வை.கோபாலகிருஷ்ணன் 

வஸந்தி அந்தப் பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்குப் பல கவுண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது வஸந்தியின் சேவையை மட்டும்தான்.  

மிகவும் அழகான இளம் வயதுப் பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன்னை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும் வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.

தனக்கு இது போன்ற தன்மையான,  மென்மையான, புத்திசாலியாக, அழகான, அமைதியான பெண்ணோ அல்லது மருமகளோ இல்லையே என்று ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.

கவுண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

மொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த வஸந்தி.

இப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.

மற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன். அவரைப் பொறுத்த வரை வங்கி என்றால் வஸந்தி; வஸந்தி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப் பற்றித் தெரியாதவர். எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றித் தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே!

ரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாகச் சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.

ரகுராமனும் வெகு சிரத்தையாகக் குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிருந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர். 

அது தவிர ஓரளவுக்கு கணிதப் பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.

இருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.

வஸந்தி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன். ரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த வஸந்தி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும்,  அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச் சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனிதச் சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறி கொடுத்து விட்டாள்.

அவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே எனச் சிந்திக்கலானாள்.  தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் வஸந்தி. 

நேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், வஸந்தி. தான் ஒரு வங்கியில் பணி புரிவதாகச் சொன்ன வஸந்தி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவுக் கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.

வில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப் புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய வஸந்தியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒரு வித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.   

இருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவிதக் காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.

உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியத்தை யாருமே நிர்ணயிக்க முடியாது. 

காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவரக் கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ!

அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று வஸந்தியிடம் தொடங்கப்பட்டு விட்டது.  புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க வஸந்தியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.

தினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்து விடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து வஸந்தி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.

ஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் வஸந்தியிடம் தருவார். அவள் கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலி செய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார். இவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்து வந்தன.

ரகுராமனின் வங்கிக் கணக்கில் வஸந்தியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக் கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது போல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப் போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. 

வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக வஸந்தி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.

இரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் வஸந்தியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.

ரகுராமன் விருப்பப்படியே வஸந்தி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.

தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச் சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக் கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்குப் பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக் கொண்டு, தலை நிறையப் புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போலக் காட்சியளித்த வஸந்தி, வங்கியின் கேஷ் கவுண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.

மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொள்வாள் வஸந்தி.

அவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள். 

வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய வஸந்தியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *