Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்(பகுதி-2)

தி. சுபாஷிணி.

‘காலச்சுவடு’ நடத்திய ‘சுரா 80’ கருத்தரங்கிற்கு, ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவோடு வந்திருந்தேன். கன்னியாகுமரியில் “விவேகானந்தா கேந்திரத்தில்”தான் கருத்தரங்கு நடந்தது. அங்குதான் அனைவரும் தங்கியிருந்தோம். கடற்கரையில் அக்கேந்திரம் இருக்கிறது என்னில் அதன் வனப்பை வரைந்திடல் கூடுமோ!

நானும் அவர்கள் அழைப்பை மதித்து கடற்கரை சென்றேன். போகும் வழியெல்லாம் மரங்களும், மலர்களும் மனதை மயக்கின. என் எண்ணங்களை விட்டு “மரம்“ அகலவில்லை.

எண்ணப்பறவை என்னை 500 கி.மீ. தொலைவிலுள்ள மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு அழைத்துச் சென்று விட்டது. எனது சிறுவயது தொடங்கி கல்லூரிப்படிப்பு வரை மதுரையில்தான் நிகழ்ந்தது. (உடனே…நான் ஏதோ என் சாதனைப் பற்றிக் கூறப் போகிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்) எல்லோரையும் போல் ஒரு சாதாரண கல்வி வாழ்க்கைதான் என்னுடையதும். மதுரையில் உள்ள காந்தி மியூசியம் மரங்கள் நிறைந்த அழகான இடம் ஆகும். அதன் நுழைவாயில் தொடங்கி, வரிசையாய் இருமருங்கிலும் அசோக மரங்கள் இருக்கும். வலது பக்கம் காந்தி இருந்த குடில் இருக்கும். இடது பக்கம் நிறைய மரங்களுடன் கூடிய இடம் பெரிய பரப்புள்ளதாக இருக்கும். நடுவில் மியூசியத்தின் அழகுக் கட்டிடம். அதைத் தாண்டிப் பின்னால் காந்தி நினைவு நிதிக்கட்டிடம் உள்ளது. அதன் முன்னே பெரிய ஆலமரம் உண்டு. அதைச் சுற்றி மேடை அதைத்திருப்பர். எனது அப்பா காந்தியவாதி. அங்கு காந்தியத் தத்தவத்தை எடுத்துச் சொல்லும் தத்துவப் பிரசாரகாரராக இருந்தார். எனவே எங்கள் அன்றாட வாழ்வில் காந்தி மியூஸியம் மிகவும் முக்கியப் பங்கு வகித்தது. அது போல் அந்த மரத்தடி அதனினும் சிறப்பு வாய்ந்தது.

அம்மரத்தடியில்தான் ஜவஹர்லால் நேரு, டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டர். இராதாகிருஷ்ணன் அனைவரும் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். டாக்டர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேரா. அ. சீனிவாச ராகவன், பேரா. அ.ச. ஞானசம்பந்தன், தமிழ்ச்செம்மல் திரு. ம.பொ.சி. போன்ற தமிழறிஞர்கள் எல்லாம் இலக்கியம் பேசியிருக்கிறார்கள். அம்மரத்தடியில் தான் முதன்முதலாக ‘காந்திய சிந்தனைக் கல்லூரி’யைத் தொடங்கி வைத்தார் டாக்டர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். பெரும் காந்தியத் தலைவர்கள் காந்தியத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். பல திட்டங்களின் மேன்மையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் பல வருடங்கழித்து அங்கு சென்றேன். அம்மேடை அருகே சென்றேன். நிமிர்ந்து அம்மரத்தைப் பார்த்தேன். அப்போதை விட இன்னமும் பரந்து விரிந்து தன் முதுமையைக் காட்டி நின்றது. அதன் வெவ்வேறு கிளையும் எனக்குக் காந்தியாய், தமிழ் இலக்கியங்களாய், இந்திய வரலாறாய்த் தெரிந்தது. இங்கு நடந்ததற்கெல்லாம் இம்மரம்தான் இன்றும் சாட்சியாய் நிற்கின்றது. அது அத்துணை தமிழ் அறிஞர்களையும், அரசியல் மேதைகளையும், தத்துவ மேதைகளையும், காந்தியப் பெருந்தலைவர்களையும் தன் மர நிழலில் அமரச் செய்து, அழகு பார்த்திருக்கின்றது. அவர்தம் சொற்களைத் தன் வேருக்கு நீராய் எடுத்துக் கொண்டு, ஒளிர்ந்து நிற்கின்றது. அதன் அடியில் நான் நிற்பதைப் பெருமிதமாய் உணர்கின்றேன்.

நண்பர்களே! சென்னையில் அடையாறையும், கிரீன்வேஸ் சாலையையும் நினைவு கொள்ளும் பொழுது கலாக்ஷேத்ராவை யாரால் மறக்க இயலும்? அந்த வளாகமே பல்வேறு தருக்களால் நிறைந்த வளாகம். நான் இன்னமும் பார்த்ததில்லை. என் மகள் அனையவள் சிவமதி. அவர் அங்கு சென்று விட்டு விதவிதமான மர இலைகளையும், குச்சிகளையும், காய்ந்த பூக்களையும் கொணர்ந்து ஒரு அழகிய ஓவியமே படைத்து விட்டார். அது கலைகளின், படைப்புகளின் உலகமான அந்த இடத்தின் பண்பும் பயனும் அது. அதைத் தோற்றுவித்த திருமதி. ருக்மணி அருண்டேலை யாரால் மறக்க இயலும்? இவ்விடத்தில் ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன் நண்பர்களே!

1933-ஆம் வருடம் சென்னையில் பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் தமிழ்க்கவிகளைப் புடம் போட்டுப் பார்த்து எது உண்மையான கவியெனக் கண்டு, அவற்றை ரசிப்பதில் வல்லவர். கவிஞனின் இதயத்திற்குள் நுழைந்து கவியின் உருவத்தைக் கண்டு விடுவார். இவ்வாறுதான் கம்பன் கவிகளைக் கண்டு கவியின்பத்தை அனுபவித்தார். தான் அனுபவித்ததைப் பிறருக்கும் அளித்து ஆனந்தமடைந்தார். இத்தகைய ரஸக்ஞானி ரசிகமணி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவரும், சிறந்த அறிஞரும், பிரம்மஞான சபையின் தலைவருமான டாக்டர். அருண்டேல் இக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். ரசிகமணியை டாக்டர். அருண்டேல் இக்கூட்டத்தில்தான் முதன்முதலாகச் சந்திக்கின்றார். அவர் டி.கே.சி.யின் முடிவுரையைக் கேட்டு, தமிழ் மொழி தெரியாவிடினும், அவரது பேச்சின் நயங்களை எப்படியோ கண்டு கொண்டார்.

கூட்டம் முடிந்ததும் அடையாறுக்குப் போய்த் தன் மனைவியிடத்தில் “டி.கே.சி. என்னும் அற்புதமான மனிதரை  இன்றையக் கூட்டத்தில் சந்தித்தேன். நீ கட்டாயம் அவரைச் சந்திக்க வேண்டும். இந்தியப் பண்பாட்டைப் பார்க்க வேண்டும் என்றால் டி.கே.சியைப் பார்க்க வேண்டும்“ என்று கூறினார். இதற்குப்பின் டி.கே.சி.க்கும் அருண்டேல் தம்பதியினருக்கும் நட்பு தொடங்கி, நெருக்கமாகி வளரத் தொடங்கியது. சில வருடங்கள் கழிந்த பின், அருண்டேல் தம்பதியர், ரசிகமணியைச் சந்திக்கக் குற்றாலம் சென்றனர். அழகான சாயங்காலம் அது.. திருவாங்கூர் மாளிகையின் முற்றம். அதில் அழகாய் ஒரு மாமரம்…விரிந்து பரந்து குடையாய் நிழலாய் நிற்கின்றது. அதனடியில் ரசிகமணி டி.கே.சி. அருண்டேல் தம்பதியர் அமர்கின்றனர். குற்றாலம் என்றாலே, பொங்கி வி-ழும் அருவியும், குற்றால நாதமும் நினைவுக்கு வரும். உடனே ‘குற்றாலக் குறவஞ்சி’ நினைவில் ஓடிவந்து அமர்ந்து விடுவாள்.

தென்காசி அருகேயுள்ள மேலகரத்தில் வந்து குடியேறிய திரிகூட ராஜப்பக் கவிராயர் குற்றால மலை, அருவி, காடு, வயல், தோப்பு, கோவில், குற்றால நாதர், குழல்வாய்மொழி அம்மை, தேர்த்திருவிழா என்ற அத்தனையும் கண்ணாரக் கண்டார். அவர் உள்ளத்தை உருக்கி விட்டார். பக்தியே உண்டாகிவிட்டது. பக்தி என்னில் மூர்த்தியையும், அது தொடர்பாக அந்த ஸ்தலத்தையும் உடன் அனுபவிக்கிறதுதானே!

“சுற்றாத ஊர்தோறும்

  சுற்றவேண் டாம் புலவீர்

குற்றாலம் என்றொருகால்

  கூறினால்”

என்றும்,

  “சாட்டி நிற்கும் அண்டம் எல்லாம்

சாட்டை யிலாப் பம்பரம் போல்

  ஆட்டு விக்கும் குற்றா லத்து

அண்ண லார்”

என்றும் அவரது பக்தி பறைசாற்றின. கவிராயர் இதயத்தில் பக்தி ஊறி ஊறி ரசமாகப் பொங்கியது. அந்த ரஸம் காதல் ரஸமாகியது. கவிராயர் அதைத் தமிழில் நாடகத்துறையில் வைத்து ஒரு இதிகாசமே படைத்து விடுகிறார். அந்த அளவுக்குத் தமிழ் இடம் கொடுக்கிறது என்று அவர்களுக்குப் பாடத்தைத் துவக்குகிறார் ரசிகமணி.

‘குறவஞ்சி’ என்னும் பெயரில் ஓரங்க நாடகம் போல்தான் எழுந்து வருகிறது. கவிஞரின் ஆனந்தமும் அனுபவமே கட்டங்களை அமைத்துக் கொள்கிறது.

குற்றால நாதன், குழல்வாய்மொழி அம்மை சகிதமாய்த் தேரேறி வீதி பவனி வருகிறார். பவனியைக் காண ஒரே கூட்டம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூட்டம், ஆரவாரம், எக்களிப்பு, உல்லாச மயக்கம், ஆனந்தம் இப்படி வருகிறது அந்தப் பவனி.

(தொடரும்)

 

கலாஷேத்ரா படத்திற்கு நன்றி: http://www.indianetzone.com/6/kalakshetra_chennai.htm

ருக்மிணி அருண்டேல் படத்திற்கு நன்றி: http://natyavidya.wordpress.com/kalakshetra

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க