நிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ்

கேப்டன் கணேஷ்

தாவரங்களுக்கும் உயிர் உண்டு.  அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்தவர் யார் தெரியுமா?  மார்கோனி கம்பியில்லாத் தகவல் தொடர்பை கண்டுபிடிப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அதைக் கண்டறிந்தும், புகழ் விரும்பாமல் அடக்கமாய் இருந்தவர் யார் தெரியுமா?

இன்று அவருக்கு 153 வது பிறந்த நாள்.  அவர் தான் ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ்.

ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ்

1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் மைமேன்சிங் மாவட்டம் விக்ராம்பூர் என்ற ஊரில் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி) ஜகதீச சந்திர போஸ் பிறந்தார்.  தந்தை பகவான் சந்திர போஸ்.  தாயார் பாமா சுந்தரி தேவி. பகவான் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றியவர்.

ஜகதீஷ் தனது தொடக்கக் கல்வியை ஒரு கிராமப் பள்ளியில் வங்காளி மொழியில் கற்றார்.  இதற்குக் காரணம் இவரது தந்தையான பகவான் சந்திர போஸ்.  ஆங்கிலம் கற்பதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தனது தாய்மொழியைக் கற்க வேண்டும் என்ற உறுதியான கொள்கையுள்ளவராய் இருந்தவர் பகவான் சந்திர போஸ்.

1869 ம் ஆண்டு ஹாரே என்ற பள்ளியில் சேர்ந்த ஜகதீஷ் அதன் பின் கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் பள்ளியிலும் படித்தார்.  1875ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைந்த புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்தார்.  1979ம் ஆண்டு தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார் ஜகதீஷ்.

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா இங்கிலாந்தின் நேரடி முடியாட்சியின் கீழ் வந்தது.  இந்தியாவில் நிர்வாக அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் இங்கிலாந்து நாட்டின் நேரடிப் பொறுப்பில் வந்தது.  நிர்வாகப் பொறுப்பில் இந்தியர்கள் சேர வேண்டுமானால் முதலில் இங்கிலாந்து சென்று, அங்கு நடைபெறும் இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும்.  தனது தந்தையைப் போன்றே தானும் ஒரு நிர்வாக அலுவலராக வரவேண்டும் என்று எண்ணிய ஜகதீஷ், இங்கிலாந்து சென்று இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பினார்.  ஆனால் அவரின் தந்தை அதனை விரும்பவில்லை.  தனது மகன் ஒரு ஆராய்ச்சியாளனாக, ஒரு மேதையாக வரவேண்டும் என்று விரும்பினார்.  தனது மகன் இங்கிலாந்து அரசுக்கு அடங்கி நடக்கும் ஒரு நிர்வாக அதிகாரியாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.  இதனால் ஜகதீஷ் இங்கிலாந்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.  ஆனால் துரதிருஷ்ட வசமாக உடல் நலமின்மை காரணமாக அவரால் அப்படிப்பைத் தொடர முடியவில்லை.

ஜகதீஷின் சகோதரியின் கணவர் ஆனந்த மோகன் (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய மாணவர்) அவர்களின் சிபாரிசால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானப் படிப்பில் சேர்ந்தார்.   1884ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞானப் பட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.  அப்போது அவருக்கு ஆசிரியராக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் சர் ஃபிரான்ஸிஸ் டார்வின்.  ஆம்.  நீங்கள் யூகித்தது சரிதான். ஃபிரான்ஸிஸ் டார்வின், பரிணாம வளர்ச்சியை உலகிற்குச் சொல்லிய சார்லஸ் டார்வினின் புதல்வர்.  ஜகதீஷ் இங்கு பயின்ற போது தான் இந்தியாவின் முதல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை பின்னாளில் நிறுவிய ஆச்சார்ய பிரஃபுல் சந்திரா ரே -யுடன் நட்பு பூண்டார்.  இருவருக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது.  அதே பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1885ம் ஆண்டு இந்தியா திரும்பிய ஜகதீஷ் சந்திர போஸ், கொல்கத்தா ஹிந்து கல்லூரியில் (இன்றைய Presidency University, Kolkata) இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  அப்போதைய கல்லூரி முதல்வர் சி.எச். டானி (C. H. Tawney), ஜகதீஷ் பணியில் சேர்வதை கடுமையாக எதிர்த்த போதும், அன்றைய இந்திய வைஸ்ராய் ரிப்பன் பிரபு வின் தலையீடு காரணமாக அமைதியானார்.

பணியமர்த்துவதில் வைஸ்ராயின் தலையீடு இருந்தாலும், பணிபுரிவதென்னவோ ஜகதீஷ் தானே?  பல சங்கடங்களை சந்தித்தார் ஜகதீஷ்.  ஆராய்ச்சி செய்வதற்குரிய சோதனைச்சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை.  மேலும், ஜகதீஷ் ஒரு இந்தியர் என்று காரணம் காட்டி, நிறவெறி அடிப்படையில், அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தையும் குறைத்து, ஜகதீஷை அலைக்கழித்தது அன்றைய கல்லூரி நிர்வாகம்.  அன்றைய தேதியில், இந்தியாவில் பணிபுரியும் ஒரு ஆங்கிலேயப் பேராசிரியர் ரூ. 300 -ஐ மாத ஊதியமாகப் பெறுவார்.  இந்தியப் பேராசிரியர்களின் ஊதியம் வெறும் ரூ. 200 மட்டுமே.  ஆனால் ஜகதீஷ் சந்திர போஸின் நிலையோ அதைவிட மோசம்.  அவருக்கு வெறும் ரூ. 100 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது.

ஆனால் ஜகதீஷ் சந்திர போஸ் தான் ஒரு தன்மானச் சிங்கம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். தனக்கு வழங்கப்பட்ட ரூ. 100 மாத ஊதியத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்தார்.  ஆனாலும் தனது கற்பிக்கும் கடமையையும், தனது ஆராய்ச்சியையும் அவர் விடவில்லை.  ஒன்று இரண்டு மாதங்கள் அல்ல.  முழுமையாக மூன்று ஆண்டுகள் ஜகதீஷ் ஊதியம் பெற்றுக் கொள்ளாமலேயே ஊக்கத்துடன் தனது பணிகளை செவ்வனே செய்துவந்தார்.  (இன்றைய இளைஞர்கள் போல அவர் வெளிநாட்டிற்கு ஓட வில்லை!) அவரது பிடிவாதத்தையும், கடமையில் கண்ணாக இருப்பதையும் கண்ட அதே கல்லூரி முதல்வர் தனது செயலுக்காக வெட்கினார்.  போஸிடம் மன்னிப்புக் கோரினார். அதுமட்டுமின்றி மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான (ரூ. 300 பிரதி மாதம் வீதம்) ஊதியத்தையும் மொத்தமாக வழங்கி போஸை கௌரவித்தார்.

அச்சமயத்தில் பிரஸிடென்சி கல்லூரியில் சரியான சோதனைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருந்தது.  ஒரு சிறு அறைக்குள் தான், போஸ் தனது சோதனைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.  ஒரு தட்டாரின் உதவியுடன் தனது சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்குத் தேவையான உபகரணங்களை தனது சொந்தச் செலவிலேயே செய்து கொண்டார்.  ஒரு நாள் முழுக்க தனது பேராசிரியர் பணியை திறம்படச் செய்துவிட்டு, மாலையில் தனது சிறிய சோதனைச்சாலையில் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார் போஸ்.

சந்திர போஸின் இயற்பியல் ஆராய்ச்சிகள்

மின்னியல் (Electricity), காந்தவியல்(Magnetism), மின்காந்தவியல் (Electro-Magnetism), போன்ற துறைகளில் உலகெங்கிலும் இயற்பியலாளர்கள் செய்து வந்த ஆராய்ச்சிகளையும், அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நுட்பமாக பின்பற்றி வந்தார் சந்திர போஸ்.  நுண்ணிய அலைகளைக்(Micro Waves)(அதாவது 5மிமீ குறைவான அலைநீளம் கொண்ட அலைகள்) கொண்டு ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தகவல்களை எளிதாக கடத்த முடியும்.  மேலும் இந்த அலைகளுக்கு ஒரு சுவரோ அல்லது கட்டடமோ தடையாக இருக்க முடியாது என்பதையும் கண்டறிந்தார்.  1894ம் ஆண்டு நவம்பர் மாதம், கொல்கத்தாவின் நகர்மண்டபத்தில் மீது நின்று ஒரு வெடியை வெடிக்கச் செய்து, தூரத்தில் இருந்த ஒரு மின்சார மணியை ஒலிக்கச் செய்தார்.  இதன் மூலம் நுண் அலைகள் தகவல்களை சுமந்து, தடைகளைக் கடந்து, துரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு, கம்பிகளின் உதவியின்றிச் செல்லும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தினார்.  இவரின் இந்த சோதனையின் போது கொல்கத்தாவின் துணை கவர்னர் சர். வில்லியம் மாக்கென்ஸி உடனிருந்தார்.

இதே போன்ற ஒரு சோதனையை ஒரு ருஷ்ய விஞ்ஞானியும் செய்தார்.  ஆனால் அது நடந்தது 1895ம் ஆண்டு டிசம்பர் மாதம்.  ஆகவே முதன் முதலில் கம்பியில்லாத் தொலைத் தொடர்பு முறையை (Radio Signalling) உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்!

இத்தோடு நில்லாமல், நுண் அலை உணர்வுக் கருவி (Micro Wave Detector) செய்வதில், உலகிலேயே முதன் முறையாக குறைகடத்தி(Semi-Conductors) மற்றும் குறைகடத்திகளால் ஆன படிகங்களை(Crystals)யும் பயன்படுத்தி வெற்றி கண்டார் ஜகதீஷ் சந்திர போஸ்.

1977ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற சர் நேவில் மோட், ஜகதீஷின் இயற்பியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்:  “ஜகதீஷ் சந்திர போஸ் தனது சம காலத்தவர்களை விட 60 வருடங்கள் முன்னோடியாக இருந்தார்!”.  90 ஆண்டுகளுக்குப் பின் வந்த இந்த ஒரு கூற்றே, ஜகதீஷ் சந்திர போஸின் திறமைகளுக்கு சாட்சி.

சந்திர போஸின் தாவர ஆராய்ச்சிகள்

தாவரங்களின் வேரிலிருந்து மேல் நோக்கி வளரும் தன்மை, மின் அதிர்வுகளுக்கு தாவரங்கள் தரும் பதில்வினை (Response) ஆகியவை பற்றி போஸ் செய்த ஆராய்ச்சிகளைக் கண்டு இன்றைய தாவரவியல் ஆய்வாளர்களும் வியந்து போகின்றனர்.  மின் அதிர்வு மட்டுமின்றி தாவரங்கள் வேதிப்பொருள் தூண்டல், நுண் அலைத் தூண்டல், வெப்பநிலைத் தூண்டல் போன்றவற்றிற்கும் பதில்வினைகள் தரும் இயல்புடையவை என்பதை நிரூபித்தார்.  “தாவரங்களும் உணர்வுள்ளவை.  அவைகளும் வலியை உணரும் திறன் கொண்டவை.  நமது அன்பினையும் உணர்பவை” என்றார் ஜகதீஷ் சந்திர போஸ்.

போஸ் கண்டறிந்த உலோகங்களின் பதில்வினை

ஒரு உயிரியல் ஆய்வாளரோ அல்லது ஒரு தாவரவியல் ஆய்வாளரோ, ஒரு முயல் குட்டியையோ அல்லது ஒரு தாவரத்தையோ, தனது ஆய்வுகளில் எப்படி கையாளுவாரோ, அப்படியே உலோகங்களையும் கையாண்டார் போஸ்.

விலங்குகளின் தோல், தாவரங்களின் தண்டு மற்றும் உலோகத் தகடுகளை தனது சோதனைகளில் பயன்படுத்தினார் போஸ்.  இயக்கத் தூண்டல் (Mechanical), வெப்பநிலை மாறுபாட்டுத் தூண்டல் (Thermal), வேதிப்பொருள் தூண்டல்(Chemical) மற்றும் மின் தூண்டல் (Electrical) ஆகிய சோதனைகளுக்கு உட்படுத்தி தோல், தண்டு மற்றும் தகடு ஆகிய மூன்றுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான பதில்வினைகள் தந்ததை தனது ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தினார் போஸ்.  அவரது ஆய்வின் படி உயிருள்ளவை, உயிரற்றவை இரண்டுமே குளிரில் நடுங்கும், மது குடித்தால் மயங்கும், அதிக வேலை செய்யும் போது களைக்கும், மயக்க மருந்தினால் மயங்கும், நஞ்சால் உயிர் விடும் என்ற உண்மையை உலகிற்குச் சொன்னவர்.  ”தொடர் தூண்டல்களால் எவ்வித மாற்றமும் இன்றி இருக்கும் உயிருள்ளவை, உயிரற்றவை இரண்டுமே இறந்ததாகக் கொள்ளலாம்!” என்றார் சந்திர போஸ்.  உயிருள்ளவை இறக்கும்.  உயிரற்றவை?!!!!!!!  உயிரற்றவையும் இறக்கும் என்ற கருத்தினை தனது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்தார் ஜகதீஷ்.

செல்வம் சேர்க்க ஆர்வமில்லாத சந்திர போஸ்

ஆரம்பம் முதலே தனது கண்டுபிடிப்புக்களுக்கு காப்புரிமை பெற்று பெரும் பணம் சேர்ப்பதில் ஆர்வம் இன்றி இருந்தார்.  அவரைப் பொறுத்தவரை, தனது கண்டுபிடிப்புகளை வெளிஉலகிற்குச் சொன்னால் தான், மற்றவர்கள் அவரின் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மற்ற பெரும் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தரமுடியும் என்ற உயரிய எண்ணம் கொண்டவராக விளங்கினார்.

அதனாலேயே தனது பல கண்டுபிடிப்புகளுக்கும் அவர் காப்புரிமை கேட்டு என்றும் விண்ணப்பித்ததில்லை!  நமது இன்றைய விஞ்ஞானிகள் அவ்விதம் செய்ய தைரியம் உள்ளவர்களா?  கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

ஜகதீஷ் சந்திராவிற்காகப் போராடிய விவேகானந்தர்

தனது கண்டுபிடிப்புகளின் ரகசியங்களை எப்போதும் வெளிப்படையாக அனைவருடனும் பகிர்ந்து வந்தார் ஜகதீஷ்.  ஒரு முறை பெரும் தொழிலதிபர் ஒருவர், போஸைச் சந்தித்து தனது தொழிலில் பங்குதாரராகும்படியும், பதிலாக போஸின் கண்டுபிடிப்புகளை தனது தொழிலில் உபயோகிப்பதாகவும், இதற்காக பெரும் செல்வத்தைக் கொடுப்பதாகவும் கூறினார்.  ஆனால் ஜகதீஷ் மறுத்துவிட்டார்.  காப்புரிமை பெறுவதில் போஸுக்கு ஆர்வமில்லை.  ஆனால் அவரது நண்பர் சுவாமி விவேகானந்தர், ஜகதீஷை காப்புரிமைகள் பெறுமாறு வற்புறுத்தி வந்தார்.  ஆனாலும் போஸ் அசைந்து கொடுக்கவில்லை.  சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் முன்பாக சந்திர போஸைச் சந்தித்தார்.  அவரிடமிருந்து அவர்தம் கண்டுபிடிப்புகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.  அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை முடித்த விவேகானந்தர், தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, போஸின் ஆவணங்களைக் கொடுத்து, காப்புரிமைக்காக விண்ணப்பிக்குமாறு பணித்தார். 1904ம் ஆண்டு போஸின் கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை வழங்கப்பட்டது (எண் US 755840).  இப்படியாக விவேகானந்தரின் முயற்சிகளால் தனது கம்பியில்லாத் தொலைத் தொடர்பிற்கான காப்புரிமை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜகதீஷ் சந்திர போஸ்.

ஜகதீஷ் சந்திர போஸ் வென்ற விருதுகள்

விருதுகளுக்காக விஞ்ஞான ஆராய்ச்சி செய்யாத சந்திர போஸைத் தேடி வந்தன பல விருதுகள்.  இங்கிலாந்து அரசு வழங்கிய வீரத்திருத்தகைப் பட்டம் (Knighthood), இங்கிலாந்து அரசால் வழங்கப்படும் The Most Eminent Order of the Indian Empire, The Most Exalted Order of the Star of India ஆகிய பட்டங்கள் ஜகதீஷைத் தேடி வந்தன. (இன்றைய திரை நடிகர்கள் தங்களை ‘ஸ்டார்’ என்று அழைத்துக் கொள்வதற்கு முன் தயவு செய்து ஜகதீஷ் சந்திர போஸின் வரலாற்றைப் படிக்கவும்.  பிறகு தெரியும் உண்மையான ஸ்டார் யார் என்று!).  இது மட்டுமின்றி வியன்னா அறிவியல் கழகத்தின் உறுப்பினர், ராயல் சொசைட்டியின் உறுப்பினர், 1927ல் நடந்த இந்திய அறிவியல் கூட்டமைப்பு மாநாட்டுத் தலைவர் ஆகிய பல மரியாதைக்குரிய பதவிகளும் அவரைத் தேடி வந்தன.

  

அறிவியல் அராய்ச்சிகளுக்காக போஸ் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.  அந்நிறுவனம் இன்றும் போஸ் இன்ஸ்டிட்யூட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஜகதீஷ் சந்திர போஸை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசும், பங்களாதேஷ் அரசும் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.

இப்படி வியத்தகு பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய சர் ஜகதீஷ் சந்திர போஸ் 23 நவம்பர் 1937ம் ஆண்டு தனது 78வது வயதில் உயிர் நீத்தார்.

இந்திய கல்வியியல் மற்றும் அறிவியல் சரித்திரத்தில் சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் அத்தியாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ்

  1. அன்பின் கேப்டன் கணேஷ்,

    தக்க தருணத்தில் சர் ஜகதீச சந்திர போஸை நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுகள். அரிய தகவல்களுடன், இளமைக்கால படங்களுடனும், நல்லதொரு கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி.

  2. அன்பின் கேப்டன்,
    நாம் இருவரும் ஒரே அலை வரிசையில். நவம்பர் 30, 2011அன்று நான் எழுதிய கட்டுரையிலிருந்து:
    ‘… இவருக்கு தாவர இயல் மீதும் ஆர்வம் அதிகம். அதான் கேரட் டார்ச்சர்! 1900ம் வருடத்திலிருந்து தொடர்ந்த ஆய்வுக்களம். மனித இனத்தின் மேன்மையை பற்றி அதீதமாக எழுதப்பட்டால், ஊர்வன முதல் எந்த உயிரினமும் தாழ்ந்ததில்லை, நெல் கதிருக்கும், ஆல மரத்திற்கும், கல்லுக்கும், பாறைக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொல்வதுண்டு. அதன் ஆதாரம் 1902 ல் வெளி வந்த Jagadis Chunder Bose: Response in the Living and Non-Living என்ற நூல். இணைய தளத்தில் இங்கே. சுருங்கச்சொல்லின் அவர் நிரூபணம் செய்தவை:1. விஞ்ஞானம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை மட்டுமல்ல; 2.தாவரங்களுக்கும் நரம்பு மண்டலமுண்டு.3. தாவரங்கள் செய்தியனுப்பிய வண்ணம் உள்ளன. நமக்குத் தான் நுண்ணறிவு போதாது.4.தாவரங்களின் மரணவேதனை கடுமையானது; மின்சாரம் வெளிப்படும்.5. மேற்படி நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில், தவளையும், பல்லியும், ஆமையும், தக்காளியும், திராக்ஷையும் ஒரே மாதிரி தான் வேதனையை, வலியை உணர்த்துகின்றன என்று நிரூபித்திருக்கிறார். 6. தாவரங்கள் இசைக்கு இசைந்து வளர்கின்றன என்றார். 7.தாவரங்களுக்கு மகிழ்ச்சி, வலி, உணர்வு எல்லாம் உண்டு…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *