தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 22

0

இன்னம்பூரான்

எதை எடுத்துக்கிறது, எதை விடறது என்று புரிய மாட்டேங்கிறது. பேசறவங்க எல்லாரும் பெரிய மனுஷங்க. சமீபத்தில் ஊடகங்களில், கலந்து கட்டிய சில சமாச்சாரங்கள். 2ஜி ஜாமீன் என்று எங்கிட்டும் ஒரே பேச்சு. ஆய்வுகளும், கருது கோள்களும் மிகுந்து வந்த வண்ணம் உளன. சில துளிகள்: 

ஒரு உலகப் பொருளியல் சங்கமத்தில் முகேஷ் அம்பானி சொல்றாரு, 

‘இந்தியாவின் பொருள் ஆதாரம் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லவில்லை. அரசு தான் ஆமை வேகம். அது துரிதமாக இயங்க வேண்டும். ஜனநாயகம் என்பதால், நாம் முடங்கிக் கிடக்க வேண்டியதில்லை.’

பேஷ்! கச்சா எண்ணெய் விஷயமாக, கவர்ன்மெண்டு நிலத்தை இவரு முடக்கிப் போட்டதை பற்றித் தணிக்கை ரிப்போர்ட் சொன்னதுக்குப் பதிலை காணோம். இவர் ப்ளேட்டைத் திருப்பிப் போடறாரு. அவர் சொல்லாமல் விட்டது, ‘ஒன்லி விமல்’ புராணம்! 

இதற்கு நடுவிலே, எல்லோராலும் மதிக்கப்படும் இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி, புரட்சிகரமாக, ஒரு பாயிண்ட் சொல்றாரு:

‘லஞ்சம் கொடுப்பதைச் சட்ட விரோதமாகக் கருத வேண்டாம். லஞ்சம் வாங்குவதைச் சட்டம் தண்டிக்கட்டும். அப்போது தான், லஞ்சம் கொடுப்பவர் வாங்கியவரைக் காட்டிக் கொடுப்பார்.’

 முதலில் தொட்டிலை ஆட்டு. அப்றம் கிள்ளவும் கிள்ளு. பேஷ்! இது ஒரு காலத்தில் கெளசிக் பாசு என்ற உயர் அதிகாரி சொன்னது தான். இப்போது கூட, இதை ஆதரிக்கும் தொழிலதிபர் அதி கோட்ரஜ், லஞ்சத்துக்கு ஒரு உச்ச வரம்பு வைக்கலாம் என்கிறார்! ‘எத்தனை கோடி இன்பம்’ என்று பாடாதே. ‘எத்தனை கோடி லஞ்சம்’ என்று கெஞ்சு! இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இங்கு குறிப்பிட்ட பெரிய மனுஷாளில் ஒருவருடன், இருபது வருடங்களுக்கு முன்னால், தற்செயலாக ஒரு வீ.ஐ.பி.ஐ யை பற்றி பேச்சு வந்த போது அவரை நாங்கள் தான் நியமனம் செய்தோம் என்றார், சர்வ சாதாரணமாக. நான் திடுக்கிட்டுப் போனேன். ஆனால், லஞ்சம் எக்காலத்திலேயோ, ராவணன் போல் பத்துத் தலை ராசா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

லஞ்சித்த வரலாறுகள் பல, ‘அழுக்குத் துணியை தெருச் சாக்கடையில் அலசுவதைப்’ போல ஊடகங்களில் காணக் கிடைக்கின்றன. சுக்ராம் என்ற மாஜி டெலிகாம் அமைச்சர் மீது 1996-ல் தொடங்கிய வழக்கு ஒன்றில், $6000 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவர் $8000 அபராதத்துடன் ஐந்து வருடம் சிறை என்று போன வாரம் தண்டிக்கப்பட்டார். அவருடைய வயது 86. அவரை திகார் ஜெயிலுக்கு கொண்டு போனால், அங்கே பிரசன்னம், ஆ.ராசா. அவரும் மாஜி டெலிகாம் அமைச்சர். அவர் மீது 40 பிலியன் டாலர் நஷ்டம் உண்டு பண்ணியதாக வழக்கு. இதை எல்லாம் தோண்டி எடுத்தது, தணிக்கைத்துறை. காங்கிரஸ்காரங்க அந்த அமைப்பு மீது கடுப்பில்! சுக்ராம் தண்டிக்கப்பட்ட துக்க தினத்திலேயே, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் என்ற புகழ் வாய்ந்த டெலிகாம் கம்பெனிகள் மீது புலனாய்வுத்துறை ரெய்டு. $100 மிலியன் நஷ்டம் என்று அத்துறை சொல்கிறது. அந்த வண்டவாளங்கள் நடந்த காலகட்டத்தில் பிரமோத் மஹாஜன் என்ற பா.ஜ.க. அமைச்சர் இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தால், திகார்லெ ஒரு மும்முனை மாநாடு நடந்திருக்கலாம்! அந்த பா.ஜ.க. தான் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் கலாட்டா செய்யறாங்கோ.

இது ஒரு பக்கம். எதுவானாலும் ஒரு ஆய்வு செய்து விடுவோம் என்பது மேற்கத்திய நாடுகளின் பழக்க தோஷம். ஷிகாகோ பல்கலைக் கழகத்தின் பூத் பள்ளி என்ற ஆய்வுக் களம் சொல்கிறது, ‘லஞ்சத்தைக் கொஞ்சத்தில் எடை போட முடியாது. ‘Good, Bad & Ugly’ என்று மூன்று வகை உண்டு. எல்லாமே தீயது செய்வதில்லை. நன்மை பயக்கும் லஞ்சமும் உண்டு’ ஆஸ்ட்ரேலிய க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் லஞ்சத்தின் இலக்கணத்தை,‘மூலதனம்,மனிதத்திறன் என்ற செல்வம் ஆகியவற்றைக் குலைத்து, அரசியலிலும் சஞ்சலத்தை உண்டாக்கும் லஞ்ச லாவண்யமானது, பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கலாம். கமுக்கமான அணுகுமுறையை வணிகம் தவிர்க்க, இது உதவலாம்.’ என்று ‘லாம்’ ‘லாம்’ குழலூதுகிறது. இது நிற்க.

கொஞ்சமாவது நடுநிலை வகிப்போம் என்ற ஹேமந்த் கனோரியா என்ற வல்லுனர், ‘பீஹார், ஒடிஷா போன்ற மாநிலங்களில் லஞ்சத்தைக் கணிசமாகக் குறைத்து விட்டார்கள். அதனால், எல்லாம் துரிதமாக நடக்கிறது என்று சொல்ல முடியாது’ என்கிறார். சரி. மூன்று நோக்குகளில், அதுவும், வெளிநாடுகளில் நடந்த சிகாகோ, க்வீன்ஸ்லாந்து, வார்ட்டன் அலசல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ‘கொஞ்ச லஞ்சம்’, ‘கொஞ்ச நஞ்ச லஞ்சம்’ ‘மிஞ்சும் லஞ்சம்’, ‘விஞ்சும் லஞ்சம்’ என்றெல்லாம் கணக்குத் தீர்த்து, மக்களைக் கிணற்றில் தள்ளி விடுவார்களோ? 

ஒரு ராஜாங்க ரகஸ்யம் சொல்றேன், கேட்டுக்குங்கோ. எந்த ஆவணங்களை வைத்து அரசு பீடு நடையும், ஆமை நடையும் போடுகிறதோ, அதே ஆவணங்களை அலசி, வினா எழுப்பித்தான், தணிக்கை நடக்கிறது. சுக்ராம் காலத்துக்கு முன்னாலேயிருந்து, ஆடிட்காரன் கரடியா கத்தினாலும், காதில் போட்டுக் கொள்ளாமல், தப்புத் தண்டா செய்தவர்களைக் கோர்ட்டுக்கு இழுத்துண்டு போகிற மாதிரி, ‘ஜவ்’ இழுத்து, தாமதத்தினாலேயே, Good, Bad & Ugly லஞ்ச லாவண்யத்தைப் போற்றிப் பாதுகாக்கிறார்களோ? என்னமோ? உங்களுக்குத் தெரிந்தா சொல்லுங்கோ.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://www.maalaimalar.com/2010/12/10174633/calculation-information-for-in.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.