சக்தி சக்திதாசன்

கவிஞன், தத்துவாசிரியன், எழுத்தாளன், இலக்கியவாதி எத்தனை வடிவங்களில் இவ்வினிய மனிதன் என் இதயத்தினில் வலம் வருகிறான்? 

அத்தனைப் பாக்களை இத்தரை மீதினில் பத்தரை மாற்றுத் தமிழருக்காய்ப் படைத்திட்ட இக்கவிஞன் மாபெரும் அறிஞனா? முதுகலை ஞானியா? 

இல்லையே ! 

வெறும் எட்டு ஆண்டுகள் மட்டும் கல்விதனைக் கற்று எட்டாக் கவிகளுக்கெல்லாம் எட்டா வகையில் எளிமை மிகப் பாடல்களை யாத்து எத்துணைச் சாதனை படைத்த இக்கவியரசன் தனை என்னெஞ்சில் எண்ணும் வேளையெலாம் என் எண்ணம் தேனாகப் பாயும். 

நெஞ்சினைத் துயரோ, மகிழ்வோ,சஞ்சலமோ ஆட்கொள்ளும் போது எப்போதும் நான் கண்ணதாசன் எனும் ஆழியிலே ஓர் சிறு நீர்த் திவலையாகக் கலந்து விடுவேன். 

அவனது தேனினும் இனிய கானங்கள் என் நெஞ்சைத் தாலாட்டும். அவனது எளிமை மிகுந்த எழுத்து அர்த்தங்கள் பல தந்து அலைபாயும் வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றி விடும். 

இதோ நெஞ்சினில் சுரந்திடும் கவியரசரின் இனிமையான வரிகள் உள்ள‌டக்கிய அர்த்தம் பொதிந்த பாடல் ஒன்றைப் பார்ப்போமா? 

“ஆலயம்” என்னும் திரைப்படத்தில் “டி.கே.கிருஷ்ணமூர்த்தி” அவர்களின் இசையில், இன்னிசைக் குரலோன் டி.எம்.எஸ். ஐயா அவர்களின் கணீரென்ற குரலில் ஒலித்து எப்போது கேட்டாலும் என் நெஞ்சைத் தாலாட்டும் பாடல். 

ஆலயத்திற்குப் போகிறோம், இறைவனை வணங்குகிறோம் அத்துடன் எமது கடமை முடிந்து விடுகிறதா? 

ஆலயம் செல்வதும், இறைவனை வணங்குவதும் எதற்காக? 

எமது மனதில் உள்ள மனிதத் தன்மையை மேன்மைப் படுத்துவதற்காக. 

இறைபக்தியினால் மனதை மூடியிருக்கும் அசுத்தம் என்னும் இருளை அகற்றி மனித உணர்வினை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காகவே ஆலயம் செல்கிறோம். 

இந்த ஆழ்ந்த தத்துவத்தை இந்த அற்புதக் கவிஞன் எத்தகைய அழகிய வரிகளுக்குள் புதைத்து வைத்திருக்கிறான் பாருங்கள். 

கோவில் என்பதும் ஆலயமே

குடும்பம் என்பதும் ஆலயமே

நாணயம் என்பதும் ஆலயமே

நன்றியும் இறைவன் ஆலயமே

 

கோவில் என்பதும் ஆலயமே

குடும்பம் என்பதும் ஆலயமே

நாணயம் என்பதும் ஆலயமே

நன்றியும் இறைவன் ஆலயமே 

ஆலயமே ! ஆலயமே ! ஆலயமே ! 

ஆலயத்தின் வரைவிலக்கணத்தை இதை விட அழகாய் யாரால் கூறி விட முடியும். குடும்பப் பராமரிப்பை ஒதுக்கியவர்கள், நாணயம் தவறி நடந்தவர்கள், நன்றியை அற‌வே மறந்தவர்கள் பலரை நான் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்கள் கோவில், குளம் என்று அலைவதையும் கண்டிருக்கிறேன். அத்தகையோரின் வழிபடுதல் எவ்வகையான பலனையும் தராது என்பதனை எத்தனைத் துல்லியமாகக் கூறுகிறார் கவியரசர். 

உழைக்கும் கைகள் எங்கே ?

உண்மை இறைவன் அங்கே

உழைக்கும் கைகள் எங்கே ?

உண்மை இறைவன் அங்கே

அணைக்கும் கைகள் யாரிடமோ

ஆண்டவன் இருப்பதும் அவனிடமே !

ஆலயமே ! ஆலயமே ! ஆலயமே ! 

உழைக்காமல் சோம்பேறித்தனமாக மற்றையோரின் இழைப்பைச் சுரண்டி வாழ்வோர் எத்தனை ஆலயங்கள் சென்று தொழுதாலும் பயனடைவது சாத்தியமா?

பதைக்கும் நெஞ்சுடன் கண்ணீர் சிந்தும் மனிதனைக் கண்டும் காணாமல் போகும் ஒருவன் ஆலயம் சென்றும் இறைவனைக் காணப் போவதில்லை. ஆனால் கண்ணீரைத் துடைக்கும் கைகள் மட்டுமல்ல அக்கண்ணீரைக் கண்டதும் அதைத் துடைக்க வேண்டும் என ஆதங்கம் பொங்கும் இதயத்தைக் கொண்டவர்கள் ஆலயம் செல்லத் தேவையில்லை ஏனெனில் ஆண்டவன் அவர்கள் மனங்களில் அல்லவா குடி கொண்டு இருக்கிறான்.

வாழ்க்கையின் தத்துவத்தை இதை விட  அழகாக, எளிமையாக யாராலும் கூறி விட முடியுமா? 

கொடுத்தால் உண்டாவது தர்மம்

எடுத்தால் உண்டாவது பாவம்

கொடுத்தால் உண்டாவது தர்மம்

எடுத்தால் உண்டாவது பாவம்

மனதால் இன்னொருவன் பொருளை

நினைத்தால் உன் நிம்மதி மறையும்

பயிலும் பள்ளி கோயில்

படிக்கும் பாடம் வேதம்

நடக்கும் பாதை எவ்விதமோ ?

நாளைய பொழுதும் அவ்விதமே

 

கோவில் என்பதும் ஆலயமே

குடும்பம் என்பதும் ஆலயமே

நாணயம் என்பதும் ஆலயமே

நன்றியும் இறைவன் ஆலயமே 

ஆலயமே ! ஆலயமே ! ஆலயமே !

கருணையையும், பேராசையையும் இத்தனை அழகாகக் கவியரசரால் தான் விளக்க முடியும். அது மட்டுமா?

கல்வி பயிலும் பள்ளிக்குக் கொடுக்கும் மதிப்பு ஆலயத்துக்குக் கொடுக்கும் மதிப்புக்குச் சமம் என்பதனையும், ஒரு பாடத்தின் முக்கியத்துவத்தை அதனை வேதத்திற்கு ஒப்பிடுவதன் மூலமும் எப்படி தெளிவு படுத்தியிருக்கிறார் பார்த்தீர்களா?

மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசைக்கேற்ப குருவிற்குப் பின்னே அக்குருவால் அறியத் தரப்படுபவரே ஆண்டவன் என்னும் கருத்தை அழகாய் இங்கே தன் வரிகளுக்குள் அடக்கி வைத்துள்ளார் இந்த அடங்காத் தமிழர் கவியரசர். 

ஒருவனின் எதிர்கால வாழ்க்கை அவன் தன் வாழ்வை வாழ்ந்திடும் முறையிலேயே தங்கியிருக்கிறது என்பதனை இரண்டு வரிகளில் இனிமையாக இவரைப் போலக் கூறிவிட முடியுமா? 

என் மனதின் ரணங்களை ஆற்றும் களிம்புகளில் இவ்வரிய பாடலும் ஒன்றாகிறது.

மீண்டும் ஒருமுறை கவிய‌ரசரின் நினைவுகளுடன் சந்திக்கும்வரை..

 

படத்திற்கு நன்றி: http://www.hummaa.com/music/artist/Kannadhasan/17651

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *