பழ. கருப்பையாவுக்கு ஒரு மடல்

அன்பார்ந்த அறிஞர் பழ. கருப்பையா அவர்களுக்கு,
வணக்கம் கணக்கில. இன்று இந்திய அரசியல் என்பது ஏராளமான பணம் தேவைப்படும் தொழில். அதில், துணிவுடன் மக்களைக் கூட்டி வழிநடாத்தத் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள் பல. தங்கள் கட்சிப் பெயரை, ஆங்கிலத்தில் எழுதும்போது கவனம் செலுத்தக் கோரி இம்மடல்.
எனக்கு ஊர் பொள்ளாச்சி. 40 ஆண்டுகளாய் ஹூஸ்டன் (அமெரிக்கா) மாநகரில் வாழ்கிறேன். I am a senior scientist in Space Structures. நாசா ஜான்சன் விண்மையம் அனுப்பிய பல ஸ்பேஸ் ஷட்டில்களுக்கு Loads & Dynamics துறைத் தலைமைப் பொறியாளனாக இருந்துள்ளேன். தங்களை, என் நண்பர் அழ. ராம்மோகன் கூட்டத்தில், கானாடுகாத்தான் வளமனையில் சந்தித்தேன். அப்போது ஆச்சியும் இருந்தார். ராம்மோகன் வெளியிட்ட திருக்குறள் நூலில் உள்ள பல கட்டுரைகள் (Tamil Landscape) யானளித்தவை. Some photos of Al.R. https://nganesan.blogspot.com/2022/10/al-rammohan-tirukkural-book-chicago.html
திராவிட மொழியியல், அதன் ஒப்பிலக்கணம் கால்டுவெல் பாதிரியார் தந்தமை, அண்ணா அதை அரசியலில் பயன்படுத்தினமை, … என நீங்கள் குறிப்பிடுவதைக் காணொளிகளில் கேட்டுள்ளேன். திராவிட மொழிகள் ஆகிய தெலுங்கு, கன்னடம் இரண்டும் இழந்துவிட்ட ஒரு ஒலி சிறப்பாக, நம் செந்தமிழிலே உண்டு. நன்கு இயங்குகிறது. விஜயநகர காலத்திலே இருந்து, ஐரோப்பாவில் இருந்து வந்தோருக்கு தமிழ் பற்றி அறிவிக்க, அந்நாள் ஆட்சிக்கட்டிலில் இருந்த பலருக்கும் தமிழ் தாய்மொழி அல்ல. மேலும், சென்னை, 1950களில் கூட தெலுங்கு பேசும் ஜனங்கள் பெரும்பான்மையாக இருந்த நகரம். மதறாஸ் மனதே என்ற இயக்கம் இருந்தாலும், உங்கள் மனங்கவர்ந்த ராஜாஜி போன்றோர், சிலம்புச்செல்வர், … எனப் பலரால் சென்னையைத் தமிழ்நாடு பெற்றது. சென்னையில் ஆங்கிலப் பத்திரிகைகளில் 100 ஆண்டு முன்னே எழுதுவோர் பலருக்கும் தமிழ் தாய்மொழி அன்று; தெலுங்கு, கன்னடம். எனவே, தமிழ் மொழியியல் அறிஞர்கள் சுவெலெபில். ஆஷர், ஹார்ட், பார்போலா, தனிநாயகம், வ. ஐ. சுப்பிரமணியன், கி. நாச்சிமுத்து, … எனப் பலர் சொல்லியுள்ள நுட்பம் அந்நாளைய பத்திரிகையாளர் அறியார். எனவே, Murugan, Alagappan, Tiruppugal, Kazhagam, Manimegalai … எனத் தவறுதலாக 100+ ஆண்டாய் எழுதப்படுகிறது.
இன்று பல தமிழ் இளைஞர்கள் தமிழ்ச்சொற்களை ஆங்கில லிபியில் எழுதுகின்றனர். வாட்ஸப், ட்விற்றர், முகநூல், யுட்யூப் என்பவற்றில். தமிழின் 18 மெய்களில் தலையாயது க் என்னும் ககர மெய். இது தவறாக ஆங்கிலத்தில் எழுதி வாசித்தால், தமிழின் அழகான ஒலிப்புமுறை சிதைந்துவிடும். குழந்தைகள் ஆங்கில இலிபியில் எழுதிப் பாடும்போது தவறாக ஒலிக்கும். ஆனால், டிஎம்எஸ், சுசீலா, வாரியார், கண்ணதாசன், வைரமுத்து, … என யாருடைய பேச்சிலும் Murugan, Alagappan, Tiruppugal, Kazhagam, Manimegalai எனக் காதுகளில் கேட்காது. -g- இல்லாமல், ஒருவித -h- ஒலிப்பே இருக்கும். In Linguistics, this is called ‘intervocalic fricative’ sound, which is represented as ḫ (small letter h with breve sign below). இரு உயிரெழுத்தின் நடுவே க் இருக்குமானால், ḫ என்று எழுதவேண்டிய ஒரு விதமான உராய்சொலி தமிழ் உச்சரிப்பில் பிறக்கிறது. எனவே, இரு உயிரெழுத்தின் நடுவே க் உள்ள ḫ ஒலிப்பை ஆங்கில எழுத்தில் எவ்வாறு குறிப்பது? நிச்சயமாக, -g- எனப் போடுதல் பிழையானது. எனவே, Tamilnadu Thannurimai Kazhakam (or) Kazhaham எனப் பயன்படுத்த வேண்டுகிறேன். ஓர் உதாரணம் காட்டுகிறேன். ஈழத் தமிழர்கள் பல்லாயிரம் நூல்களை இணையத்தில் இலவசமாக வழங்குகின்றனர். அந்தத் தளம்: http://noolaham.org
தமிழ் அல்லது எந்த மொழியையும் ரோமானிய எழுத்தில் எழுதும்போது இருவகையில் செய்யலாம்: (1) Transcription (ஒலிபெயர்ப்பு). உ-ம்: noolaham, kazhaham (2) Transliteration (எழுத்துப்பெயர்ப்பு (அ) இலிபிபெயர்ப்பு). உ-ம்: noolakam, kazhakam. தமிழின் மெய்களில் தலையெழுத்து -க்-, இது சரியாக ஆங்கிலத்தில் எழுதும் முறை உங்கள் கட்சியின் பெயரால் கோடிக்கணக்கான தமிழரை அடைய உதவுங்கள். தமிழ் சின்னங்களின் பெயர்களை எழுத்துப்பெயர்ப்பு முறையில் யூனிக்கோட் ISO 10646 ஸ்டாண்டர்டில் வைக்க முயற்சி செய்து வெற்றிகண்டேன்: https://unicode.org/charts/PDF/U11FC0.pdf#page=3
Summary:
Tamilnadu Thannurimai Kazhakam (or) Kazhaham எனப் பயன்படுத்த வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்!
நனிநன்றி,
நா. கணேசன்