குறளின் கதிர்களாய்…(414)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(414)
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
– திருக்குறள் -182 (;புறங்கூறாமை)
புதுக் கவிதையில்…
அறமென்பதே இல்லையென
அடித்துப் பேசி
அறமிலாத் தீயவைகளைச்
செய்வதைக் காட்டிலும்,
ஒருவரைக்
காணாத இடத்தில்
பழித்துக் கூறியும்
கண்முன்னே காணும்போது
பொய்யாக முகம்மலர்ந்து
புகழ்ந்து பேசுதல்
பெருங் கேடாகும்…!
குறும்பாவில்…
காணதபோது ஒருவரைப் பழித்துப்பேசி
காணும்போது புன்னகையுடன் புகழ்ந்திடுதல், அறமில்லையென்றே
தீயவை செய்தலைவிடக் கொடிதே…!
மரபுக் கவிதையில்…
அறமா மொன்றே யில்லையென
அடித்துப் பேசி முரணாக
அறமே யில்லாத் தீயவற்றை
அடுத்துச் செய்யும் அற்பமான
முறையே யிலாத செயலைவிட
முன்னா லில்லா ஒருவரையே
குறைத்துப் பேசி கண்முன்னே
குழைந்து புகழ்தல் கொடிதாமே…!
லிமரைக்கூ…
இல்லை அறமே என்றே
பேசியே தீதுசெய்தலைவிட புறங்கூறி நேரில்புகழ்தல்
கொடியதாய் அழிக்கும் நின்றே…!
கிராமிய பாணியில்…
சொல்லாத சொல்லாத
பொறஞ்சொல்லு சொல்லாத,
அடுத்தவரக் கெடுத்து
பொறஞ்சொல்லு சொல்லாத..
அறமுண்ணு ஒண்ணுமில்லண்ணு
அடிச்சிப் பேசிக்கிட்டே
கெட்டத செய்யிறதவிட,
ஆளு இல்லாதப்போ
ஒருத்தரப்பத்தி
அவதூறாப் பேசி
மொகத்துக்கு நேரே
ஒசத்தியா பேசுறது
அதிகமாக் கேடுதான் தரும்..
அதால
சொல்லாத சொல்லாத
பொறஞ்சொல்லு சொல்லாத,
அடுத்தவரக் கெடுத்து
பொறஞ்சொல்லு சொல்லாத…!