அமெரிக்காவில் செல்லப் பிராணிகள்(பகுதி-1)

2

நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் பலர் செல்லப் பிராணிகள் வளர்க்கிறார்கள்.  திருமணம் செய்து கொள்ளாதவர்கள் கூட பெற்றோரோடு சேர்ந்து வாழ்வதில்லை.  தங்களுக்கும் தங்கள் பெற்றோர்களுக்கும் தனிமை (privacy),  தங்களுக்கென்று தனியிடம் (private space)  வேண்டுமென்று நினைக்கிறார்கள்.  நினைத்த நேரத்தில் யார் வீட்டிற்கும் போய்விட முடியாது.  முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் நண்பர்கள் வீட்டிற்கும் போக வேண்டும்.  இதனால் செல்லப் பிராணிகள் வைத்துக் கொள்வது அமெரிக்காவில் மட்டும் அல்ல பல மேல்நாடுகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.  மற்ற நாடுகளில் எப்படியோ, அமெரிக்காவைப் பொறுத்த வரை பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறார்கள்.  பல வகையான பாம்புகள், ஓணான் வகைகள், பல வகையான பறவைகள், கொரில்லா, சிம்பன்ஸி போன்ற குரங்கு வகைகள், குதிரைகள், பன்றிகள், நாய்கள், பூனைகள் இத்யாதி, இத்யாதி.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் காணாமல் போன செல்லப் பிராணியான பூனை ஒன்று நியுயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் டெர்மினல் எட்டிலிருந்து கீழே விழுந்ததாகவும் அந்தப் பூனை அறுபத்து ஒன்று நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாகவும் இப்போது கிடைத்திருப்பதால் அது ஒரு நல்ல செய்தி என்றும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.  இந்தப் பூனையின் சொந்தக்காரப் பெண் நியுயார்க்கிலிருந்து கலிஃபோர்னியாவுக்குக் குடி பெயர்ந்த போது தன்னுடைய பூனையை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்னும் கம்பெனியைச் சேர்ந்த விமானம் ஒன்றில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து விட்டுக் கலிஃபோர்னியாவிற்குச் சென்று விட்டார்.  இவருடைய பூனையை அதற்குரிய கூண்டிற்குள் வைத்து விமானத்தில் ஏற்றும் போது அது எப்படியோ தப்பித்துக் கொண்டுவிட்டது.  விமானக் கம்பெனி பூனையின் உரிமையாளருக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து இந்தச் செய்தியை அறிவித்தது.  அவரும் மீளாத் துயரில் ஆழ்ந்தார்.

இது நடந்து 61 நாட்களுக்குப் பிறகு பூனை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பல செல்லப் பிராணி நேசர்கள் மனமகிழ்ந்தனர்.  ஆனால் அவர்கள் மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை.  61 நாட்களாக சரியான ஆகாரம் இல்லாமல் இருந்ததால் பூனை மிகவும் மெலிந்து காணப்பட்டது.  உடனடியாக அதை நியுயார்க்கில் உள்ள ஒரு மிருக ஆஸ்பத்திரிக்கு ஒரு செல்லப் பிராணி ஆம்புலன்ஸில் கொண்டு போயிருக்கிறார்கள்.   (அமெரிக்காவில் செல்லப் பிராணிகளுக்குத் தனியாக ஆம்புலன்ஸ் உண்டு.  செல்லப் பிராணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தனி விமானங்களும் இருக்கின்றன.  மிருக ஆஸ்பத்திரிகள் எல்லா வசதிகளோடும் மிகவும் சுத்தமாகவும் காணப்படும்.  இந்தியாவில் மனிதர்களின் சிகிச்சைக்காகச் செயல்படும் ஆஸ்பத்திரிகளை விட இவை மிகவும் சிறப்பாக இருக்கும்.)  அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள்.  ட்யூப் மூலம் உணவும் மருந்தும் கொடுத்திருக்கிறார்கள்.  ஒரு அறுவைச் சிகிச்சையும் நடந்திருக்கிறது.  இத்தனையும் பலன் அளிக்காமல் போனதால் அதைக் கருணைக் கொலை செய்திருக்கிறார்கள்.  அப்போது அந்தப் பூனையின் உரிமையாளருடைய நண்பர்கள் பலரும் அந்தப் பூனையின் அருகில் இருந்திருக்கிறார்கள்.  உரிமையாளருக்கு அன்று திரும்பிச் செல்வதற்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லையாதலால் அவரால் பூனையோடு உடனிருக்க முடியவில்லையாம்.

இந்தச் செய்தி ஃபேஸ் புக்கில் (Face Book) வெளிவந்ததும் பலர் கொதித்தெழுந்து தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறார்கள்.  மூவாயிரத்திற்கும் மேலான கருத்துரைகள் வந்தனவாம்.  இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு சிலர் விமானக் கம்பெனியைத் திட்டியிருக்கிறார்கள்.  சிலர் இனி அந்தக் கம்பெனி விமானத்தில் பயணம் செய்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். சிலர் செல்லப் பிராணிகள் உரிமையாளர்களுக்கு இனி ஒரு போதும் தனியாக விமானத்தில் செல்லப் பிராணிகளை அனுப்பாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.  ‘அதே இனத்தைச் சேர்ந்த என் பூனை 18 வருடங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறது.  இந்தப் பூனையும் அத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கலாம்.  இப்படி அநியாயமாக அதன் வாழ்க்கையைச் சுருக்கி விட்டீர்களே’ என்று புலம்பியிருக்கிறார்கள்.  இன்னும் ஒருவர் ‘உங்கள் எட்டு மாதக் குழந்தையை இப்படித் தனியே அனுப்புவீர்களா?’ என்று கேட்டு விட்டு விமானக் கம்பெனியிடம் ‘சூட்கேசுகளை கையாளுவது போல் இந்தப் பூனையையும் கையாண்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.  இன்னொருவருடைய பூனை சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டதாம்.  அதைப் பூனைகளுக்கான சொர்க்கத்தில் இந்தப் பூனை சந்தித்தால் தங்கள் அன்பைக் கூறுமாறு ஜேக்கிடம் (இறந்த இந்தப் பூனையின் பெயர் ஜேக் (Jack)) கூறியிருக்கிறார்கள். 

பூனையின் உரிமையாளர் அது இறக்கும் போது அதன் பக்கத்தில் இருப்பதற்கு ஏதுவாக ஏன் அது இறந்த தினத்திற்கு விமான டிக்கெட் வாங்க முடியவில்லை என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். ஒரு விமானக் கம்பெனியால் இதைக் கூடச் செய்ய முடியாதா என்றும் கேட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கர்களுக்குச் செல்லப் பிராணிகள் மீது எவ்வளவு பிரியம் என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.  இதற்கு எடுத்துக் காட்டாக இன்னொரு நிகழ்ச்சியையும் சொல்லலாம்.

நியுயார்க்கில் உள்ள குழந்தைகள் மியூஸியத்தில் பல பிராணிகள் இருக்கின்றன.  நவம்பர் 10-ஆம் தேதி அங்கிருந்த இகுவானா வகையைச் சேர்ந்த உடும்பு ஒன்று இறந்து விட்டது.  அதற்குப் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.  அவர்களில் நியுயார்க் நகர மேயர் ப்ளும்பெர்க்கும் ஒருவர்.  இதன் பெயர் எலிஸபெத். வயது பத்தொன்பது.  நீளம் நான்கு அடி.  பச்சை கலந்த பழுப்பு நிறம்.  1993-இல் இந்த மியூஸியத்திற்குக் கொண்டுவரப்பட்ட இது மனிதர்களோடு நன்றாகப் பழகுமாம்.  இந்தக் குணம் எல்லா உடும்புகளுக்கும் இருந்தாலும் எலிஸபெத் ஒரு படி மேலேயாம்.  பல வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் இதைப் பார்க்க வருவதுண்டாம்.  (அமெரிக்காவில் மன, உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிருகங்களோடு நேரம் செலவழிக்க வசதி செய்து கொடுக்கும் பழக்கம் உண்டு.)  எலிஸபெத்தோடு அவர்கள் சந்தோஷமாக நேரம் செலவழிப்பார்களாம்.  பல பெரிய புள்ளிகளும் இதைப் பார்க்க வருவார்களாம்.  இப்படிப் பிரபலமாகியிருந்த எலிஸபெத் இறந்த பிறகு அது விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவது பற்றிச் சோகத்தில் மூழ்கியிருக்கும் மியூஸியம் அதிகாரிகள் இப்போதைக்கு யோசிக்கவில்லையாம். 

அந்த மியூஸியத்தின் பிராணிகளின் கண்காணிப்பாளர் ஜேரட் ஆஸ்டின் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “இதன் இழப்பு பற்றி எடுத்துச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அது இறந்து போகலாம் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் சன்கிஸ்ட் என்னும் பாம்பு இறந்த இரண்டு வாரங்களிலேயே இதன் இறப்பும் நேர்ந்திருப்பது பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.  எட்டு வயதான சன்கிஸ்ட் என்னும் பாம்பு நிமோனியாவினால் இறந்து விட்டதாம்!

ஆஸ்டின் மேலும் கூறியிருப்பதாவது:  “அது இறந்த அன்று அதற்குரிய அடைப்பிற்குள் தரையில் எந்த வித சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தது.  உடும்புகள் சாதாரணமாக அரை மணி நேரம் கூட இப்படி மூச்சு விடாமல் இருக்குமாதலால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.  ஆனால் அரை மணி நேரத்திற்குப் பிறகு பார்த்தால் அது இறந்து விட்டிருந்தது.  நாங்கள் அது எப்படி இறந்தது என்று அறிய அதற்குப் பிரேத பரிசோதனை எதுவும் செய்யப் போவதில்லை.  உடும்புகளுக்குப் பத்தொன்பது வயது என்பது அது நீண்ட நாட்கள் வாழ்ந்துவிட்டதாக அர்த்தம்”. 

நியுயார்க் நகர மேயர் கூறியிருப்பதாவது:  “எத்தனை உடும்புகளுக்கு நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இறந்தவர்கள் பட்டியலில் இடம் கொடுத்திருக்கிறது?  எலிஸபெத் சாதாரண உடும்பு அல்ல.  அது உடும்புகளுக்குள் பெயர் பெற்றது.  மூன்று முறை அதை நான் சந்தித்திருக்கிறேன்.பல குழந்தைகளுக்கு அது சந்தோஷம் கொடுத்திருக்கிறது”. 

இறந்த மனிதர்களைப் பற்றி அவர்களுடைய இரங்கல் செய்தியில் அவருடைய உறவினர்கள் யார், யார் உயிரோடு இருக்கிறார்கள் (dead person is survived by the wife, sons and etc.) என்று குறிப்பிடுவது போல் ஆஸ்டின் “எலிஸபெத் தன்னுடன் அதே கூண்டில் வாழ்ந்த இகி என்னும் இன்னொரு உடும்பைத் தனக்குப் பின்னால் இந்த உலகத்தில் விட்டுச் செல்கிறது” என்று குறிப்பிடுகிறார்.  எலிஸபெத்திற்கு ஆஸ்டின் மியூஸியத்தின் ஒரு பகுதியில் ஒரு நினைவு வழிபாட்டிற்கு (memorial service) ஏற்பாடு செய்யப் போகிறாராம்.

சிகாகோவில் உள்ள ஒரு மிருகக்காட்சிச் சாலையில் சிம்பன்ஸி ஒன்று குழந்தை பெற்றதைத் தொலைக்காட்சியில் அறிவித்த அறிவிப்பாளர் “அது பெண் குழந்தை” என்று கூறி சிறிது இடைவெளி விட்டார்.  அதைக் கேட்டு ஏதோ பெரிய புள்ளி ஒருவருக்குக் குழந்தை பிறந்ததை அறிவிக்கப் போகிறார் என்று நினைத்த என் போன்றவர்களுக்கு “சிகாகோ மிருகக்காட்சிச் சாலையின் சிம்பன்ஸிக்கு ஒரு பெண் பிறந்திருக்கிறது” என்று முடித்த போது அந்தச் செய்தி சுவாரஸ்யமாக இருந்தது.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://abcnews.go.com/blogs/headlines/2011/08/jack-the-cat-gone-in-a-flash-at-jfk-airport/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமெரிக்காவில் செல்லப் பிராணிகள்(பகுதி-1)

  1. மிகுந்த ஆர்வத்துடன் இந்த சுவையான கட்டுரையை படித்தேன். தற்காலம் என்னுடைய எஜமானன் ‘டிஃபன்’ ஆறு மாத குழந்தை. கோல்டன் ரிட்றீவர். நம்ம வீட்லெ ‘குட்டி’ என்ற அழையா விருந்தினர் 14 வருடங்கள் ராஜாவாக இருந்தார். பூனை. ஒரு நாள் காணாமல் போக, தெருவெல்லாம் போஸ்டர் ஒட்டினோம். ஒரு வீட்டு வாசலில் ‘அவர் அடிப்பட்டு இருந்ததாகவும், தாங்கள் வைத்தியம் செய்து வைத்திருப்பதாகவும் எஸ்.பி.ஸீ.ஏ. போர்ட் மாட்டி இருந்தார்கள். இவர் சண்டை போட்டிருக்கிறார். நல்ல செலவு. காலணா வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.

  2. என்னிடம் ஒரு செல்ல பிராணி இருக்கின்றது.  அது வீட்டிலிருந்து விரட்டப்பட்ட ஒரு லாசா அப்சோ வகை நாய்.  குப்பைத்தொட்டியில் உடல் முழுக்க காயங்களுடன் மற்ற நாய்களிடம் கடிகள் வாங்கி மிக மோசமான நிலையில் தான் அதைப் பார்த்தேன்.  மற்ற நாய்களை விரட்டிவிட்டு அவளை(பெண் நாய்) வீட்டிற்குக் கொண்டுவந்தேன்.  மாலையில் மருத்துவரிடம் கொண்டு சென்றேன்.  ஒரு மாதத்தில் பூரண குணம் அடைந்துவிட்டாள். Shaggy என்று பெயரிட்டேன். ஆயிற்று மூன்று வருடங்கள்.  என் குடும்பத்தில் ஒரு நபராக ஒன்றிவிட்டாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *