ஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி
இராஜராஜேஸ்வரி
நமது முகத்திலோ அல்லது உடலின் வேறு அங்கங்களிலோ காயம் அல்லது வெட்டுப்பட்ட தழும்பு இருந்தால், அதைப் பார்க்கும் பொழுதெல்லாம்,”தோற்றத்தில் அழகு குறைகிறதே” என்று ஆதங்கப்படுகிறோம், அங்கலாய்க்கிறோம்.
ஆனால் ஒரு தழும்பைப் பார்த்து நாம் அதிசயிக்கிறோம், பக்திப் பரவசமும் அடைகிறோம். ஈஸ்வரனின் லிங்கத் திருமேனியில் உள்ள தழும்பைக் காணும் போதுதான் அந்தப் பரவசம். ஏனெனில், அதன் பின்னணியில்தானே தல வரலாறே உள்ளது! அத்தகைய வரலாறு கொண்டதுதான் இரும்பை எனும் இடத்தில் உள்ள ஸ்ரீமதுசுந்தரநாயகி சமேத ஸ்ரீமகாகாளேஸ்வரர் ஆலயம்.
இக்கோவில் மிகப் பெரியது. ஆலயத்தில் நுழைவதற்குமுன் வெளிப்பக்கம் மூலமுதலான கணபதி வீற்றுள்ளார். இவருக்கு முதல் வணக்கத்தை செலுத்தி விட்டு உள்ளே நுழைந்தால், கொடி மரத்தின் கீழ் ராஜ கணபதி நம்மை வரவேற்கிறார். கோவில் வாயிலின் உள்பக்கம் இடது- வலது புறங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரது உருவங்கள் உள்ளன. நெடிதுயர்ந்து நிற்கும் கொடிமரம். ஈஸ்வரன் சந்நிதியில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது சிலைகள் இருக்கின்றன. ஈஸ்வரனுக்கு வலது பக்கம் சோமாஸ்சுந்தர் காட்சி அளிக்கிறார். கி.பி. ஏழாம்நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலிது.
மூலவர் ஸ்ரீமகாகாளேஸ்வரர், லிங்க வடிவில் தெய்வீக தரிசனம் தருகிறார். இந்த லிங்கத்தின்மீது பிளவுபட்ட தழும்பு உள்ளது. அதன் பின்னணியில் விளங்குபவர் கடுவெளிச் சித்தர்.
கடுமையான தவ வலிமையால் சக்தி மிகப் பெற்றவர் கடுவெளிச் சித்தர். ஒருசமயம் மன்னரும் மக்களும் கூடியிருந்த சபையில், தேவதாசி நடனமாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கால் சலங்கை கழன்று விழுந்தது. இதைக் கண்ணுற்ற கடுவெளிச் சித்தர், அந்தச் சலங்கையை எடுத்து தாசியின் காலில் கட்டிவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் சித்தரை எள்ளி நகையாடி, தவறாக விமர்சித்துப் பேசினர். இதைக் கேட்ட கடுவெளிச் சித்தர் மன வருத்தமும் பெரும் கோபமும் கொண்டு லிங்கத்தின்முன் நின்று,
“வெல்லும்பொழுது விடிவேன் வெகுளியை…
செல்லும்பொழுது செலுத்திடுவேன் சிந்தையை…
அல்லும் பகலும் உன்னையே தொழுது…
கல்லும் பிளந்து கடுவெளியாமே’
என்று பாட, லிங்கம் வெடித்து மூன்று பாகங்களாகப் பிளந்தது.அதில் ஒரு பாகம் இக்கோவிலிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சென்று விழுந்ததாம். பின்னர் மீதமிருந்த இரண்டு பிளவுகளை தாமிரத் தகடு கொண்டு பொருத்தி வழிபட்டு வருகின்றனர். தகடை அகற்றினால் பிளவின் அடையாளம் தெரிகிறது.
கடுவெளிச் சித்தர் புனிதமானவர் என்பதை ஸ்ரீமகாகாளேஸ்வரரே மக்களுக்கு நிரூபித்து விட்டார் என்பதை அறியும் பொழுது, அந்த ஈஸ்வரன்மீது நமக்குள்ள பக்தியும் பெருகுகிறது; ஈஸ்வரன்மீது கடுவெளிச் சித்தர் கொண்டிருந்த அளவற்ற பக்தி பற்றியும் புரிகிறது.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் கடுவெளிச் சித்தர். இக்கோவிலின் அருகே, குளக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்துள்ளார். இவருக்கு ஆகாரம் இந்த அரச மரத்தின் பழுப்பு இலைகள் மட்டுமே. அந்த அரச மரம் இன்றும் மிகப் பசுமையாக உள்ளது. கடு வெளிச் சித்தர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மேற்கூறிய சம்பவமும் அப்போது நிகழ்ந்ததுதான்.
இக்கோவிலின் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் மகாகாளரிஷி என்பவர். இந்த லிங்கம் முப்பத்திரண்டாவது ஜோதி லிங்கமாகும். வடக்கில் உஜ்ஜயினி மாகாளம்; தெற்கில் அம்பர் மாகாளம்; இங்கே இரும்பை மாகாளம்.
இவ்வாலயத்தில் ஈசனுடன் உறைந்துள்ள மதுசுந்தர நாயகி அம்மன் கடுவெளிச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். இந்த அம்மன் மகாலட்சுமியின் பரிபூரண அம்சம் கொண்டவள். ஐஸ்வர்யம் வழங்குபவள். பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்கு இவளது சந்நிதியில் வைத்துத் தேனை வாயில் சுவைக்கக் கொடுத்தால்,அவர்களுக்குத் தெளிவான பேச்சு வரும் என்பது ஐதீகம்.
இங்கே கடுவெளிச் சித்தர் அரச மரத்தின்கீழ் தவம் செய்யும் திருக்கோலம் மிக அழகாகக் காட்சி அளிக்கிறது. இவரது தவக் கோலம் காண்பவரையும் தியானம் செய்யத் தூண்டுகிறது.
லிங்கத்தின் நேர் எதிரே நந்திகேஸ்வரர் வீற்றுள்ளார். வெளிப் பிரகாரத்தில் நர்த்தன கணபதி சந்நிதி. இதை அடுத்து தட்சிணாமூர்த்தி சந்நிதி. சற்று தள்ளி விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
வள்ளி, தேவசேனாவுடன் முருகன் இருக்கும் சந்நிதிக்கு நேர் எதிரே மயில் வாகனமும், லிங்கோத்பவர் உருவமும் உள்ளன. பிராகார வெளியில் இன்னொரு லிங்கம். நந்தி எதிர் கொள்ளக் காட்சி தருகிறார். அதன் பின் கைகூப்பி வணங்கும் பக்த ஆஞ்சனேயர், காலபைரவர் மற்றும் நவகிரகச் சந்நிதிகள் உள்ளன. விஷ்ணு, துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களைக் காண இரு கண்கள் போதாது. கோவிலின் வெளிப் பிராகாரச் சுவர் முழுவதிலும் கேரள ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஆலயத்தின் ஒவ்வொரு இடமும் மிகவும் சுத்தமாக இருப்பதால் தெய்வீகத் தன்மை ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றது.
பட்டினத்தார் திருவொற்றியூர் சென்றடையும் முன்னர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளதாக வரலாறு அறிவிக்கின்றது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமிது.
ஸ்ரீமகாகாளேஸ்வர லிங்கத்தின் பிளவு பட்ட ஒரு பகுதி, பதினைந்து கிலோமீட்டருக்கு அப்பால் சிதறியது அல்லவா? அவ்விடத்தைச் சுற்றியுள்ள பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு புல்கூட முளைக்காமல் இருக்கிறது என்பது செவிவழி செய்தியாகும்.
கடுவெளிச் சித்தர், இவ்வாலய லிங்கத்தில் ஜோதிமயமானார் என்பது குறிப்பிடத் தக்கது. தெய்வங்களின் சக்தியுடன், கடுவெளிச் சித்தரின் தவவலிமையும் நமக்குத் திருவருள் புரியும்.
இக்கோவில், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில், வானூர் வட்டத்தில் இரும்பை எனும் இடத்தில் உள்ளது.