அருட்செல்வர் நூற்றாண்டு விழா I ஜனவரி 8 காலை I கலைவாணர் அரங்கு
தமிழின் புரவலராக விளங்கிய பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் நூற்றாண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 8, 2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் கோலாகலமாகச் சென்னை கலைவாணர் அரங்கில் நிகழவுள்ளது. அருட்செல்வர் நா. ம. ஐயா தமிழிசையின் மூல நூல்களில் ஒன்றாகிய பஞ்சமரபினை இருமுறை அச்சிட்ட ஞானதான வள்ளல். வணிகம் என்றால் கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்று செய்வது சிறப்பு. எல்லா நாட்டிலும் உழவு என்றாலும், ‘ஆ கெழு கொங்கர்’ உழவே தலைசிறந்தது என்று தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் இளம்பூரண அடிகள் (Ref. 1) ‘வங்கத்து வணிகம், கொங்கத்து உழவு’ என வாழ்த்தினார். கொங்குச் சமணர் அடியார்க்கு நல்லாரைக் கொண்டு முத்தமிழ்க் காப்பியம் ஆய சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுவித்தான் மோரூர்ப் பொப்பண காங்கேயன். அவன் அளித்த ‘சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்றுக்கு உரை சொல்வித்ததே’ என்றார் அடியார்க்கு நல்லார். அதே போன்ற கட்டளைக் கலித்துறைச் செய்யுளை நா. ம. ஐயா மீது, திருவருட்பா முழுதுமாக எழுதுவித்தோன் என உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை வாழ்த்தியுள்ளார். அருட்செல்வர் நூற்றாண்டுவிழாவில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் காலிங்கராயன் விருது பெறுகிறேன். எந்த முயற்சியும் எடுக்காமலே, என் கட்டுரையை கலைஞர் மு. க. கே-டிவியில் வாசித்து, அதுபற்றி முரசொலியில், அருமை உடன்பிறப்புக்கு 2012-ல் கடிதம் எழுதினார் (Ref. 2). முதல்வர் தலைமையேற்று நடாத்தும் விழாவில், தமிழ்மக்களை ஆளும் பல மந்திரிமார் பங்கேற்றுச் சிறப்பிக்க உளர்.
வானி நதிக்கு இணையொப்பாக (parallel) 55 மைல் தூரத்தில் கால்வாய் வெட்டிய காலிங்கராயர்கள் எனக்குப் பெரியப்பா ஆவர். இன்றைய அரசியல்வாதிகள் அறிந்து செயல்படவேண்டிய செய்தியைக் காலிங்கராயன் வரலாறு 800 ஆண்டு முன்னரே தெரிவித்துள்ளது. காலின் மெக்கென்சி, இந்தியாவின் முதல் ஸர்வேயர் ஜெனரல், தொகுத்த காலிங்கராயன் கைபீதில் காண்க. பொங்கல் வாக்கில் விரிவாகச் சொல்வேன். இப்பொழுது பொள்ளாச்சியில் முசுவாக உள்ளேன். ஜனவரி 8 கலைவாணர் அரங்க விழாவுக்கு வாருங்கள். வாழ்த்தினைத் தாருங்கள். விழா அழைப்பிதழில் சில தாள்கள் இணைப்பில். நனிநன்றி.
Dr. நா. கணேசன்
https://nganesan.blogspot.com
Tweets by naa_ganesan
https://archive.org/details/@dr_n_ganesan
Ref. 1: http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html
Ref. 2: https://nganesan.blogspot.com/2012/06/tamil-new-year-debate-murasoli.html