மனித உரிமை – கருத்துரிமை – எல்லைக்கோடு எது?

0

தலையங்கம் ( 27)

பவள சங்கரி

இன்று ஐ.நா. மனித உரிமைகள் தினம் மனித உரிமை மறுக்கப்படும் நேரங்களில் அதனைத் தட்டிக்கேட்கும் உரிமையும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடிய வழிமுறைகளும் நாம் அறிந்ததே. தனி மனித சுதந்திரமும், அதற்கான உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான தார்மீக எல்லைகளை வகுத்துக் கொண்டு, தம் எண்ணங்களோ , செயல்களோ நம் சக மனிதரின் உணர்வுகளையோ, நம்பிக்கைகளையோ பாதிக்கும் வகையில் இல்லாமல் செயல்படுவதும் அவசியமான கடமையல்லவா. 

இது போன்று கடமைகளிலிருந்து தவறக் கூடிய நேரங்களில், அதனை வரைமுறைப்படுத்தி ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகத்தானே இருக்க முடியிம்? அந்த வகையில் , பேஸ்புக், டுவிட்டர், கூகுள் , யாகூ போன்ற நிறுவனங்களின் தளங்களில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் மக்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் எவரும் காயப்படுத்துவதை தங்களால் அனுமதிக்க முடியாது என்பதால் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பில், அவர்கள் இதுதொடர்பாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டதாலும், தேவைப்பட்டால் கருத்துக்களை வெளியிடும் முன்பே, அதைக் கண்காணித்து , அடுத்தவரின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய தவறான கருத்தாக இருக்கும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அமலாக்கும் ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ளப்போவதாக கபில் சிபில் அவர்கள் அறிவித்திருப்பதையும் நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்?

சமூக இணைய தளங்களில் தங்கள் விருப்பம் போல எழுதப்படும் கோடிக்கணக்கான கருத்துக்களைக் கண்காணிப்பதோ, கட்டுப்படுத்துவதோ நடைமுறை சாத்தியமல்ல என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறியிருப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், ஏதாவது குறிப்பிட்ட கருத்து குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை உடனடியாக நீக்குவது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளதை எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை வைத்துதான் அவர்களுடைய முழுமையான சமூக அக்கறையை கணக்கிட முடியும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், இணைய தளங்களை சென்சார் செய்ய அரசு முயல்வதாக குற்றச்சாட்டு வைப்பது மட்டும் இதற்கு தீர்வாக அமைய முடியாது. இது போன்ற சமூக இணைய தளங்களை பயன்படுத்தும் நண்பர்களும் தங்கள் பொறுப்பறிந்து , சுயகட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நம் சமுதாயத்தையே, கரையான் போல மெல்ல மெல்ல அழிக்கக் கூடிய தீய சக்திகள் ஒரு புறம் வளர்ந்து கொண்டு வருவதைத் தடுக்க இயலாமல் போகும் என்பதையும் மறுக்க இயலாது. அதற்கான பல காட்டுகள் இன்று இது போன்ற சமூக இணைய தளங்களில் உலா வருவதும் நாம் அறியாததல்ல….

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சமுதாயத்தையே சீரழிக்கக்கூடிய எதை வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று முடிவெடுக்கும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்தும் உரிமையும் பொறுப்பான ஒரு அரசாங்கத்திற்கு உண்டு என்பதும் உண்மையல்லவா…?

படத்திற்கு நன்றி : http://www.ishr.ch/human-rights-day

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *