படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

கவிஞர் சுப. வீரபாண்டியனின் ‘எதுவாக இருக்கும்?’ – கவிதை நூல் பற்றிய திறனாய்வு

சமுதாயப் போர்க்களத்தில் எதிர் நீச்சல் போடுவது அவ்வளவு சாதாரணமானதன்று. சிலருக்கு அதுவே பிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.. அவர்களிடத்தில் மறைந்து கிடக்கும் பிற ஆற்றல்கள் அவ்வப்போது தோன்றி மறையும் அல்லது வந்து போகும். பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் கவிதை உள்ளம்;. யாராவது ‘கவிஞர் அண்ணா’ என்று கூறியதுண்டா? இது அவர் எழுதிய எழுபத்தோரு கவிதைகளிலிருந்து அறியக் கூடிய உண்மையாகும். ‘காதல் ஜோதி’ என்னும் திரைப்படத்தில் “உம்மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு” என்ற பாடல்தான் அண்ணா எழுதிய ஒரே திரையிசைப்பாடல். அந்தப் பாடலில் அவருடைய மென்மையான உள்ளத்தைக் காணலாம். கண்ணதாசன், கலைஞர், ஜீவா முதலியோரும் இந்த நிரலில் வருவார்கள். அவர்கள் ஓய்வெடுக்கிற மண்டபமாக அல்லது சோலையாக இருப்பது கவிதைப் பணியே. இந்த நிரலில் அண்மைக்காலத்தில் இணைந்திருப்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். அவர் எழுதித் தொகுத்த ‘எதுவாக இருக்கும்?’ என்னும் சிறு கவிதை நூலை நான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நூல் தந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது இந்தக் கட்டுரை.

நூல் கட்டுமானம்

அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள். தனிமனிதக் காதல் உணர்வுகள் முதலிய பாடுபொருள்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மூன்று பகுப்புக்களைக் கொண்டது. 1972 தனியாகவும் 2002 முதல் 2006 வரை அடுத்த பகுதியாகவும். 2006க்குப் பிறகு இறுதிப் பகுதியாகவும் அமைந்துள்ளது:.. பாரதிதாசன், கண்ணதாசன் முதலியோர்தம் பதிவுகளில் காணப்படும் முரண்களையும் அவற்றிற்கான காரணங்களையும் புரிந்து கொள்வதுபோல் இந்தக் காலமுறைப் பகுப்புக்கள் உதவும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் இவர் மாணவப் பருவத்திலிருந்தே முரண்படாத பகுத்தறிவுச் சிந்தனைவாதியாகவே வளர்ந்து வந்துள்ளார். மொழிநடை, பாடுபொருள் களம், கட்டுமானப் பரிமாணம் மற்றும் உத்திகளில் அமைந்திருக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்தப் பகுப்புக்கள் கொஞ்சம் உதவக்கூடும். உத்தி சிறக்காத எந்தக் கவிதையையும் நான் பொதுவாகத் திறனாய்வு செய்வதில்லை. காரணம் அவை என்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. எனவே பொதுவாக அமைந்த சில கவிதை வெளிப்பாடுகள் பற்றிய திறனாய்வு பின்வரும் பத்திகளில் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது..

எதுவாக இருக்கும்?

‘எதுவாக இருக்கும்’ என்பது இந்த நூலின் இறுதிக் கவிதையாகக் கோக்கப்பட்டுள்ள்து.

எதுவாக இருக்கும்
என் கடைசிப் பயணம்?
எதுவாக இருக்கும்
என் கடைசி மேடை?
எதுவாக இருக்கும்
நான் படிக்கப் போகும் கடைசிப் புத்தகம்?
சொல் தோழி!
எதுவாக இருக்கும் நம் கடைசிச் சந்திப்பு?

கவிஞர் அனைவரையும் போலவே சுபவீ அவர்களையும் காதல் அலைக்கழித்துத்தான் உள்ளது. ‘சீதையைக் கண்டேன்’ என்றால் அது உரைநடை. ‘கண்டணன் கற்பினுக்கு அணியைக கண்களால்’ என்றால் அது கவிதை. தொடரில் அமையும் ஒரு எளிய மாற்றம் இந்த ரசவாதத்தைச் செய்துவிடும். இந்த மாற்றம் இயல்பாக அமைதல் வேண்டும். இறுதியில்  நிற்கவேண்டிய வினை முன்னால் நின்று செயப்படுபொருள் தொடர்ந்து வந்தால் உரைநடை கவிதையாகி விடும்.. ‘சொன்னது நீதானா?’ என்றால் அது கவிதை. ‘நீதான் சொன்னாயா?’ என்றால் அது வினாத் தொடர். ‘நான்’ என்பது வேற்றுமையில் ‘என்’ என்று வேறுபடும். உவமங்களாக நின்று பொருளுணர்த்த வேண்டியவைகளை உணர்ச்சிவழி ஏக்கங்களாக வெளிப்படுத்தும் உத்தியினால் சிறக்கின்ற தொடர்கள். புத்தகங்களும் பயணங்களும் மேடைகளுமே வாழ்க்கையாகிப் பழகிப்போன  ஒருவனுக்குக்  கைகாட்டியாக எப்போதாவது தோன்றுவதுதான் காதல். அதனால்தான் பாட்டு தோழியைப் பார்த்துத்தான் அமைந்திருக்கிறது. மூன்று ஏக்கங்களைத் தன்னுள்ளே செறிததுக் கொண்டு கேட்க வேண்டிய இறுதி வினாவைத் தோழியைப் பார்த்துக் கேட்பதாக அமைந்துள்ளது. எதுவாக இருக்கும் ‘நம் கடைசிச் சந்திப்பு?’ என்பது எங்கே நடக்கும் அது என்பதையும் உள்ளடக்கி நிற்கிறது. ஒருமையில் மற்றவற்றைக் கேட்ட கவிஞன் ‘எதுவாக இருக்கும் என் சந்திப்பு? என்னாமல் ‘எதுவாக இருக்கும் நம் சந்திப்பு?’ என்பதால் காதல் உள்ளத்தின் பரிமாணம் புலப்படுகிறது. ‘நான்’  என்பது ‘நாம்’. ஆவதுதானே காதல்? ‘கடைசி’ என்பதனாலேயே இந்தப் பாட்டும் நூலின் கடைசியில் வைக்கப்பட்டிருக்குமோ?

உம்மையும் உத்திதான்

கவிதை இயற்கை. செயற்கையன்று. இயற்கை ஒரு புதிர் ஆதலின் நுண்ணியம் அதன் இயல்பு. இயல்பாக அமைந்துவிடும் கவிதைகளில் எல்லாமே நுட்பமாக அமைந்துவிடும். அறிவு நிலையிலிருந்து முற்றுமாக விலகி உணர்வு நிலையில் இருந்து படைக்கப்படும் எல்லாக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். அந்தத் ‘தாய்மொழியில் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் சுபவீ

“அன்று
உன் தொட்டிலை ஆட்ட
எனக்கும்
இன்று
முதியோர் இல்லத்தில்
வந்து பார்க்க
உனக்கும்
நேரமில்லாமல் போய்விட்டது”

அன்றைக்குத் தன்னைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலை எண்ணி மருகுகிறாள். அந்தத் தாய். ஒரு வேளை பணிக்குச் சென்றிருந்த காலத்தில் அவள் பாடிய  ‘அவசரத் தாலாட்டு’ அவள நினைவுக்கு வந்திருக்கலாம். அதனைத் தற்போது எண்ணிப் பார்க்கிறாள். தனக்கு ஒரு நியாயம் தன் மகனுக்கு ஒரு நியாயம் எனக் கருதுவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. இரண்டையும் ஒன்றாக்கித் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள். புதுக்கவிதையாக இருந்தாலும் வாய்விட்டுச் சொல்லிப் பாரத்தால் கவிதைக்குள் தாயின் வேதனை ஒடுங்கிக் கிடப்பதைக் காணலாம்.

இந்தப் பாட்டில் ‘உம்’மை விடுபட்டுப் போனது அவலத்தின் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. தொடர்வினைகள் கவிதைகளில் இடம்பெறும்போது உம்மைகள் வெளிப்பட நிற்பதுதான் முறை. கவிதையுள் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சி அப்போதுதான் முழுமையாக வெளிப்படும். சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. தலைவியைக் காணும் தலைவன் பாடுவதாக அமைந்தது.

“நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும் தவறு இலர்

நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்கு

பறையறைந்து அல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடையான்’”

இந்தப் பாட்டில் தலைவியோ அவள உறவினரோ தவறு செய்யவில்லை. மதம் கொண்ட யானை தெருவில் நடப்பதை எச்சரித்துச் ‘செல்ல வேண்டாம்’ எனச் சொல்லாத மன்னனே தவறுடையான் என்று குறிப்பிடப்பட்டுள்ள்து. ‘நீயும்’ என்ற உம்மையும் ‘நுமரும்’ என்ற உம்மையும் பாட்டின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதைக் காணலாம். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பன் தமிழ். ‘அண்ணலும் அவளும் நோக்கினர்’ என்று எழுதியிருந்தால் காட்சி கவிதையாகியிருக்காது.

தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையொன்றில் பாவலர் பாலசுந்தரம் ஆதங்கத்தோடும் ஆர்வத்தோடும் இந்த உம்மைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

“சங்குகள் நிறமும் மாறி
சந்தனம் மனமும் மாறி
செங்கதிர் திசையும் மாறி
தெங்குநீர் குளிரும் மாறி
திங்கள் தண் நிலையும் மாறி
தெவிட்டமு தினிப்பும் மாறி
சங்கமும் மாறி னாலும்
தந்தை சொல் வாளும் நாளும்

பின்னாலே வந்த திரையிசைப்பாடலில் இவற்றைத் தழுவி கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
என்னைச் சொல்லிக் குற்றமில்லை”

இப்படி அமைந்தால்தான் கவிதையின் உயிர்ப்பு நிலைக்கும். இதனை உன்னைச் சொல்லியோ என்னைச் சொல்லியோ குற்றமில்லை என்றால் வெறுந்தொடர்தான் நிற்கும். எனவே

“அன்று
உன் தொட்டிலை ஆட்ட
எனக்கும்
நேரமில்லை!
இன்று
முதியோர் இல்லத்தில்
வந்து பார்க்க
உனக்கும்
நேரமில்லாமல் போய்விட்டது”

என்று அமைந்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும். இப்படிச் சொல்வது  படைப்பாளனின் படைப்புரிமையில் தலையிடுவதாகாது. கரும்புச் சாறு பருகுகிறபோது கோது பல்லிடுக்கில் குத்தக்கூடாது அல்லவா? எளிய மக்கள் பேறு பெறுவதைப் போலவே எளிய கவிதைகளும் பேறு பெறுகின்றன. எதிரது தழுவியது, இறந்தது தழுவியது என்றெல்லாம் இலக்கணத்தில் குறியிடப்படும் இந்த உம்மை கவிதையில் ஏக்கத்தைத் தழுவி நிற்கும்.

கவிதை நோக்கு

எது பற்றிக் கவிதை வரும்? கொடுமுடியைப் பற்றியும் வரும். குண்டூசியைப் பற்றியும் வரும். கவிதை பொருளிலே இல்லை. பொருளைக் காண்பவனின் உள்ளத்தில் இருக்கிறது. ‘உள்ளத்தில் உள்ளது கவிதை’ என்பதன் பொருள் இதுதான். பலாப்பழத்தைப் பற்றிக் கசப்பான கவிதைகளும் உண்டு. பாகற்காய் பற்றி இனிப்பான கவிதைகளும் உண்டு.

“சிறைகளைத் தாங்கும் ஆயுதம் கவிதை!
சிறுகை அளாவிய கூழும் கவிதை!
காதலைச் சொல்லும் கண்களை விடவும்
சாதியைக் கொல்லும் காதல் நற்கவிதை!
பிழைக்க வந்தவர் பொன்னிற மன்று
உழைத்துக் கறுத்தவர் உடலே கவிதை!
யாழின் இசையும் கவிதை என்றாலும்
வாளும் வேலுமே களத்தில் கவிதை!
கண்ணீர் கவிதை! புன்னகை கவிதை!
கண்ணகி கொண்ட கோபமும் கவிதை!
சின்ன ஊரின் அழகு மட்டுமா?
சென்னை நகரின் நெரிசலும் கவிதை!
கூடி வாழும் குடும்பமும் கவிதை!
தேடிக் கொள்ளும் தனிமையும் கவிதை!
கொஞ்சிப் பேசும் மொழியைக் காடடிலும்
நெஞ்சில் தைக்கும் சொற்கள் கவிதை!
அடிமைப் படாத வாழ்க்கை கவிதை!
அடிமை வேண்டா மனம் உயர் கவிதை!
நெஞ்சில் ஈரம் எதுவுமில் லாமல்
வஞ்சக மாக வாழ்ந்து வாழ்ந்தே
ஆகும் வரையில் அனுபவிப் போர்க்குச்
சாகும் வரையில் கவிதை வராது!”

கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாது என்பதுதான் இந்தக் கவிதையின் உள்ளடக்கம்.. கவிதை உத்தியால் சிறப்பது. இலக்கிய வடிவங்களுள் கவிதை தனித்து நிற்பதற்கு இந்த உத்திச் சிறப்பே தலையாய காரணம். படைப்பாளனைப் பொருத்தவரையில் “வஞ்சகமாக வாழ்ந்து ஆகும் வரையில் அனுபவிப்போர்க்குச் சாகும் வரையில் கவிதை வராது” என்று சொல்லுவது நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உண்மை. ‘எது கவிதை’ என்று யார் யாரோ எத்தனையோ நூல்களில் எதையெதையோ எழுதியிருக்கிறார்கள். இந்தக் கவிதை அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஓர் ஆராய்ச்சிக் கவிதைபோல் அமைந்துள்ளது. கவிதை என்பது யாப்புக்குள் அமைவது என்னும் நெறியற்ற புரிதலைப் புறந்தள்ளிச் செழுமையான கவியுள்ளத்திலிருந்து பிறப்பதே கவிதை என்னும தெளிவை இந்தக் கவிதை தந்திருக்கிறது. ‘தேமா புளிமா வாய்பாட்டுக்குள் தேங்கி நிற்பது கவிதையாகும்” என்று சுபவீ சொல்லாதது எனக்கு சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!

இந்த வாழ்க்கைதான் என்றைக்கும் உரிய்து .

மரபுக்கவிதை என்றால் மரபார்ந்த சிந்தனைகளின் தொடர்ச்சியே. அது வெறும் யாப்புத் தொடர்ச்சியன்று. இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிலருள் சுபவீயும் ஒருவர். ‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்பது பழந்தமிழர் பண்பாடு.  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” என்பது வள்ளுவம்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை. !
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”

என்பது வாழ்வைப் பற்றிய கண்ணதாசன் பார்வை. இதுதான் மரபுக்கவிதை. ‘வாழ்வியல் துன்பங்களை இயல்பென்று உணர்வதும்’ அவற்றை மனஉறுதியால் புறங்கண்டு வெல்லுவதும் முள்ளுக்குள் மலராக வாழ்வைச் சுவைக்க முயல்வதுமான சிந்தனையே தமிழர் சிந்தனை. இந்தச் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்து சுபவீ எழுதியிருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

வாழ்க்கை முழுவதும்
துன்பத்தின் சாயல் படிந்தே கிடக்கிறது!
வாழ்நாள் முழுவதும்
வலிகள் நிறைந்தே இருக்கின்றன!
உறவுகள் சூழ வாழ்ந்தும்
ஒரு தனிமை உள்ளே நிலைக்கிறது!
வெளிச்சக் காட்டிலும்
இருளின் அச்சம் இருக்கவே செய்கிறது.!
இருந்தாலும் என்ன
இந்த வாழ்க்கையைப் போல்
இன்னொரு வாழ்க்கை உண்டா
நாம் கொண்டாடுவதற்கு?

இது ஆன்மீகத்தைப் பினபற்றும் ஒரு சனாதனக் கவிஞர் எழுதியதன்று.  நடப்பியலைப் புரிந்து கொண்டு எந்தத் தனிமனிதச் சிக்கலுக்கும் சமுதாயச் சிக்கலுக்கும்  போராடுவதுதான் ஒரே வழி என்னும் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்ட திராவிட இயக்கக் கவிஞர் ஒருவரின் அருமையான கவிதைப் பதிவு.

விடைகளால் நிரம்பியிருக்க வேண்டிய இந்த வாழ்க்கை புதிர்களால் நிரம்பியிருக்கிறது.  முப்பத்திரண்டு பற்களால் சிரிப்பதைவிட இரண்டு கண்களால் அழுகிற நாள்களே அதிகம். நமக்கு நன்றி செலுத்துபவர்களைவிட நம்முடைய நன்றிக் கடன்களே அதிகம். இதயத்தில் நான்கு அறைகள்தாம். ஆனால்  நாலாயிரங்கோடி ஆசைகள். சுபவீ எழுதுகிறார்.

“விடை தெரியாத கேள்விகளோடும்
நிறைவடையாத ஆசைகளோடும்
எழுதி முடிக்காத எண்ணங்களோடும்
அடைபடாத நன்றிக் கடன்களோடும்தான்
முடியப்போகிறது நம் வாழ்க்கை!
இன்னும் பல்லாண்டுகள்
இம்மண்ணில் நாம் வாழ்ந்தாலும்!

தொடுவானமாய் வளரும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் தேவைகளும் ஆசைகளும் கடமைகளும் பிறவும் வரையறுக்கப்பட்ட வாழ்நாளை எகிறியடிக்கின்றன. எல்லா வினாக்களுக்கும் விடையெழுதிய மாணவன் இல்லை. எல்லா ஆசைகளையும் அனுபவித்தவனும் இலலை. துறந்தவனும் இல்லை. இதயத்து எண்ணங்களையெல்லாம் அப்படியே எழுத்தில் கொட்டிய எழுத்தாளன் எவனும் கிடையாது. விடுபட்டுப்போன நன்றிக் கடிதங்கள் எத்தனையோ? இந்த வாழ்க்கை முரண்களின் தொகுப்பு.

“நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
இன்மையது இளிவும உடைமையது உயர்ச்சியும்
ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும்”

என்பார் தொல்காப்பியர். இந்த முரண்களுக்கிடையே ‘வந்து பிறப்பதும் வாழ முயல்வதும் வாழக் கற்றுக் கொள்ளுவதும் அவற்றுக்கான காரணங்களைத் தேடிய களைப்பிலேயே முடிந்துபோவதுமே வாழ்க்கை’ என்னும் இந்த வரிகளில் ஒருவகை ஏக்கமும் ஏமாற்றமும் தென்படுகிறது. ஒரு போராளி மனத்துள் புதைந்து கிடக்கும் ஆயிரம் எண்ணங்களுள் இதுவும் ஒன்று போலும்! போராளிக்கும் இதயம் உண்டுதானே!

போய் வா மகளே!

கண்ணதாசன் எழுதிச் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு திரையிசைப் பாடலின் பல்லவி ‘போய் வா மகளே போய் வா’ எனத் தொடங்குகிறது.. அது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒருத்தியை வழியனுப்புவதாக அமைந்தது, அந்தப் பல்லவியில் மனம் பறிகொடுத்த கவிஞர் அதனைத் தான் எழுதிய ஒரு பாட்டுக்குத் தலைப்பாக வைத்துள்ளார்.

சங்க இலக்கிய அகப்பாடல்கள் இலக்கியத் துறைகளை அடியொட்டித் திட்டமிட்டு எழுதப்பட்டன. ஆனால் புற இலக்கியங்கள் அவ்வாறின்றி வரலாற்று நிகழ்வுகளையும் சமுதாயத்து அன்றாட நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பான்மையுடையவை. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்றால் அது கற்பனையன்று. பறம்பில் நடந்த ஒரு சோக நிகழ்வு. ‘வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுதின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே!’ என்றால் அது கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

இந்த நெடிய மரபில் வந்தவர் கவிஞர் சுபவீ. அதனால்தான் பொடா தடைச் சட்டத்தில் அவர் சிறையிலிடப்பட்டபோது தன்னைப் பார்க்கப் பேரனோடு வந்த மகளை வழியனுப்பி வைத்த நிகழ்ச்சியைக் கவிதையாக்கியிருக்கிறார்.

கவிதைக்காக அந்த நிகழ்ச்சியன்று. நிகழ்ச்சி கவிதையாக வெளிப்பட்டுள்ளது.

போய் வா மகளே புறப்படு மகிழ்ச்சியாய்!
சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் போதுதான்
கைக்குழந்தையாய்க் கண்டேன் உன் மகனை!
வெளியில் நான் வருவதற்குள்
நீங்கள் வெளிநாடு புறப்படுகின்றீர்கள்!

நீ பெற்றிருக்கும் காதல் பரிசைக்
கணவருக்குக் காட்ட வேண்டுந்தானே!

இங்கே மகளைப் பிரியும் பெற்றோரைக் காட்டிலும்
அங்கே மகனை எதிர்பார்த்திருக்கும்
தந்தையின் தவிப்பு தனித்துவமானது

என்னதான்
உலகை நேசிக்கும் உள்ளம் விரும்பினாலும்
என் பேரன், என் பேத்தி, என் சதை, என் இரத்தம்
என்னும் உணர்வுகள்
எம்மை ஆட்டித்தான் படைக்கின்றன
போய் வா மகளே! புறப்படு மகிழ்ச்சியாய்!

ஆழமான உணர்வுகளைக் கடினமான சொற்களால்தாம் வெளிப்படுத்த வேண்டும் என்று நியதி இல்லை. எளிய சொற்களும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்த்லாம் ஏழையின் கண்ணீர்போல!. இதற்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. உறவுகளில் ஊசலாட்டம் சமுதாயப் போராளிகளுக்கும் உண்டு என்னும் இயற்கையைப் பாடியிருக்கும் சுபவீ ஒரு சோக ராகத்தையே மீட்டியிருக்கிறார். மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு திராவிட இயக்கக் கவிஞரின் படைப்பு வளையததிற்குள் வராத பாடுபொருள் இது. காரணம் அது மரபு சார்ந்து அமைந்ததுதான்.

சிறைச்சாலையில் கவிதை எழுதியவர்கள் உண்டு. வரலாற்று நூல்கள் எழுதியவர் உண்டு. நிரம்பப் படித்தவர்கள் உண்டு. தன்னைச் சந்தித்தார் பற்றிய சரித்திர நிகழ்வுகளை சுபவீ போலக் கவிதையாக்கியிருப்பவர் சிலரே. கல்லுக்குள் ஈரம் என்பதைப் போலச் சொல்லுக்குள் சோகம் பாடியிருக்கிறார் சுபவீ. ஒரு நிமிடம் அந்தச் சிறைச் சூழலை எண்ணிப்பாருங்கள்! நொறுங்குவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இதயம் சுக்கு நூறாகிவிடும். போராளிகளின் புலம்பல் என்று புரியாதவர்கள் சொல்லக்கூடும். காரணம் அவர்கள் கவிஞனின் இதயத்தோடு உறவாடத் தெரியாதவர்கள்!

மகள் வயிற்றுப் பேரனை வழியனுப்பிய கவிதை அப்படி அமைந்தது என்றால் இன்னொரு சிறைச் சூழலில் தன் மகன் வயிற்றுப் பேத்தியைக் கொஞ்சும் பேறும் அவருக்குக் கிட்டியது. தன பாட்டனைச் சிறையில் காணும் பேறுபெற்றவர்கள் அந்தப் பேரப்பிள்ளைகள். மெய்யால் தீண்டுதலும் இன்பம் மழலையர் சொல் செவியால் கேட்பதும் இன்பம் என்பதற்கேற்ப அவ்விரண்டையும் சில நொடிகள் சிறைவாசலில் அனுபவித்த கவிஞன் எழுதுகிறான்.

கறுப்பென்ன வண்ணத்தில் தப்பா? – நீ
கறுப்பில்லை என்பான் உன் அப்பா!
கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்! – கட்டிக்
கரும்பென்றே உன்னை அள்ளிக் கொள்வோம்!

தாத்தாவைச் சிறைவந்து பார்த்தாய்! – என்
தனிமையினைச் சில நிமிடம் தீர்த்தாய்!
மூத்தாலும் வயதினிமேல் குறையும் – உன்
முத்தத்தில் என் நெஞ்சம் கரையும்”

இவ்விரண்டு கண்ணிகளும் முழுக்கவிதையின் பகுதிகள் ‘கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்!’ என்று தன் கொள்கைக் குண்டூசியைக் குழந்தைக்கு வலிக்காமல் குத்தியிருக்கிறார்.  குழந்தை என்றவுடன் யாப்பில் சிந்து முன் நிற்பது வள்ளலார் மரபு. பாரதியும் பாரதிதாசனும் வெற்றிபெற்றது மழலைச் சிந்துகளால். பெரும்பண்டிதர்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் எலலாம் படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் பிள்ளைகளுக்கே அவை புரியாமல் போனதுதான்!

உப்பா? சர்க்கரையா?

தனிமனிதக் குடும்ப வாழ்வின் அனுபவங்கள் வேறு. பொதுவாழ்வின் அனுபவங்கள் வேறு.  முரண்களால் முடையப்படடவையே அவ்விரண்டும்.  ‘இருவேறு உலகத்தியற்கை’ என்பது வள்ளுவம். முரண்கள் இயற்கை. செயற்கை அன்று. இந்த முரண்களில் ஒற்றுமையைப் பார்க்கிறவன்தான் கவிஞன். சிரிப்பவர் சிலர். அழுபவர் சிலர். இரண்டும் முரண்கள். ஆனால் கவிஞன் சிரித்துக் கொண்டே அழுகிறான். அல்லது அழுதுகொண்டே சிரிக்கின்றான். பொதுவாழ்க்கையிலும் முரண்களே முன்களப் பணியாளர்கள். பதவி வரும்., போகும். போராட்டத்தில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு.  எனவேதான போராளிகள் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் களப்பணி ஆற்றுவதையே கடமையாகக் கொள்கிறார்கள். பலமுறை பல காரணங்களுக்காகச் சிறை சென்றவர் சுபவீ. ஒரு காரணமும் சொந்தக் காரணம் அல்ல. சமுதாயக் காரணமே. சிறை தந்த சில அனுபவ முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் இந்த நூலில்.

“சிறையிலும் உண்டு
சுதந்திர நாள் கொணடாட்டம்!

என் மனைவிக்கு எழுதினேன்!
சிறை எனக்கு!
தண்டனை உனக்கு!

ஒரு புறம்
பிரிவு, தனிமை, முடக்கம்!
மறுபுறம்
படிப்பு எழுத்து சிந்தனை!
சிறை உப்பா சர்க்கரையா?”

சுதந்திரத்திற்கு எதிர்ச்சொல் சிறை. ஆனால் சிறையிலும் சுதந்திரத் திருவிழா கொணடாடுகிறார்கள். எத்தகைய முரண்? புனல்கடந்து பொருள தேடச் செல்வான் தலைவன். ஆனால் பாலைத்திணை தலைவிக்குத்தான்!. தலைவியை எண்ணித் தலைவன் புலம்புவதாக ஒருபாடல் கூடத் தமிழில் இல்லை.

என் மனைவிக்கு எழுதினேன்!
சிறை எனக்கு!
தண்டனை உனக்கு!

என்றெழுதுகிறான் கவிஞன். மரபின் வேர் என்பது இதுதான். இதனையே சங்கப் புலவன் எழுதியிருந்தால்

பிரிந்தவன் நான்!
அழுதவள் நீ!

என்றல்லவா எழுதியிருப்பான்? ஒரு புறம் தனிமனிதனை வாட்டும் தனிமை, பிரிவு, முடக்கம். மறுபுறம் ஒரு போராளியைச் செதுக்கும் படிப்பு, சிந்தனை, எழுத்து.  இந்த முரண்களால் ஆனது சிறை. இரண்டு வகை அனுபவங்களும் சிறை தருகிறது. இறுதியாக வினவுகிறார்

“சிறை உப்பா? சர்க்கரையா?”

படித்தவர்கள்தாம் சொல்ல வேண்டும், இந்தக் கவிதை உப்பா? சர்க்கரையா? என்று!

நிறைவுரை

எதுவாக இருக்கும்? என்னும் தலைப்பில் ஐம்பது கவிதைகளைக் கொண்ட இந்த நூலில் என்னைக் கவர்ந்த அத்தனைக் கவிதைகளையும் நான் இங்கே சுவைத்து ஆராய்ந்து பதிவிடவில்லை. கட்டுரையின் அளவு கருதியும் காலம் கருதியும் ஒரு சிலவற்றைப் பற்றி மிகச்சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறேன். இவருடைய நூல்கள பலவற்றையும் நான் படித்து அவருடைய பன்முக ஆற்றலையும்  ஆழங்கால்பட்ட அறிவுத் தெளிவையும் அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய இரண்டாவது கவிதை நூலாகிய இதனை நான் மேலெழுந்த வாரியாகப் படித்தபோது ஒரு போராளிக் கவிஞனின் மறைவிடத்தை அறிந்த கொண்ட மன திருப்தி எனக்கு. எப்போதும் வருவது கவிதை அல்ல! எப்போதாவது வருவதுதான் கவிதை!. அவை கவிஞர் சுபவீயிடமிருந்தும் வந்திருக்கின்றன. பேராசிரியர் சுபவீ விருப்ப ஓய்வு பெற்றவர்.  கவிஞர் சுபவீக்கு விருப்ப ஓய்வு கிடையாது. காரணம் முன்னது பதவி. விருப்பம் போல் துறந்துவிடலாம்  பின்னது படைப்பு. அது ஒருவகைப் பாசப்பிணைப்பு. துறக்க முடியாது படடினத்தாரைப் போல!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.