ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்- 5

0

மீனாட்சி பாலகணேஷ்

தொடர்ந்து நாம் பார்க்கப்போவது…….

5. முன்னீசுவரம் வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் 

பண்டைக்காலத்தில் தமிழர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் வாழ்ந்துவந்தனர். அவர்களால் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட புராதனமான கோவில்களுளொன்றே முன்னீசுவரமாகும். இது இலங்கையின் மிகப்பழமையான சிவாலயங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. புத்தளம் மாவட்டத்தில், சிலாபம் நகரத்திற்குக் கிழக்கில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் உள்ளது. சிவபிரான் இங்கு முன்னைநாத சுவாமி எனவும் அம்பிகை வடிவாம்பிகை எனவும் அறியப்படுவர்.

உள்ளே வடிவாம்பிகை அம்மை கொலுவிருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும் எனக்கூறுகிறார் இத்திருத்தலத்தைப் பற்றி எழுதியுள்ள திரு. குல. சபாநாதன். அவளது திருவுரு கண்டவர் மனத்தைக் கவர்ந்து ஓர் உள்ளக்களிப்பையும் பக்தியையும் உண்டுபண்ணும் வசீகர சக்தி ததும்பி வழியும் தன்மையுடையதெனக் கூறுகிறார்.

கோவில் தோன்றிய வரலாறு: பஞ்சேசுவரங்களில் (முன்னேஸ்வரம், இராமேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்) இலங்கையில் முன்னதாகத் தோன்றிய தலமே முன்னேஸ்வரம் என்பார்கள். இது தோன்றியதைப் பற்றிப் பல புராணக்கதைகள் உள்ளன.

வியாசமுனிவர் காசியில் செய்த பாவம் தீர இங்குவந்து சிவபிரானை வழிபட்டு உய்ந்தார் என்பர்.

இராவணனை வதம்செய்த இராமரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது; பிரம்மஹத்தி அவரைப் பின்தொடர்ந்தது. ஆனால் இராமர் தனது பரிவாரங்களுடன் முன்னீசுவரத்தின் மேலாகச் சென்றபோது, பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது; ஆச்சரியமடைந்த இராமர் சீதையுடன் அங்கிறங்கி, முன்னீசுவர நாதரையும் அம்பிகையையும் வழிபட்டார். சிவபிரான் விடையின்மீது அம்பிகையுடன் காட்சியளித்து அவருக்கு அருளினார் எனப் புராணங்கள் கூறும்.

இன்னும் விரித்துக்கொண்டே போனால் கட்டுரை நீண்டுவிடும். ஆதலால், இங்கு நிறுத்தி விடுகிறேன்.

முன்னேஸ்வரம் மீதான நூல்கள்: முன்னைநாத சுவாமியையும் வடிவழகி அம்மையையும் போற்றிக் காலந்தோறும் பல நூல்கள் புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. காரைநகர் ஸ்ரீமத். கா. சிவசிதம்பர ஐயரவர்கள் முன்னீசுவரர் நவமணி மாலை, கொழும்பு மு. சரவணமுத்துப் பிள்ளையவர்கள் முனியேசுர தீர்த்த யாத்திரை வழிநடைப் பதம், கொக்குவில் குகதாசர் ச. சபாரத்தின முதலியார் முன்னைநாத சுவாமி மேலும் வடிவழகியம்மை மீதும் ஆசிரிய விருத்தங்கள், கொக்குவில் சி. சிதம்பரநாத பிள்ளையவர்கள் முன்னீசுவரரூஞ்சல், மேலும் பலரும் பல நூல்களை இயற்றியுள்ளனர்.

முன்னீஸ்வரத்து அன்னை வடிவாம்பிகைமீது திரு. சொக்கன் அவர்கள் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல் 2012ம் ஆண்டு  தேவஸ்தானத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னமே வடிவாம்பிகைமீது ஒரு அந்தாதியும் பாடியுள்ளார் என அறிகிறோம்.

முன்னீசுவரமானது இலங்கைத்தீவில் ‘அலகேஸ்வரம்’ என்று ஸ்ரீசிவமஹாபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதும், குப்ஜிகா தந்திரத்தில் ‘தேவமோஹினி பீடம்’ என்றறியப் படுவதும், மார்க்கண்டேய புராணத்தில் சாங்கரி பீடம், ஸ்ரீலங்காபீடம் எனவும் உயர்வாகக் கூறப்படுவதுமான பெருமை பொருந்திய சக்தி பீடமாகும். அம்பிகை ஸ்ரீ வடிவாம்பிகை எனப் பெயர் கொண்டுள்ளாள். இவ்வன்னை அழகே உருவானவள்; அழகையும் அவளையும் பிரிக்க இயலாது என்பர்.

‘பவானி, பாவனாகம்யா’ என்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒரு நாமம். நமது பாவனையினால், கற்பனையினால் உலகமாதாவான அம்பிகையை, நம் எண்ணங்களுக்கேற்ற வடிவில், உருவில் வழிபடுவதே அதுவாகும். அவளைச் சிறுமியாக, பாலா திரிபுர சுந்தரியாக வழிபடுவது இத்தகையதொரு பாவனையே. அதற்குப் பிள்ளைத்தமிழ் நூல்கள் நமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

                                                            ~~~~~~~

இச்சமயம் இப்பிள்ளைத்தமிழ் நூலினின்றும் சில பாடல்களைக் காண்போம்.

வழக்கிற்கு மாறாகக் காப்புப்பருவம் சிவபெருமான் துதியுடன் ஆரம்பமாகிறது. இரண்டாம் பாடலே திருமாலைப் போற்றுகின்றது.

“இவனைத் தட்டிக் கேட்க யாருமில்லையா, தறுதலையாக அலைகிறானே” என்று தாயான யசோதை கவலை கொள்ளுமாறு சற்றும் பயமின்றி அக்கம்பக்கத்து வீடுகளிற் சென்று விரைவாக, அவர்களது வீட்டு உறிகளை உடைத்து வெண்ணெய் முதலியனவற்றை உண்டாலும், அவனிடம் கோபித்துக் கொள்ளாமல் அவனைத் தங்களுடைய செல்லமகனாக அணைத்துத் தழுவிக்கொள்ளும் ஆய்ச்சியரின் குட்டிப்பிள்ளை, கோபாலன் எனும் விஷமக்காரன், திருவான இலக்குமியின் மணவாளன் ஆனவன், அழகான கருமைநிற மேனியினை உடையவன், இவளை, வெல்லப்பாகிலும், முக்கனிகளிலும் காணாத இன்சுவைச் சொற்களைப் பேசும் அழகியை, அழகான நந்தவனங்கள் சூழ்ந்த முன்னீசுவரத்தில் வளரும் கனியை ஒத்த வடிவாம்பிகையைக் காக்க வேண்டும் என வேண்டுகிறோம்,” எனும் காப்புப் பருவப்பாடல் கருத்தைக் கவர்கின்றது.

                        தட்டிக் கேட்க ஆளில்லைத்
                                      தறுதலை என்றே தாய்கவலச்
                              சற்றும் அஞ்சா தயலேகித்
                                      தறதற என்றே உறிஏறிச்
                   சட்டி வெண்ணெய் உண்டாலும்
                                      சற்றும் வெகுளி கொள்ளாமல்
                             தங்கள் மகன்போல் அரவணைத்துத்
                                      தழுவி மகிழும் ஆய்ச்சியரின்
                   …………………………………………….
                   கட்டிப் பாகும் முக்கனியும்
                                      காணாச் சுவையின் சொல்லழகி
                             கவினார் பொழில்சூழ் முன்னைவளர்
                                      கனியை இனிதே காக்கவென்றே.      

ஈண்டு கண்ணனை, திருமாலை, அவன் பிள்ளைப்பருவத்துக் குறும்புகளுடன் பொருத்திப் புகழ்வது பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்திற்கு அழகான பொருத்தமன்றோ?

                                                ~~~~~~~~~~~

பிள்ளைத்தமிழ் நூல்களில் அவ்வத் தலங்களிலுறையும் தெய்வங்களின் பெருமையையும், அத்தல புராணச் செய்திகளையும் காணலாம். அவ்வாறே இதிலும் இராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற வரலாறும் ஒரு தாலப்பருவப் பாடலில் காணப்படுகின்றது.

‘பத்துத் தலைகளும், ஆணவமும் கொண்டு அலைந்த இராவணனை, மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக விளங்கிய அவனைத் தனது அம்பினால் கொன்ற இராமபிரானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தமையால் அவன் பித்தனாக அலைந்தபோது, ஸ்ரீ முன்னேஸ்வரத்தை அடைந்தான். அப்போது பிரம்மஹத்தி அவனைவிட்டு அகன்றதாம். உடனே தனது பரிவாரங்களுடன் பூமியில் அங்கு இறங்கி, முன்னநாதேஸ்வரரையும் வடிவாம்பிகையையும் தொழுதாராம். சிவபிரானும் அவருக்கு அம்மையுடன் காட்சியளித்தனராம். அத்தகைய பிரானின் இடப்பாகம் கொண்டவளே! தாலோ தாலேலோ’ என்பது பாடல்.

                        பத்துத் தலையும் ஆணவமும்
                             பாரித் திட்ட இராவணனைப்
                   பகர்மூன் றுலகிற் கதிபதியைப்
                             பகழி கொண்டு துளைத்தபிராற்
                   பித்த னாகப் பிரமகத்தி
                              பிடித்தே அலைத்த போதினிலே
                   பக்தியிற் கலைத்த பிரானாயெம்
                             பரிகாரஞ் செய்தவத் தின்னாய்
                   முத்தி யருளும் முன்னையனை
                               முன்வந் தேத்தித் தொழுததனால்
                    ………………………………………………………………..
                   அஞ்சுகக் குதலை மொழியாளே!
                             அன்பே! தாலோ தாலேலோ! 

                             ~~~~~~~~~~~~~~~~

அம்பிகை அம்மானையாடும் அழகை விவரிக்கும் ஒரு பாடலில் பொதிந்துள்ள கருத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன: ‘தூல உருவினை எடுத்துக்கொண்டு, உருவற்ற நிலையை விடுத்து சிறுமியாக அருகே வருவாய்! உனது சிறு கரங்களில் ஒப்பற்ற  பெருமை கொண்ட அம்மானைக்காய்களை எமது கண்கள் (ஆச்சரியத்தால்) விரிந்து நோக்கவும், திருமகள், கலையின் உருவான கலைமகள், வீரத்திருவான துர்க்கை எனும் மலைமகள் இவர்கள் உடன்வரவும், புலியின் தோலைப் போர்வையாக அணிந்த அருவமானவன் (சிவபிரான்) மகிழும் இமவான் மகளே, ஹைமவதி! பெரிய மரத்தின் நிழலைப்போன்று பேரருள் புரிவாய்; அம்மானையை எறிந்து ஆடி அருளுவாய்,’ என வேண்டும் பாடல்.

            உருவை மருவி அருவை ஒருவி வருவை சிறுமி அருகிலே
                   ஒருமை அருமை யுறநீ சிறுகை தனிலே பொருவில் பெருமைகொள்
          விரியு மெழிலம் மனையி னுடனெம் விழிகள் விரிய மகிழ்வுற
                   விரைவில் திருவும் கலையின் உருவும் விறலி னெழிலும் உடன்வர
          எருவை உரிவை செறியு மரும முரியன் களிகொள் ளிமவதி!
                   ………… ……….. ………………… ………….. …………… ………………….
          தருவை அனைய நிழலைத் தருமொர் அருளில் மருவு பெரியைநீ
                   தயவு மிகவம் மனைய எறிந்து தழைவோடாடி அருள்கவே.
          இப்பாடல் சந்தநயமும் நிரம்பிப் பொலிகின்றது.

                             ~~~~~~~~~~~~~~

இன்னுமோர் நீராடற் பருவப் பாடலுடன் இப்பாகத்தை நிறைவு செய்யலாம்.

சிறிமியான வடிவழகியை நீராட அழைத்து அழைத்து அன்னையும் சேடியரும் சலித்து விட்டனர். அவளிடம் கூறுகின்றனர்:

“நெருப்பனைய திருமேனியில் வெப்பமிகுந்த திருநீற்றினை எந்த நேரமும் பூசிக்கொண்டிருக்கும் நிமலனாம் சிவபெருமானுடைய உடலிற் பாதியைக் கொண்டவளே (உனது உடலும் அதனால் வெப்பமிகுந்திருக்குமே தாயே!)

“மலையரசன் மகளாய் உருக்கொண்டு குளிர்ச்சி மிகுந்த இமயமலையின்கண் வளர்ந்த போதில், எப்போதும் பனி, மழை, வாடைக்காற்று, குளிர் இவற்றினால் அங்கு புனலில் இறங்கி நீராட மறந்திருந்தாய் போலும்!

“ஆகவே நீராடும் விருப்பம் உனக்கு இல்லை என அறிந்தோம் நாம்; இருப்பினும் எங்கள் உளமாகிய தாமரைத் தடாகத்திலும், இந்த முன்னையின் ஒரு ஆறு தன்னிலும் நீராடி அனுபவம் கொண்ட உன்னை நீராடியருள வேண்டுகிறோம் நாம்.

“மிகுந்த வாசனை பொருந்திய இந்தச் சுகந்த நறுமண நீரில் நீராடியருளுக தாயே!” என்கின்றனர்.

            நெருப்பனைய திருமேனி நீற்றினைப் பூசியெந்
                   நேரமும் வெப்பமிகவே
          நிலவிடும் நிமலனின் ஆகத்தி னிற்பாதி
                   நிலைகொண்ட எம்பிராட்டி!
          பொருப்பினன் செல்வியாய் உருக்கொண்டு மலையினிற்
                     பொலிவுடன் வளர்ந்தகாலை
          பொழுதெலாம் மழைபனி குளிர்வாடை யாலங்கு
                   புனலாட மறந்திருந்தாய்
          …………………………………………………………………………………………………….
          விருப்புடன் நீராடி அனுபவம் கொண்டஉனை
                   வேண்டநீ ராடியருளே
          மிகுமணச் சுகந்தமளை குளிர்நீ ரிதாமிதில்
                    விரும்பி நீ ராடியருளே.

நீராடத் தாமதிக்கும் சிறுமியை, அத்தாமதத்திற்காகப் புலவர் கற்பிக்கும் காரணங்கள் நகையை உண்டுபண்ணுபவையாம்.

இத்தகைய அரிய பல பாடல்களைக் கொண்ட நூல் இப்பிள்ளைத்தமிழ் நூலாகும்.

                                                                                                                        (வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.