சனிப்பெயர்ச்சி பலன்கள்


மனிதன் இடம் விட்டு இடம் மாறுவது போல், கிரகங்களும் இடம் மாறுகின்றன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக விளங்குவது சனி கிரகம். கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனி பகவானிடம் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. ஏனெனில் வாழ்வில் மனிதனுக்குப் பல சோதனைகளைத் தந்து, வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைப்பதோடு, மனிதனை ஆன்மீகத்தின் பால் கொண்டு செல்வதும் அவரே! சோதனை என்று வரும் போது மனிதன் இறைவனைத் தேடுகிறான். பிறகு நல்ல வழி கிடைக்கிறது. இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் இருக்கும் சனி பகவான் , 2011-ம் ஆண்டு தன் உச்ச வீடான துலா ராசிக்கு டிசம்பர் மாதம் 21-ம் தேதி அன்று மாறுகிறார். 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள், பரிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பெயர்ச்சியில், சனியின் பிடியில் இருக்கும் ராசிகளைச் சேர்ந்தவர்கள் வீண் கவலை அடைய வேண்டாம். , அவரவர்களின் குல தெய்வத்தை முறையாக வழிபட்டு வருவதோடு , தன் கடமையில் கண்ணாக இருந்து, நேர்வழியில் நடந்தால், சனி பகவான் தரும் சங்கடங்கள் தானே விலகும். துலாக் கோல் போல் நின்று , நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை வழங்கும் திருநள்ளாற்று நாயகனாம் சனி பகவானை துதிப்போம். நலம் பெறுவோம்!

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே ! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய். சச்சரவு இன்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தாதா!

 

 

                                                      சனிப் பெயர்ச்சி பலன்கள் (21 – 12-2011 முதல் 16 – 12 -2014 வரை)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் முடிய ) இது வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கன்னியில் இருந்து வளம் பல தந்த சனி பகவான் 21-ம் தேதி முதல், 7-ம் இடமான துலாத்திற்குச் செல்கிறார். பணியில் இருப்பவர்கள் உங்களுக்கு வேண்டிய துணிவு, தைரியம் இரண்டோடு சற்று பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எடுக்கும் வேலைகள் தொய்வின்றி நடைபெறும். பெண்கள் இந்த பெயர்ச்சியில். தங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் . படபடவென்று பேசுவதை சற்று குறைத் துக் கொண்டு அன்புக்கும், பண்புக்கும் கட்டுப்பட்டு நடந்தால் வாழ்க்கை வசந்தம்தான்! வியாபார வட்டத்தில் உங்கள் சொல்லுக் கென்று தனி மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டுமா? வியாபாரிகள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில்.கவனமாய் இருங்கள். கலைஞர்களுக்கு பேரும், புகழும் இருந்தாலும், கூடவே வேண்டாத கவலைகளும் வந்து சேர வாய்ப்பும் உண்டு. எனவே கூடாத பழக்கங்களுக்குத் தடை போட்டால் , கம்பீரமாய் நடை போடலாம். ரியல் எஸ்டேட், வீடுகளை வாங்கி விற்பவர்களுக்கு வாய்ப்புகள் பல தேடி வரும். நேர்மையாய் நடந்து கொள்வதை மேற்கொண்டால், சிறப்பான பலன்களோடு, நல்ல வருமானமும் வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர் களுக்கு, வெளி வட்டாரத்தில் திருப்தியற்ற நிலைமை நிலவும். மறைமுக எதிரிகளின் கை மேலோங்கும். விரும்பிய பலன் கிடைப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரங்கள்: இயன்ற வரை ஏழைகளுக்கு உதவி செய்வதோடு, உங்கள் ராசி நாதனான செவ்வாய் கொலுவிருக்கும் வைத்தீஸ் வரன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். வாழ்வில் வளங்கள் படிப்படியாய் வந்து சேரும்.

 

ரிஷபம்: (கார்த்திகை,2,3,4, ரோகிணி, மிருக சீரிடம்1,2 பாதங்கள் முடிய.)இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடமான கன்னியில் இருந்து எதிலும் சுணக்கத்தை தந்த சனி பகவான் 21-ம் தேதி முதல், 6-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். உங்கள் காட்டில் மழைதான்! தேங்கிக் கிடந்த வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடைபெறுவதால்,புதிய தெம்புடன் திகழ்வீர்கள். பணியில் உள்ளவர்கள், தங்கள் செல்வாக்கால் சில தொல்லைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்வார்கள். மேலும், இது வரை கிடப்பில் கிடந்த நிலை மாறி, மனைக்கடனுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பது சாதகமான பலனைக் கொடுக்கும் . கருத்துப் பரிமாற்றத்தில் பெண்களின் திறமை பளிச்சிடும் . அத்துடன் திறமைக்கு உரிய அங்கீகாரமும் தக்க சமயத்தில் கிட்டும். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்கள் மனதுக்குப் பிடித்த வேலையில் அமர்வார்கள். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய புகழ்ச்சியையும், வளர்ச்சியையும் அடைவார்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும். நற் காரியங்களில், ஈடுபடும் வாய்ப்புகள் பல வந்து சேரும். கலைஞர்களை இது வரை வருத்திக் கொண்டிருந்த பிணிகள் விலகி, உடல், மனம் இரண்டும் உறுதியாகி புதிய தெம்பு பிறக்க 6-ம் இட சனி உதவுவார். தொழில் வளம் பெருக, புதிய உத்திகள் கை கொடுக்கும். வியாபாரிகள் , இனிமையான பேச்சை உங்களின் மூலதனமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு, வரும் லாபத்தோடு நல்ல பெயரும் வந்து சேரும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் வேண்டிய உதவிகள் வந்து சேர்வதால், ஆர்வத்துடன் செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கலாம்!

 

மிதுனம் (மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை 1,2,3,4 பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள்: முடிய.)இது வரை உங்கள் ராசிக்கு 4-ம் இடமான கன்னியில் இருந்து அர்த்தாஷ்டம் சனியாய் , எதிலும் தேக்கத்தைத் தந்த சனி பகவான் 21-ம் தேதி முதல், 5-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். சற்றே விடுதலை. ஆயினும் மழை விட்டும் தூவானம் விட வில்லை என்கிற கதைதான்! பணியில் உள்ளவர்கள் எந்தக் காரியத்திலும்,பொறுமையாக செயல் பட்டால், பெருமை கொள்ளும் தருணங்கள் உங்களுக்குச் சொந்தமாகும் . அத்துடன் தேவையான கோப்புகளின் பாதுகாப்பை அவ்வப்போது உறுதி செய்து கொள்ளவும். பெண்கள் எந்த சூழலிலும் கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சிறிய விஷயங்களிலும் கவனமாக இருந்தால், திட்டமிட்டும் செயலாற்றுவதில் எந்த சிரமமும் இராது. மாணவர்களுக்கு வேண்டிய உதவி வந்து சேரும். எனினும் பண விஷயங்களில் காட்டும் நிதானமும், பொறுமையும் வீண் வம்புகளை வளரவிடாமலிருக்கும். , எவ்வளவுதான் அலைந்து திரிந்தாலும், வியாபாரிகள் சிரமத்தின் நடுவே ஒப்பந்தங்களைத் தேட வேண்டி வரும். எனவே அவ்வப்போது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இயந்திரங்களை இயக்குபவர்கள் பாதுகாப்புக்கு உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அலட்சியப் போக்கைத் தவிர்க்கவும். கூட்டாய் செயல்படும் வியாபாரிகள் பங்குதாரர்களிடையே கருத்து மோதல் நிகழாதவாறு சாமர்த்தியமாய் செயலாற்றுதல் புத்திசாலித் தனம் . கலைஞர்கள் கண்ணும், கருத்துமாய் செயல்பட்டால், பண வரவில் எந்தத் தொய்வும் இராது.

பரிகாரம்: உங்கள் ராசிநாதனின் அம்சமாக விளங்கும் பெருமாளை புதன் கிழமை தோறும் தரிசித்து வரவும். சனி தரும் சங்கடங்கள் தானே குறையும்.

 

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய ) 
இது வரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கன்னியில் இருந்து உங்களை சுறுசுறுப்பாய் செயல்பட வைத்த சனி பகவான் 21-ம் தேதி முதல், 4-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். வேகம், வேகம் என்று செயல்படுவதைக் காட்டிலும், விவேகமாய் செயல்படுவதே நல்லது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் குல தெய்வ பிரார்த்தனை, நேர்த்திக்கடன் ஆகியவற்றை பாக்கி வைக்காமல் முடித்து விடுவது அவசியம். பெண்கள் சிறு சிறு பிரச்னைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டி இருக்கும். எனவே பேச்சில் கடுமை தலை காட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளின் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாய் அமைய, கடும் உழைப்பை நல்க வேண்டி வரும். .மாணவர்கள் பாடங்களைப் பயில்வதில். ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதமும், கை நிறைய மதிப்பெண்களும் கட்டாயம் உண்டு ! . வீண் பகை வாராதிருக்க பொது வாழ்வில் இருப்பவர்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுவது நல்லது. பணியில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வருவதோடு, நல்ல பெயரும் நிலைத்திருக்கும். . கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் , வெளி வட்டாரத்தில் எல்லை கோட்டுக்குள் செயல்படுவது புத்திசாலித் தனம்.அத்துடன் தன் சொந்தப் பிரச்னைகளை, பொது இடங்களில் அலசுவதைத் தவிர்த்தால், வீண் வேதனைகள் தலை காட்டாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றும் பொறுப்பான பதவி வகிப்பவர்கள் சட்டென்று உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்தாலே சங்கடங்கள் தானே குறையும் .

பரிகாரம்: திங்கள் கிழமை தோறும், பார்வதி அன்னையை வலம் வாருங்கள். நலம் பல பெருகும்.

 

சிம்மம்: (மகம் 1,2,3,4 பாதங்கள், பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ம் பாதம் முடிய ) 
இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் இருந்து ஏழரை சனியாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சனி பகவான் 21-ம் தேதி முதல், 3-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். இது வரை உங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த தடைகள் யாவும் விலகுவதோடு, உங்களைத் தடுக்க நினைத்து சூழ்ச்சி செய்தவர்கள் எல்லாம் வீழ்ச்சி அடைவார்கள். இந்த ராசிக் காரர்கள் இடமாற்றம் ஊர் மாற்றத்தால்,ஏற்றமான பலனைக் காண்பார்கள்.பணியில் இருப்பவர்கள் தங்களைத் தேடிவரும் வாய்ப்புகளையும்,வழிகாட்டுதலையும், சிக்கென பிடித்துக் கொண்டால் சிறப்பான வாழ்க்கைப் பாதை அமையும்.அத்துடன் வேலைப்பளுவைக் குறைப்பதற்கான எடுக்கும் முயற்சியில் விரும்பிய பலன் இருக்கும் உயர்படிப்பிற்காக மாணவர்கள் வெளிநாடும், வெளியூரும் செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். பெண்கள் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் நல்ல வெற்றி காண்பார்கள். நீடித்த கடன்கள் விலகுவதால் வியாபாரிகளுக்கு நிம்மதி பிறக்கும் . அத்துடன், கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருக்கும்.எனவே புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடலாம். கலைஞர்களுக்கு, மறைமுக போட்டிகளைச் சமாளிக்கும் யுக்திகளையும், ஆற்றல்களையும் 3-ம் இட சனி வழங்குவதால், ஒப்பந்தங்கள் பலவும் உங்கள் பக்கமே! பொது வாழ்வில் உள்ள்ளவர்களுக்கு வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லை அகல்வதோடு, வருங் கால நலன் கருதி தீட்டும் திட்டங்கள் நல்ல விதமாக உருப்பெறும். அத்துடன் பக்க பலமாய் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கூடும்.

 

கன்னி: உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 1,2,3,4 பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள் முடிய ) 
இது வரை உங்கள் ராசியில் கன்னியில் இருந்து ஏழரை சனியாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சனி பகவான் , 21-ம் தேதி முதல், 2-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். உங்களின் கடமைகளைச் சிறப்பாக செய்வதோடு, இறைநம்பிக்கையை மேலும் பலப்படுத்திக் கொண்டு, “தான் உண்டு, தன் வேலை உண்டு” என்று இருக்க வேண்டிய காலம். பணியில் இருப்பவர்கள் சில எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் பதவி உயர்வுத் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியமாகும். சுய தொழில் செய்பவர்கள் செய்யும் தொழிலில் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை மாற்றினால், நஷ்டம் குறைந்து லாபம் கூடும். அத்துடன் வந்து சேரும் பொறுப்புகளை சுமப்பதற்கும் அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். வியாபாரிகள் நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டபின், பின் தேதியிட்ட காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. சக கலைஞர்களால்,வரும் மனக்கஷ்டத்தையும், பணக் கஷ்டத்தையும் தவிர்க்க, எல்லா விஷயங்களிலும் தாமரையிலைத் தண்ணீர் போல பட்டும் படாமலிருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரிடம் கொடுத்த பொறுப்பு சரிவர நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டால், பணக் கஷ்டம், மனக் கஷ்டம் இரண்டும் அருகே வராமலிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொற்படி நடந்து கொண்டால், பாடச் சுமைகள் சேராதிருக்கும். அத்துடன் தீய பழக்கங்களிலிருந்து தப்பித்து, மனக் கவலையின்றி சிறகடித்துப் பறக்கலாம்.!

பரிகாரம்: மன தைரியம் பெறவும், சனி தரும் நெருக்கடிகள் குறையவும், செவ்வாய் கிழமை தோறும் துர்க்கையை வழிபடவும்.

 

துலாம் : சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி 1,2,3,4 பாதங்கள், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய ) 
இது வரை 12-ம் இடமான கன்னியில் இருந்து ஏழரை சனியாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சனி பகவான் , 21-ம் தேதி முதல், ஜென்ம சனி என்னும் பெயரோடு, உங்கள் ராசியான துலாத்திற்கு செல்கிறார். துலாம் சனியின் உச்ச வீடு .இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கும். எனினும் பொருள் வரவிற்கு குறைவிராது. ஆயினும், சற்றே சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வரவைக் காட்டிலும், செலவுகள் வந்த வண்ணம் இருக்கும்! பெண்களுக்கு உறவினர்கள் ஏட்டிக்குப்போட்டியாக நடந்து கொண்டு எரிச்சலை உண்டாக்குவார்கள். கலைஞர்கள் நோய் அச்சுறுத்தல் வராதவண்ணம் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது அவசியம். மாணவர்கள் வேண்டாத பழக்க வழக்கங்களுக்கு தூபம் போடுபவர்களின் உறவை துண்டித்து விடவும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிகாரம், அன்பு இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். சுய தொழில் புரிபவர்களின் முயற்சிக்கு உரிய பலனைத் தருவதில் சனி சிறிது கால தாமதத்தைத் தருவார். பணியில் இருப்பவர்கள் புதிய வீடு வாங்கும் முயற்சியில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. அத்துடன் புதிதாக வேலையில் சேர்ந்துள்ளவர்களுக்கு , நல்ல பெயரைப் பெறுவதற்குக் கூடுதல் கவனமும், கூடுதல் உழைப்பும் தேவைப்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு அதிகம் மயங்காமல் இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பரிகாரம்: உங்களின் ராசிக்கு அதிபதியான சுக்ரனின் அம்சம் பெற்ற திருமகளை வெள்ளிக் கிழமை தோறும் துதித்து வர, வாழ்வில் வளம் பல வந்து சேரும்.

 

விருச்சிகம் : விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1,2,3,4 பாதங்கள், கேட்டை 1,2,3,4 பாதங்கள் முடிய ) 
இது வரை 11-ம் இடமான கன்னியில் இருந்து பல நன்மைகளை வாரி வழங்கிய சனி பகவான் , 21-ம் தேதி முதல், ஏழரை சனி என்னும் பெயரோடு, உங்கள் ராசியிலிருந்து 12-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். கூட்டுக் குடும்பமாய் வாழ்பவர்கள் இடையே கருத்து வேறுபாடு உருவாகும் வாய்ப்பிருப்பதால், எதனையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவது நல்லது. வியாபாரிகளுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள் . அத்துடன், புது முயற்சிகளில் முன்பின் அறியாதவர்களின் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்வதைத் தவிர்த்து விடவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வாருங்கள், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொது வாழ்வில் இருப்பவர்கள், சிலசமயம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டி, கடுமையாக உழைக்க நேரிடும். பணியில் இருப்பவர்கள் அலுவலக விழா, விருந்து ஆகியவற்றில் உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும்.கலைஞர்கள் கவனச் சிதறலுக்கு இடம் தராமல் இருந்தால், அவர்கள் தங்கள் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளலாம். மாணவர்கள் அனுசரித்து நடக்கவும், பொறுமையாகவும் இருக்கவும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை அவர்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தரும். பெண்கள் நகைகளை இரவலாய் வாங்குவதற்கும், இரவலாய் கொடுப்பதற்கும் ஓர் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.

பரிகாரம்: உங்களின் ராசிக்கு அதிபதியான செவ்வாய், அலைகடல் ஓரம் வீற்றிருக்கும் , திருச்செந்தூருக்கு சென்று வேலவனை தரிசித்து வர, வேதனைகள் யாகும் நீங்கும்.

 

தனுசு : மூலம் 1,2,3,4 பாதங்கள், பூராடம் 1,2,3,4 பாதங்கள் , உத்திராடம் 1-ம் பாதம் முடிய )
இது வரை 10-ம் இடமான கன்னியில் இருந்து பல தடைகளை உருவாக்கிய சனி பகவான் , 21-ம் தேதி முதல், உங்கள் ராசியிலிருந்து 11-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். இனி எல்லாம் இனிப்பான சேதிகளே! குடும்ப வளம், மன வளம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்து உங்களை முன்னேற்றம் நோக்கி பயணம் செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும் ! இல்லம் பெண்களின் கை வண்ணத்தால் புதிய மாற்றத்துடன் திகழும். பிள்ளைகளும் உங்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்வார்கள். பணியில் இருந்த நெருக்கடி மனதில் இருந்த இறுக்கம் யாவும் நீங்குவதால், பணியில் இருப்பவர்கள் புதிய பலத்துடன் திகழ்வார்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, பொருளாதார நிலையில் நல்லதொரு உயர்விருக்கும். கலைஞர்களுக்கு, நெடுநாளாய் வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு கிடைத்து விடுவதோடு, மனதிற்கு பிடித்தமானவர்களையும் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். சுய தொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்த வேதனையும், சோதனையும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முதியவர்களுக்கு, திருத்தல யாத்திரை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் இணைந்து கொள்ளும் பாக்கியம், கிடைக்கப் பெறும். மாணவர்களின் ஞாபக சக்தியும், புத்திக் கூர்மையும் அவர்களின் வளர்ச்சிக்கு வித்தாய் அமையும். கூட்டாய் தொழில் புரிபவர்கள் நடுவே இருந்த பிணக்கு மாறி இணக்கமான சூழல் மலர்வதால், மனதில் இருந்த கலக்கம் மாறி, புதிய உத்வேகத்துடன் பணிகளை முடிப்பார்கள்.

 

மகரம் : உத்ராடம் 2,3,4 பாதங்கள். திருவோணம் 1,2,3,4 பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய ) . 
இது வரை 9-ம் இடமான கன்னியில் இருந்து ஏற்றத் தாழ்வுகளை தந்த சனி பகவான் , 21-ம் தேதி முதல், உங்கள் ராசியிலிருந்து 10-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். பதற்றமின்றி வேலை செய்ய வேண்டிய காலம். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு, தங்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும் மாணவர்கள் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்றிராமல், பழக்க வழக்கங்களிலும், உணவு வகைகளிலும், கட்டுப்பாடாய் இருப்பது அவசியமாகும்.பணியில் இருப்பவர்கள் வேலைகளை சேரவிடாமல் உடனுக்குடன் முடித்து, உயர் அதிகாரிகள் உங்களை கண்டிக்கும் சூழல் எழாதவாறு உங்கள் செயல்பாடுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது., பெண்கள் அவ்வப்போது தலை காட் டும் உடற் சோர்வு, உள்ளச்சோர்வு,இரண்டையும் விரட்டி அடித்து விட்டால், மேலும் சிறப்பான முறையில் உங்கள் திறமை பரிமளிக்கும். கலைஞர்கள் அலைச்சலின் நடுவேயும் சில பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தைரியம் குறையாது தங்கள் கடமைகளை நிறை வேற்றுவதில் உறுதியாய் இருந்தால், தடைகள் யாவும் படிக்கற்களாய் மாறிவிடும். வியாபாரிகள் தேவையற்ற விஷயங்களுக்காக பணம், நேரமும் செலவு செய்து, அங்கும் இங்கும் அலையும் சூழல் உருவாகலாம். புதிதாய் தொழில் தொடங்கியுள்ளவர்கள், கடன் வாங்கி வீண் செலவு செய்தல், தேவை யற்ற பொருட்களை வாங்குதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம்.

பரிகாரம்: சனி தரும் சங்கடம் யாவும், குறைய திங்கள்கிழமை தோறும் ஐயனாரை வணங்கி வரவும்.

 

கும்பம்: அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 1,2,3,4 பாதங்கள். பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய ) 
இது வரை 8-ம் இடமான கன்னியில் இருந்து அஷ்டம சனியாய் பல பிரச்சனைகளைத் தந்த சனி பகவான் , 21-ம் தேதி முதல், உங்கள் ராசியிலிருந்து 9-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். சற்றே விடுதலை கிடைக்கும் என்றாலும், வீண் வம்புகள் வீடு தேடி வராமலிருக்க, இந்த ராசிக்காரர்கள், யாரிட மும் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் அமைதியாய் தங்கள் பணியை தொடர்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாக செயல்படுவது அவசியம் .பெண்கள் சுபநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளுக்கான செலவை சரி செய்ய புதிய கடன் வாங்கும் நிலை இருக்கும் . மாணவர்கள் கிடைக்கின்ற அருமையான வாய்ப்பை தகுந்த விதத்தில் ஏணியாகப் பயன்படுத்திக் கொண் டால், கல்வியிலும், எதிர்காலத்திலும் உயர்வு நிச்சயம். வியாபாரிகள் சற்று சிரமப்பட்டு நிலுவைத் தொகையை பெற வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த சூழலிலும், கோபம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்வு இனிமையாக இருக்கும். பொறுப்பன பதவியில் இருப்பவர்கள், சிக்கலான விஷயங்களை பக்குவமாகக் கையாண்டால், பாதி பிரச்சனைகள் தானே அடங்கி விடும். கலைஞர்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களில் கலந்திருக்கும் தீயவர்களை இனங்கண்டு ஒதுக்கினால், நன்மை பல உங்களை நாடி வரும். பணம் சம்பந்த பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால், ஏமாற்றத்தைத் தவிர்த்து விடலாம்.

பரிகாரம்: அஞ்சனை மைந்தனாம், அனுமனை துதித்துவர, சனி தரும் நெருக்கடிகள் படிபடியாய் குறையும். 

 

மீனம்: பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி 1,2,3,4 பாதங்கள், ரேவதி 1,2,3 4 பாதங்கள் முடிய ) 
இது வரை 7-ம் இடமான கன்னியில் இருந்து சில பிரச்னைகள், சில நன்மைகளைத் தந்த சனி பகவான் , 21-ம் தேதி முதல், உங்கள் ராசியிலிருந்து 8-ம் இடமான துலாத்திற்கு செல்கிறார். அஷ்டம சனியாய், உங்கள் முயற்சிக்கு சில முட்டுக் கட்டைகளை போடுவார். இந்த ராசிக்காரர்கள், ஆரோக்கியம் என்னும் செல்வ வளம் குன்றாமல் பார்த்துக் கொண்டால், முழுமையான நிறைவுடன் பணிகளையும், கடமைகளையும் செய்து முடிக்க இயலும். பணியில் இருப்பவர்கள், அதிக ஆர்வத்துடன் ஈடுபடும் காரியங்களில் தக்க உதவி கிடைப்பதில் சற்று தேக்கம் உருவாகும். மாணவர்கள் , தங்களின் செயல்பாட்டில் பிறர் குறை காணாத வண்ணம் நடந்து கொள்வது நல்லது. பெண்கள், சிறிய விஷயங்களுக்காக சட்டென்று உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொண்டால், உங்கள் ஆக்கமும், ஊக்கமும் செம்மையான வாழ்விற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு விரோதிகளால் சில தொல்லைகள் ஏற்படலாம். எனவே எதிலும் நிதானமாக இருப்பது அவசியம். வியாபாரிகள் அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படலாம். எனவே கணக்கு வழக்குகளை முறையாக வைப்பதில் கவனம் செலுத்துங்கள். கலைஞர்கள் பொது விழா, விருந்து ஆகிய வற்றில் வரம்பு மீறாமல் நடந்து கொண்டால், வீண் வம்புகளையும், மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம். அத்துடன், வந்து சேர வேண்டிய பணம் தாமதமாக வரும் நிலை இருப்பதால், எவர்க்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

பரிகாரம்: அஷ்டம சனியின் தாக்கம் குறைய, பிரதோஷம் அன்று, சிவனை ஆராதனை செய்து வரவும்.

 

ஜோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன் பற்றி அறிந்து கொள்ள : http://www.vallamai.com/?p=11583

 

ஓவியங்கள் : நன்றி – திரு சின்னராஜ்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க