செண்பக ஜெகதீசன்

அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

– திருக்குறள் – 635 (அமைச்சு)

புதுக் கவிதையில்…

அரசுக்கான
அறங்களை அறிந்தே,
கல்வி
அறிவு மிகப்பெற்றே,
அடக்கமாய்ப் பேசும்
ஆற்றல் உள்ளளவனாய்,
எப்போதும்
செயல்திறன் மிக்கவனாய்
உள்ளவனே
அரசர்க்கு ஆராய்ந்து கூறும்
தக்க துணைவனாவான்…!

குறும்பாவில்…

அரசறம் அறிந்தே கல்வியாளனாய்
அடக்கமான பேச்சுடைய செயல்வீரனே அரசர்க்கு
ஆராய்ந்துகூறும் தக்க துணைவனாவான்…!

மரபுக் கவிதையில்…

அரசதன் அறங்களை அறிந்தவனாய்
அளவிலாக் கல்வியு முடையவனாய்,
உரக்கவே பேசிடா தடக்கமுடன்
உரைத்திடத் தெரிந்தவன் உத்தமனாய்
அரசனின் வாழ்வதன் காலங்களை
அறிந்ததன் படிச்செயல் படுகின்ற
தரமுடைச் செயலதன் வீரனெனும்
தக்கவன் அரசனின் அமைச்சாமே…!

லிமரைக்கூ…

அரசறிவு உயர்கல்வி யுடனே
சொல்லடக்கம் கொண்டே செயல்வீரனாய் இருத்தல்,
அரசனுக்கேற்ற அமைச்சனின் கடனே…!

கிராமிய பாணியில்…

மந்திரி மந்திரி
மகாராசாவுக்கு ஏத்த மந்திரி,
மதிப்பு மிக்க மந்திரி..

நாட்டு அரசியலறிவு
நல்ல படிப்பு,
அடக்கமான பேச்சோட
எதயும்
ஆராஞ்சி சொல்லுற
தெறமயுள்ள செயல்வீரன்தான்
ராசாவுக்கு
தக்க தொணயான மந்திரி..

அவுருததான்,
மந்திரி மந்திரி
மகாராசாவுக்கு ஏத்த மந்திரி,
மதிப்பு மிக்க மந்திரி…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *