அவர்களுக்குத் தெரியாதது
அவனி அரவிந்தன்
உச்சிவெயிலின் போது கண்பட்டையில்
முள்ளிறங்கியதைப் போல ஒரே வலி.
இடது காதுக்கடியில்
கீழ்த்தாடைக்கும் கழுத்துப் பகுதிக்கும் சமீபமாக
ஓரிரு கீறல்கள் முளைத்திருந்தன…
தொய்யும் மனதினூடே
பெருங்குன்றின் பாரமேறி
எச்சிலை விழுங்குவதற்கு
எப்போதும் சற்றுச் சிரமமாக இருக்கிறது…
இரண்டாவது காதலியுடன்
ஆற்றங்கரையில் கரைந்த கணங்களையும்
மருக வைக்கும் ஈரமணலின்
நாசியை விட்டகலாத சுகந்தத்தையும்
அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்…
என்னைச் சுற்றிலும்
உயரச் சுதந்திரம்
சீராக மறுக்கப்பட்ட சிறுபுற்கள்
வட்டப் பாதையில் நட்ட
அலங்காரச் செடிகளில்
ஒழுங்கற்று வளர்ந்த பூவினங்கள்
அதன் மத்தியில்
சிற்ப வேலைப்பாடுகளில்
சிறை கொண்டிருந்த பீடத்தில்
வெற்றுக் காகிதமும் வெறுங்கையுமாக
வீற்றிருக்கிறேன்…
என் மேல்
சனக்கூட்டம் மிதமிஞ்சிய சாலையின்
குழப்பம் பூசிய முகங்கள்
மொய்த்துப் பின் நழுவி விலகுகின்றன…
காதைக் கொடுங்கள்
அவர்களுக்குத் தெரியாததொன்றை
உங்களுக்கு மட்டும்
ரகசியமாகச் சொல்கின்றேன்
நூற்றாண்டுக் கால மனிதர்களை
அவதானித்துக்கொண்டிருந்தாலும்
இந்த நடுச்சந்தியில் எனது இருப்பின்
உணர முடியா வெறுமையைப் பதிவு செய்யவே
நான் சிலையாகச் சமைந்திருக்கிறேன்…