சிறைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சி – செய்திகள்

24 நவம்பர் 2011, சென்னை.  மாநிலத்தில் குற்றவியல் நீதிமுறை நிர்வாக அமைப்பின் ஓர் அங்கமாக செயல்படும் சிறைத்துறை, சட்ட நடவடிக்கைகள் மூலம் சிறைத் தண்டனை பெற்ற சிறைவாசிகளை கட்டுப்படுத்தும் சீர்திருத்தி, புது வாழ்வு அளித்து, அவர்கள் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதற்கான முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சிறைத் துறையின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து, சிறைக் கைதிகளின் நலனுக்கான பல சீர்திருத்தத் திட்டங்களையும், சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், தமிழக அரசு எடுத்து வருகிறது.

பிறக்கும் போதே குற்றவாளியாக எவரும் பிறப்பதில்லை.  அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றவாளியாகி விடுகின்றனர்.  குற்றவாளிகளின் செயல்களுக்கான காரண காரியங்களை அறிந்து, அவர்களது மனநலம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்கள் தண்டனை முடிந்து வெளியேறும் போது, சமுதாயத்தில் மீண்டும் இணைந்து நாகரிகமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், ஒரு சிறைச்சாலைக்கு ஒரு பணியிடம் வீதம், சென்னை புழல் – 1, கடலூர், கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள 6 மத்திய சிறைச்சாலைகள்; வேலூர், திருச்சிராப்பள்ளி, சென்னை புழல் ஆகிய 3 இடங்களிலுள்ள பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகள் ஆக மொத்தம் 9 சிறைச்சாலைகளில், 9 உளவியல் நிபுணர் பணியிடங்களை தோற்றுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 45 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

உளவியல் நிபுணர்கள் சிறைவாசிகளுடன் கலந்து பேசி, அவர்களது மனநிலையினை அறிந்து அதற்கேற்றாற்போல் ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் குற்றவாளிகள் சிறையை விட்டு வெளியேறும் போது அவர்கள் சமுதாயத்தில் இணைந்து வாழ வழிவகை ஏற்படும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *