அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்

சித்திரை சிங்கர்

பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டுக்குள் வந்ததன் விளைவாகத்தான் நமது சென்னை மாநகரில் உள்ள கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் இப்போது கண் கொள்ளாக் காட்சியாக புதிய புதிய கட்டிடங்களுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரையில் இங்கு சிறு சிறு தொழிற்கூடங்கள் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன என்பதை எதாவது பத்திரிக்கைகள் கண்டுபிடித்து எழுத வேணும். சாதாரண +2 முடித்த பெண்கள் எல்லாம் இன்று இப்பகுதிகளில் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் பெரும் வகையில் இயங்கும் அந்நியநாட்டு நிறுவனங்களை நாம் அனுமதிப்பதில் என்ன தவறு…? நமது இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக மேல் படிப்பு முடித்தவர்கள் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது உண்மைதானே…! என்னதான் கல்வியறிவில் நமது நாட்டுப் பெண்கள் முன்னேறிய போதிலும் அவர்களது திறமைகள் வெளிப்படாமல் இருந்த நிலையில், இப்போது நமது நாட்டில் பெண்களின் வேலை வாய்ப்புகளில் வளர்ச்சியடைந்து அவர்கள் கை ஓங்கி இருக்க முக்கிய காரணமே இந்த அந்நிய நாட்டு நிறுவனங்களின் வருகைதான் என்பதை நாம் யாரும் மறக்க முடியாது. இப்போது, சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் அனைத்தும் சிறப்பாக அதுவும் குறிப்பாக சென்னை மகாபலிபுரம் செல்லும் சாலைகளில் உள்ள பகுதிகள் முன்னேற்றம் அடைந்ததற்கு இந்த பன்னாட்டு நிறுவனங்களின் படை எடுப்பே என்பது உண்மைதான். இந்த பன்னாட்டு நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களில் அவர்கள் பார்க்கும் வேலைக்குப் பாதுகாப்பு கிடையாது என்பது நாம் நினைவில் வைத்துக் கொள்ளகூடிய முக்கியமான செய்தி. திடீரென இதுபோன்ற நிறுவனங்களில் வேலையினை விட்டு நிறுத்துவது என்பது சர்வ சாதாரணமே. இருந்தாலும்,இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களினால் நமது அரசுக்கும் நமது நாட்டுக்கும் ஓரளவு வருமான விசயத்தில் நன்மைதான் என்றாலும் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்” என்ற உண்மையினை நமது மத்திய அரசு உணர வேண்டும்.

சில்லறை விற்பனையில் அந்நியநாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் உண்டான விளைவுகளுக்கு, இந்த வெளி நாட்டு நிறுவனங்களின் குளிர்பான வரவுகளின் காரணமாக காணமல் போன நமது நாட்டு ” குளிர்பான நிறுவனங்களே” சாட்சி. சாதாரண குளிர்பானத்துக்கே இந்நிலை என்றால் மற்ற பொருட்களின் சில்லரை விற்பனைகளிலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்தால் நாட்டின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறிதான்…? நாட்டில் உள்ள அனைத்து பகுதி வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக இப்போது இந்த விஷமான விசயத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்துள்ளது மத்திய அரசு என்பதுதான் உண்மை. மீண்டும் நேரம் பார்த்து இதை வெளிக்கொணர மத்திய அரசு கண்டிப்பாக முயற்சி செய்யும் என்பது நடைமுறையில் உள்ள உண்மை. அன்று ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட முன் நின்று வெற்றி கண்ட காங்கிரஸ் கட்சி இப்போது அதே ஆங்கிலேயர்களை உள்நாட்டு சில்லறை சந்தையிலும் முதலீடு செய்ய வரவேற்பது வேடிக்கையாக உள்ளது. இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதை மறந்து விட்டார்களா…? இல்லை… அன்று கிழக்கிந்திய கம்பெனிகள் வியாபார வழியாக உள்ளே நுழைந்து நாட்டை அடிமைப்படுத்தியது போல மீண்டும் தங்கள் கைவரிசையினை காட்ட அந்நிய நாட்டின் அலுவலகங்களுக்கு உதவி செய்யப் போகிறார்களா..? மத்திய அரசுதான் இதில் உறுதியாக இருந்து அந்நிய சக்திகளை முறியடிக்க வேண்டும். மொத்தத்தில் சில்லறை வியாபாரத்தில் அந்நிய நாட்டு நிறுவனங்கள் வருவதை நாம் கண்டிப்பாக தடுக்கவேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பு வியாபார மக்களின் ஆசை.மேலும், எந்த ஒரு விசயத்திலும் கொஞ்சம் கட்டுபாடுகள் வேண்டும். ஓரளவுக்கு மேல் நமது நாடு வியாபாரங்களில் குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது காலப்போக்கில் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தாகவே முடியும். தகுந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்டு எந்த ஒரு அரசியல் கட்சிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் தகுந்த திட்டமிட்டு இந்த பன்னாட்டு நிறுவனங்களின் அனுமதிகளை முறைப்படுத்த வேண்டும் என்பதே இந்திய குடிமக்களின் விருப்பம். குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. கடமையினை செய்யுமா நமது இந்திய அரசு…?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.