நதி
முனைவர் ச.சந்திரா, கிருட்டிணன்கோவில்
நாகரீகத்திற்கு தாயகமாம் நதி நங்கையே!
நீ அருவித்தாய் மேல் சினம் கொண்டாய்!
பாறை கடந்தாய்! பாதை மாறினாய்!
மண்ணைத் தேடிவந்து முத்தமிட்டு
மணவாளனாக்கி மாலையும் சூடினாய்!
மண்ணோடு ஊடல்புரிந்த நீ
கரையோர கூழாங்கற்களுடன் சரசமாடினாய்!
இடையிடையே நாணலைத் தழுவிச்சென்றாய்!
சோலைகள் பல காவலிருந்தும்
கழிவு நீருக்கு இடம் கொடுத்து கற்பிழந்தாய்!
நதியே! சிலவேளை கற்காலக் காரிகையாய்
இலைதழைகளை அணிந்து நடமாடுகிறாய்!
கனவுகளுக்குள் நீ மூழ்கும்போது மலர்கள் உனக்கு
ஆடை நெய்துகொடுக்க நடனமாடுகிறாய்!
அணைக்கட்டிற்குள் மட்டும்தான் நீ
அடக்கமான மங்கையாய் அமர்ந்திருக்கிறாய்!
நன்செய்யும் புன்செய்யும் உனது
இளைப்பாறும் இல்லங்களாய் இருக்க, நீயோ,
காற்றோடும் முகிலோடும் மோதி ஊருக்குள்
உலா வருகிறாய், அழையா விருந்தாளியாய்!
ஓட்டமும் நடையுமான ஓயாப் பயணம்
கடைசியில் கடலரக்கனோடு கரம் கோர்க்கத்தானா?
உன் வாழ்வை அர்த்தப்படுத்தும் நாள் எந்நாளோ?
=============================================
முனைவர் ச.சந்திரா,
தமிழ்த்துறைத் தலைவர்,
அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி,
கிருட்டிணன்கோவில், விருதுநகர் மாவட்டம்