குறளின் கதிர்களாய்…(435)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(435)
பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.
– திருக்குறள் – 816 (தீ நட்பு)
புதுக் கவிதையில்…
அறிவில்லாதவனுடைய
மிகப் பொருந்திய
ஆழ்ந்த நட்பைவிட,
அறிவுள்ளோரின் பகைமை
கோடி மடங்கு
குறையிலா நன்மையே தரும்…!
குறும்பாவில்…
அறிவிலானுடைய ஆழ்ந்த நட்பைவிட
அறிவு மிக்கோரின் நட்பிலாப் பகையும்
அதிக அளவு நன்மைதரும்…!
மரபுக் கவிதையில்…
சற்றும் அறிவே யில்லாதார்
சார்ந்தப் பொருந்தும் நட்பினிலே
முற்றும் பயனாய் ஏதுமில்லை,
முற்றா திந்த நட்பைவிட
கற்றே மெத்த அறிவுடையோர்
காட்டு மந்தப் பகையதுவே
பெற்றுத் தருமே நன்மைகளைப்
பெரிய அளவில் காண்பீரே…!
லிமரைக்கூ…
அறிவற்றோர் நட்பின் தன்மை
ஆழமாய்ப் பொருந்திடினும், அதைவிட அறிவுடையோர்
பகைதருமே அதிகமாய் நன்மை…!
கிராமிய பாணியில்…
கொள்ளாத கொள்ளாத
நட்பு கொள்ளாத,
கொஞ்சமும் நன்மதராத
நட்பக் கொள்ளாத..
அறிவே இல்லாதவன்
காட்டுற நட்பு
அதிகமாப் பொருந்தியிருந்தாலும்
அதுனால ஒரு பயனுமில்ல,
அதவிட
அறிவுள்ளவனோட பகயே
அதிக நன்ம தருமே..
அதால
கொள்ளாத கொள்ளாத
நட்பு கொள்ளாத,
கொஞ்சமும் நன்மதராத
நட்பக் கொள்ளாத…!