மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தமிழின் 247 வரிவடிவங்களால் மட்டும் தமிழை எழுதுகிறோமா? அவ்வாறு கருதுவோர் பலர். மொழிதல் என்பதால் மொழி. எழுத்து மொழிக்குத் துணை. எழுத்தே மொழியாகுமா?

தமிழின் 247 வரிவடிவங்களும் தொடக்க காலத்தில் இருந்தே இன்றுள்ளவாறே உள்ளனவா? ஒலிகள் மாறவில்லை. வரிவடிவங்கள் மாறிவந்தன.

உலகெங்கும் பரவிய தமிழர் மொழிதலை மறக்கவில்லை, ஆனால் வரிவடிவங்களை அங்கங்கே மறந்தனர்.நியுசிலாந்து வெலிங்ரன் நகரத் தேவாரப் பாடசாலையில் சிறார்கள் தமிழை ஒலிக்கிறார்கள். உரோம வரிவடிவங்களில் எழுத்துகள்! தமிழ் மொழியே ஆனாலும், 247 வரிவடிவங்களுக்குப் பதிலாக 26 வரிவடிவங்களால் தமிழ் கேட்கிறது.

சுவிட்சர்லாந்து தேவாரப் பாடசாலை மாணவர் யேர்மன் வரிவடிவங்களில் தமிழை ஒலிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழரின் குழந்தைகள் தமிழை ஒலிக்க உரோம வரிவடிவங்களை நாடுவர். நூறு ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த தமிழர், யங்கோனில் இசைக் குழுவை அமைத்துப் பத்திப் பாடல்களைக் கோயில்களில் இசைக்கின்றனர். ஆசிரியர் 80 வயது முதியவர், மாணவரோ 6 தொடக்கம் 10 வயது வரையான தமிழ்ப் பிஞ்சுகள். சொற்றுணை வேதியன் தேவாரத்தை உச்சரிப்புத் தவறாது பாடுகின்றனர். பயிற்சி அளிப்பவரின் செம்மை அதுவானதால். அவர்கள் கைகளில் நூல். பத்திப் பாடல் திரட்டு. வாங்கிப் பார்த்தேன். 247 வரிவடிவங்களைக் கண்டிலேன். மியம்மா வரிவடிவங்களைக் கண்டேன். மியம்மா வரிவடிவங்களில் பத்திப் பாடல்களை எழுதி, அச்சிட முன் மெய்ப்புப் பார்த்துச் செம்மையாக அச்சிட்டு நூலாக்கி மாணவர் கைகளில் கொடுத்துள்ளனர்.

மியம்மா முழுவதும் பரவி வாழும் 10 இலட்சம் தமிழரின் இன்றைய வழமை இஃதாம்.

தமிழில் செய்தி சொல்ல விரும்பிய இசுலாமியர், அரபு வரிவடிவங்களில் தமிழை எழுத முயன்று முடியாமல் தமிழ் வரிவடிவங்கள் சிலவற்றை அரபு வரிவடிவங்களுடன் கலந்து எழுதுவது அரபுத் தமிழ். நூல்கள் பல அரபுத் தமிழில் அச்சாகி உள்ளன. திருவல்லிக்கேணி ஆதாம் சந்தைக்கருகே புத்தகக் கடையில் அரபுத் தமிழில் அச்சான நூல்களை வாங்கலாம். செய்திகள் தமிழில். வரிவடிவங்களோ அரபு சார்ந்த்தாக! சில நூற்றாண்டுகளாக இந்த வழமை உண்டு.

பல நூறு ஆண்டுகளாக, தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கிரந்த மொழியில் எழுதிப் படித்து வருபவர் தாய்லாந்து அரச குருமார். அவர்களக்குத் தமிழை 247 வரிவடிவங்களில் வாசிக்கத் தெரியும். ஆனால் கிரந்தத்தில் எழுதிப் படிப்பது வழமையானதால் அவ்வாறாயிற்று.

திருப்பாவைப் பாடல்களைத் தெலுங்கு வரிவடிவங்களில் எழுதிப் படிக்கும் தெலுங்கு மக்கள் ஆந்திரா முழுவதும் வாழ்கின்றனர். மார்கழி மாதம் 30 நாள்களும் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் தமிழ் ஒலிக்கும். துணை தெலுங்கு வரிவடிவங்கள்.

தமிழ் உலக மொழியாயிற்று. தமிழுக்குப் பல வரிவடிவங்கள். 247 எழுத்துகள் மட்டுமே தமிழ் வரிவடிவங்கள் அல்ல! உரோம, யேர்மனிய, அரபிய, கிரந்த, மியம்மா, தெலுங்கு வரிவடிவங்களில் தமிழ் ஒலிக்கின்றதே!

நம்மிடம் உள்ள 247 வரிவடிவங்களுக்கும் ஏனைய மொழிகளின் வரிவடிவங்களுக்கும் உள்ள ஒலி இசைவு பற்றிய ஆய்வு, அந்த ஆய்வைத் தொடர்ந்து இணக்கமான தீர்வு, தமிழின் இந்த ஒலிக்கு இந்த மொழியில் இதுதான் வரிவடிவம் என்ற கட்டிறுக்கமான முடிவு. அந்த முடிவை உலகத் தரமாக்கும் செயல்.

தமிழ் ஒலிகளுக்கும் 247 வரிவடிவங்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பைத் தருவன பன்னிரு திருமுறைகளே. காரைக்காலம்மையார் 1700 ஆண்டுகளுக்கு முன் தொடக்கிவைத்த அரும் பணி. ஒலிக்கும் வரிவடிவத்துக்கும் உள்ள தொடர்பை இறுக்கமாக்கிய இசைத் தமிழ்ப் பணி. தேவார மூவர் தொடர்ந்து அப்பணியை முன்னெடுத்ததால், இன்றும் ஓதுவார்கள் தமிழைத் தவறற உச்சரித்து ஓதி வருகின்றனர்.

வேறு எந்த இலக்கியத் தொகுதியும் தராத ஒலி-வரிவடிவத் தொடர்பைப் பன்னிரு திருமுறைகள் தருகின்றன.

பல்வேறு வரிவடிவங்களில் எழுதினாலும் தமிழாக ஒலிப்பவை திருமுறைகளே. பத்திப் பாடல்கள் என்ற பரப்பில் திருமுறைகள் நங்கூரமாக ஒலி-வரிவடிவ இணைப்பைத் தருவதால், எந்த வரிவடிவத்தாலும் தமிழை எழுத முடியும்.

இன்றைய உலகில் மொழியியலாளர் உலக மொழிகளின் ஒலிகளைத் தரப்படுத்தி வருகின்றனர். எந்த மொழியில் எந்த ஒலியாக இருப்பினும் அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவத்தை, தரமாகக் கொள்ளும் வரிவடிவத்தைக் கொடுத்து ஞால ஒலி நெடுங்கணக்கைத் (International Phonetic Alphabet) தயாரித்துள்ளனர். தொடரும் பணியாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழின் உயிர் ஒலிகள், மெய் ஒலிகள் யாவும் அந்த ஞால ஒலி நெடுங்கணக்கில் அமைந்துள்ளன. அவ்வாறே ஏனைய மொழிகளின் ஒலிகளையும் அந்த நெடுங்கணக்குத் தருகிறது.

தமிழின் வரிவடிவங்கள் காட்டும் ஒலிகளையும் மாற்று ஒலிகளையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் மொழியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் புனல் க. முருகையன் மிகவும் செம்மையாகத் தொகுத்து ஞால ஒலி நெடுங்கணக்கு வரிவடிவங்களுடன் இணக்கியுள்ளார்.

அந்த முயற்சியில் ஈடுபடுமாறு அவரை வலியுறுத்தினேன். நாத்திகரான அவர், திருமுறைகள் என்பதால் தயங்கினார். வேறு எந்த இலக்கியம் ஒலி-வரிவடிவத் தொடர்பைக் கட்டிறுக்கமாகத் தலைமுறைகளூடாகத் தந்தது என வினவினேன். மறு பேச்சின்றிப் பணியில் ஈடுபட்டார். 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். பட்டியலைத் தயாரித்தார். காந்தளக வௌயீடான பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்ற 144 பக்க நூல் அவரது அயரா உழைப்பின் வெளிப்பாடு.

அந்தப் பட்டியலைத் தளமாகக் கொண்டு, தமிழ் ஒலிகளை ஏனைய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தரும் ஆய்வை மேற்கொள்வதால் தமிழ் செம்மையாக உலகமயமாகும். இன்றைய புலம்பெயர் தமிழரின் தேவையை நிறைவு செய்யும். உலகத் தமிழருக்கு இந்த ஆய்வுகளும் தீர்வுகளும் உலகத் தரமாக்கலும் பெரிதும் உதவும்.

தமிழ் வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் இந்த ஆய்வும் தொடர்ந்த தீர்வும் தொடர்ந்த உலகத் தரமாக்கலும் இன்றியமையாத பணிகளாகும்.

 

Tamil to IPA

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *