எனக்கு இந்தத் “தேடல்” என்பது சிறுவயதிலிருந்தே அதாவது அநேகமாக எட்டாம் வகுப்பிலிருந்தே பழக்கமாகி இத்தனை ஆண்டுகளாகியும் இப்பொழுதும் போகவில்லை. எங்கள்  நூலகத்தின் உள்ளேகூடப் புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு சின்னப் படிப்பறை உள்ளது. வட்ட மேசையைச் சுற்றி யாராவது அமர்ந்தால் பழையதாகி, பிடி தளர்ந்து அங்கும் இங்கும் அசையும் நாற்காலி, இரண்டு மூன்று ஸ்டூல்கள். சுவருக்கும் மரமேசைக்கும் இடையில் சிலந்தி வலைப்பின்னல். உள்ளே புத்தக மர அலமாரி, அருகில் பழைய காகித வாசனை.

அங்கே என் பள்ளிக்கூடத் தெலுங்கு ஆசிரியர் சந்திரமோகன் அவர்கள் முற்றத்தின் பின்புறத்திலிருந்து வரும் பகல் வெளிச்சத்தில் கையில் புத்தகத்துடன் செய்யுள் வரிகளை விரல்களால் தடவிக்கொண்டு எப்பொழுதாவது தென்படுவார். நான் அப்படியே மேசை முன்பு அமர்ந்து பழைய புத்தகத்தைப் படிப்பேன்.

சாதாரணமாக என்னைப் புதிய புத்தகங்கள் ஈர்ப்பது இல்லை. நான் படித்தவை எல்லாமே பழைய புத்தகங்கள் தான். சிலவற்றில் முதல் பக்கமும் கடைசிப் பக்கமும் இருப்பதில்லை. நூலாசிரியர்களின் பெயரும் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. என் விரல்கள்பட்டு மஞ்சள்நிறக் காகிதங்கள் நொறுங்கிப்போய்விடும். அப்படி நான் படித்த பழங்காலப் புத்தகங்களில் ஒன்று “ரகசிய கங்கணம்”

என் ஊரிலிருந்து வந்தும், எங்கும் நிரந்தரமாக இல்லாமல், எந்த வியாபாரத்திலும் உறுதியாக இல்லாமல், ஆண்டுகள் கடந்து வயதாக வயதாகப் புத்தகத்தைத் தேடுவது என்பது இன்னும் அதிகமானது. சிறுவயதில் தேடிப் பிடித்துப் படித்த புத்தகங்களின் ஆசிரியர் பெயர்கள் மறந்துபோயின.  சில புத்தகங்களில் வரும் கதைமாந்தர்களின் பெயர்களை நினைவுபடுத்திக் கொள்ள முயல்கிறேன்.

இன்றைக்கும் நடைபாதையில் பழைய புத்தகக் கடைகள் தென்பட்டால் என் கால்கள் நின்றுவிடுகின்றன. அவற்றுக்கு இடையில் நின்று எனக்குத் தேவையான புத்தகத்தைத் தேடி எடுக்கிறேன். லெனின் மையம் தாண்டி இரண்டு திருப்பங்களைக் கடந்து மின்கம்பத்துக்கு அருகில் நின்றேன். அந்தச் சந்தில் மங்கலான பங்களாவின் முதல் தளத்தில் சீ.பி.ராவ் வேலை பார்க்கும் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸ் உள்ளது. இங்கு வரும்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவனை அலுவலகத்தில் சந்திப்பதுண்டு. காலை எத்தனை மணிக்கு வருவானோ தெரியாது. ஆனால், இரவு ஒன்பது மணி கடந்து, கடைசி லாரியை அனுப்பும் வரை அங்கேயே இருப்பான்.

சீ.பி.ராவ் என்று அழைப்பது எனக்குப் பழக்கமாக இருந்தாலும், சீ.ஹெச்.பாஸ்கர்ராவும் நானும் அத்தங்கியில் தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அதற்குப் பிறகு இங்கெங்கேயோ உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு பிறகு சீ.பி கல்லூரியில் என்னோடு இணைந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தான்.

அலுவலகத்தில் சேர்ந்தபொழுது வெள்ளையாக ரொம்ப ஒல்லியாக இருந்தான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் குண்டாகிவிட்டான். வெள்ளையாக ஒல்லியாக இருந்த அந்த முகம் கருப்பாகி முதிர்ந்து காணப்பட்டது. முடியைப் பின்னால் சீவி, வளர்ந்த புதர் போன்ற மீசை முன்னால் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் அவனுக்கு அந்த வேலை கிடைத்த புதிதில், ஏதோ மனை விலைக்கு வந்ததென்றும் மறுபடியும் அது மாதிரி குறைந்த விலைக்குக் கிடைக்காதென்றும் என்னிடம் இருந்து இரண்டு லட்சம் கடன் வாங்கினான். வருடம் கடந்தும் அதைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை.

 நான் அந்தப் பேச்சை எடுக்கும்பொழுதெல்லாம், “தர்ரன்ப்பா, உன் பிச்சைக்காசு எனக்கெதுக்கு” என்பான், சிறுவயது நட்புடன். அவனின் பேச்சைப் பார்த்தால் அப்பொழுதே தருவது போல இருக்கும். ஆனால் கொடுப்பவன் கிடையாது. வருடம் கடந்து ஆறு மாதங்களும் கடந்துபோயின.  தருவனோ தரமாட்டோனா என்ற சந்தேகத்தில் இரவில் தூக்கம் வருவதில்லை. கொஞ்ச நாட்கள் சந்திப்பதைத் தவிர்த்து, திடீரென்று சந்திப்பேன், அப்பொழுதாவது நினைவுக்கு வந்து பணத்தைத் திருப்பித் தருவானென்று. மற்றும் சில நாட்கள் வேலையற்றுப்போய்த் தினந்தோறும் சந்திப்பேன். ஆனாலும் தரவில்லை.

இதனால் பலன் இல்லையென்று, வீட்டில் மருத்துவமனை செலவென்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அசலைக் கொண்டு வந்து கொடுத்தான். அதற்குப் பிறகு ஆறுமாதத்திற்கு வட்டிக் கொடுத்தான். இதெல்லாம் நடந்து நீண்ட காலம் ஆனது. அதற்குப் பிறகு அதனைப் பற்றிய பேச்சு எப்பொழுதும் எங்களுக்கு இடையில் வந்ததில்லை.

நான் புத்தகங்களுக்காக இந்தப் பக்கம் வரும் பொழுதெல்லாம் அவனைச் சந்திப்பேன். உள்ளே நுழையும் வேளையில் அவனைச் சுற்றி இரண்டு மூன்று போர்ட்டர்கள், லாரி ஓட்டுநர்கள் சூழ்ந்திருப்பார்கள். அந்த அடாவடியில் என்னைப் பார்த்ததும் உள்ளே வா என்றவாறு சைகை செய்வான். உள்ளே வந்ததும் “என்ன விசயம். புத்தகத்துக்காக வந்தயா?’  என்றான் சீ.பி.ராவ். அவனுக்குத் தெரிஞ்சதுதான். பேச்சுக் கொடுப்பதற்காக, எதிரில் அமர்ந்ததும் யாருக்கோ டீ கொண்டு வரச் சொன்னான்.

சீ.பி.ராவிடம் பகிர்ந்துகொள்வதற்கு எந்த விசயமும் இல்லை. என் சிறுபிராய நினைவுகளில் அவன் ஒரு பாகம். சந்திக்கும் பொழுது எங்களுக்கிடையில் பெரிதாக எந்தப் பேச்சும் இருக்காது. அவன் ஒரு பக்கம் ஓட்டுநர்களையும் போர்ட்டர்களையும் வேலை பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு தன் வேலையைச் செய்துகொண்டிருப்பான். தலைப்பாகை அணிந்த போர்ட்டர் இருவருக்கும் டீ க்ளாசைப் பணிவுடன் கொடுத்தார், எங்கே டீ சிந்திவிடுமோ என்ற நிதானத்துடன்.

மேசையின் மேல் பாக்ஸ்பைலோடு ரசீது எழுதிய பவுண்டு புத்தகம், கசங்கிய வாடிப்போன கார்பன் பேப்பர், மைக்கறை ரப்பர் ஸ்டாம்பு, மூடி இல்லாத பால்பாய்ண்டு பேனா. அறையின் நான்கு புறங்களிலும்  சாய்த்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள். அட்டைப் பெட்டிகளில் மளிகைக் கடை வாசனை. எனக்குப் பிடிக்காத வாசனை! சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீ.பி.ராவிற்கு சிறு வயதிலிருந்தே இந்த வாசனை பழக்கம்தான்.

அவர்களுடையது மண்ணெண்ணெய் மளிகைக்கடை. என்றைக்காவது பள்ளிக்கூடத்திற்கு வரவில்லையென்றால் அவர்களின் மளிகைக் கடையில்தான் இருப்பான். கடையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குக் கணக்கு நன்றாக வந்தது. கணக்கு நன்றாக வந்ததால் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸில் குமாஸ்தா வேலை கிடைத்தது. எனக்குக் கணக்கும் ஆங்கிலமும் வராது. சீ.பி.ராவ் குறைந்தபட்சம் கல்லூரிப் படிப்பையாவது பூர்த்தி செய்தான். கல்லூரியில் அரியர் வைத்து, அதை முடிக்காமல் சிலநாட்கள் ஹார்டுவேர் கடை வைத்து திவாலாகி, சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து அங்கேயும் நில்லாமல் கடைசியாக எதுவும் இல்லாமல் ஆனேன்.

சரியாக அந்த நாட்களில் நானும் அவனிடம் வியாபாரத்திற்காகக் கடன் வாங்கினேன். பல மாதங்கள் வட்டிகூடக் கட்டவில்லை. அதன் காரணமாக எங்கள் இருவருக்கிடையில் நட்பு கொஞ்ச காலம் கெட்டுப்போனது. ஒருநாள் காலையிலேயே பணம் வசூல் செய்வதற்காக வந்தான். எங்கள் இருவருக்கிடையில் அன்றைக்குப் பெரிய வாக்குவாதம் நடந்தது. தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி அன்றைக்கு அவனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்தேன். அதற்குப் பிறகு எங்கள் இருவருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் இல்லை.

மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு  வழக்கமான நண்பர்களானோம். நமக்குள்ளே இருக்கிற சந்தேகங்கள் இப்பொழுதுவரை அப்படியே தான் இருக்கிறது. எங்கள் பேச்சுகள், சந்திப்புகள், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. நான் வாங்கிய புத்தகங்களைச் சீ.பி.ராவ் திருப்பிப் பார்த்து, “இன்னும் உனக்குப் பைத்தியம் போகலையாடா” என்றான்.

ஊரில் இருந்தபொழுது நான் புத்தகம் படிக்கம் வழக்கம் அவனுக்கு விந்தையாக இருந்தது. “அவ்வளவு நேரம் என்ன பண்றடா? அந்த நூலகத்துல” என்பான். அங்கே பணிபுரியும் வேறு மனிதர் முழங்கால் போட்டு அமர்ந்துகொண்டு சுவரில் சாய்ந்து பார்சலைக் கணக்கிட்டு எண்ணிக்கொண்டிருந்தார். சீ.பி.ராவ் என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறானே தவிர எனக்குக் காதில் எதுவும் ஏறவில்லை. அங்கே ஒரே வாசனை! மண்ணெண்ணெய் வாசனை! கோணிப் பை, வெங்காய மளிகைக் கடை வாசனை.. போர்ட்டர்கள் ஏதோ கோணிப் பையில் கட்டிய பெட்டியை உள்ளே தூக்கிக் கொண்டுவந்தார்கள். அங்கே அமர்வதற்கு விரும்பவில்லை. மறுபடியும் பார்க்கலாம் என்று வெளியே வந்தேன்.

அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி ரோட்டில் நின்றிருந்தேன். விசாலமான அத்திமரம் தன் கைகளை விரித்து நின்றிருந்தது. வெயிலில் மினுங்கிக்கொண்டிருந்த இலைகள் காற்றுக்குப் படபடவென்று அடித்துக்கொண்டன. பூமியில் அமைதியைக் கொடுக்கக் கூடிய இடம் எது? ஏதோ பெரிய மிருகம் எதையோ சாப்பிட்டது போல பயத்தைக் கிளப்புகிறது.

மரத்தின் கீழே நின்றிருந்தேன். முகத்தில் அனல்காற்று அடித்தது. வீதியின் மூலையிலிருந்த குப்பைத்தொட்டி அருகில் நாய் எதிலேயோ முகத்தை வைத்துக் கிளறிக்கொண்டிருந்தது. சாலைக்கு அப்பால் காகிதக் குப்பைக் குவியலை ஒட்டி தார்ப்பாய்க் கொட்டகை முன் தரையில் விரிக்கப்பட்டிருந்த அழுக்குப் பாயின் மேல் இளைஞன் ஒருவன் ஸ்மார்ட் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதற்கு அப்பால் பக்கத்திலிருக்கிற கூடாரத்தின் முன் மரத்தில் கட்டிய தூளியில் பச்சிளங்குழந்தை தூங்கிகொண்டிருப்பதுபோல் கனமாக அசைகின்ற அமைதி இருந்தது. தொட்டிலுக்குக் கொஞ்ச தூரத்தில் பெண்ணொருத்திப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். சாலைக்கு இரு புறங்களிலும் பாதையோர வியாபாரிகள், அதற்குப் பின்னால் ஷட்டர்கள், கடைகள், துணிக்கடைகள், பூவிற்பவர்கள், நடந்துகொண்டே எவ்வளவு தூரம் வந்தேனோ தெரியாது.

தூரத்தில் நதி மீதுள்ள இருப்புப் பாலத்தில் செல்லும் ரயில். கிருஷ்ணாவந்தன மலை முடிவில் இருட்டத் தொடங்கியது. அந்தக் கடைசி மேற்குச் சரிவில் கடலை நோக்கி விழுகிற வெளிச்சத்தில் கருநிழல் பரவியிருந்தது. சந்தையில் கூட்டமாகப் போகின்ற மனிதர்களுக்கு இடையில் வேகமாக நடக்கின்ற சிவலிங்கம் தென்பட்டார்.

அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனிதர்கள் தூரமாக விலகிப்போகிறார்கள். அவரை நோக்கிப் பார்க்கின்றேன் என்று  அறிந்து என்னை நோக்கித் திரும்பினார். படபடவென்று நடந்த கால்கள் நிதானிந்து என்னை நோக்கி வந்தன. முகத்தின் மெல்லிய சிரிப்பு, அருகில் வரவர பெரிதாகியது. சிரிப்பில் அவரின் பல் ஈறுகள் கூடத் தெரிந்தன. கறை படிந்த பற்கள். பக்கத்தில் வந்ததும் ‘சிவலிங்கம்’ என்றேன். அடையாளம் கண்டு பேச்சுக் கொடுப்பது போல.

“யார் சார் நீங்க?’” என்றார் பயமுறுத்துவது போல்.

கீச்சுக் குரல். கறைபடிந்த பற்கள். உடல்மேல் காற்றுக்கு அசைகின்ற கந்தல் ஆடை. எந்த மனநலக் குறைபாடு, அவரை மனிதர்களிடமிருந்து பிரித்தது என்று சொல்வது கடினம், சில நேரமோ, கொஞ்ச காலமோ அவருடன் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர. அவரின் சிரிப்பைப் பார்த்துக் கொஞ்சம் பயம் வந்தது. ஊர்ப் பெயர் சொன்னேன். நூலகத்தில் பல வருடங்களாக அவரைப் பார்த்ததைச் சொன்னேன்.

“நீங்க அத்தங்கியா?” என்று மறுபடியும் அவர் யோசித்துக்கொண்டே தரையைப் பார்த்தார்.

“ஒங்கள பார்த்த மாதிரி இருக்கு, ஆனா நினைவுக்கு வர்ல, பல வருஷம் ஆயிட்டுலா” என்றார்.

இருந்தாற்போல “பத்ரய்யாவைத் தெரியும், நான் ரொம்ப வருசமா பார்க்கல. அந்த ஊர விட்டு வந்து ரொம்ப வருசம் ஆச்சு” என்றார். என் சந்தேக முகத்தைக் கவனித்து, “நூலக உதவியாளர்… ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றார். நூலக உதவியாளர் பேர் பத்ரய்யா என்று எனக்கு இப்பொழுது வரைக்கும் தெரியாது. சிவலிங்கம்… பத்ரய்யாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அந்தப் பத்ரய்யாவிற்கு இந்தச் சிவலிங்கம் நினைவில் இருப்பாரோ இல்லையோ. அவரே பேசிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சுக்கும்  சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. எதற்குச் சிரிக்கிறார் என்று சொல்வது கஷ்டம்.

“நீங்க… இரசவாதம்…”

“இரச… ஓ! அதுவா… இப்பவரைக்கும் கடையில… கிடைக்குமோன்னு. வேடிக்கையும் கூட. பணம் சம்பாதிக்கணும்னு சின்ன வயசுலயிருந்து எங்க அம்மா சொல்லுவா. தங்கம் செய்யும் ரசவாதக் கலையைக் கத்துக்கலாம்னு. அப்படி ஒரு புத்தகம் இருக்கும்னு தெரியும் ஆனா பாத்ததில்ல.” அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

‘வாழ்வது எவ்வளவு கஷ்டம் அவ்வளவு சுலபமில்ல. ஆமால்ல… எல்லாம் நம்மைப் பொறுத்துதான் இருக்கிறது பணத்தைப் பணம் சம்பாதிப்பது தெரிகிறது. பணத்தை ஒருத்தன் அரைமைல் ஓடி சம்பாதிப்பது மற்றொருவனுக்கு அது இருந்த இடத்திலேயே கிடைக்கிறது. கொஞ்சபேருக்குத் தெரியாமல், கொஞ்சபேருக்குத் தெரிந்து. அதைத்தான் எல்லாரும் புத்திசாலித்தனம்னு சொல்லுவாங்க’ என்றார் அண்ணியா.

அவர் வக்கீல். ஒருமுறை நரசராவுபேட்டையிலிருந்து அவருக்குத் திருட்டு வழக்கு வந்தது. நகையை இழந்தவர்கள் வழக்குப் போட்டனர். திருட்டுத்தனம் செய்தவர்கள் உதை வாங்கினார்கள். மத்தியில் காவலர்கள், வழக்கறிஞர்கள் புகுந்தார்கள். பேச்சாலே நொடியில் ஐம்பதாயிரம் சம்பாதித்தார் அண்ணிய்யா. எல்லாம் மாயை! வாழணும்னா தந்திரமாயிருக்கணும்னு சொல்லுவார் எங்க அண்ணிய்யா. யோசிக்கணும்… யோசித்தால் விசயம் தெரியும். யோசனையே இருக்கணும்…’ திடீரென்று தான் சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்தினார்… ‘இத்தனைக்கும் நீங்க இரசவாதம் படிச்சிருங்கீங்களா?’

மென்மை விலகிப் போன முகத்தில் கண்கள் உள்ளே போய் இருண்டு, இடது கண்ணில் பார்வையில்லாமல் கோடு  போன்ற வெண்மையான சாறு.  ‘இல்லை’

‘உலோகவியல் இல்லை… மாயாஜாலம்..’ சிறுபிள்ளை போலச் சிரித்தார், கண்களை மூடிக்கொண்டு. ஒல்லியான அவரின் சரீரம் மேலும் கீழுமாக ஆடியது. செங்குத்தாக இருக்கிற மூங்கில் குச்சி போல. பைத்தியக்காரனின் வெறித்தனம்!’

இனி கிளம்புகிறேன் என்பதாகத் தலை அசைத்து முன்னே நகர முற்பட்டேன். அவர் சரியென்றவாறு இரண்டடி எடுத்து வைத்து தடால் என்று பக்கத்தில் வந்து, உள்ளங்கையை நீட்டி, ‘ஒரு  அஞ்சு ரூவா இருந்தா குடுங்க?” என்றார். நான் ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியாமல் ‘எதுக்கு அப்படிக் கேட்டாரோ, இதில் எதாவது ரகசியம் உள்ளதா? என்று யோசித்து மேல் பாக்கெட்டில் கைநுழைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்.

ஒருநொடியில் ஆயிரம் யோசனைகள், நூறு  சந்தேகங்கள். தெரிந்தவர்தான்…. நூறு கேட்டார் என்றால்..? அவர் கேட்கவில்லை சரி.. அப்ப நான் ஐந்நூறு கொடுத்துருக்கலாம்ல…? அப்ப ஏன் ஐந்து ரூவா மட்டும் கொடுத்தேன்…? தர்மம் செய்யுங்கன்னு சொல்றாரா? திரும்பத் தருவாரா?

நான் கைகளைப் பின்னால் எடுப்பதற்கு முன்பாகவே, அவர் அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு அதே கையால் என் கையில் எதையோ வைத்தார். ஒரு நொடி என்ன நடந்ததோ தெரியவில்லை. என்ன இருக்கும் என்று என் உள்ளங்கையைப் பார்த்தால் பளபளவென்று மின்னுகிற ஐந்து ரூபாய் நாணயம்! ஆனால் அது நான் கொடுத்தது இல்லை. வேறொன்று!

அவர் ஒரு முறை என் பக்கமாகப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து, பின்னே திரும்பினார். என் உள்ளங்கையில் ஐந்து ரூபாய் நாணயம் எஞ்சியிருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.