சுனாமி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி – செய்திகள்

சென்னை. நவம்பர் 29,2011.

சுனாமி பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜப்பானிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தனது குழுவினருடன் இணைந்து பாடினார்.

ஜப்பானில் சில மாதங்களுக்கு முன் சுனாமி பேரலைகள் ஏற்பட்டு லட்சக்கணக்கான ஜப்பானிய மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.  இவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எஸ்தெல் ரிசார்ட் மற்றும் ப்ரிட்டோஸ் அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தனது பங்களிப்பை அளித்தார்.  ஜப்பானில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் சதா ஃபவுண்டேஷன் வழங்கிய என்கா என்ற ஜப்பானிய இசை நிகழ்ச்சியில், ஜப்பானிய இசைக்கலைஞர்கள் பலர் பாடினர்.  ஜப்பான் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விஜய் ஆண்டனி, ஜப்பானிய இசைக்கு ஏற்றவாறு தனது ‘நாக்க மூக்க’ பாடலை பாடியபடி ஆட, பார்வையாளர்கள் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.  விஜய் ஆண்டனியுடன் இணைந்து பாடகிகள் வினயா, மதுமிதா, சாருலதா மணி, நிர்மலா, சங்கீதா ராஜேஸ்வரன், ஜனனி, நடிகர் விஜய்யின் தாயாரும் தமிழ்நாடு இசைப் பள்ளிகளின் அறிவுரைஞருமான திருமதி ஷோபா சந்திரசேகர், பாடகர் பிரசன்னா ஆகியோரும் இணைந்து பாடி பரவசப்படுத்தினர்.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகரனும் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 ரூபாய் நிதியாக வழங்கினார்.  அவர் பேசும்போது, “ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  இதனை ஏற்பாடு செய்தவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இங்கே எனது நண்பர் விஜய் ஆண்டனியும் கலந்துகொண்டு பாடியதில் மகிழ்ச்சியடைகிறேன்.  இங்கு பாடப்பட்ட ஜப்பானியப் பாடல்களிலிருந்து விஜய் ஆண்டனி பல பல்லவிகளை உருவாக்கி இருப்பார்.  அதனை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றித் தருவதில் விஜய் ஆண்டனி கெட்டிக்காரர்.  அதேபோல் இந்தியாவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்தி, அற்புதமாக பாடிய சதா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் சின்னி ஜெயந்த் கலந்துகொண்டார்.  முடிவில் எஸ்தெல் ரிசார்ட் மற்றும் பிரிட்டோஸ் அகாடமியின் தலைவர் பிரிட்டோ நன்றி கூறினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *