குறளின் கதிர்களாய்…(431)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(431)
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.
-திருக்குறள் -664(வினைத் திட்பம்)
புதுக் கவிதையில்…
செயலிதனைச்
செய்வேன் இப்படி எனச்
சொல்வது
எளிதே எவர்க்கும்,
சொன்னபடியே செயலதைச்
சொல்லிய விதத்தில்
தொடங்கி
உரிய காலத்தில
செய்து முடித்தல் என்பது
எளிதான ஒன்றல்ல…!
குறும்பாவில்…
செயலொன்றை இங்ஙனம் செய்வேனெனச்
செப்புதல் எளிதாம் எவர்க்குமே, சொல்லியபடி
செயல்படுத்தல் மிகவும் சிரமமே…!
மரபுக் கவிதையில்…
இன்ன படியே இச்செயலை
எளிதாய்ச் செய்து முடிப்பேன்நான்
என்னு முறுதி சொல்லுதலே
எவர்க்கு மெளிதாம் அவனியிலே,
சொன்ன வாறே செயலதனைச்
சொன்ன விதத்தில் செயல்தொடங்கி
முன்னர் குறித்த காலத்தில்
முறையாய் முடித்தல் எளிதிலையே…!
லிமரைக்கூ…
எளிதாகும் எவர்க்கும் சொல்லுதல்
இப்படிச் செய்வேனென, எளிதல்ல உண்மையில்
எதிலும் செயல்பாட்டில் வெல்லுதல்…!
கிராமிய பாணியில்…
இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்..
இந்தச் செயல
இப்புடி இப்புடி செய்வேண்ணு
சொல்லுறது ரெம்ப லேசு,
சொன்னபடி அதச்
செய்யத் தொடங்கி காலத்தில
செய்து முடிக்கிறது
கடினமான காரியந்தான்..
அதால
இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்…!