பேராசிரியர் பெஞ்சமின் லெபோ 

பகுதி 10-  : அதுவா? இதுவா? – இயக்குநர் ? இயக்குனர்?

இப்போது நினைத்தால் வேடிக்கையாக உள்ளது. வியப்பாகவும் இருக்கிறது. உங்களிடம் சொல்வதில் என்ன! 

படிக்கின்ற காலத்தில், படி வேப்பெண்ணை குடிப்பதற்கு ஒப்பான வகுப்பு எது தெரியுமா எனக்கு? ‘கணக்கு வகுப்பு’  என நீங்கள் சொன்னால் ‘0’ மதிப்பெண் தான் தர வேண்டி  இருக்கும்.

இருந்ததிலேயே மிகக் கடுப்பான வகுப்பு.’கட்டுரை’வகுப்புதான்ஆங்கிலமாகட்டும் தமிழாகட்டும் … ஒருமணி நேரம் ‘சிறைத்தண்டனைதான்’. (முதுகலையில் இன்னும் மோசம்,  இரண்டுமணிநேரம் !). கட்டுரை வகுப்பாகப் பார்த்துக் ‘கட்’ அடித்ததும் உண்டு. மாட்டிக் கொண்டு வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அல்லவா.அப்போது அடித்த ‘கட்’டுக்கெல்லாம் சேர்த்து இப்போது,  கட்டுரை எழுதும் இக்கட்டில் சிக்கி அனுபவிக்கிறேன்.

பாதி நேரம் (பல)  கட்டுரை(கள்) எழுதுவதிலேயே போய் விடுகிறது! அதுவும்,  ‘தவறின்றித் தமிழ் எழுதுவோமே’ -வை எழுதும்போது மிக விழிப்பாக எழுத வேண்டியுள்ளது. சொற் குற்றம் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம். பொருள் குற்றம்…? 

இலக்கண இலக்கிய நூல்கள் பெரும்பாலும் இணையதளங்களில் கிடைத்தாலும், குறிப்பிட்ட பாடல், பகுதியைத் தேடிக் கண்டு  பிடிப்பதில் நேரம் செலவாகிறது. அப்படித் தேடிக் கொண்டு இருந்த போது அமெரிக்க  நண்பர்  (‘பழமைபேசி’) ஒருவரிடம் இருந்து மின் மடல் வந்தது.

 ‘இயக்குநர்’ சரியா?; ‘இயக்குனர்’ சரியா? எனக் கேட்டு ஊசிப்பட்டாசு ஒன்றைக் கொளுத்திப் போட்டிருந்தார். ‘வல்லமை’க்குக்  கட்டுரை முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், பிறகு பதில் சொல்வதாகப் பதில் அனுப்பி விட்டேன்.

இந்த வாரம் அதனையே அலசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! அவருக்கும் பதில் சொன்னால் போல் இருக்கும், நம் கட்டுரைத் தொடருக்கும் கட்டுரை எழுதினால்  போல் இருக்குமே! அட, நம்ம மண்டையில  கூட கொஞ்சம் ‘மசாலா’ இருக்கு போல, இல்ல?

ஒரு வரிப் பதில் : ‘இயக்குநர்‘  என எழுதுவதே தமிழ் மரபுப் படி முறையாகும்.

இந்தப் பதில் போதும் என்று நிறைவு அடைபவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டியதில்லை. பதிலாக, வேறு பயனுள்ள அலுவலைப் பார்க்கப் போகலாம். மற்றவர்கள்? ஆர்வம் உள்ளவர்கள். ஆகவே, உடன் வாருங்கள், சேர்ந்து அலசுவோம்.

வழக்கம் போல் நம் இணையதள அல்லாவுதீன் பூதத்தைக்  கேட்போம். அவர்  (பூதமாக இருந்தாலும் மரியாதை கொடுக்கணுமில்ல  ) கணக்குப்படி :
இயக்குநர் : 1 270 000 ; இயக்குனர் : 1,830,000. ஆக, ‘இயக்குனர்’ தான் முன்னணியில்  இருக்கிறார்.  ஒரு பக்கம் இப்படி.

மறு பக்கம்?

இது பற்றி இணையதளத்தில் துப்பு கிடைக்குமா எனத் துருவித் துருவிப் பார்த்தேன். பிற சிக்கல்களைப் பற்றி, எனக்கும் முன்னரே பலரும் எழுதி விவாதித்து இருக்கிறார்கள். இது பற்றி முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் ஏற்கனவே எழுதியதையே நானும் திருப்பி எழுதுவதில் என்ன பயன் ?

அதனால் அவர்கள் குறிப்பிடாததையே நான் எழுதி  வருகிறேன். தேவைப்படும் இடங்களில் அவர்களைக் குறிப்பிட்டு  மேற்கோள் காட்டுவது என் வழக்கம். ஆனால் இந்த முறை ஏமாற்றமே!    இயக்குநர்? இயக்குனர்? பற்றி எந்தக் கருத்தோ விவாதமோ என் கண்ணுக்குப் படவில்லை.

இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்குக் கிடைக்கும்/ கிடைத்த ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாதங்களை  வைக்கிறேன். அவற்றின் அடிப்படையில்  (என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுத் ) தீர்ப்பு எழுகிறது. எந்தத் தீர்ப்பும் இறுதித்  தீர்ப்பு எனக் கொள்ள / சொல்ல  இயலாது.

திருவள்ளுவர் வாக்குப் படிக் குணம்  நாடிக் குற்றம் நாடி மிக்கக் கொளல் வேண்டும். தமிழின் நலம் கெடாதவாறு பாதுகாக்க வேண்டியது நம் முதற் கடமை.

எந்த வழக்கிலும் முன்னெடுத்துக் காட்டுகளை, இன்ன நீதி மன்றத்தில் இன்ன வழக்கில், இன்ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என எடுத்துச்  சொல்லித் தம் தரப்புக்கு வலு சேர்ப்பர். அவர் போலவே, முந்திய  கட்டுரைகளிலும் செய்திருக்கிறேன். இலக்கண இலக்கிய முன்னெடுத்துக் காட்டுகளைப் பெய்திருக்கிறேன். 

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்;   மரபுகள் வழியாக வழிகாட்டிச்  சென்றுள்ளனர். இலக்கண இலக்கியங்கள் அம்மரபுகளை உள்ளடக்கி உள்ளன. அதனால்தான் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்கள் அனைத்தையும் முன்னோர் வழங்கிய மரபு பிறழாமல் கூறியுள்ளார்.

மரபு நிலை திரியா மாட்சிய வாகி
யுரை படு  நூல் …’

மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப ‘

‘மரபுநிலை திரியற் பிறிது பிறிதாகும் ‘ என அவர் எழுதுகிறார்.

‘முன்னோர் மொழிபொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னேபோல் போற்றுவோம்’ என்பார் பவணந்தி முனிவரும்.

‘முன்னேர் எவ்வழி பின்னேர் அவ்வழி’ என்பது நம் பழமொழி.
அந்தக் காலத்தில் அப்படிச் சொன்னார்கள் ; செய்யுளுக்காகச் சொன்னார்கள்…

அவை இக்காலத்துக்கு, உரைநடைக்கு ஒத்துவருமா… என்றெல்லாம் ஐயம் எழுப்புவோருக்காக இவற்றைச் சொன்னேன்.

எழுத்து, சொல் அதிகாரங்களில் சொல்லப்படும் அத்தனை விதிகளும் செய்யுளுக்கும் செல்லும் ; உரைநடைக்கும் செல்லும். அக்காலத்துக்கும் பொருந்தும் ; இக்காலத்துக்கும் பொருந்தும்.  ஏனைய இலக்கணங்களான பொருள், யாப்பு, அணிக்கும் செல்லும்.

இயக்குநர் ? இயக்குனர்? என்னும் சொற்களின் விகுதிகள் -‘நர்’ , ‘னர்’.பழந்தமிழ் இலக்கியங்களில், ‘நர்’ விகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இலக்கிய எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளன :

‘பொருநர்’, செல்லுநர்’, ‘வருநர்’, ‘செறுநர்’ , உறுநர்’, ‘கொழுநர்’….
‘நர்’ விகுதி பெற்ற இந்த வடிவையே பழைய இலக்கியங்களில் காண்கிறோம்.

‘பொருநர்’
பத்துப்பாட்டுள் ஒன்றின் பெயரே ‘பொருநராற்றுப்படை ‘

‘செல்லுநர்’
ஐங்குறுநூறு -நான்காவது நூறு பாலை- ஓதலாந்தையார் பாடிய பாடல்

34.தலைவி இரங்கு பத்து (331) பாடல்
‘அம்ம வாழி தோழி அவிழிணர்க்
கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கம்ழும் வெற்பின்
இன்னா என்பஅவர் சென்ற ஆறே’.

‘வருநர்’
குறுந்தொகை பாடல் ; பாடியவர் : நெடுவெண்ணிலவினார்.

.
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

செறுநர்’
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். குறள் 759

‘உறுநர்’
‘செறுநர் முன்னர்ச் சீர்மை யன்றென
உறுநர் சூழ்ந்த ஒருபால் ஒடுங்கித்’
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை – இலாவாண காண்டம்.

‘கொழுநர்’
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.’
திருநாவுக்கரசு சுவாமிகள்-தேவாரம்-ஆறாம் திருமுறை.

மேலும், கலிங்கத்துப் பரணியின் கடை திறப்பில் எத்தனை ‘கொழுநர்’ உலவுகின்றனர் தெரியுமா!
போக வமளிக் களிமயக்கிற் புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக வமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாடந் திறமினோ’. 17

கலிங்கத்துப் பரணியை இதுவரைப் படிக்காதவர்கள் ஒரு முறையேனும் (உரக்கப்) படித்துப்பாருங்கள். தமிழுக்கே உரிய சந்தங்கள் முந்தி முந்தி வந்து விழுவதைக் காதாரக் கேட்டு மகிழுங்கள். மறக்காமல் ‘கடைதிறப்பை’ மட்டும் ஒரு முறைக்கு இருமுறையாகப் படிக்கவும். பிறகு நீங்களாகவே பல முறை படிப்பீர்கள். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்படி அவ்வளவு இலக்கியச் சுவையோடு அவை அமைந்துள்ளன.

இவ்வண்ணம் நம் முன்னோர்கள் ‘நர்’ விகுதியையே பயன்படுத்தி உள்ளனர் எனபது தெள்ளத் தெளிவு. ஆனால் அதற்கான காரணத்தை இலக்கண ஆசிரியர்கள் பதிவு செய்யத் தவறிவிட்டனர் போலும். ஒருகால், ‘நர்’ விகுதியையே பயன்படுத்தி உள்ளதன் காரணம் இப்படி இருக்கக்கூடும் :
(இது எளியேனின் கருதுகோளே – hypothesis- தவிர முடிந்த முடிபல்ல)

மேலே சொன்ன சொற்களில் உள்ள (அ)ர் விகுதியை எடுத்துவிட்டுப் பாருங்கள் ‘பொருந ‘, செல்லுந ‘, ‘வருந ‘, ‘செறுந ‘ , உறுந ‘, ‘கொழுந ‘….
இப்படி வருவனவற்றை (அண்மை) ‘விளி’ என்பர் இலக்கணத்தில். (‘நண்ப’ என்று சொல்லுவது போல) பொருதுகிறவன் (பொருதுகின்றவன்) – பொருநன்
செல்லுகிறவன் (செல்லுகின்றவன்) – செல்லுநன் …முதலியன.
இந்த ஏரணத்தின் (logic) படி, இங்கே ‘ந’ = ‘கிறு’ / ‘கின்று’ (நிகழ்கால விகுதிகளாகச் செயல்படுகின்றன ; (இது சரி என்றோ தவறு என்றோ கூற இலக்கண விதி ஏதும் இல்லை ).

இந்த விளிகள் அடிப்படை. இவற்றோடு (அ)ர் (மரியாதை விகுதி அல்லது உயர்திணைப் பன்மை விகுதி) சேரும்போது அவை ‘பொருநர்’, ‘செல்லுநர்’ என உரு எடுக்கின்றன.

இப்போது, ‘ந’கருத்துக்குப் பகரமாக ‘ன’கரத்தை இட்டுப் பார்ப்போம் : ‘பொருனர் ‘, ‘செல்லுனர் ‘ … முதலியன.
இவற்றைப் பிரித்தால், பொரு+ன+அர் என வரும்.
இதில் பொரு பகுதி ; அன் உயர்திணை, ஆண்பால், ஒன்றன்பால் விகுதி.

‘ன’? – இது பற்றி எதுவுமே சொல்ல இயலவில்லை ; அதாவது இதற்கு இலக்கணப் பொருள் ஏதும் இல்லை. எனவே இது இடம் பெறும் சொல்லும் பொருள் இல்லாச் சொல் ஆகிவிடுகிறது. ஆகவே, ‘பொருனர் ‘, ‘செல்லுனர் ‘… போன்றவை பொருள் இல்லாச் சொல் ஆகின்றன.

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பார் தொல்காப்பியர் . அதாவது, பொருள் குறிக்கவில்லை என்றால் அது சொல்லே இல்லை என்றாகிறது. எனவே, இந்த ஏரணப்படி, ‘இயக்குனர்’ என்னும் சொல் பொருள் இல்லாச் சொல். பொருள் இல்லாச் சொல் ‘பயன் இல்லாச் சொல்’ என்பார் திருவள்ளுவர்.
(காண்க குறள் 196 ). உள்ளீடு அற்றதைப் பதடி என்பது உலக வழக்கு. (பதடி=உமி=பயனின்மை)

ஆகவேதான் ‘இயக்குனர்’ என்னும் பதடிச் சொல்லை நீக்கி
‘இயக்குநர்’ என்னும் பயனுடைய சொல்லைப் பயன்படுத்தலே முறை . எப்படிப் பொருகின்ற செயலைச் செய்பவர் பொருநர் ஆகிறாரோஅது போலவே, இயக்கும் செயலைச் செய்பவர் ‘இயக்குநர் ‘ ஆகிறார்.

ஆக, ஓட்டுநர், விடுநர் , பெறுநர் … வல்லுநர் … என எழுதுவதே சரி.

பி.கு :
1 நண்பர் செம்மல் அவர்கள், ‘இயக்குதல் ஒட்டுதல் நடத்துதல் என்பவை தொழிற்பெயர்கள். எனவே “த”னகரம் வரும்.(ந] என்று கருதுகிறேன்.’ என்னும் கருத்தை முன் மொழிந்திருக்கிறார். அவர் சிந்தனையும் ஆர்வமும் பாராட்டுக்கு உரியன . இவை தொழிலில் இருந்து பெறப்படுவதால் தொழிற் பெயர்கள்தான். தொழில் பெயர்கள் என்பதால் மட்டுமே ‘”த”னகரம் வரும்.(ந] என்று’ கருத இயலாது. இந்த ‘ந’கரம் இடும்போது பொருள் வருகிறது, றன்னகரம் (‘ன’) இட்டால் பொருள் ஏதும் இல்லை என்ற வாதமே ஏற்புடையதாகத் தோன்றுகிறது. தமிழ்ப் பேரறிஞர்களோ காலமோதான் இதனை இறுதியாக அறுதி இட்டு உறுதிப்படுத்த வேண்டும்.

2 இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலான நண்பர்கள் ‘பழமைபேசி’, செம்மல் இருவருக்கும் நன்றிகள்.

மீண்டும் வரும்,

பதிவாசிரியரைப் பற்றி