குறளின் கதிர்களாய்…(451)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(451)
இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்.
– திருக்குறள் – 615 (ஆள்வினையுடைமை)
புதுக் கவிதையில்…
இன்பம் தனக்கு வருதலை
விரும்பாதவனாய்
எடுத்த செயலை நன்முறையில்
முடிக்கவே விரும்புபவன்,
தன் உறவுகளுக்கு வரும்
துன்பத்தைப் போக்கித்
தாங்கி நிற்கும்
தூணாய் ஆவான்…!
குறும்பாவில்…
தனக்குவரும் இன்பத்தை விரும்பாதவனாய்
தொடங்கிடும் செயலை முடிக்க விரும்புபவன்,
தன்சுற்றத்தாரின் துன்பந்தாங்கும் தூணாவான்…!
மரபுக் கவிதையில்…
இன்பம் தனக்கு வருவதையே
என்றும் விரும்பா குணத்தவனாய்
தன்னால் தொடங்கும் செயலதையே
தரமாய் முடிக்க விரும்புவோனே,
இன்ன லெல்லாம் போக்கியேதான்
இனிய சுற்றம் நட்பதனின்
துன்பந் தாங்கும் தூணாகித்
துணையா யிருப்பான் காண்பீரே…!
லிமரைக்கூ…
விரும்பாமல் வந்திடும் இன்பத்தை,
வினைமுடிக்க விரும்புவோன், இடர்போக்கித் தூணாய்த்
தாங்குவான் சுற்றத்தாரின் துன்பத்தை…!
கிராமிய பாணியில்…
முடிக்கணும் முடிக்கணும்
செயலச் செய்துமுடிக்கணும்,
நல்லபடியாச் செய்துமுடிக்கணும்..
தனக்கு வாற
இன்பத்தயெல்லாம் விரும்பாம
செய்யிற செயல
செம்மயா முடிக்க விரும்புறவந்தான்,
சொந்த பந்தங்களோட
துன்பம் போக்கி
அவுங்களோட
துன்பம் தாங்குற
தூணா இருப்பானே..
அதால
முடிக்கணும் முடிக்கணும்
செயலச் செய்துமுடிக்கணும்,
நல்லபடியாச் செய்துமுடிக்கணும்…!