குறளின் கதிர்களாய்…(460)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(460)
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு.
-திருக்குறள் -800 (நட்பாராய்தல்)
புதுக் கவிதையில்…
உலகத்தோடு ஒத்தொழுகும்
குற்றமற்றவரின் நட்பைக்
கொள்க உறவாய்,
உலகோடு ஒத்துவராத பண்பிலாரை
உணராமல்
நட்பு கொண்டிருப்பினும்
நட்பதை
அவர் விரும்பும் ஒன்றைக்
கொடுத்தாவது
கைவிட வேண்டும்…!
குறும்பாவில்…
குற்றமற்றவரோடு கொள்க நட்பு,
ஒத்த பண்பிலாரது நட்பை அவர்விரும்பும்
ஒன்றைக் கொடுத்தாவது விட்டிடுக…!
மரபுக் கவிதையில்…
உலகுடன் ஒத்திடும் குற்றமற்றோர்
உறவினைக் கொண்டிடு நட்பெனவே,
நலமுடன் ஒத்திடாப் பண்பிலாரை
நட்பெனத் தவறியே ஏற்றிடினும்
விலகியே சென்றிடும் வழியதுவாய்
விரும்பியே அன்னவர் கேட்பதையே
இலகுவாய்க் கொடுத்தவர் நட்பினையே
இலையென உதறியே செல்வீரே…!
லிமரைக்கூ…
நட்போடிரு குற்றமற்றவர் கிட்டே,
கைவிடு பண்பிலார் நட்பை பொருள்கொடுத்தேனும்
விலகிடு அவரை விட்டே…!
கிராமிய பாணியில்…
நட்புகொள்ளு நட்புகொள்ளு
நல்லவரோட நட்புகொள்ளு,
நல்லாப் பாத்தறிஞ்சி
எல்லாந்தெரிஞ்சி நட்புகொள்ளு..
ஒலத்தோட ஒத்துப்போற
குத்தங்கொற இல்லாதவர்கிட்ட
நட்புகொள்ளு,
ஒலகத்தோட ஒத்துவராத
நல்ல கொணமில்லாவரோட
கொண்ட நட்ப
அவரு கேக்கிற பொருளக்
குடுத்தாவுது உட்டு வெலகிடு..
அதால
நட்புகொள்ளு நட்புகொள்ளு
நல்லவரோட நட்புகொள்ளு,
நல்லாப் பாத்தறிஞ்சி
எல்லாந்தெரிஞ்சி நட்புகொள்ளு…!