படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 24

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

வசந்தராசனின் ‘வானவில் குதிரைகள்’

அன்புள்ள எழில்!

மருந்தும் நானும் நலம். மருந்தால் நான் நலம். மருந்து விற்பனையாவதால் கடைக்காரனும் நலம். நீயும் உன் வீட்டாரும் நலமா? கடிதம் எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டதால் இதனை எழுதுகிறேன். கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவருண்டோ? என்பார் சுரதா. அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு அவருடைய ‘வித்தை கர்வம்’ நன்கு தெரியும். உண்மையில் தொடர்கல்வி என்பது அன்றாட நடைப்பயிற்சி போன்றதாகும். கசடாகிய களிம்பு படராமல் இந்த உள்ளம் தெளிந்த நீர்போல் இருப்பதற்குத் தொடர் கல்வி பெரிதும் உதவக்கூடும்.

கல்வி என்பது கல்வி நிலையங்களில் ஆசிரியரால் கற்றுத்தரும் பாடங்கள் என்பது அதுபற்றிய கிட்டப் பார்வையே. தொலைத்தூரப் பார்வை ஒன்றுண்டு. ‘கண்டது கற்கப் பண்டிதன்’ ஆவான் என்பது. அதே நேரத்தில் ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில!’ என்பதையும் நான் மறந்துவிடக் கூடாது. சல்லாத் துணிபோல் வாழ்க்கை. போலிச் சரிகைபோலப் புத்தகங்கள். இவற்றுள் நீ எதனைப் படித்தால் இதயத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி நீதான் முடிவெடுக்க வேண்டும்.

நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். நாளும் படிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் சிறுகதை நம்மை ஓடவைக்கும். நாவல் நடக்க வைக்கும். கவிதை பறக்க வைக்கும். நமக்கும் ஓடிப்பழக்கம் உண்டு. நடந்தும் பழக்கம் உண்டு. ஆனால் பறந்துதான் பழக்கமில்லை. கவிதைகளால் பறப்பதையே என் மனம் விரும்புகிறது.

உனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. தெரியாது என்பது தெரிந்தும் கவிதை நூல் ஒன்றினை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். நீ படித்து உன் கருத்துக்களை உன் பதிலில் எனக்கு எழுதினால் எனக்கும் தெளிவாகும். இதயமும் நலமாகும்.

‘வானவில் குதிரைகள்’ என்ற நூலை என் அன்புத் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கிறார். உண்மையில் அவருடைய பாடல்கள் சிலவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில நண்பர்களுடைய பாடலும் இடம் பெற்றிருக்கின்றன. எனவே இது ஒரு தொகுப்பு நூல்.

எனக்குத் தெரிந்து எந்தக் கவிஞனும் தொகுப்பு நூல் வெளியிடுவதில்லை. காலைவாரிவிடும் அரசியல் வாதிகளுக்குள்ள பண்பு தற்காலத்தில் கவிஞர்களுக்கும் வந்துவிட்டது. நாற்பது பக்கங்களில் இரண்டு நூல்களைத் தன் பணத்திலேயே அச்சடித்துக் கொள்கிறவன் லெட்டர் பேடை அடித்த பிறகுதான் நூலையே அச்சடிக்கிறான். இவன் எழுதியதை அச்சுக் கோப்பவன் கூடப் படிப்பதில்லை. அது கூட இவனுக்குத் தெரிவதில்லை. தன்னையொத்த கவிஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஓர் உயர்ந்த பண்பு. பிறர் வளர்ந்தால் தன் வளர்ச்சி பாதிக்குமே என்று நினைப்பவன் கவிஞனாவது இருக்கட்டும்; முதலில் மனிதனாவது எப்போது? ‘அறிஞர் சிலர்’ இருக்கிறார்கள். தங்கள் நூல்களைக் கூட அரசுடைமையாக்க அனுமதி தருவதில்லை. எழுத்துக்களைக் காசாக்கும் உரிமையைத் தந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

தன்னையொத்தவர்களைத் தன்னோடு அரவணைத்துச் செல்லும் பண்பு, அறிமுகப்படுத்தும் உயர்குணம் தம்பி வசந்தனிடத்தில் உண்டு என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.

வானவில்லின் வண்ணங்கள் ஏழு. அந்த ஏழு வண்ணங்களைப்போல் ஏழு நண்பர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள்.

நூலைப் பற்றிய புறவுரை இதுதான். நிரம்ப எழுதிவிட்டேன். இனி நூலைப் படித்து உனக்குப் பிடித்தமான வரிகளை அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, எழுதிய கவிஞரையும் பாராட்டும் வகையாக இரண்டு வரிகள் எழுது. உனக்குத் தெரிந்த அளவில் ஏதேனும் குறையிருந்தால் அதனையும் குறிப்பிடு. அது எனக்கும் கவிதையை எழுதியவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். உன் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மாறா அன்புடன்
மணி

*********

அன்பு மறவா மணிக்கு! வணக்கம்!

இங்கு நானும் என் குடும்பத்தாரும் நலமே. கடிதம் எழுத முடியவில்லை என்ற வருத்தம் எனக்குமுண்டு. நீ அனுப்பிய கடிதமும் நூலும் வரப்பெற்றேன். என்னைச் செவ்வழிப்படுத்துவதில் உனக்குள்ள ஆர்வத்தையும் நேசத்தையும் நான் சிறிய வயதிலிருந்தே அறிவேன்.

உன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்த நூலை என்னால் அவ்வளவு எளிதாகப் படிக்க முடியவில்லை. கவிதையைப் படிப்பதற்கும் படித்து உணர்வதற்கும் உணர்ந்து உள்வாங்குவதற்கும் ஒரு தனி முயற்சி தேவைப்படுகிறதோ என்ற ஐயம் வந்துவிட்டது எனக்கு.

முழுநூலையும் நான் படிப்பதைவிட யாராவது ஒருவருடைய கவிதையைப் பற்றிய என் கருத்தினைப் பதிவிடலாம் என்றே எண்ணி இதனை எழுதுகிறேன். தொடர்ந்த உன் கடிதங்களைக் கண்டு கவிதை கற்கும் கலையை நான் முழுமையாகக் கற்றுக் கொள்வேன் என்றே நம்புகிறேன்.

தஞ்சை மயிலரசன் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை எல்லாமே என்னைக் கவர்ந்தன என்று பொய்சொல்லி உன்னையும் என்னையும் ஏமாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. இதற்குக் காரணம் கவிதை பற்றிய ஆழமான புரிதல் எனக்கு இன்மைதான். எனக்குப் புரிந்த வகையில் எழுதுகிறேன். பிழையிருந்தால் என்னைத் திருத்தும் முழு உரிமை உனக்குண்டு.

மயிலரசன் எழுதிய கவிதைகளில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ‘வெளிச்ச வாசல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையாகும். அது எந்த பாட்டிலக்கணப்படி எழுதப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் படித்தால் ஓசைஒழுங்கு பிடிபடுகிறது. யாப்பைவிட ஓசை ஒழுங்குதான் கவிதையைத் தூக்கி நிறுத்தும் என்று நீ பல முறை சொல்லியது நினைவுக்கு வருகிறது. கற்பனை குறைவானாலும் உணர்ச்சியும் ஓசையொழுங்கும் இந்தக் கவிதை நூலின் முதற்கவிதையாக இருக்கும் தகுதியை உறுதி செய்கிறது.

கவிதை கவலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. கண்ணீருக்கு ஊற்றாகிவிடக் கூடாது. சிலபேர் கவிதை எழுதி அவர்களும் அழுகிறார்கள் படிப்பவரையும் அழ வைத்துவிடுகிறார்கள். இருவருக்கும் ஒரே நேர்கோட்டில் விதி விளையாடிவிடுகிறது. “கவிதை கவலையைப் போக்க வேண்டும். நம்பிக்கையைப் பதிய வேண்டும். போராடும் குணத்தைத் துளிர்க்கச் செய்ய வேண்டும்” என்றெல்லாம் நீ சொல்லுவாயே, அந்தப் பணியை இந்தக் கவிதை செய்கிறது.

சோகத்தின் வரவுகள் காத்திருக்கும் நீ
சோராதிருந்தால் சுகம் மலரும்!
காலத்தின் முகவரி மாறுமடா! – உந்தன்
கரங்களால் துன்பங்கள் தீருமடா!”

என்று எழுதியிருக்கிறார் மயிலரசன். இந்தப் பாட்டில் சோகத்தின் வரவுகள் என்னும் தொடர் சிந்திக்கத்தக்கது. சோம்பல் உள்ளவனுக்கு வாட்டம் வரிசைகட்டி நிற்குமாம்.

எரிமலை போலே நீயிருந்தால் அந்த
இமயமும் உனக்குத் தலைவணங்கும்!
வானின் வில்போல் நீ வளைந்தால் இந்த
வையகம் உன்றன் கையடக்கம்!”

என்னும் பகுதியில் கவித்துவம் களிநடனம் புரிவதை உணர முடிகிறது. கவிதை வெற்றி பெறுவது உத்தியால். கூனிக்குறுகுவது என்பது வேறு. வளைவது என்பது வேறு. உள்ளத்தால் சிறுத்து உடலால் வளைவதுதான் கூனிக்குறுகுவது. கர்ப்பத்தில் குழந்தை அப்படிக் கூனிக்குறுகி அமர்ந்திருக்கும். சத்திமுத்தப் புலவரும் தேரடிக்குக் கீழ்க் கூனிக் குறுகி அமர்ந்திருந்தார் என்று நான் படித்திருக்கிறேன். ‘மனம் கூசவில்லையா?’ என்னும் வழக்கு நோக்குக. மூங்கில் வளைவது அத்தகையதன்று. ‘முடத்தெங்கு’ என்று தென்னையைச் சொன்னாலும் அது நிமிர்ந்து கொண்டே வளைந்து செல்லுமேயன்றிக் குனியாது. அவைபோல மனிதனின் பணிவுக்கு வானவில்லின் வளைவை உவமமாக்கும் அழகியல் சுவைத்து மகிழத்தக்கது.

சிலர் சிந்தனை நம்மைச் சிந்திக்க வைக்கும். பாம்பு சட்டையை உரிக்கும் என்பதை அறிவோம். பாம்புக்குச் சட்டைபோடுவதை யாராவது அறிவோமா? மயிலரசன் அறிந்திருக்கிறார். இராவணன் போல அவர் எப்போதும் பொதுப்பணித்துறை சாலைகளையே பார்த்து நடப்பவர்போல் தெரிகிறது. போட்ட சாலையைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் புதிய சாலை போடுவது மேல்நாட்டார் வழக்கம். சாலைமேல் எற்கனவே மாட்டியிருக்கிற தார்ச்சட்டையைக் கழட்டிவிட்டுப் புதிய சட்டையைப் போடுவது நம்மவர் பழக்கம். நெளிவுகள் என்ற குறுங்கவிதையில் இந்த அங்கதத்தை அற்புதமாகச் சித்திரித்துள்ளார் மயிலரசன்.

நெளிந்து போகும்
பாம்புக்குச் சட்டை போடுவதுபோல்
சாலைக்குத் தார்போடுகிறார்களே,
உரிப்பதற்காகவா?”

ஆண்டுதோறும் வரவேண்டிய ‘முறை’ முன்னதாகவே வந்து, மீண்டும் தார் போட்டுக் கமிஷன் பெறுவதற்காகவே என்பதை “உரிப்பதற்காகவா?” என்னும் சொல்லில் வைத்துக் காட்டும் அங்கதம் போற்றத்தகுந்தது. பாம்பு உரித்த சட்டையிலிருந்து அதற்குச் சட்டையை மாட்டுவது பற்றிய கற்பனை பெரிதும் போற்றத்தக்கது.

மனிதனிலிருந்தே மனிதன் தோன்றுவதால் மனிதன் ஒரு மரபுப் பிறவி. எனவே மரபார்ந்த பண்புகளைப் பெற்றிருப்பது, பெற்றிருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். தமிழினம் பல பெருமைகளைப் பெற்றிருந்தது. உலகின் ஆதி மொழி தமிழ் என்பர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைப் பண்பாடென்பர். ‘செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே’ என்பதை அறக்கோட்பாடு என்பர். எல்லா உயிரிகளுக்கும் உணர்வுண்டு என்னும் இருபதாம் நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்பை மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரையும் தந்தவர்கள் அறிந்திருந்தார்கள். மணிமேகலை அறச்செல்வியாக விளங்கினாள். புலிகூட இடப்பக்கம் வீழ்ந்ததை உண்ணாத வீரம் நம்முடையது. ‘தீமை செய்வார்க்கும் நன்மை செய்வதே அறம்’ என்பது நமது கொள்கை. ஆனால் இவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட கொடுமை எண்ணிச் சில கண்ணிகள் பாடியிருக்கிறார்.

சங்கத்துப் பரம்பரையில் செந்தமிழன் சேர்த்து வைத்த
தங்கப்பண் பாட்டெங்கே? தரணிக்கோர் முகமெங்கே?
தட்டானின் பட்டறையில் தகரத்தின் அடிமைகளாய்
சுட்டாலும் சுரணைகெட்ட விட்டில்களாய்த் தொண்டர் கூட்டம்!
வெட்டாட்டுக் கொட்டகைக்கு வெள்ளாட்டு ஊர்வலம் போல்
முட்டாளாய்த் தன்தலையில் முடிசூட வாக்களிப்பார்!
பஞ்சத்தைப் பாய்விரித்துப் படுத்துறங்கும் பாவிமக்கள்
லஞ்சப்பேய் நெரிசலுக்குள் லட்சியத்தை மறந்துவிட்டார்!
சாதிகளை நட்டுவைத்துச் சமத்துவத்தைப் பேசுகின்ற
சூதர்களின் ராச்சியத்தில் சொக்கிவிட்ட தமிழகமே!
நாற்காலி வெறிபிடித்து நலங்காத்த நண்பனையும்
ஆள்காட்டும் நரிகளெல்லாம் அருந்தமிழர் சந்ததியா?
புத்தொளியே பிறக்கட்டும்! புத்துணர்ச்சி பெற்ற தமிழ்ச்
சத்தியங்கள் வருமுன்நான் செத்தாலும்; தமிழனல்ல!”

என்று உணர்ச்சி மேலிட எழுதியிருக்கிறார். கவிஞனும் மனிதன் தான். விருப்பு, வெறுப்பு என்பன அவனுக்கும் உண்டு. இருந்தாலும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் அதனையும் தன் சமுதாயத்திற்காக எழுதுவதற்கும் எல்லாருக்கும் மனம் வராது. இவருக்கு வந்திருக்கிறது. ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதற்கான காரணங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பாரதிதாசன் சொல்வதைப் போல இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்’ அவ்வாறு மீட்டெடுக்கும் வரைத் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன் என்னும் இந்தக் கவிஞரது உணர்ச்சி எல்லாருக்கும் வருமா?

இறுதியாக அவர் விபத்து என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பாடல் ஒரு சொல்விளையாட்டாகவே இருந்தாலும் பல நல்ல கருத்துக்களைத் தொகுத்துரைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு சொல்லையே தொடரில் பயன்படுத்தி எழுதுவது இடைக்காலத் தமிழ்க்கவிதைக் கோட்பாடுகளில் ஒன்று. அது இன்றும் தொடர்கிறது.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கிப் போரில் மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்! கால்வண்ணம் இங்குக் கண்டேன்!”

என்று கம்பன் பாடுவான். அதனை வள்ளற் பெருமானும் பாவேந்தரும் சுரதாவும் கண்ணதாசனும் வைரமுத்தும் பின்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்!
வீணைக்கு மேலா..டை நரம்புகளின் கூட்டம்.!.
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்!
கனவுக்கு மேலா..டைதொடர்ந்து வரும் தூக்கம்!..
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்!
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்!
மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு!
மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு!
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்!”

என்ற சுரதாவின் பாடல் காலத்தால் அழிக்க இயலாத கற்பனை வளம் சார்ந்தது. உன்னைப்போல் அவரும் குணத்தால் கெட்டழிந்தவர். பணிவு என்பதே உங்கள் இருவருக்கும் கிடையாது. அவர் சமரசம் செய்து கொண்டிருந்தால் தமிழ்த் திரையுலகின் முடிசூடா கவிமன்னர் அவராகத்தான் இருந்திருப்பார்.

என்பிறப்பு இவ்வுலகில் விபத்து என்றால்
இறைவனுக்கே நன்றிசொல்வேன்! அடடா! அன்று
என்னவளைக் கண்டெடுத்த காதல் கூட
இருவிழிகள் மோதி நின்ற விபத்தால் இன்பம்!
வண்டொன்று மலர்மடியில் விழுந்து விட்டால்
வாழ்த்துப்பா பாடுகின்ற மலர்கள் கூட்டம்
வஞ்சிதரும் எதிர்பாரா முத்தம் ஒன்றை
விபத்தென்று சொல்லிவிட்டால் விரும்பார் உண்டா?
கரும்புக்கு விபத்தென்றால் வாயி னிக்கும்!
கல்லுக்கு விபத்தென்றால் கலையினிக்கும்!”

என்றெல்லாம் மயிலரசன் எழுதிக்காட்டுகிறார். மரபுக்கவிதை என்பது இதுதான். விருத்தத்தில் எழுதுவதனாலே இது மரபுக்கவிதை என்பது அறியாமை. முன்னோர்களைப் பின்பற்றி எழுத வேண்டும்.

நூல் அனுப்பினாய். படிக்க முயன்றேன். முடிந்ததை எழுதினேன். உன்னைப்போல் நுட்பமாக எனக்கு படிக்கத் தெரியாது. எனவே எழுதவும் தெரியாது. வழக்கம் போல என்னை வழிநடத்து. அடுத்த மடல் இன்னும் சிறப்பாக எழுத முயல்வேன். உன் மடலை எதிர்பார்க்கிறேன்.

அன்பு மறவா
எழில்

**********

அன்புடைய எழிலுக்கு! வாழ்த்துக்கள்!

மலையரசன் கவிதைகள் பற்றிய உன்னுடைய அழகான அருமையான திறனாய்வைக் கண்டேன். இந்த அளவுக்கு உனக்குக் கவிதைச் சுவை அறிய இயலும் என்பது உறுதியாக எனக்குத் தெரியாமற் பேனாதற்கு வருந்துகிறேன்.

கவிதையைச் சுவைப்பது பற்றிய கோட்பாடுகளைத் தனியாக அறிந்து கொள்ள வேண்டுமோ என்று நீ எழுப்பிய ஐயம் நியாயமானதே! ஆனால் அந்தக் கோட்பாடுகளை எழுதி வைத்துக்கொண்டு நாம் கவிதையைச் சுவைக்க முடியாது. ஒரு கவிதை படிப்பவனுடைய உள்ளத்தில் சலனத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தச் சலனத்தின் பரிமாணங்களை வைத்தே கோட்பாடுகளை உருவாக்க வேண்டும். அவன் உள்ளத்தைக் கவிதை திருட முயல வேண்டும். படிப்பவன் பாதித்த கவிதை, அவனைப் பாதிக்க வேண்டும். அந்தப் பாதிப்பும் கவிஞனின் பாதிப்பும் ஒரே அலைவரிசையில் இயங்க வேண்டும்.

கவிதையால் உண்டாகிற சலனம் கற்பனையால் உண்டாகலாம். யாப்பால் உண்டாகலாம். உணர்ச்சி வெளிப்பாட்டால் உண்டாகலாம். கருத்தினால் உண்டாகலாம். தமிழ்க்கவிதைக் கொள்கை கருத்துக்கு முதலிடம் தருவதாக இருப்பதினால் ஏனைய கவிதைக் கூறுகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் நிற்பது கருத்தே!, ஒரு இசைக்கச்சேரியில் வாய்ப்பாட்டு போன்றது அது. ஏனைய பக்க வாத்தியங்களே!

இந்தக் கோட்பாட்டினை நண்பர் வெண்முகிலன் கவிதையில் வைத்துக் காணலாம். நான்கு எண்சீர் விருத்தங்களும் முப்பத்து மூன்று அறுசீர் விருத்தங்களுமாக எழுதியிருக்கும் அவருடைய கவிதைகளில் மையக்கருத்தாக இழையோடுவது ‘தமிழின அடையாளம்’ மற்றும் எழுச்சி என்பதே ஆகும்.

பொதுவான பாடுபொருள்தான். ஆனால் சிறக்கப் பாடியிருக்கிறார் வெண்முகிலன். கவிதைச் சிறப்பதற்குப் படைப்பாளனின் உத்திகளே காரணம். ‘நெஞ்சினில் நேயம் வைப்பீர்’ என்னுந் தலைப்பில் பதினான்கு அறுசீர் விருத்தங்களை எழுதியிருக்கும் வெண்முகிலன் கருத்திசைவுக்கேற்ப இறுதிப்பாடலை எண்சீர் விருத்தமாகப் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது.

பலகோடிப் புற்றீசல் பறந்தால் என்ன?
பகலவன் கதிர்பட்டால் மண்ணில் வீழும்!
பலகாலம் மடமைகள் வாழ்ந்தால் என்ன?
பகுத்தறிவு நெருப்பானால் சாம்பலாகும்!”

என்றெழுதும் வெண்முகிலன் அடுத்த பாட்டைச் ‘சிறியன சிந்தியாதீர்’ என்னுந் தலைப்பில் ஒன்பது அறுசீர் விருத்தங்களை எழுதி முதல்பாட்டைப் போலவே கருத்திசைவுக்கேற்ப மூன்று எண்சீர் விருத்தங்களை இறுதிப்பாடல்களாக எழுதியிருக்கிறார். தமிழனின் கடமை பற்றி மயிலரசன் சொன்ன கருத்துக்களையே வெண்முகிலன் வழிமொழிந்திருந்தாலும் உத்தியினால் வேறுபடுகிறார்.

மனக்கதவைத் திறப்பதும் அன்பி னாலே!
மரக்கதவைத் திறந்திடலாம் கருவியாலே!
சினப்பாம்பை அடக்கிடலாம் அறிவினாலே!
சிந்தனையைத் தூண்டுவதோ கல்வியாலே
தனக்கெனவே வாழ்வார்பே ராசையாலே!
தன்மானம் இழந்திடுவார் அச்சத்தாலே!
எனக்கெதற்கு வம்பென்று இருந்திடாமல்
இன்தமிழுக்குழைப்பவரே என்றும் வாழ்வார்!”

எனப் பல எடுத்துக்காட்டுக்களை உவமமாகச் சொல்லித் ‘தமிழுக்குழைப்பவரே என்றும் வாழ்வர்’ என முத்தாய்ப்பாய் முடித்திருப்பது போற்றத்தகுந்தது.

கூர்மதி நல்காக் கல்வி குறிக்கோளைக் காட்டா நட்பு
நேர்வழி செல்லா எண்ணம் நிம்மதி நல்கா வாழ்க்கை
ஊர்நலம் நாடி நாளும் உழைத்திடா உழைப்பு யாவும்
பார்மிசை சான்றோர் போற்றும் பாராட்டைப் பெறுவதில்லை

எனப் பொதுவாழ்க்கைக்கும் தனிவாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் வெண்முகிலனின் இந்தப் பாடல்

ஆபத்துக் குதவா பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாவத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே

என்னும் தனிப்பாடலை நினைவூட்டுகிறது. மூன்று பாடலை மட்டுமே இந்தத் தொகுப்பில் எழுதியுள்ள வெண்முகிலன் மொழிநடை இயல்பானது. எளியது. எவருக்கும் புரியக்கூடியது.

என்னுடைய இந்தக் கடிதம் உனக்கு இன்னும் தெளிவினை உண்டாக்கக் கூடும். எனக்கு விடையிறுக்க வேண்டும் என்னும் ஆர்வமும் அடுத்த கவிதை பற்றி என்னிடம் கலந்துரையாட வேண்டும் என்னும் துடிப்பும் உன்னிடம் மிக்கிருக்கும் என்றே நம்புகிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மாறா அன்புடன்
மணி

**********

அன்பு மறவா மணிக்கு, வணக்கம்!

உன்னுடைய மடல் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன். பாடல்களின் மையத்தைக் கண்டறிவதிலும் பாட்டின் மையத்தைக் கண்டறிவதிலும் உனக்கு நிகர் நீயே. வெண்முகிலன் கவிதை மூன்றாயினும் சிறந்தவை என்னும் உன்னுடைய கருத்து எனக்கும் உடன்பாடே. இந்த அடிப்படையில் நான் நாவரசன் எழுதியுள்ள புதுக்கவிதைகள் பற்றி உன்னுடன் கலந்துரையாடலாம் என்றே இந்த மடலை எழுதுகிறேன்.

ஒருபக்கம் கவிதையின் புதிய உத்தி என்று புதுக்கவிதையைக் கூறுகிறார்கள். மற்றொரு பக்கம் இதுதான் புதுக்கவிதை என்று அச்சமூட்டுகிறார்கள். புதுக்கவிதை ஒரு இறக்குமதிப் பண்டம். அதற்காக அதனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பது பொருளல்ல. ஆனால் என்ன நடக்கிறது இங்கே?

மனத்தினும் விரிந்து அதாவது மனத்தால் உள்வாங்க முடியாத கற்பனைகளைத் திணிப்பது எப்படிக் கவிதையாக முடியும்? இல்லாத பொருளை உவமமாகச் சொன்னாலே அதனை இல்பொருள் உவமமென்று தள்ளிவிடுவது தமிழ்க்கவிதை மரபு. ஆனால் இவர்கள் பொருத்தமில்லாத இரண்டு சொற்களைப் பொருளே தெரியாமல் இணைத்துவிட்டு அதனைப் புதுக்கவிதை என்று நம்பச் சொல்கிறார்கள். போதாத குறைக்குப் புதுக்கவிதைக்குப் பிதாமகர் பாரதிதான் என்று கவிதையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள்.

பாரதிமீது வேண்டாத புகழைத் திணிப்பதையே ஒருசாரார் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள். அவர்கள் உண்மையில் பாரதியின் நோக்கத்துக்கு எதிரானவர்கள். எளிய பதம், இனிய நடை, உள்ளத்தை உருக்கும் இசை இதுதான் பாரதியின் கவிதைக் கோட்பாடு. இதற்கு எதிரானவர்கள் பாரதிக்கும் எதிரியே!. இந்தப் பின்புலத்தில்தான் நான் நாவரசன் கவிதைகளை நோக்குகிறேன்.

கவலைப்பட்டதற்காகக் கவலைப்பட்டேன்!
சஞ்சலப்பட்டதற்காகச் சஞ்சலப்பட்டேன்!
ஆம்!
வாழ்வின் பரிணாமங்களுக்கும்
வாழ்வியல் வினாக்களுக்கும்
கவலைப்படுவதும் சஞ்சலப்படுவதும்
….
பரிணாம ஊற்றோ?”

என்னும் கவிதையில் ஒரு சாரம் இருப்பதை உணர முடிகிறது. ‘இன்னாது அம்ம இவ்வுலகம்! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்னும் சங்க இலக்கிய வரிகளின் எதிர்மறைப் பதிவு இது. இதிலிருந்து அதுவும் அதிலிருந்து மற்றொன்றுமே வாழ்வின் பரிணாமம் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்வு முடிந்துவிடுகிறது என்பதை மிக அருமையாகப் பதிவிட்டிருக்கிறார் நாவரசன்!

ஒளியை வரைந்தேன்! பசிக்கு —- இருளைக் கேட்டது!
மீனை வரைந்தேன்! பசிக்குப் —– புழுவைக் கேட்டது!
பறவையை வரைந்தேன்! பசிக்குத்தானியம் கேட்டது!
மிருகத்தை வரைந்தேன்! பசிக்கு இரையைக் கேட்டது!
மனிதனை வரைந்தேன்! அவன் என்னையே கேட்டான்!”

என்று ‘மனிதன்’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றை விழுங்கித்தான் மற்றொன்று என்னும் தத்துவத்தையும் மானுட வாழ்வியல் உண்மையையும் அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். இனிய சொற்கள்! எளிய நடை! அருமையான கவிதை!

தாஜ்மகாலை வெறுக்கிறேன் என்று எழுதியிருக்கிறார் நாவரசன்! எதற்காக வெறுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. உருவாக்கிய தொழிலாளிகளின் கைகள் வெட்டப்பட்டன என்னும் சேதியின் அடிப்படையில் இதனை எழுதியிருக்கிறார். அப்படி நடந்திருந்தால் வெட்டுக்கு ஆளான கைகளைத்தான் இவர் பாடியிருக்க வேண்டும். மேலும் இது போன்ற வரலாறுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. வெறுப்பதற்காகக் கட்டப்பட்டதன்று தாஜ்மகால். ஏதோ யாருக்கும் தோன்றாத புதிய சிந்தனையைப் பதிவிடுவதாகக் கருதிக் கவிஞர் நாவரசன் எழுதியிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒன்றன் பின்புலத்தை அறிந்து கொள்வதும் தவறன்று. அதற்காகப் படைக்கப்பட்ட ஒரு பொருளை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை மிக அருமையாகப் படம்பிடித்துக் காட்டுவார் பாவேந்தர்.

சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே முன்னர்
எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே!”

என்றுதான் பாடினாரே தவிர, தொழிலாளர்கள் ரத்தம் சொரிந்ததற்காகச் சோலையை வெறுக்கவில்லை. தாமரைத் தடாகத்தைப் பாடுகிறபோதும்,

தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே

“தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே” என்று பாடிய பாரதிதாசன், “தாமரை பூத்த குளத்தினிலே முகத்தாமரை தோன்ற முழுகிடுவாள்” என்றுதான் பாடுகிறார். அதாவது தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைவதற்குக் காரணமான குளத்தில் குப்பனின் காதலியைக் குளிக்க வைத்து அழகு பார்க்கிறார் பாவேந்தர்.

மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாடுகளில் ஒன்று. வெற்றசை என்பதை மரபுக்கவிதையில் இணைத்துக் கொள்ள முடியும். சாரியை புணர்த்து எழுதிக் கொள்ள முடியும். வலித்தல் மெலித்தல் விகாரங்களை அனுமதிக்கலாம். இது போன்ற சலுகைகள் புதுக்கவிதையில் நடக்காது. சொற்செட்டு என்பது கவிதைச் செறிவுக்கு மற்றொரு பெயர். இந்தச் செறிவில் புதுக்கவிதை சங்க இலக்கியத்தை ஒத்திருக்க வேண்டும். அடைச்சொற்களைக் கூடக் காரணத்தோடுதான் புணர்ந்து எழுதியிருப்பார்கள். இந்த ஆழமான நெறிமுறை தெரிந்திருந்தால் நாவரசனின் புதுக்கவிதைகள் வெற்றி பெற்றிருக்கக்கூடும். உண்மையில் மரபுக்கவிதையைவிடப் புதுக்கவிதைக்கான சிந்தனைக் களம் பெரியது. புதுக்கவிதை எழுதுவது அரியது என்பதை அவர் உட்பட இன்னும் பலரும் புரிந்து கொண்டனரா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

நிரம்ப எழுதிவிட்டேன். உன் மடல் கண்டு

அன்பு மறவா
எழில்

**********

அன்புடைய எழிலுக்கு எழுதிக்கொண்ட அன்பு மடல்.

உன் கடிதம் கிடைத்தது. செறித்து வைக்கப்பட்டிருந்த உன் இலக்கிய ரசனை நெகிழ்ந்து நீட்சியாகி வருகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். வாழ்க்கைத் துன்பங்களில் சோர்ந்திருக்கும் எவருக்கும் இலக்கியம் குளிர்தருவாக, தருநிழலாக, நிழல் கனிந்த கனியாக’த் திகழ்வதை நீ தற்போது உணர்ந்து கொண்டிருப்பாய் எனற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

கவிஞர் நாவரசன் எழுதிய புதுக்கவிதைகளைப் பற்றிய உன் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடே. உலகத்தை ஆளப்போகிறான் எனச் சொல்லிக் கொண்டு பிறந்தவன் ஒரு ஊராட்சித் தலைவராகக் கூட ஆகமுடியாததுபோலத்தான் இன்றைய புதுக்கவிதை நிலை வந்திருக்கிறது. அதற்காக மரபுக்கவிதைகள் மண்ணாளுகின்றன என்று பொருளில்லை. அது புதைகுழிக்குள் போகாமல் காக்கின்ற சிலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் புதுக்கவிதைக்குப் புவியரசு, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், சிற்பி முதலியவர்களையே எடுத்துக்காட்டுக்களாக்கிக் கொண்டிருப்பது ஒன்றே அது வளரவில்லை என்பதற்குப் போதுமான சான்றாகும். விதைகளின் வெளிச்சம், வெற்றிடங்களின் வீரியம் என்ற இரண்டு சொற்களில் என்ன குறியீடு இருக்கிறது? என்ன இலக்கியச் சுவை இருக்கிறது என்பது விளங்கவில்லை. நான்கே வரிகளில் எழுதவேண்டிய தாஜ்மகால் கவிதையைச் சாண்டில்யன் கதையைப் போல நாற்பது வரிகள் நீட்டிக் கொண்டு செல்வது புதுக்கவிதை பற்றிய தெளிவின்மையையே காட்டுகிறது.

நண்பர் தெட்சணாமூர்த்தி சில பாடல்களை எழுதியிருக்கிறார். பிறந்து நான்கு நாள்களில் மறைந்த தன் அருந்தவப்புதல்வனை எண்ணி அவர் உருகியிருப்பது நெஞ்சு வெடிக்கும் உண்மையாகும். இழந்த சோகத்தை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். அந்தச் சோகச்சுமை சரியான தளத்தில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி விவாதிக்கப் பாடுபொருளும் அந்தச் சூழ்நிலையும் இடங்கொடுக்கவில்லை.

‘நெசவாளிகள்’ என்னுந் தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு ஏழுவரி கவிதைதான் அவரைக் கவிஞர் என்று அடையாளப்படுத்துகிறது.

மானுட நிர்வாணத்தை
மறைப்பதற்காய்
நாங்கள் மானத்தை நெய்கிறோம்!
இடுப்பில் ஆயிரம் கண்ணுடைய
அரைமுழத் துண்டணிந்து

இதுதான் புதுக்கவிதை. உத்தியால் வேறுபடும் புதுக்கவிதை. இந்த முரண்தான் இதற்கு அழகு. பிறருடைய மானத்தைக் காக்க நெசவாளர்கள் நெய்கிறார்கள். ஆனால் அவர்கள் இடுப்பில் இருப்பதோ அரைமுழத் துண்டு. அதில் ஆயிரம் கிழிசல்கள். அங்கதம், முரண். குறியீடு, படிமம் என்னும் நான்கு உத்திகளில் பெரும்பான்மையாகச் சிறந்து வருவதே புதுக்கவிதை!. இதனைப் புரிந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

நாங்கள்
நிர்வாணத்தை விற்பனை
செய்கிறோம்!
ஆடை வாங்குவதற்காக!”

முரணும் குறியீடும் கலந்ததே இந்தக் கவிதையின் வெற்றிக்குக் காரணம்.

அவன் ஒரு பட்டு வேட்டி
பற்றிய கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது

என்னும் அங்கதம் புதுக்கவிதைளைக் கற்பார் உள்ளத்தில் நங்கூரம் பாய்ச்சுவதை உணரவேண்டும். இலக்கணம் இல்லாதது புதுக்கவிதை என்று எவனோ ஒரு கோமாளி சொன்னதைக் கேட்டதன் விளைவுதான் சொற்குப்பைகள் எல்லாம் இன்று புதுக்கவிதைக் கிடங்கில் கொட்டிக்கிடக்கின்றன கொளுத்துவதற்கு ஆள் போதாமல்!. இவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் பாருங்கள். இலக்கணம் இல்லாதது புதுக்கவிதையாம். அருத்தாபத்தியால் இலக்கணம் உள்ளது மரபுக்கவிதையாம்! என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.? ஒன்றினை நினைவுபடுத்தவேண்டியது எனக்குக் கடமையாகிறது. புதுக்கவிதையில் வாகை சூடியவர்கள் எல்லாம் மரபின் எல்லை கண்டவர்கள். மரபிலக்கிய, இலக்கணப் பயிற்சியில்லாதவர்கள் புதுக்கவிதையில் வெற்றி பெற முடியாது. அப்படிப் பெற்றாலும் அது நத்தையின் எழுத்துப் போல் தோன்றுகிறபோதே மறைந்துவிடும்! இந்தக் கடிதத்தை இத்துடன் நிறுத்துகிறேன்.

உன் மடல் கண்டு மீண்டும் எழுதுவேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மாறா அன்புடன்
மணி

**********

அன்புடைய மணிக்கு எழில் அன்புடன் எழுதிக் கொண்ட அன்பு மடல்.

சென்ற உன் கடிதத்தில் கவிதையைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை பற்றிய நுண்ணிய கருத்துக்களை நீ எளிமையாக எடுத்துச் சொன்னது எனக்குத் தெளிவையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

எதனைப் பற்றியும் கவிதை எழுதலாம். ஆனால் பொருளைப் பற்றிய கவிதைப் பார்வையும் கவியுணர்வுமின்றி எழுதினால் அது வெற்றி பெறாது.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப் பசு பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

என்னும் கவிமணியின் கவிதை மிக எளிய காட்சிப் பொருளைப் பற்றியதுதான். ஆனால் அதில் கவிதைப் பார்வையும் கவியுணர்வும் கலந்திருப்பது காண்க. மேய்தல், நக்குதல் ஆகிய பசுவின் இரண்டு வினைகளும் குதித்தல், குடித்தல் ஆகிய குட்டியின் இரண்டு வினைகளும் கவிமணிக்குக் கவியுணர்வைத் தூண்டியிருக்கின்றன என்பதையும் அறிதல் வேண்டும். இந்தப் பின்புலத்தில் தேனீ தமிழ்ச்சிம்மன் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நடந்து போன காவிரியின் நின்று போன கதைபேசும் தமிழ்ச்சிம்மன், நிற்பதற்குக் காரணமான அரசியல் வாதிகளைக் கடிந்து கொள்கிறார்.

காவிரியில் நீரோட்டத்தைக் கைது செய்துவிட்டுத்
தேசிய நீரோட்டத்தில் நீந்துவது எப்படி?
தஞ்சை வயல்களில் கொஞ்சி
விளையாட வேண்டிய காவிரியைக்
கண்ணம்பாடியில் கட்டிப் போட்டது ஏன்?”

என்று கவி நயத்துடன் பாடும் தமிழ்ச்சிம்மன், காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்தியதன் இன்றைய சமுதாய நிலையை அங்கதச் சவையுடன் பாடியிருப்பது சிறப்பாக உள்ளது. அவர் எழுதுகிறார். பெண் விடுதலை, பெண்ணியம் என்றெல்லாம் மேடைகளில் கதையளக்கும் அரசியல் வாதிகளே!

ஒரு நதிப்பெண் கூட
இந்த நாட்டில்
சுதந்திரமாக நடக்க முடியவில்லையே?”

என்று வினவியிருக்கிறார். தொடர்ந்து எழுதுகிறார்.

நீர் ஆதாரத்தையே
நிர்மூலப்படுத்திவிட்டு
நீர் என்ன ஆதாரத்தோடு
தேசியம் பேசுகிறாய்?”

காவிரிக்கரையில் எல்லாரும் நடக்கிறார்கள். பேசுகிறார்கள் போகிறார்கள் வருகிறார்கள். இளங்கோவடிகள் நடந்தாய் வாழி காவேரி என்று பாடினார். விடுதலை இந்தியாவில் நதிகளுக்கும் விடுதலை இல்லை என்பதை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். புதுக்கவிதை எளிமைக்கு எடுத்துக்காட்டு என்னும் படைப்புண்மையை நான் அறிந்து கொள்ள இந்தக் கவிதை எனக்குத் துணை புரிந்தது.

இனம், மொழி, நாடு இவை பற்றிச் சிந்திப்பது மரபுவழிச் சிந்தனையே. இவை பற்றிப் பாடுவதும் மரபுவழிக் கவிதைகளே. ஆனால் இதே பாடுபொருளைப் புதுக்கவிதைப் பாடுபொருளாக மாற்றித் தமிழ்ச்சிம்மன் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது. முன்னாலே மரபு என்பது அவற்றின் பெருமைகளை. இங்கே புதுமை என்பது இன்றைய நிலையை. இன்றைய நிலை மரபாகாது. எனவேதான் அவர் புதுக்கவிதையில் பதிவிடுகிறார்.

தமிழா!
பல ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் அகதியானாய்!
சில ஆண்டுகளுக்கு முன் ஶ்ரீலங்காவில் அகதியானாய்!
இன்று இந்தியாவில் அகதியானாய்!!
நாளை தமிழ் நாட்டில் அகதியானால்
நீ வாழப் போவது எங்கே?”

என்ன பொருள் பொதிந்த வினா! மொழித் திணிப்பும் பிறமொழி மக்கள் குடியேற்றமும் சொந்த நாட்டிலேயே மக்களை அகதியாக்கிவிடும். ஒரு மொழிக்கு உயர்வளிக்கும் ஒன்றிய அரசினைக் கண்டிப்பதைவிட உள்ளூர்த் தமிழர்கள் உண்மை நிலை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். வெற்று அரசியல் கூச்சல்களை நம்புவோரின் எதிர்காலம் விடையில்லாத வினாவாகிவிடும்.  நியாயங்கள் தண்டிக்கப்படுவதும் குற்றங்கள் விடுதலையாவதும் இந்திய நீதி மன்றங்களில் காணமுடியாத காட்சிகள் அல்ல என்பதைக் காமராசன் தனது ‘கறுப்பு மலர்களில் இப்படிச் சித்திரித்திருப்பார்.

உன் விசாரணையே கூண்டுகளில்
தொடங்குகிறபோது
தீர்ப்புக்கள் சிறைக்கம்பிகளில் முடிவதில்
வியப்பேதும் இல்லை!”

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிம்மன் இதே உணர்வுகளை வேறு வாய்பாட்டில் பாடியிருப்பது உத்தி மாற்றத்தால் பெறும் கவிதை வெற்றியைக் காட்டுவதாக அமைகிறது. சிம்மன் எழுதுகிறார்.

, நீதி தேவனே!
உன் மயக்கமென்ன?
கஞ்சிக்கு இல்லாத பசி மயக்கமா?
இல்லை கள்ளச் சாராயத்தின்
போதை மயக்கமா?”

பாடுபொருள் பாடலில் சிறக்கலாம். உணர்ச்சி கவிதையில் சிறக்கலாம். பாதிப்பின்றிப் பாடல் எழுத முடியும். பாதிப்பின்றிக் கவிதை எழுத முடியாது. வராது. இங்கே பொங்கல் வாழ்த்துக்களைக் கூடக் கவிதை என்று மயங்கித் திரிவது ஒரு இரங்கத்தக்க நிலை. தேனீ தமிழ்ச்சிம்மனைப் பாதித்தவைகள் நம்மையும் பாதித்திருக்கின்றன. அவர் எழுதுகிறார். நம்மால் எழுத முடியவில்லை. காரணம் அவர் படைக்கப் பிறந்தவர். நாம் படிக்கப் பிறந்தவர்கள். அவ்வளவுதான்!

தொடர்ந்து செயராமன் எழுதிய கவிதை தொகுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் சிலவே எனினும் அன்னை தெரசாவைப் பற்றிய கவிதை ஈர்க்கிறது. இணையத்தில் சறுக்கிய இணைப்புத் தகராறால் செய்தி தவறாக ஒலிபரப்பாகிவிட்டது என்ற அங்கதச் சுவையோடு அவர் தந்திருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

தேசிய நீரோட்டம் செல்லும் பாதையில்
அண்டை மாநில கர்நாடக
வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில்
உடைப்பு ஏற்பட்டு, உரியவர்களின்
உரிய நடவடிக்கையால்
மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!
இத்தேசிய நீரோட்டப் பாதை
ஐம்பதாண்டு பழைமை உடையது என்பதால்
மீண்டும் உடைப்பு ஏற்படலாம் என
அஞ்சப்படுகிறது.
எனவே……………………….
ஆங்காங்கே இருக்கும் தமிழர்கள்
விழிப்புடனும் எச்சரிக்கையுணர்வுடனும்
இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!”

காவிரி நதி நீர்ச்சிக்கலால் இரு மாநிலங்களுக்கிடையே புகைந்து கொண்டிருக்கும் பகை, கலவரமாகத் தெரிந்த நிலையில் எழுதப்பட்ட கவிதை இது. கோலார் முதலிய மாவட்டங்களில் பணியாற்றும் தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சாதுரியமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. வந்தார்க்குப் புகலிடமாகத் தமிழகம் விளங்கினாலும் தமிழர்க்குப் புகலிடமாக இந்தியாவில் ஏதுமில்லை என்பதையும் பிற மாநிலங்களில் தமிழர்கள் ஒரு வகை அச்ச உணர்வோடு வாழவேண்டியதிருக்கிறது என்பதையும் அங்கதச் சுவையோடு செயராமன் எழுதியிருப்பது நூலின் பரிமாணத்தைக் கூட்டுகிறது.

உடல்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. என்றாலும் இந்த நூலில் நான் படித்துணர்ந்த கருத்துக்களும் சமுதாய நிலைப்பாடுகளும் உன்னுடைய விளக்கங்களும் என் எதிர்கால இலக்கியப் பார்வைக்கு ஒளி தந்திருக்கின்றன.

மீண்டும் உன் மடல் கண்டு

அன்பு மறவா
எழில்

**********

அன்புடைய எழிலுக்கு மணி எழுதிக்கொண்ட அன்பு மடல்.

நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறேன். மருத்துவச் செலவும் மனக்கவலையும் ஏறி வருகின்றன. என்னால் முடிந்தவரை என் கடமைகளை நான் செய்து முடித்திருக்கிறேன். சாதிக்கப் பிறந்தவர்கள் சந்திக்கும் சிக்கல்களால் தடுமாறுவது இயல்பு. நானும் அப்படி தடுமாறியவனே. போலித்தனத்தை அறவே வெறுக்கும் என் இயல்பு நீ அறிந்ததே. வெற்று ஆரவாரங்களிலும் விளம்பரங்களிலும் விருதுகள் பெறுவதிலும் நான் ஆர்வம் காட்டுவதில்லை. பொய்ச்சிரிப்பிலும் புனைசுருட்டிலும் நான் அருவெறுப்படைகிறேன். ஒரு காட்டு மூலிகையாகவே இருந்துவிட்டாலும் பரவாயில்லை. ஜிகினா மாலையாக ஆகிவிடக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருக்கிறேன். இந்த இயல்புகளே எனக்குப் பகையைப் பெருக்கியது. நட்பைக் குறைத்தது. சொல்லப் போனால் எனக்கு நண்பர்களே இல்லையோ என்ற நிலைதான் நிலவுகிறது. இதனால் நான் வருந்துகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆரவார உலகில் அமைதியால் ஒன்றும் செய்ய இயலாது. இத்தனைக்குப் பின்னாலும் நான் படிக்கிறேன். எழுதுகிறேன். உன்னைப் போன்ற நண்பர்களுக்குச் சில நூல்களை அறிமுகம் செய்கிறேன். அதனை ஒரு தொண்டாகவே செய்து வருகிறேன். இதனால் நான் இழக்கப்போவது ஏதுமில்லை. ஆனால் மன அமைதியைப் பெறுகிறேன்.

இந்த நூலின் இறுதியாகத் தொகுக்கப்பட்டிருப்பவை தம்பி வசந்தராசன் எழுதிய சில கவிதைகள். இன்றைக்கு இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டுத் கோக்கப்பட்ட இந்த நூல் கவிதைகளில் இவருடைய கவிதைகள் தனித்துவம் மிக்கிருக்கின்றன என்பதை அவரது கவிதைகளால் அறிந்து கொள்ளலாம்.

கவிஞன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவனே தன்னை ‘இன்னான்’ என்று அறிமுகம் செய்து கொள்வது. இரண்டு அவனுடைய படைப்புக்கள் வழி அவனை யார் என்று பிறர் அடையாளம் காண்பது. இந்த இரண்டும் ஒத்திருக்குமாயின் அவன் உண்மைக் கவிஞன். பெரும்பாலான கவிஞர்களின் சுயரூபத்தை நேரடியாக அறிந்தவர்களுக்கு அவர்களுக்குப் பலமுகங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். கவிதைகளில் ஒன்றுமிருக்காது. பாரதிக்கு ஒத்திருந்தது. பாவேந்தருக்கு ஒத்திருந்தது. கண்ணதாசனுக்கு ஒத்திருக்கவில்லை. தம்பி வசந்தராசனுக்கு ஒத்திருக்கிறது. அதனால்தான்,

ஆடையல்ல எழுத்தெனக்குக் கழற்றி மாட்ட!
அணிந்திருக்கும் நகையல்ல அழகு பார்க்க!!
கூடவந்த எலும்பின் தோல்! எலும்பைப் போர்த்திக்
கொண்டிருக்கும் என்னுயிரை, உடலைக் காட்ட!
மேடைதரும்! விழிவெளிச்சப் பாதை தன்னில்
மெருகேற்றி வருவதுதான்! மீண்டும் சொல்வேன்!
ஏடடைந்த சொல்வேறு நான்வே றல்ல!
எனைப்பிரியா என்தோல்தான் என்னெ ழுத்து!”

என்னும் அறிமுகக் கவிதைக்கேற்ப அவரது படைப்புக்கள் அமைந்து போயிருக்கின்றன. ‘எழுத்துக்களைத் தோல்’ என்பதற்கு என்ன பொருள் என்றால் தன்னைப் பாதிக்கும் பொருள் பற்றிய தனது கருத்துக்கள் மாற்றத்திற்குரியன அல்ல என்பதாகும். அரசியல்வாதிகளைப் போல் பொதுக்கருத்து என்றும் சொந்தக்கருத்து என்றும் தனித்தனி வசதிகள் கவிஞனுக்குக் கிடையாது. பாத்திரங்களுக்காக மாறுவானே தவிர தனக்காக மாறமாட்டான். தன்னை என்றும் மாற்றிக் கொள்ள மாட்டான். கற்பனையால் அவரது கவிதைகள் அழகுபெறும் என்பதை ‘எலும்பைப் போர்த்திக் கொண்டிருக்கும் உடல்’ என்னும் தொடரால் குறிக்கிறார். பாதிக்காத பொருண்மையைப் பற்றிய கவிதைகள் எடுபடாது. கவிஞனையும் கவிதையையும் பிரித்துப் பார்க்க முடியாது. கவிஞன் கவிதையைப் படைக்கிறான் என்பது பொதுவான கருத்து. கவிதை கவிஞனிடத்திலிருந்து பிறக்கின்றன என்பதே உண்மையான கருத்து.  குழந்தைக்கும் தாயக்குமான உறவுதான் கவிதைக்கும் கவிஞனுக்குமான உறவு என்பதை வசந்தராசன் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

தரையில் நடந்த தாடிச் சூரியன்
தத்துவம் முளைக்கும் புத்தக வயல்வெளி!
தடியால் பூமியைத் தட்டி எழுப்பி
விடியலைக் காட்டிய சூரிய விழிகள்!”

என்னும் நான்கு வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவர் எழுதிய நிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு வைத்திருக்கிற பெயர் ‘பெரியார்’ என்பதாகும். என் எழுத்து, என் தாகம், தமிழா நலந்தானா? மீண்டும் ஒரு தொடக்கம், பூக்களின் தேசத்தில் புயல், உழுது….உழுது, எப்படித் தவறினாய் கணக்கு என்பன அவர் இந்த நூலில் கோத்திருக்கும் பிற கவிதைகளின் தலைப்புக்கள். இது ஒரு நூலைப் பற்றிய அறிமுகம் ஆதலின் அத்தனைக் கவிதைகளையும் திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வருவது இயலாத செயல். எனவே உன்னைப் போலவே ஒன்றிரண்டு பகுதிகளை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்.

மேலே காட்டிய தந்தை பெரியாருக்கான ‘தரையில் நடந்த தாடிச் சூரியன்’ என்னும் உருவகத்தில் கற்பனையின் அத்தனைப் பரிமாணங்களும் அமைந்துள்ளன. அரிதாக தோன்றுகிற கற்பனைகளில் இதுவும் ஒன்று. சூரியன் வானத்தில் இருக்கும். பெரியார் நம்மிடையே தோன்றினார். விண்வெளியில் பவனி வருவது சூரியன். பெரியார் தரையில் நடந்தார். சூரியனுக்குத் தாடி இல்லை. தடியும் இல்லை பெரியாருக்குத் தடியும் உண்டு. தாடியும் உண்டு. சூரியனின் கதிரொளி பரப்பில் மண்ணகம் அடங்குவது போலப் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை வீச்சில் மானுடம் அடங்கும் என்பது கருத்து. பேரறிஞர் அண்ணாவைக் கவிஞர் வைரமுத்து ‘நான்கடி இமயம்’ என்று உருவகப்படுத்தியிருப்பார். அண்ணாவின் குட்டையான தோற்றத்திற்கும் அறிவின் உயரத்திற்கும் தொடர்பில்லை என்பதை இமயத்தின் உயரம் நாலடி’ என்று சுருக்கிக் காட்டுவார்.

இந்தப் பாட்டில் தடியால் பூமியைத் தட்டி எழுப்பி என்னும் தொடர் மரபு வழிச் சிந்தனையாகும். தடியால் பூமியைத் தட்டி எழுப்ப முடியுமா? இங்கே பூமி என்பது தூங்கிக் கொண்டிருந்த தமழினத்தைப் பெரியார் எழுப்பிய பிறகுதானே நம்மவரில் பலர் தூங்கியதையே தெரிந்து கொண்டார்கள்! அது தனி. ஆனால் பாத்திரம் பூமியைத் தட்டி எழுப்புகிற அல்லது மயக்கத்தைத் தெளிவிக்கின்ற கற்பனை தமிழுக்குப் புதியதன்று.

சிலம்பில் ஒரு காட்சி. பதினாறு ஆண்டுக்காலம் கழித்து மனைவியின் நினைவு வந்த கோவலன் வீடு திரும்பியவுடன் தன் மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டு பிழைப்பதற்காக மதுரை நோக்கிச் செல்கிறான். புறஞ்சேரியில் தங்கியிருக்கும் சூழலில் தன் கணவனுக்குத் தன் கையறி மடமையால் சமைத்து விருந்து படைக்கிறாள் கண்ணகி. இலைபோட்டு நீர் தெளிக்கிறாள். எப்படித் தெரியுமா?

மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி

எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்தையும் அவரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன

என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்ததாம். “தடியால் பூமியைத் தட்டி எழுப்பிய பெரியார்” என்னும் உவமம் மரபின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. ஒன்றிய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது நேற்று! பழைமை மயக்கத்தில் இருந்த  தமிழர்களைப் பெரியார் விழிக்கச் செய்தது இன்று!

‘புகாரில் மாநாய்கன் மகளாகப் பிறந்து செந்தமிழ்ச் செல்வியாக வளர்ந்த அவளுடைய புறஞ்சேரி நிலைகண்டு மண்ணக மடந்தை மயக்கமடைந்தாளாம். அந்த மயக்கத்தைப் போக்குவதற்காகக் கண்ணகி நீர் தெளித்தாளாம். கற்பனை என்றால் இதுதான். நம்முடைய சம்பளச் சாதித் தமிழாசிரியர்கள் அரசு விதிகளின்படி இதனையும் ஓர் அணியில் இரண்டு மதிப்பெண்ணுக்காக ஒதுக்கிவிட்டுக் கடந்து போய்விடுவார்கள். தமிழுக்கும் அவர்களுக்குமே தொடர்பில்லாது போய்விட்ட பிறகு கவிதைக்கு எப்படித் தொடர்பிருக்க முடியும்? எனவேதான் உரத்தொழிற்சாலை தொழிலாளர்களும் மேலாளரும் தமிழுக்குக் கவிதை உரம் ஏற்றுகிறார்கள் போலும்!

பெரியாரைப் பற்றிப் பாவேந்தரும் கண்ணதாசனும் எழுதிய கவிதைக்குப் பிறகு பொருள் ஆழத்தோடும் கற்பனை வளத்தோடும் எழுதப்பட்ட கவிதை இது. இடைநிலைக் கல்வியில் மனப்பாடப் பகுதிக்குக் கவிஞரின் ஒப்புதல் இல்லாமலேயே பாடமாக வைக்க வேண்டிய வரிகள்.!

“கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது. ஆனால் அது எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதே அதன் கவலையாக இருக்கிறது.”

தன்னையுமறியாமல் முன்னுணர்ந்த சிந்தனைப் பதிவுகளை இடுவது கவிஞனுக்கு இயல்பு. ‘பட்டுக்கோட்டை அன்றைக்கே பாடினான்” என்று சொல்வதில்லையா அது போல!  இன்றைக்குத் தமிழகத்தைப் பொருத்தவரையில் ஒன்றிய அரசு நிறுவனங்கள் ஆனாலும் சரி, தமிழக அரசுப் பணிகளானாலும் சரி, வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு பேரளவு கூடியிருக்கிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வட மாநில மாவட்டங்களுள் ஒன்றாகவே காட்சியளிக்கிறது. இதற்குத் தமிழர்களே காரணம் எனலாம். தமிழக இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையும் தவறான வாழ்க்கை நெறிகளுமே காரணம். தமிழகம் மெல்ல மெல்லப் போதைக்கு அடிமையாகி வருகிறது. கிடைத்த பணியை நன்கு பற்றிக் கொண்டு அதிலிருந்து முன்னேறலாம் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது. படிப்புக்குத் தகுந்த வேலைதான் வேண்டும் என்ற பிடிவாதம் ஒரு பக்கம். எல்லாவற்றையும் விட நியாயமான பணியிடங்களுக்கே கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை.

சொந்தநாட்டில் அகதிகளாகிச்
சோற்றுக் கலைவதே பிழைப்பாச்சா? – இங்கு
வந்தவனுக்கு வால்பிடிப்பதுதான்
வழக்கம்போல் உன் தொழிலாச்சா?”

என்னும் நான்கு வரிகளில் தமிழகத்தின் இன்றைய நிலையை இருபது ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார் வசந்தராசன். சத்திய எழுத்துக்கு இது இயல்பே. சம்பிரதாய எழுத்துக்கு இது பிடிபடாது.

உலகத் தமிழனை நாடு பிரிக்கும் இங்கு
உலவும் தமிழனைச் சாதி பிரிக்கும்
இலைமறை காய்மறை இந்தியத் தமிழனை
இங்குள்ள மதங்கள் சேர்த்துப் பிரிக்கும்

என்றெழுதுகிறார் வசந்தராசன். ஒற்றுமை என்பதையே தமிழன் அறியமாட்டான் என்னும் பேருண்மையை மூன்று முறைகளில் விளக்கியிருக்கிறார். சிங்கப்பூர் தமிழன், மலேசியா தமிழன், இலங்கைத் தமிழன் என்று நாட்டால் பிரிந்து நிற்பான். சரி. உண்மையான உள்ளூர்த் தமிழன் என்ன ஆவான்? இவன் சாதியால் பிரிந்திருப்பான். “தமிழன் முட்டாள்” என்றால் எவனுக்கும் கோபம் வராது. ஒரு சாதிக்காரனை முட்டாள் என்றால் அந்தச் சாதிக்காரனுக்குக் கோபம் வரும். காரணம் அவன் தன் சாதியை இனம் என்று எண்ணிக் கொண்டிருப்பதுதான். போகட்டும். நாடும் வேண்டாம். சாதியும் வேண்டாம் என்றிருக்கும் ஒன்றிரண்டு தமிழர்களை மதம் பிரித்து விடும். கிறிஸ்தவ உடையார், கிறிஸ்தவ வேளாளர் என்பது போல. இருப்பவனை மட்டுமல்ல வந்தவனையும் சாதி பிடித்தாட்டுகிறது. நடப்பியலைக் கவிதைச்சுவை குன்றாமல் கவிதையாக்கும் கலை இது.

பள்ளியிலே தமிழுண்டா? பள்ளிக்குப்பின்
பணியிடத்தில் தமிழுண்டா?பணி தொடர்ந்த
இல்லறத்தில் தமிழுண்டா? இல்லறத்து
இனியபிள்ளை பெயர்சூட்டல் தமிழில் உண்டா?
சொல்லவரும் பெயரதும் தமிழே தானா?
தொண்டு செய்யும் கோயிலிலே தமிழ்தான் உண்டா?
கல்லறையில் தமிழுண்டா? நீத்தார் ஆண்டு
காரியத்தில் தமிழுண்டா? எதிலே உண்டு?”

என்னும் விருத்தத்தில் போலித் தமிழ்ப்பற்றையும் பிறமொழி மயக்கத்தையும் ஒருசேரக் கண்டிக்கிறார். மாநிலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குகிற பெண்ணின் பெயர் கூட வடமொழியில். வன்ஷிகா, மன்ஷிகா, வருஷணி, தர்ஷணி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். மகேஷ், சுரேஷ் பெருவழக்கு. தமிழாசிரியர்களின் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பேராசிரியர் பிள்ளைகளுக்கும் வடமொழியில்தான் பெயர் வைக்கிறார்கள்.

மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பு எனக் குறிப்பிட இயலாவிடினும் பாடவேண்டியதைக் காலமறிந்து பாடியிருக்கிறார்கள். கடமை அறிந்து தொகுத்திருக்கிறார் வசந்தராசன். புதுக்கவிதை பற்றிய புரிதல் பற்றாக்குறை காரணமாக அந்த வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இந்த நூலைப் பொருத்தவரை அவ்வளவாகச் சோபிக்கவில்லை என்பதை நீயும் அறிவாய். நம் இருவரின் பார்வையும் இப்படியிருப்பதால் எல்லாருடைய பார்வையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே வாசகர் வட்டத்தில் இது போன்ற நூல்களை மையப்படுத்திக் கருத்துரைகளைத் தொகுக்க வேண்டும். இத்தகைய கருத்துரைகளின் அடிப்படையில் படைப்பாளர்களைச் சிறப்பிக்க வேண்டும். ஒரு கவிஞன் பிற கவிஞர்களின் பாடல்களைத் தேடித் தொகுத்தளித்த வசந்தராசன் உள்ளம் வள்ளல் உள்ளம் என்பதில் நமக்கு ஐயமில்லை. எழுதிய கவிஞர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. அவர்கள் எங்கே இருந்தால் என்ன? அவர்களின் முகவரியாக அவர்தம் கவிதைகள் இருக்கின்றன! அவை போதும் நமக்கு! கவிதைகள் நமக்கு நல்ல நண்பர்கள்! மீண்டும் அடுத்த கடிதத்தில்!

மாறா அன்புடன்
மணி

**********

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.