பவள சங்கரி

இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது… மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தும் வாரம் ஒரு முறைதான் பேரக்குழந்தைகளையும்,மகளையும் பார்க்க முடியும்.

அப்படித்தான் மகள் மகிழ்ச்சியாகவா வருகிறாள்? வரும்போதெல்லாம், என் கணவர் இதை வாங்கிவரச் சொன்னார்… அதை வாங்கி வரச்சொன்னார் என்ற புலம்பல் வேறு. இவ்வளவு நாட்கள் மனைவி சமாளித்திருப்பாள் போல. ஒரு முறை கூடைதுபற்றி புகார் கொடுத்ததில்லை மகராசி…

மகள் வரும்போதே , “ அப்பா இந்த மாதம் இன்கம்டேக்ஸ்ல பணம் பிடிச்சிட்டான். செலவுக்குப் பணம் போதவில்லைப்பா.. கிரண்டர் ரிப்பேர் ஆயிடிச்சி, என்று இப்படி எதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டுதான் வருவாள். மகள் வரும்போதே இப்படி ஏதும் பிரச்சனையோடு வருவாள் என்று தெரிந்தே கையில் தயாராக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருப்பது வழமையாகிவிட்டது. இதில் மாப்பிள்ளைக்கு நேரில் வந்து கேட்பதற்கு கௌரவக் குறைச்சல் என்ற நினைப்பு வேறு…

மாப்பிள்ளையைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. மகள் மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போவாளே தவிர மாப்பிள்ளை இந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப்படுப்பதில்லை! ஏன் என்றுதான் புரியவில்லை. மனைவியை இழந்து தன்னந்தனி மரமாக மனம் நொந்து நின்ற பொழுது, ஆதரவாக தோளை அணைத்துக் கொண்டு, நாங்கள் இருக்கிறோம் மாமா மனம் தளராதீர்கள் என்று சொன்ன சமயம் எவ்வளவு தெம்பாக இருந்தது மனதிற்கு. ஆனால் அதோடு சரி , இந்த முதுமைக் காலத்தில் தனிமைக் கோலத்தில் நரகமாய்ப் போன வாழ்க்கையில் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு உற்சாகம் வரும். அன்றுதானே மகளும் பேரக் குழந்தைகளும் தன்னைப் பார்க்க வருவார்கள். இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டதே… இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஓட்டமுடியும் தெரியவில்லை.மகள் வீட்டில் போய் அவளுடம் தங்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனது ஆகட்டும் பார்ப்போம் என்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

ஏனோ அன்று ஒரே சூனியமாக இருந்தது மனதிற்கு. மகள் விட்டிற்குப் போய் குழந்தைகளுடன் சற்று நேரம் கழித்தால் தேவலாம் போல் இருந்ததோடு, மாப்பிள்ளையையும் பார்த்துவிட்டு, ஏன் தன்னைப்பார்க்க வருவதில்லை என்று கேட்டு விட்டும்வந்து விடலாம் என்று கிளம்பியாகிவிட்டது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கும் நேரம் , பஸ் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தாகிவிட்டது. மகள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டாள். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்துவிட வேண்டும் என்ற முடிவோடு கதவை நெருங்கி , அழைப்புமணியை அடிக்கப் போனவர், மாப்பிள்ளையின் குரல் உரக்கக் கேட்கவும், அதுவும் தன் பெயர் அடிபடவும், தூக்கிய கையை அப்படியே நிறுத்திவிட்டு, அமைதியாக நின்று கொண்டார்.

“ ஏய், மதி, நாளைக்காவது மாமாவைப் பார்க்க நானும் வறேனே.. அவரைப்பார்த்து மூன்று மாதம் ஆகிவிட்டதே. என்னை மட்டும் ஏன் வரவிடமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறாய்.. ஒன்னுமே புரியல எனக்கு. பாவம் மனிதர் தனியா இருந்துகிட்டு எவ்வளவு நொந்து போயிருப்பார். ஆதரவா போய் நாலு வார்த்தை பேசக்கூட விடமாட்டேங்கற.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?”

இதைக்கேட்டவுடன் அப்படியே தூக்கி வாரிப்போட்டு விட்டது. என் மகளா இப்படி.. ஏன் இப்படி செய்கிறாள்?

“ ஏங்க , நீங்க கூடவா என்னைப் புரிஞ்சிக்கல..?” என்றாள் குரல்கம்ம.

“ அம்மா இறந்த பிறகு பல முறை நானும் அவரிடம் , நம்முடனேயே வந்து தங்கிவிடும்படி சொல்லியும் அவர், பெண் வீட்டில் வந்து தங்குவது தன் தன்மானத்திற்கு இடம் கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டது உங்களுக்கும் தெரியுமில்லையா? அவருக்கு உங்க மேல உள்ள அதிகமான பாசமும் எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்காமல் ரொம்ப நாளைக்கு அவரால இருக்க முடியாது.

அது மட்டுமில்லை, அவர்கிட்ட போய் எப்பப் பார்த்தாலும் அது வேணும், இது வேணுமின்னு தொந்திரவு செய்யிறதுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. வாழ்க்கையில் தனிமை மட்டும் ஒரு சோகமில்லை, அதைவிட சோகம் தன்னால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுதான். அப்படி ஒரு நிலை வந்தால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் போயிடும். இது அவருடைய ஆயுளைக்கூட குறைக்க வாய்ப்பிருக்கு இல்லையா. அதனால்தான் என் மனதை கல்லாக்கிக் கொண்டு நான் இப்படி நடந்துக்கறேன்” என்றாள் கண்ணீர்மல்க..

இதைக்கேட்ட தந்தையின் மனம் பாகாய் உறுகித்தான் போனது. உடனே ஓடிச்சென்று தன் மகளை அள்ளி அணைத்துக் கொள்ள இதயம் துடித்தாலும், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, எதையும் கேட்காதது போன்று வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார் ஒரு முடிவோடு!

ஆம் , மறுநாள் மகள் மதிவதனி வந்து தன்னை உடன் வந்துவிடும்படி அழைக்கும் போது, தன்மானத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளுடன் சென்று கொஞ்ச நாட்களாவது தங்கி வர வேண்டும்…..

 

படத்திற்கு நன்றி :

 https://www.google.com/search?gcx=w&sourceid=chrome&ie=UTF-8&q=grandfather+and+daughter+photo

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெற்ற மனது…

  1. பெரியவரின் மனநிலையை நன்றாக எழுதி உள்ளீர்கள். நல்ல கதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.