பெருவை பார்த்தசாரதி

ரகுராஜசமுத்திரம் என்கிற பெருகவாழ்ந்தானைச் சேர்ந்தவர் பெருவை பார்த்தசாரதி, எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தன்னைப் பற்றித் தானே சொல்வதான ஒரு சின்ன அறிமுகம் இதோ.

“அன்றாடம் வரும் மின் அஞ்சல்களை, ஒரு மாற்றமும் இல்லாமல் இன்னும் எவ்வளவு காலம் நாம் அப்படியே மற்றவருக்குத் தொடர்ந்து கொண்டிருக்கப் போகிறோம், நாமும் நமக்குத் தோன்றும் எண்ணங்களையும், தெரிந்த பல நல்ல விஷயங்களை ஏன் எழுதக் கூடாது?. அவ்வப்போது குறித்து வைத்திருக்கும் குறிப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தாலென்ன? என்பன போன்ற எண்ணங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. இந்த எண்ணமே எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. மனதில் எழும் எண்ணங்களை எல்லோருக்கும் பயன் படுகிற வகையில் மின் அஞ்சல் வழியாகச் சொல்லி, அதன் மூலம் வாழ்வியல் அனுபவமும் அடைந்து வருகின்றேன்.

சில வருடங்களுக்கு முன்னால், என் குலதெய்வத்தைப் பற்றி எழுதிய தொகுப்புகள் தினமலரில் பிரசுரிக்கப் பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் குழந்தைகளோடு விவாதிப்பதும், விளக்குவதும், விமர்சிப்பதும் இப்படிப் பல(தும்) ரொம்பப் பிடிக்கும்……ஏன் தெரியுமா..? அப்படிச் செய்யும் போது எண்ணற்ற அரிய கருத்துக்களை மற்றவரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம், மேலும் நமக்குத் தெரியாத விஷயங்கள் பல தெரிய வரும், அறிய முடியும் என்ற ஆர்வம்தான். யதார்த்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் படிப்பதையும், கேட்பதையும் குறிப்புகளாகவும் மற்றும் மனதிலும் பதித்தும் வைத்துக் கொள்வேன். மஹான்கள் சொன்ன சிறு கதைகளை மனத்தில் இருத்திக் கொள்வேன், வேண்டும் போது நறுக்கிய குறிப்பேடுகளை அங்கங்கே சேர்த்து வைப்பேன். 

 என்னுடைய பொழுதுபோக்குகள், நூலகத்திற்குச் சென்று நன்னூல்களைப் படிப்பது, மனதில் பட்டதை எங்காவது கிறுக்கி வைப்பது, மற்றும் ‘மின்அஞ்சல்’ தயாரிப்பது, மொழிபெயர்ப்பது ஆகியவையாகும்”

வல்லமைக்காக இவரது படைப்பு இதோ:

சமீபத்தில் நண்பரின் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவிற்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே நடந்த உரையாடலை மையமாக வைத்து, சிந்தனைக்குரிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். 

இப்பூவுலகில் புதிதாக ஜனனம் எடுக்கும் குழந்தைக்குப் பெயர் சூட்டுவது என்பது இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மற்றும் ஏனைய எல்லா மதங்களிலும் ஒரு விழாவாகவே நடைபெறுகிறது. 

ஜனனம் முதல் மறையும் வரை பெயருக்கென்று ஒரு மதிப்பும், மரியாதையும் இருப்பதால், குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது பொதுவாக மங்களகரமான மற்றும் புகழ் பெற்ற பெயர்களையே பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். பெயர்சூட்டும் நாளன்று உறவினர்களுக்கிடையே விவாதம் நடந்து ஒரு பட்டி மன்றமே அங்கு நடைபெறுவதைக் காணலாம். 

ஆன்மீகத்தின் அடிப்படையில் பெயர்கள், தங்களது முன்னோர்களின் பெயர்கள், கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்களின் பெயர்கள், ஜாதகம் மற்றும் ஜன்ம நட்சத்திரம் அடிப்படையில் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, பெற்றோர்கள் உட்பட குழந்தையின் மாமா, பாட்டி, தாத்தா போன்றவர்கள் முன்மொழிந்து அதற்கான காரணத்தையும் கூறுவார்கள். 

இப்பொழுதெல்லாம் நெடிய பெயர்களைத் தவிர்த்துச்,சுருக்கமான பெயரைத்தான் (மூன்றெழுத்துக்குள்) பெற்றோர்கள் விரும்புகிறார்கள். பல பெயர்களைச் சொல்லி, முடிவில் ஒரு பெயரைச் சூட்டும்போது எந்தப் பெயர் நிலைக்கும் என்பது யாருக்கும் தெரியாது.  இப்படித்தான் அன்றைக்கும் நிகழ்ந்தது.  இன்றும் கூட “உனக்கு பெயர் வைத்தது யார்” என்று கேட்டால் ஒரு சிலர் பதில் சொல்லத் திணறுவார்கள்.  

சரி, விஷயத்திற்கு வருவோம், ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டுவதை ஒரு வைபவமாக நடத்தி தன்னுடைய குழந்தை பெரும் செல்வந்தனாக அல்லது ஏதாவதொரு கலைத்துறை மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றோ, பெயர் பெற்ற ஒரு பெயரைத்  தேர்ந்தெடுத்து அக்குழந்தைக்குச் சூட்டுவது வழக்கம்.  ஒரு குழந்தைக்கு எந்தக் காரணத்தை முன்வைத்துப் பெயர் சூட்டினாலும் வளர்ந்து பெரியவனாகும்போது அவனுடைய பெயருக்கும் செய்கின்ற காரியத்துக்கும், புரிகின்ற சாதனைகளுக்கும் சம்பந்தம் இருக்குமா என்பது கேள்விக்குரியது.

கிரிக்கெட் விளையாட்டில் வெறித்தனமான ஈடுபாடு உள்ள நண்பர்களில் ஒருவர், அவருடைய குழந்தைக்கு அந்தக் காலக் கட்டத்தில் கிரிக்கெட்டில் உலக சாதனை செய்த ஒருவரின் பெயரை வைத்தார். ஆனால் வேறு துறையில் சிறந்து விளங்கும் அவனுக்கு விளையாட்டு என்றால் என்ன என்பது கூட கடுகளவும் தெரியாது. ஆக நம்முடைய பெயருக்கும் சாதிக்கின்ற செயலுக்கும் பொருத்தம் இருக்குமா என்பது அனுபவம் மிகுந்த, மற்றும், வயதில் மூத்தவர்களின் மனதில் அடிக்கடி எழுப்பப்படும் வினாவாகும். பத்து வயதுக்குள்ளேயே சாதனை புரிந்த விவேகானந்தர், ஸர் சி.வி. ராமன், மஹாகவி போன்றோர்களுக்கு, பின்னாளில் இவர்களை உலகம் போற்றும் என்று நினைத்தா அவர்களுடைய பெற்றோர்கள் பெயர் வைத்திருப்பார்கள்?  யோசிக்க வேண்டிய விஷயம். 

தன்னுடைய கற்பனையில் உருவான உயிர் இல்லாத ஒன்றுக்குப் பெயர் வைத்து, அந்தப் பெயர் மிகவும் பிரபலம் ஆகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அதற்கு உலகமே இன்று  (18-11-2011) 83 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டியது மாறி தற்போது இதன் பேரைச் சொல்லாமல் எந்தக் குழந்தையும் சாப்பிடுவதில்லை. அதுதான் வால்ட் டிஸ்னியின் படைப்பான  மிக்கிமவுஸ் என்று  சொல்லாமலே உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும். 

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற இக்காலத்தில் ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பதற்கு லலிதா ஸ்கஸ்ரநாமம் முதல் விஷ்ணு ஸகஸ்ரநாமம் வரை அலசி ஆராய்ந்து, இதிகாசங்களைப் புரட்டி முடிவில் அர்த்தம் தெரியாமல், எளிதில் உச்சரிக்க முடியாமல் ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பவர்களும் உண்டு. நல்ல பெயரை நீளமாக வைத்து விட்டு “பாச்சு, கிச்சா, அம்பி, அபிஷ்டு, தத்தி” என்று சுருக்கமாக ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். அலுவலகத்தில் ஒரே பெயரில் இரண்டு நபர் இருந்தால் அவர்களின் பெயரோடு ‘குட்டை’, ‘சொட்டை’, ‘லூஸ்’, ‘அரைப்பைத்தியம்’ போன்றவை சேர்க்கப்பட்டு கடைசியில் வாழ்நாள் முழுவதும் ஒரிஜினல் பெயர் மறைந்து அடைமொழி(***) மட்டுமே நிலைக்கும். 

மகாபாரதத்தில் காந்தாரி தன்னுடைய 100 பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் யோசித்துப் பெயர் வைத்திருப்பாள்? பின்னாளில் அப்பெயருக்கு களங்கம் வராமல் அவர்கள் நடந்து கொண்டார்களா?.  சற்று யோசிக்க வேண்டிய விஷயம். 

இந்நேரத்தில் நாரத முனிவரையும் சற்றுக் கருத்தில் கொள்ள வேண்டும். திரிலோக சஞ்சாரி நாரதர் ஒரு சமயம் ‘சம்சார சாகரம்’ என்ற மாயையில் சிக்கி, வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் 60 குழந்தைகளைப் பெற்றாராம். 60 குழந்தைகளின் பெயர்கள் அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ நமக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  அந்த 60 பெயர்களைத்தான் 60 தமிழ் ஆண்டுகளாக அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.   பிள்ளையின் நினைவாக கர வருஷத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

வாழ்க்கையில் எவ்வித முயற்சியும் எடுக்காமல் சாதிக்க நினைத்துத் தோல்வியில் முடியும் போது தன்னுடைய பெயர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று நினைப்பவரும் உண்டு. என்னுடைய பள்ளிப் பருவத்தில் (35 வருடங்களுக்கு முன்னால்) ஒரு ஆசிரியர் மிகவும் வறுமையில் உழலும்போது, என்ன நேரத்திலே எங்க அம்மா அப்பா எனக்கு பேர் வச்சாங்களோ தெரியலே, இப்ப நான் பிச்ச எடுக்க வேண்டியிருக்கிறது என்பார்.  அவருடைய பெற்றோர்களுக்கு நான்கு ஐந்து குழந்தைகள் இறந்து பிறந்ததால், இறைவனை வேண்டி அவரின் பிச்சையாக(அருளாக) ஆறாவதாக நிலைத்த அக்குழந்தைக்கு ‘பிச்சை’ என்றுப் பெயர் சூட்டினார்கள். அடிக்கடி தனது பெயரைத் தானே சபித்துக் கொண்ட  ‘பிச்சை வாத்தியாரின்’ நினைவு இன்றும் வரும். 

மதுரையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தேசிய அளவில் தடகளப் போட்டியில்  மெடல்களை அள்ளிக் குவித்திருந்தார் என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி.  அவருடைய பெயர் என்ன தெரியுமா? குலதெய்வத்தின் நினைவாக  பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் ‘நொண்டிச்சாமி’. 

‘ஆரோக்கியசாமி’ என்பவர் அனுதினமும் மருத்துமனையிலேயே காலம் கழிப்பதும், எப்போதுமே வாடிய முகத்துடன் காட்சி அளிக்கும் ‘ஜோதி’ என்ற பெயருடன் வாழ்பவரையும் நீங்கள் சந்திருக்கலாம். 

‘ஏனப்பா எனக்கு ‘அபிஷேக்’ ன்னு பேரு வைச்சே, ‘A’ ல ஆரம்பிக்கிறதாலே ஸ்கூல்ல வாத்தியார் எல்லாத்துக்கும் என்னத்தான் முதல்ல கூப்பிடறாங்க’ இது மாணவர்களின் ஆதங்கம். 

சிபாரிசுக் கடிதம் கொடுக்கும் அளவுக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் நிலைக்கவில்லையென்றாலும், கெட்ட பெயர் வாங்காமலாவது இருக்க முயற்சிக்க வேண்டும்.  இதப் பாருப்பா உனக்கு எவ்வளவோ சிபாரிசு பண்ணி வச்சிருக்கேன், போற இடத்திலே  என்  “பேரைக் கெடுத்திடாதே”  என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்போம். 

இதையெல்லாம் யோசிக்கும் போது, பெயருக்குண்டான காரணத்துக்கு ஏற்ப அப்பெயர் நிலைக்குமா? நமது சாதனைகளுக்கு நம்முடைய பெயர் எவ்வித்திலே உதவியாக இருக்கும்? பெயருக்கும் நாம் செய்கின்ற செயலுக்கும் சம்பந்தம் உண்டா?. 

இப்படிப்பட்ட கேள்விகள் எல்லோர் மனதிலும் தோன்றுவது சகஜம்தானே. செய்கின்ற செயலில் நல்ல பெயரோ, கெட்டப் பெயரோ முடிவில் எல்லாம் இறைவன் செயல் என்றே சிலர் பதில் கூறுவர். 

இதைப் படிக்கும் போது இன்றைய வாலிபக் கவிஞர் வாலி, அன்று எழுதி எம்ஜிஆர் அவர்கள் பாடிய 

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நம் நாடு என்னும் தோட்டத்திலே

நாளை மலரும் முல்லைகளே” 

என்ற சினிமா பாடல் உங்களுக்கெல்லாம் நினைவு வருகிறதா? 

ஆக பெயர் எவ்விதம் அமைந்தாலும், நற்பெயரைச் சம்பாதிக்க நாம் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல பெயர் சூட்டி வருடம் தவறாமல் பிறந்தநாள்  மட்டும் கொண்டாடினால் போதுமா?,  அவர்கள் நல்ல முறையில் வளர்வதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தருவதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் பங்கு மிக அவசியம்.  

 

படத்திற்கு நன்றி: https://picasaweb.google.com/lh/photo/sThiGAUpOh_0GPM2BvrhhQ

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நல்ல பேரை வாங்க வேண்டும்

  1. “பெயர்கள்” குறித்த தங்களது பதிவு..படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அப்பா அம்மா ஆசையாக வைத்த பெயரை… பின்னாளில் “நியூமராலஜி” என்ற பெயரில்… மாற்றி…பெற்றவர்களை அவமதித்து…அறியாமையால் கிறுக்குத் தனங்கள் செய்வோரைப் பற்றி…ஒன்றுமே சொல்லாமல் விட்டு விட்டீர்களே!!
    -கணேசலிங்கம் செண்பகம்
    கே.கே.நகர், சென்னை-600078
    செல்:98408 27369

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *