நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி

தி.சுபாஷிணி

பக்தா, உன் விடியல் என்னில் துவங்குகிறது என்றான் மார்கழியான் மாயக்கண்ணன். அந்தக் கண்ணனை அடைவதையே இலக்காகக் கொண்டு மார்கழி நோன்பை பாதையாக்கினாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கோதை! தான் மட்டுமல்லாது வையத்துள் வாழ்பவர்கள் அனைவரும் அவனருளை அடைய வேண்டுமென எண்ணி அனைவரையும் அழைத்தாள். மார்கழி நோன்பிருந்து திருப்பாவை சாற்றி அவன்பால் உள்ள காதலால் உள்ளம் உறுகி நாச்சியார் திருவாய்மொழி மலர்ந்தருள மாயவனும் ஆண்டாளை ஆட்கொண்டான்!

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்துவதும், அன்பு செலுத்துவதற்காக அன்பு செலுத்துவதும்தான் ஆண்டாளின் அன்பு தத்துவம். அத்தத்துவத்தின் அலை நம்மை ஆட்கொண்டு தாலாட்டி, சீராட்டி, நற்பயன்பெற விளையாமோ! சங்கத்தமிழ் மாலை பாடியவளை அன்பால் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பி எங்கள் மேல் கருணை காட்டு என்று வேண்டுவதாக அமைகிறது நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி.

நாச்சியார் என்னில் ‘தலைவி’. நம்மை அன்புபால் நடத்திச் செல்லும் தலைவிக்கு நாளொன்று ஓர் பாடல் வீதம் 30 நாட்களும் திருப்பள்ளியெழுச்சி பாட விளைந்துள்ளேன். அதை நம் வல்லமை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். வாழ்க நாச்சியார்!

1.மலர்ந்தும் மலரா மார்கழி காலை
மதி மயக்கும் கதிரவன் எழுங் காலை
மங்கையர் அனைவரும் கூடும் காலை
மாயவனைப் பாடக் கிளம்பி விட்டோம்
மெல்லவே நீ கண் மலர்ந்து
பள்ளியெழுந்து அருள்புரிவாய் நாச்சியாரே!

படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/photos.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி

 1. மார்கழி மாதத்தில் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாளை
  நினைவு படுத்தியது பல எண்ணங்களைக் கொண்டு வருகிறது.
  ஆண்டாள், மாலையை சூடிக் கொடுத்த செய்கையும் கண்ணப்பன்
  சிவனுக்குச் செய்த செய்கையும் அன்பு, பக்தி முதலியவை
  செய்யும் காரியங்களே. தான் என்னும் அகந்தையை ஒதுக்கி
  வைத்து விட்டு இறைவனிடம் தன்னை அர்ப்பணிப்பது என்ற
  நிலையை அடைய சாத்திர சம்பிரதாயங்கள் தேவையில்லை.
  ரசிகமணி டி கே சி அவர்கள் கல்கி தீபாவளி மலரில் ஆண்டாள்
  பாசுரங்களை விளக்கிவிட்டு “நம்மை ஆளத்தான் செய்கிறாள்
  ஆண்டாள்” என்று எழுதினார். கண்ணதாசனும் தன் பாடலில்
  “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
  கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்” என்று எழுதி
  தன் பக்தியைக் காட்டுகிறார்.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *