ஸ்ரீஜா வெங்கடேஷ் 

அந்தத் தனியார் மருத்துவமனை பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது. நல்ல பணம் படைத்தவர்கள் மட்டுமே வந்து போகக் கூடிய மருத்துவமனை அது. ஆறு மாடிகளும், நான்கு தானியங்கி மின் தூக்கிகளும் சதா இயங்கிக் கொண்டேயிருக்கும். அரசு மருத்துவ மனைகளைப் போலில்லாமல், இங்கு நோயாளிகளைக்  காண வருபவர்களின் கூட்டம் சற்றுக் குறைவு தான். ஆனால் வருபவர்கள் ஒரு கிலோவுக்குக் குறையாத ஆரஞ்சும், ஆப்பிளும் வாங்கி வருவார்கள். 

அந்த மருத்துவமனையில் பொதுப்பிரிவில் டீலக்ஸ் வார்டில் நர்ஸாக இருக்கிறாள் தனலட்சுமி என்ற தனம்.  கறுப்பு நிறம் ஆனால் களையான முகம். அவள் ஒன்றும் பம்பரம் மாதிரி சுழன்று நோயாளிகளின் தேவைகளை கவனிக்கும் சினிமா நர்ஸ் அல்ல. வேறு வழியில்லை, இந்தத் துறைக்கு வந்தாயிற்று என்ற நினைப்புடன் வேலை செய்தாள். பணிவிடைகளை எல்லாம் சரியாகச் செய்வாள். வேளைக்கு பார்த்துப் பார்த்து மாத்திரை கொடுப்பாள். ஆனால் எல்லாம் அவள் டூட்டி நேரத்தில் தான். மற்ற நேரங்களில் அவசரம் என்றால் கூடப் போக மாட்டாள். 

தனம் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்குச் சேர்ந்து இதோடு மூன்று வருடம் முடிந்து விட்டது. அவளுக்கு இது வரை நல்ல பெயரும் இல்லை, கெட்ட பெயரும் இல்லை. அவள் ஒரு மனுஷி. சூழ்நிலையால் நர்ஸ் வேலை பார்க்கிறாள். அதற்காக 24 மணி நேரமும் அவளை நர்ஸாகப் பார்த்தால் எப்படி? அவளுக்கு என்ன வேறு முகங்களா இல்லை? உதாரணமாக தனம் மிக நன்றாகக் கோலம் போடுவாள். படம் வரைவாள். அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? எப்போது பார்த்தாலும் நோயாளிகளோடு மாரடிப்பது அவளுக்கு எரிச்சலாக இருந்தது. இன்னும் ஒரு நல்ல வேலைக்குப் போயிருக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு இருந்து கொண்டேயிருந்தது. 

இந்த நிலையில் தான் ஒரு அம்மாவை டீலக்ஸ் வார்டில் சேர்த்தார்கள். கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை. அந்த அம்மாளுக்கு வேறு எந்தத் தொந்தரவும் இல்லை என்பதால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. அந்த அம்மாளைப் பார்க்க அவர் மகள் தினமும் வருவாள். செய்து வைத்த சிலை மாதிரி, மெழுகுப் பொம்மை மாதிரி இருப்பாள். தூக்கி போடப் பட்ட கொண்டையும் , அவள் மேக்கப்பும் அந்தப் பெண்ணை ஏர் ஹோஸ்டஸ் என்று சொல்லாமல் சொல்லியது. 

தனத்திற்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. அவள் விரல்கள் சாத்துக்குடி ஜூஸ் பிழிவதே ஒரு நளினமாக இருந்தது. அவள் பேச்சு , நடை எல்லாமே ஓர் அழகாக இருந்தது. “வேலை பார்த்தால் ஏர் ஹோஸ்டஸாக வேலை பார்க்க வேண்டும். மரியாதைக்கு மரியாதை , காசும் அதிகம்” இப்படி எண்ணம் ஓடியது அவளுள். அந்தப் பெண்ணின் பெயர் ஷில்பாவோ என்னவோ சொன்னார்கள். இப்படியெல்லாம் பெயர் இருந்தால் தான் அது போன்ற வேலைக்குச் செல்ல முடியும் போலிருக்கிறது. தன லட்சுமி என்று பெயர் வைத்த அம்மாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. 

ஷில்பாவின் தோழிகளும் சில சமயம் அந்த அம்மாளைப் பார்க்க வருவார்கள். அவர்கள் கடந்துபோகும் போதே வாசனை கமகமக்கும். அவர்கள் பேச்சும் சிரிப்பு எல்லாமே ஆங்கிலத்தில் தான். தனத்தின் ஏக்கம் அதிகமாயிற்று. யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லி அந்த ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு மனுப் போடலாமா? என்று கூட யோசித்தாள். ம்ஹூம் அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஒருவருக்கும் இது குறித்த விவரங்கள் தெரியாதது மட்டும் இல்லை தனத்தைக் கேலி வேறு செய்தனர். 

“ஆயிற்று இன்னும் இரண்டொரு நாளில் அந்த அம்மாளை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். அதன் பிறகு விவரம் தெரியாமலே போய்விடும்” என்று எண்ணமிட்டாள் தனம். துணிந்து அவர்களையே கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷில்பாவிடம் கேட்டே விட்டாள். ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற ஷில்பாவின் கண்களில் தெரிந்தது பரிதாபமா ஏளனமா? என்ற முடிவுக்கு தனத்தால் வர முடியவில்லை. 

ஷில்பா “ஏன் அந்த வேலைக்கு ஆசைப் படறீங்க? எப்பவுமே இருக்கறது விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசப்படாதீங்க. இப்போ நீங்க பாக்கற வேலை எவ்ளோ மரியாதையானது , கௌரவமானது? ஏன் ஏர்ஹோஸ்டஸ் வேலைக்குப் போய் ஆசைப்படறீங்க?” என்று கேட்டு விட்டு தனத்தின் பதிலுக்குக் கூட காத்திராமல் போய்விட்டாள். ஆத்திரம் போங்கியது தனத்துக்கு. “இவ மட்டும் என்ன ஒசத்தியா? ஏன் என்னால அந்த வேலையைச் செய்ய முடியாதா? எப்டி பதில் சொல்லிட்டுப் போறா பாரு. எல்லாம் காசு இருக்கற திமிரு. தான் தான் சிவப்பா இருக்கோம்ங்கற மமதை” மனதில் பட்டதையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் ராணியக்காவிடம். 

இது நடந்து மாதங்கள் மூன்று ஓடிவிட்டன. தனத்தில் ஆழ் மனதில் இருந்த ஆசை மட்டும் போகவே இல்லை. அப்போது தான் அவளுக்கு ஒரு அதிருஷ்டம் அடித்தது. ஒரு வயதான பெண்மணி. பணம் காசுக்குக் குறைச்சல் இல்லை. குழந்தைகள் மூவரில் இருவர் அமெரிக்காவிலும் , ஒரு மகன் டெல்லியிலும் வாசம். அந்தப் பெண்மணிக்கு திடீரென்று உடல் நலம் குன்றி அவரை தனம் வேலை பார்த்து வந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள் உறவினர்கள். 

சிகிச்சைகள் அளித்து உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று ஆனதும் அவர் மகன் , அம்மாவை விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து தானே பார்த்துக் கோள்வதாக ஃபோனில் தெரிவித்தான். ஆனால் தன்னால் வந்து அழைத்துப் போக முடியாதென்றும் , உதவியாளர் யாராவது கூட வந்தால் அவர்களுக்கும் சேர்த்து தானே விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகவும் தெரிவித்தான். 

அந்தப் பெண்மணியோடு விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு , ஓரளவு ஹிந்தி தெரியும் என்ற காரணத்தால் தனத்துக்கு அடித்தது. அது முதல் தனத்தின் கால்கள் தரையில் பாவவில்லை. தன் விமானப் பயணம் பற்றியே சிந்தித்தாள் , பேசினாள். ஏன் தூக்கத்தில் கூட அந்தக் கனவு தான். ஏர் ஹோஸ்டஸ்களை இன்னும் கிட்டத்தில் ருந்து பார்க்கலாம். அவர்கள் வேலை செய்யும் அழகை ரசிக்கலாம் அவர்களில் யாரிடமாவது கேட்டு விவரம் அறிந்து தானும் அந்த வேலைக்கு மனுப் போடலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்து சந்தோஷப் பட்டாள். 

அந்த நாளும் வந்தது. தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த சுடிதாரை அயர்ன் செய்து அணிந்து கொண்டாள். அந்தப் பெண்மணியை வீல் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு விமானம் புறப்படும் நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டாள். மற்றவர்களிடம் ஏற்கனவே விசாரித்து வைத்திருந்த படி போர்டிங்க் பாஸ் , செக்யூரிடி செக் எல்லாவற்றையும் முறைப்படி செய்தாள். ஏற்கனவே பலமுறை விமானத்தில் பயணம் செய்தவர் என்பதால் அந்த அம்மாள் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினார். அது மிகவும் உதவியாக இருந்தது தனத்துக்கு. 

மிகப் பெரிதாக இருந்த சென்னை விமான நிலையத்தையும் , பல்வேறு வகையான மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடி இருந்ததில் நேரம் போவதே தெரியவில்லை. நடுவில் அந்தப் பெண்மணி காபி கேட்கவே அவர்களுக்கு ஒன்று வாங்கித் தந்து விட்டு , தானும் ஒன்று வாங்கிக் கொண்டாள். வித வித மான தின் பண்டங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவை என்ன? அவற்றின் பெயர் என்ன ? என்பதே அவளுக்குத் தெரியவில்லை. 

ஒரு வழியாக விமானம் புறப்படும் அறிவிப்பு வந்தது. தடதடக்கும் நெஞ்சோடு வீல் சேரைத் தள்ளியபடி விரைந்தாள். விமான ஊழியர்கள் மிகவும் அனுசரணையாக இருந்து அந்தப் பெண்மணியை மேலே ஏற்றினார்கள். வாசலில் நின்று கொண்டு ஏர்ஹோஸ்டஸ்கள் புன்னகைத்தபடி “வெல்கம்” சொல்லி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். தனம் பதிலுக்குச் சிரித்தாள். சிலர் அந்த ஏர் ஹோஸ்டஸ்களைக் கண்டு கொள்ளாமல் போனாலும் , அவர்கள் எல்லோரையும் பார்த்து சிரித்து வைத்தார்கள். 

முதல் முறையாக சுருக்கென்றது தனத்துக்கு. அந்தப் பெண்மணியை சவுகரியமாக உட்கார வைத்து விட்டு பக்கத்தில் தானும் உட்கார்ந்து கொண்டாள். ஒரு நிமிடம் கூட இடை விடாமல் பேசியபடியே சுற்றி வந்து கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ்களை அவதானித்துக் கொண்டிருந்தாள். சீட் பெல்ட் போட்டுக் கொள்ளும்படிக் கெஞ்சி, இனிப்பு, தண்ணீர் வினியோகித்து, பாதுகாப்பு விதிமுறைகளைச் செய்து காட்டி என்று அவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். 

விமானம் உயரே எழும்பி ஒரு நிலையை அடைந்ததும் மீண்டும் அவர்கள் நடமாட ஆரம்பித்தனர். தனத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு வாந்தி வந்து விட்டது போலும்.  அவன் மணியை அடித்து ஏர் ஹோஸ்டஸை விளித்தான். அவர்களும் ஓடினர். ஒரு கனத்த பேப்பர் பையைக் கொடுத்து, அந்த நபர் வாந்தி எடுத்து முடித்ததும் அவர்களே அதை எடுத்துச் சென்றனர். இடையில் மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகள், டம்ளர்கள் முதலியவைகளை எடுத்துச் சென்றனர். நடு நடுவே கூப்பிட்டவர்களிடம் சென்று அவர்கள் கேட்டதைச் செய்து கொடுத்தனர். 

தனத்திற்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.அவள் கற்பனைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமேயில்லை. விமானம் கிளம்பியதுமே அந்தப் பெண்மணி தூங்கி விட்டதால் வேறு வேலை ஒன்றும் இல்லை தனத்துக்கு.அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் தான் ஏர்ஹோஸ்டஸ்கள் உட்கார்ந்திருந்தார்கள்.அவர்கள் பேசிக் கொள்வது தெளிவாகக் காதில் விழுத்தது. ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டனர். தனம் ஆங்கிலம் தெரிந்தவளாயிற்றே அதனால் நன்றாகப் புரிந்தது. 

பொதுவாகப் பயணிகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். விமானம் கிளம்பும் முன்னே நன்றாகக் குடித்து விட்டு வாந்தி எடுத்ததை அருவெருப்பை முகத்தில் காட்டாமல் தூக்கிப் போட வேண்டியிருந்ததைப் பற்றி ஒரு பெண் சொன்னாள். “சீ பாவம்” என்று நினைத்துக் கொண்டாள் தனம். மற்றொரு பெண் பத்தாம் எண் இருக்கையில் அமர்ந்திருக்கும் அரைக்கிழவன் ஒருவன் வேண்டுமென்றே சீட் பெல்ட் அணியத் தெரியாதது போல் நடித்து, தொடக்கூடாத இடங்களில் தொட்டதையும், பலமுறை தேவையில்லாமல்  அழைத்து வழிவதையும் கோபத்தோடு சொன்னாள். அவள் கோபத்தில் கண்ணீரும் கலந்திருந்தது போல் தனத்திற்குத் தோன்றியது. 

தன்னுள் சிந்தனையில் ஆழ்ந்தாள் தனம். “சீ இது என்ன மானங்கெட்ட பிழைப்பு.  கண்டவன்களின் எச்சிலையும், வாந்தியையும் எடுத்துப் போட்டுக் கொண்டு, அசிங்கமாக நடப்பவர்களைச் சகித்துக் கொண்டு, இப்படிச் சம்பாதிக்கும் பணம் தேவையா? மற்றவர்களும் இவர்களை மதிப்பதாகத் தெரியவில்லையே?”  மனம்  தன்னுடைய வேலையைப் பற்றி நினைத்தது. நோயால் அவஸ்தைப் படும் போது எல்லோருமே குழந்தைகளாக மாறி விடுகிறார்களே. தானும் சுத்தம் செய்யும் பொறுப்பு உள்ளவள்தான். ஆனால் தான் செய்வது  உடல் நலமில்லாதவர்களுக்கு செய்யும் சேவை அல்லவா? 

இதற்கு தனக்கு கிடைக்கும் மரியாதைகளை மனம் அசை போட்டது. “சிஸ்டர் இது சாப்பிடலாமா? சிஸ்டர் இந்த ஸ்வீட் ஒண்ணே ஒண்ணு சாப்பிடுறேனே” என்று இவள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் மனிதர்கள். நலமாகி வீடு திரும்பும் போது நன்றியோடு சேர்த்து பணமும் கொடுக்கும் மனிதர்கள். “சிஸ்டர் கைராசி எனக்கு நல்லா ஆகி வீடு திரும்புறேன்” என்று நன்றி பாராட்டும் மனிதர்கள். “எனக்குப் பேரன் பொறந்த வேளை ஒனக்குச் சீக்கிரமே கல்யாணம் ஆகும்மா” என்று உரிமையோடு வாழ்த்திய மனிதர்கள்.  என்று ஆஸ்பத்திரி மனிதர்கள் வரிசையாக வந்து போனார்கள்.

கண்களில் நீர் சுரந்தது.  இனி எத்தனை ஷில்பாக்கள் வந்தாலும் தனத்தைச் சலனப் படுத்த முடியாது. அவளுக்கு வைரத்துக்கும், காக்கைப் பொன்னுக்கும் வித்தியாசம் தெரிந்து விட்டது. இனி வரும் நாட்களில் தான் ஒரு மிகச் சிறந்த நர்ஸ் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.அவள் இப்போது விமானப் பணிப்பெண்களைப் பார்த்த பார்வையில் வியப்பு இல்லை. மாறாக ஒரு புரிதலும், இரக்கமும் இருந்தது.

பின்குறிப்பு:  கதாசிரியரின் இந்தக் கதை7.11.2011 அன்று குங்குமம் இதழில் வெளியானது. இதழுக்கு நன்றி.

படத்திற்கு நன்றி: http://www.dpmiindia.com/course_details.php?course_id=13

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காக்கைப் பொன்

  1. உடல்நலம் இல்லாத மனிதர்களை கவனித்துக்கொள்ள உறவினர்களே பெரும்பாலான சமயங்களில் ஒதுங்கி சென்றுவிடும் நிலையில் இந்த வெள்ளை உடைதரித்த வெள்ளை உள்ளம் கொண்ட “தேவதைகள்” பணியாற்றும் பாங்குகள் கண்டு பல இடங்களிலில் மானசீகமாக அவர்களை வணங்கி இருக்கிறேன். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ள இந்த “காக்கை பொன்” சிறு கதை அட்டகாசமாக உள்ளது. கருத்துள்ள கதை. ஆசிரியருக்கும் பாராட்டுக்கள். வார இதழில் இருந்து நமது வல்லமை மின்னிதழில் மறு பதிவு செய்து எனக்கு இக்கதையினை படித்து மகிழ வாய்ப்பு கொடுத்த வல்லமை ஆசிரியர் குழு வுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  2. dear Srija, Each profession has its own positive and negative aspects.It is people”s perception
     that makes the difference.I am sure your story will make people think highly of whatever profession they are in ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.