மந்தி(ரி) மனம் (சிறுகதை)
நிர்மலா ராகவன்
வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த மிஸ்.கமலாம்பாளின் கவனம் தடைப்பட்டது. அந்த மூன்று மாணவர்களும் எழுந்து வெளியே நடையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். தங்களை யார் என்ன செய்துவிட முடியும் என்ற மிதப்பு அவர்கள் நடையில் தெளிவாகத் தெரிந்தது.
தன் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு, எதுவும் நடக்காததுபோல் பாடத்தைத் தொடர்வதா என்ற குழப்பம் ஏற்பட்டது ஆசிரியைக்கு. விதிமுறைகளை மீறுவதற்கேபோல் பள்ளிக்கு வருகிறவர்களை என்ன செய்வது?
முதல்முறை, இப்படித்தான் உல்லாசமாகச் சுற்றிவிட்டு அரைமணிக்குப்பின் வகுப்பினுள் நுழைந்தார்கள், வாயை மென்றபடி.
அவர்களின் தலைவன் யார் என்பதில் அவளுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. கணேஷை முறைத்தபடி கேட்டாள்: “பாடம் நடந்துக்கிட்டிருந்தபோது எங்கே போனீங்க?”
“பாடம் போர்! அதுதான் என் பைக்கை எடுத்துக்கிட்டு வெளியே போனேன். நூடுல்ஸ் சாப்பிட்டோம்”. திமிருடன் வந்தது பதில். பள்ளிக் காண்டீனில் கண்ட நேரத்தில் உணவு விற்கமாட்டார்கள்.
ஆசிரியைக்கு வாயடைத்துப்போயிற்று.
பையனின் அப்பா பேரம்பலத்திற்குப் புகார் போக, “சின்ன வயசில ஃப்ரெண்டஸோட சுத்தறதுதானே ஜாலி! நானும் அந்த வயசில அப்படித்தான் இருந்தேன்,” என்று தலைமை ஆசிரியரிடம் சிரித்தபடி கூறினார்.
`சிறு வயதில் எப்படி இருந்திருந்தால் என்ன, இப்போது உங்களையெல்லாம்விட மேலான நிலைக்கு வந்துவிடவில்லையா?’ என்று கேலியாகக் கூறியதுபோலிருந்தது.
“இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க!” என்றபடி ஐயாயிரத்திற்கு ஒரு செக்கும் கொடுத்தார் அந்தப் பெரிய மனிதர்.
மகனுக்காக நேரத்தைச் செலவழிப்பதைவிட பணம் கொடுத்துச் சமாளிப்பது எளிதாக இருந்தது அவருக்கு. அத்துடன், தான் சிறுவயதில் அனுபவிக்காததையெல்லாம் மகனுக்குக் கொடுத்துவிடுவதுதானே அன்பு!
படகுபோன்ற காரில் அந்த மந்திரி, பாடம் கற்பிக்கும் ஆசிரியையோ கணவனுடன் பைக்கில் தொத்திக்கொண்டு வரும் நிலை. மாணவர்கள் அவர்களை மதிக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பட்டது தலைமை ஆசிரியருக்கு.
ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில், “இந்தப் பணக்கார வீட்டுப் பையன்களை நம்பளாலே ஒண்ணும் செய்யமுடியாது. மாசம் பிறந்தா நமக்குச் சம்பளம் வந்துடுதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!” என்று அந்த விஷயத்தை அத்துடன் முடித்தார். கிடைத்த ஐயாயிரத்தில் ஒன்றை மட்டும், `பார்ட்டி’ என்று கணக்குக் காட்டிச் செலவழித்துவிட்டு, மீதியைத் தன் கணக்கில் வைத்துக்கொண்டவர் அதன்பின் பையனிடம் அருமையாக நடந்துகொள்ளத் தீர்மானித்தார்.
அவனுடைய சேட்டைகள் தொடர்ந்தன.
ஆண்டு முடிவில் பள்ளியிலிருந்து விலகும்போது, கணேஷ் இளித்தபடி ஆசிரியையிடம் வந்தான்.
“தாங்க்ஸ், டீச்சர்!”
அந்தச் சிரிப்பு `இனி உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது!’ என்று கேலி செய்வதுபோல் இருந்தது.
அவளால் சும்மா இருக்க முடியவில்லை. “வயசுக் கோளாறால பிள்ளை தப்பு செய்தா, வீட்டில பெரியவங்க கண்டிக்கணும். ஒனக்கு நல்லது செய்யறதா நினைச்சுக்கிட்டு ஒங்கப்பா ஒன்னை ஒன் மனம் போனபோக்கில விட்டிருக்கார். இது எங்க போய் முடியப் போகுதோ!” என்று அங்கலாய்த்தாள்.
“என்னடா சொன்னாங்க?” என்று கேட்ட நண்பர்களிடம், “பாடம் நடத்தினோமா, சம்பளம் வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு லெக்சர் அடிக்குது கிழவி!” என்றான் ஆத்திரத்துடன்.
கணேஷ் வளர்ந்தான். கூடவே, தீய பழக்கங்களும், கூடாத சேர்க்கையும்தான்.
வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து மெள்ள, “ஏதாவது வேலை தேடிக்கயேன்!” என்றார் பேரம்பலம். அவரைவிடக் கிட்டத்தட்ட ஓரடி உயரமாக வளர்ந்திருந்தவனிடம் அதிகாரத் தொனியில் பேசவே பயமாக இருந்தது.
போதாத குறைக்கு, அவருடைய நீண்டகால பதவி வேறு ஆட்டம் கண்டிருந்தது.
அவர் பக்கம் திரும்பாது, “எதுக்கு? அதுதான் நீங்க நிறைய பணங்காசு சேத்து வெச்சிருக்கீங்களே, ஏதேதோ தில்லுமுல்லு பண்ணி! அதையெல்லாம் செலவழிக்கவே எனக்கு நேரம் பத்தாது,” என்று அவருடைய கரிசனத்தை அலட்சியப்படுத்திவிட்டு, கார் சாவியைச் சுழற்றியபடி வெளியே நடந்தான்.
“இந்த ராத்திரி வேளையில எங்கேப்பா போறே?” என்று அவர் ஈனஸ்வரத்தில் கேட்டதை அவன் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.
`நல்லவேளை, நான் இந்த மனுசனுக்குப் பொண்ணா பிறக்கலே. வீட்டிலேயே வெச்சு பூட்டியிருப்பார்!’ என்று நினைத்துக்கொண்டான்.
மறுநாள் காலை போன் அடித்தது.
“யாருடா இந்த வேளையிலே, என் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு!’ என்று திட்டியபடி அருகிலிருந்த மேசையைத் தடவினார் பேரம்பலம்.
அளவுக்கு மீறி குடித்து, போதையிலிருந்த மகனால் ஏற்பட்ட விபத்து! மழைக்காக பைக்குடன் மேம்பாலத்தின் அடியில் ஒதுங்கியிருந்த நான்குபேர்மேல் அவன் காரை ஏற்ற, மூவர் தலத்திலேயே மாண்டிருந்தனர். இன்னொரு ஏழைத் தொழிலாளி உயிருக்காக மன்றாடிக்கொண்டிருந்தார்.
அந்த நிலையிலும் ஒன்று மட்டும் புரிந்தது அந்த அரசியல்வாதிக்கு. கட்சியிலும், மக்களிடையேயும் தன் மதிப்பு அதிகரிக்க இதைவிட வேறு நல்ல தருணம் கிடைக்காது!
நடந்ததை மறைக்கமுடியாது போலிருக்கிறதே, அடுத்து என்ன செய்வது என்று அவரிடமே காவல்துறை மேலதிகாரி கேட்க, “என் மகன்னு பாக்காதீங்க. மத்தவங்களுக்கு என்ன தண்டனையோ அதுவே இவனுக்கும் கிடைக்கட்டும்!” என்றபோது, தன் நாணயத்தில் சற்று பெருமைகூட உண்டாயிற்று. தன் பதவி நிலைத்திருக்க வழி செய்துவிட்டோம்!
“எங்கப்பா யார் தெரியுமா?” என்று சிறைச்சாலையில் சவால் விட்டபடி இருந்தவனுக்கு அந்த மந்திரியின் மனம் புரியத்தான் இல்லை. அவருடைய வருகையை எதிர்பார்த்து – அவர் வருவார், மகன் செய்தது தவறே இல்லை என்று பக்கபலம் அளிப்பார் என்று – காத்திருக்கிறான், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக.