ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி12

அண்ணாமலை சுகுமாரன்

இளமையில் கல் என்றால் இளமையில் “கல்” போல இருக்கவேண்டும் என்றா பொருள் கொள்வோம் “கல்” என்றால் கல்வி பெறு என்றுதானே பொருள் கொள்வோம் .

ஆனால் இளமையில் கல் போல் இருந்த நம்மை நல்ல ஒரு மனிதனாக ,தேர்ந்த ஒரு கலைப் பண்புடைய அழகிய சிற்பம் போல் நம் வாழ்க்கையை அமைப்பதற்கு ,அந்தக் கல்லிலே இருந்த வேண்டாத கல்லின் பகுதியை காலம் என்னும் சிற்பி சிறிது சிறிதுசிறிதாக செதுக்கி ,சிறந்ததொரு வாழ்வியல் சிற்பமாக நமது வாழ்வை மாற்றுகிறது .

தேவை இல்லாததை சிறுகச் சிறுக நீக்குவதாலேயே வாழ்வு சிறப்புடையதாகிறது . தேவையானதை சேர்ப்பதையும், தேவை இல்லாததை நீக்குவதையும் ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு என்ற பெயரில் யாரும் சொல்லித்தராமலேயே செய்து வருகிறோம் . .

அங்ஙனமே நமது செயலில் உள்ள மாசுகளையும் , நம்மில் படிந்துள்ள மலங்களையும் நீக்கினால் வாழ்வில் இறையின் இருப்பை உணரலாம் என்கிறது இந்தக் குறள்.

 

மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக்கால் 

ஈசனைக் காட்டுமுடம்பு  

குற்றம், அழுக்கு மலம் கறை, முதலியன இல்லாத கலகமற்றத் தெளிவான,  திடமான, சஞ்சலமற்ற நல்லொழுக்கம் கடைப்பிடிக்கும் திண்மையான, ஒருமுகம் படைத்த மனத்தை அடைந்து விட்டால் அதாவது மலமற்ற மாசற்ற மனதைக் கொண்டு, அதன் மூலம் அதைக் கொண்ட இந்த உடல் மூலம் கடவுளைக் காணலாம்  என்கிறது இந்தக் குறள்.  

ஐம் பொறிகளையும் ,அந்தக் காரணங்களான மனம் சித்தி புத்தி மற்றும் அகங்காரம் எனப்படும் ”நான்” கொண்டும் அறியப்படுவது ‘இகம்’, அதாவது இவ்வுலக வாழ்க்கை சேர்ந்த கூர்த்த ஞானம் கொண்டு ‘பரம்’ உணரப் படுகிறது. 

மரத்தை மறைத்தது மாமத யானை 

மரத்தின் மறைந்தது மாமத யானை 

பரத்தை மறைத்தது பார்முதற்ப்பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம் 

என்கிறது திருமந்திரம்.  மலம் என்னும் வஸ்த்து இல்லாமல் “இகம்” என்பது இல்லை. நல்லதும் கேட்டதும் கலந்ததே வாழ்க்கை. எந்தகைய இன்பத்திலும், சிறிது துன்பம் உண்டு. வலி இல்லாமல் எந்தச் சாதனையும்  இல்லை. 

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவையும் அமிர்தமாகவும், மலமாகவும் மாறி மாறி அமைந்து வருகிறது. பிரபஞ்சம் ஓயாமல் மாறி மாறி அமைத்து வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடல் வளர்ச்சிக்குப் பயன்பட்ட பகுதி அமிர்தமாகவும், பயன்படாத பகுதி மலம் என்றும் வெளியேறுகிறது. மலம் வெளியேறா விட்டால் உடல் நலம் கேடாகும். உண்ட உணவே நஞ்சாகும். 

பருகும் நீர் அமிர்த ரூபம் ஆனது, அதில் பயன்படாத பகுதி சிறுநீர் என வெளியேறுகிறது. காற்று கரிமிலவாயு எனும் மலமாக அது பயன்படுத்தப் பட்ட பிறகு வெளியேறுகிறது.  உயிர் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது அமிர்தம், உபத்திரமாக அமைவது மலம். 

அமிர்தத்தை ஏற்றுக் கொண்டு மலத்தை வெளியேற்றுவதன் மூலம் உயிர் வாழ்க்கை உறுதி பெறுகிறது. இயற்கையின் அமைப்பிலே அமிர்தமும் மலமும் இணை பிரியாததுதான். இது போலவே நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து அனுபவங்களிலும், அமிர்தமும், மலமும் கலந்தே மனதில் பதிவாகிறது. அமிர்தத்தை ஏற்று வாழ்வின் மேன்பாடு அமைகிறது. மலம் மனதில் இருந்து வெளியேற்றப் பட வேண்டும்.

வேதாந்தத்தின் கோட்பாடு, மலங்கள் மூன்று என்கிறது. அவை மாயை, கன்மம், ஆணவம். இம் மூன்று மலங்களைப் பற்றி விவரிக்கப் புகின், அது மிக விரிவாகிப் போகும். ஆயினும் மும் மலங்களும் நீக்கப் பட வேண்டியவை. இவை நீங்கினாலேயே இறையின் இருப்பு தெளிவாகும் என்கிறது இந்தக் குறள். 

‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ‘ என்று கூறிக் கொண்டு  அடுத்தப் பகுதியை விரைவில் பார்ப்போமா ?

பதிவாசிரியரைப் பற்றி