குறளின் கதிர்களாய்…(437)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(437)
அற்ற மறத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
-திருக்குறள் – 846 (புல்லறிவாண்மை)
புதுக் கவிதையில்…
சிற்றறிவு உடையவர்
தம்
குற்றங்களை அறிந்து
அவற்றைப் போக்காமல்,
ஆடையால்
உடலுறுப்புகளை மட்டும்
மறைத்துத் தம்மையும்
ஒழுக்கமுடையவராய் எண்ணுதல்
புல்லறிவே…!
குறும்பாவில்…
தமது குற்றமறிந்து நீக்காமல்
தம்முடலில் மட்டும் ஆடைகளால் மறைத்தே
தமையுயர்வாய் எண்ணுதல் புல்லறிவாம்…!
மரபுக் கவிதையில்…
தமது குற்றம் தனையறிந்தே
தக்க வழியில் போக்காமல்,
சுமையாய் உடைகள் பலவணிந்தே
சொந்த உடலின் உறுப்புகளைத்
தமதா யெண்ணி மறைத்திட்டுத்
தாமே குணத்தில் உயர்வெனவே
மமதை கொண்டே நடந்திடுதல்
மாசாம் கொடிய புல்லறிவே…!
லிமரைக்கூ…
அறிந்தழிக்காமல் தமது குற்றம்,
ஆடையணிந்தே தமதுடல் மூடியே தாமுயர்வெனும்
அகந்தை புல்லறிவே முற்றும்…!
கிராமிய பாணியில்…
அறிவில்ல அறிவில்ல
ஆராஞ்சி பாக்காமச் செஞ்சா
அறிவில்ல அறிவேயில்ல..
தங்கிட்ட முழுசா
குத்தத்த வச்சிக்கிட்டு
அதப் போக்காம,
ஒடம்பு மேல
ஒசந்த உடுப்பெல்லாம்
போட்டுக்கிட்டு
ஓசந்தவனுண்ண நெனப்பிருந்தா
அது
சுத்த அறிவில்லாத்தனமே..
தெரிஞ்சிக்கோ
அறிவில்ல அறிவில்ல
ஆராஞ்சி பாக்காமச் செஞ்சா
அறிவில்ல அறிவேயில்ல…!