வீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா
வீரமாமுனிவரின் 331ஆவது பிறந்த நாள் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள வி.ஜி.பி வெற்றி மாளிகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கமும் வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் வீரமாமுனிவரின் திருவுருவப் படத்தை சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் டாக்டர்.ஏ.எம்.சின்னப்பா திறந்துவைத்தார்.
வீரமாமுனிவரின் தமிழ்ப் பணியை தம் இலக்கியப் பொழிவுகளில் வெகுவாகப் பரப்பி வரும் எழுச்சிக் கவிஞர் டாக்டர் எழில்வேந்தன் அவர்களுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.கோ.விஸ்வநாதன் ‘வீரமாமுனிவர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார். டாக்டர் எழில்வேந்தன் எழுதிய ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு..’ என்ற கவிதை, ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று தற்போது கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய ’ஆலமரம்’ என்ற கவிதை, தமிழின் மிகச் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995ஆம் ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற ‘தேசியப் பன்மொழிக் கவியரங்கத்தில்’ கலந்துகொள்ள தமிழ் மொழியின் சார்பில் அழைக்கப்பட்டு, அக்கவிதை இந்தியாவின் பதினெட்டு தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த ஒன்றாகும்.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உட்பட மற்றும் பலருக்கும் ‘வீரமாமுனிவர் விருது’ வழங்கப்பட்டது. விழாவில் திரு.வி..ஜி.சந்தோசம் எழுதிய ‘ஒளி உலகுக்கு வழி’ என்ற நூலை டாக்டர் ஏ.எம்.சின்னப்பா அவர்கள் வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண் பெற்றுக்கொண்டார்.
வீரமாமுனிவர் தேம்பாவணி என்னும் ஒப்பற்றக் காவியத்தைப் படைத்து, தமிழ் இலக்கியத்துக்கு அணி சேர்த்தது மட்டுமன்றி பரமார்த்த குரு கதையை வழங்கி, நவீன தமிழ் உரைநடை இலக்கியதுக்கு வழிகோலியது, ‘தொன்னூல் இலக்கணம்’ எழுதி இலக்கணத் துறைக்குப் பங்களிப்பாற்றியது, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், திருக்குறளை லத்தீன் மொழியில் மொழியாக்கம் செய்து முதன் முதலில் வேற்று மொழியில் மொழிபெயர்த்து, திருக்குறளை உலகறியச் செய்தது, திருக்குறளுக்கு உரை எழுதியது, சதுரகராதியைத் தொகுத்து தமிழ்-லத்தீன்-போர்த்துகீசியம்-பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளுக்கு வளம் சேர்த்தது, தனித் தமிழ் ஆர்வத்தால் தன் பெயரை வீரமாமுனிவர் என்று புனைந்துகொண்டது எனப் பல்வேறு தளங்களிலும் அவர் ஆற்றிய பணியை, உரையாற்றிய அனைவரும் வியந்துரைத்தனர்.
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர்.வி.ஜி.சந்தோசம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.ஆண்ட்ரூஸ் முன்னிலை வகித்தார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.கோ.விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுச்சிக் கவிஞர் டாக்டர் எழில்வேந்தன், தமிழ்ப்பணி இலக்கிய இதழின் ஆசிரியர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் பி.ஏ.டேவிட் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள பன்முகச் சிறப்புப் பணிகளைப் பற்றி உரையாற்றிச் சிறப்பித்தனர்.