மியம்மாவில் திருக்குட நன்னீராட்டு

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஏரில் எருது பூட்டி உழுவோர் ஒரு புறம். நெற் சூடுகள் மறுபுறம். அறுவையை எதிரிபார்த்து முற்றிய நெற்கதிர்கள் காய்ந்து தலைசாய்ந்த வயல்கள் ஒருபுறம்.

வயல் வெளிகளுக்கிடையே மேடுகள். மேடுகளில் மரங்கள். மரங்களின் அடியில் இணையாக குதிரைவீரன் சிலைகள். நடுவே முனீச்சரன் சிலை.

திரும்பிப் பார்க்கிறேன். தொலைவில் ஒரு மரம். வேறு குதிரை வீரன் சிலைகள். வேறொரு முனீச்சரன் சிலை நடுவே.
உழவர்களுள் தமிழரும் உளர், தொல்குடிகளும் உளர். தமிழர் தொகை கணிசமான ஊர்.

மேடு ஒன்றில் அரச மரத்தடியில் இருந்த முனீச்சரன் சிலைக்குப் பதிலாக, கோயில் ஒன்றை எழுப்பினார் சிங்காரவேலனார். பலகோடியான சாட்டுச் செலவில் கோயில் எழுப்பினார். இந்திய ரூபாய் ஒன்றுக்கு 20 சாட்டுகள்.

சிங்காரவேலனாரின் தந்தையார் உழவுத் தொழில் செய்த காலத்தில் வழிபட்ட முன்னீச்சரர். சிங்காரவேலனார் இப்பொழுது யாங்கோன் நகரில் மனை வணிகர், கட்டட ஒப்பந்தகாரர். தன் தந்தையார் வழிபட்ட, தாம் சிறு வயதில் வழிபட்ட கோயிலைப் பெரிதாக்கி, அருகில் ஒரு காளி கோயில் கட்டி, பக்கத்திலேயே ஒரு புத்த கோயிலும் கட்டியுள்ளார்.

13.11.2011 அன்று திருக்குட நன்னீராட்டுவிழா.

மேடாக இருந்ததைக் கோயிலாக்குவதில் அரசு தலையிடவில்லை, உரிய அனுமதிகளைக் கொடுத்தது.
மியம்மாவில் இசுலாமிய, கிறித்தவக் கோயில்களைப் புதிதாகக் கட்ட அரசு அனுமதிப்பதில்லை. இந்துக் கோயில்களுக்கு அந்தத் தடை இல்லை, இருப்பதைத் திருத்தலாம், புதிதாகவும் கட்டலாம்.

மியம்மா அரசின் இந்த இணக்க மனப்பாங்கை நன்றியுடன் நோக்கும் இந்துக் கோயிலார் அனைவரும் இந்துக் கோயிலுள்ளே புத்தர் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர், வீட்டிலும் புத்தர் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர்.
சிங்காரவேலனார் மேலும் ஒரு படி மேலே சென்று தமிழ் இளைஞரான சுந்தரராசனைப் புத்தத் திருமடத்தில் இணைத்துப் புத்த பிக்குவாக்கியுமுள்ளார். கேசினியாத் தேரர் என்ற திருமடப் பெயருடன் திருக்கம்பையில் இருக்கிறார். திருக்குடநீராட்டு விழாவுக்குப் பிற தொல்குடிப் பிக்குகளுடன் வந்திருந்தார்.
மியம்மாவில் தமிழரான புத்த பிக்குகள் 100 பேர் வரை இருக்கலாம் எனக் கேசினியாத் தேரர் என்னிடம் கூறினார்.
திருக்குட நன்னீராட்டுவிழா என்ற சொல்லாட்சி என்னுடையதல்ல. விழாவில் அறிவிப்புகளைக் கூறிக்கொண்டிருந்தவர் அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார்.

முதல்நாள் மாலையே அந்தப் பரந்த வயல்வெளியில் கூட்டம் பெருகியிருந்தது. மேடை அமைத்து உள்ளூர் வாசிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மியம்மாத் திரைப்பட நடிகர்கள் அக்கலை நிகழ்ச்சிக்கு வந்து மக்களை உற்சாகித்தனர்.
நெடுஞ்சாலையில் இருந்து கோயிலுக்கு 2 கிமீ. நீளும் மணல்பாதையின் இரு மருங்கும் கொடிகளைக் கட்டியிருந்தனர்.
கோயிலுக்கு அருகே, நீள் கொட்டகைகள் பல அமைத்ததால் வருவோர் யாவருக்கும் தங்குமிட வசதி இருந்தது.
வழக்கம்போலத் திருவிழாவுக்கு வரும் சிறுவணிகர், பாசி மணி தொடக்கம் பலூன் வரை விற்றுக் கொண்டிருந்தனர். தேநீர், சிற்றுண்டிக் கடைக் கொட்டில்கள் இருந்தன.

காலை 10.30 மணிக்குக் குடமுழுக்கு. பூசகர் மந்திரம் சொல்ல முன்னீச்சரமும் காளி கோயிலும் புனிதமாயின. பூசகர்களுள் எவரும் சிவாசாரியார்கள் அல்லர். யாவரும் மியம்மாத் தயாரிப்பு. தலைமைப் பூசகர் தமிழர், உதவியாளர் இருவர் வடநாட்டவர்.

திருக்குட நன்னீராட்டு நீரை ஒரே நேரத்தில் அனைவரிலும் குழாய்த் தெளிப்பான்கள் விசிறின. தோராயமாக 3000 அடியவர்களை ஒரே நேரத்தில் காணக்கூடியதாக இருந்தது. வருவதும் போவதுமாக மொத்தம் 7000 அடியவர்கள் திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்துகொண்டிருப்பர்.

வந்தோர் அனைவருக்கும் உணவு. காலை, மதியம், இரவு என இடைவிடாது உணவு, சைவ உணவு வழங்கினர். உணவுக் கூடத்தில் நெரிசல் எப்பொழுதும் இருந்தது.

யாங்கோனில் இருந்து சிறப்புப் பேருந்துகளைக் கோயிலாரே ஏற்பாடு செய்தனர், எவரும் கட்டணமின்றி வந்து போயினர். பாகு வழி 100 கிமீ. தொலைவுக்கு யாங்கோனில் இருந்து வந்தனர்.

வந்தவர்களுள் கணிசமானோர் தொல்குடி மக்கள். 100 அடியவர்களுள் 70 தமிழர் 30 தொல்குடியினர் எனத் தோராயமாகக் கூறலாம்.

ஒலிபெருக்கிகள் பக்திப் பாடல்களை முழங்கின. தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மெய்யுருகியோருள் தொல்குடியினரும் அடக்கம்.

150 ஆண்டுகளுக்கு முன்னர், மியம்மாவுக்குத் தமிழர் புலம்பெயரத் தொடங்கினர். ஆங்கிலேயரின் தூண்டுதலால் பரந்த வயல்களில் விரைந்து பயிரிடவும், காடுகளை வெட்டிக் களனியாக்கவும் தமிழர் வந்தனர். இராமநாதபுரம் தொடக்கம் மதுரை வரை நீண்ட நிலப்பகுதியைச் சேர்ந்தோரே மிகையாகப் புலம் பெயர்ந்தனர்.

தமிழர் உலகமயமாகத் தொடங்கிய காலம் அது. கிழக்கே பிசித் தீவு வரையும் மேற்கே கரிபியன் வரையும் தமிழர் குடும்பங்களாக, ஆண்களும் பெண்களுமாகப் புலம்பெயர்ந்த காலம் அது.

பாகு அருகே அந்தச் சிற்றூரில் 13. 11. 2011இல் நடந்த திருக்குட நன்னீராட்டு விழா, அந்தக் காலப் புலப்பெயர்வின் இன்றைய விளைவு.

150 ஆண்டு கால மியம்மா வாழ்வின் விளைவு. மியம்மா நாட்டு மண்ணோடும் மண்ணின் மணத்தோடும் வேறறக் கலந்த தமிழரின் வெளிப்பாடு. 150 ஆண்டு காலமாகத் தொலைக்காமல் பேணும் அடையாளங்களின் வெளிப்பாடு.
கடாரம் கொண்ட இராசேந்திரனின் தமிழ்க் கல்வெட்டு பாகுவில் உண்டு. அந்த பாகுவுக்கு அருகே இன்றைய குடமுழுக்கு விழா.

மியம்மா நாட்டுக்கு இருமுறை படையெடுத்தவன் இராசேந்திரன்.தெற்கே கடல் வழி வந்தான். மியம்மா அரசைக் கைப்பற்றினான். பின்னர் வடக்கே வங்காள நில வழி வந்தான். மியம்மா அரசைக் கைப்பற்றினான்.பாகுவில் உள்ள கல்வெட்டுச் செய்திகள் அந்தப் படையெடுப்புகளைக் கூறுகின்றன. அந்தப் படையெடுப்பு விட்டுவராத தமிழ்ச் சூழலை ஆங்கிலேயரின் ஆட்சி மியம்மாவுக்குத் தந்தது.

தமிழரின் உலகமயமாக்கலுக்கு, சூரியன் மறையாத் தமிழச் சூழலும் சைவச் சூழலும் இந்தப் பூமிப் பந்தில் இக்காலத்தில் அமைவதற்கு ஆங்கிலேயரின் அன்றைய ஆட்சியே கால்கோளாக அமைந்தது.

http://www.youtube.com/watch?v=DArYIbRzjis

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.