கதிர்கள்
தமிழ்த்தேனீ
ஜோதிடர்கள் மக்கள் நலன் கருதி இந்த சனிப்பெயர்ச்சியை ஜ்யோதிடரீதியாக ஆராய்ந்து 12 ராசிக்காரர்களிலும் இருக்கும் 27 நக்ஷத்திரக்காரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரும், என்னென்ன பரிகாரங்கள் செய்யவேண்டும், எந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும், எந்த தெய்வத்தை பூஜை செய்ய வேண்டும். என்னென்ன விதமாக பூஜைகள் செய்யவேண்டும் என்றெல்லாம் எழுதி மக்களை தெளிவிக்க முயல்கிறார்கள், ஆனால் ஆண்டி முதல் அரசன் வரை எல்லா மக்களுக்கும் சனிபகவான் என்றாலே தானாக பயம் வரும் என்பதே உண்மை.
சனிபகவான் எல்லா ராசிக்காரர்களையும், கோச்சார ரீதிப்படி கிரகங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு தான் மாறும் இடங்களுக்கேற்ப அந்தந்த இடங்களில் இருக்கும் போது என்னென்ன பலன்கள் தரவேண்டுமோ அந்தந்த பலன்களை எந்தவித வித்யாசமும் பாராமல். அளித்துக்கொண்டிருக்கிறான். ப்ரபஞ்சத்தின் இந்த சுழற்சியை நம்மால் மாற்றி அமைக்க முடியுமா? முடியாது! இந்தச் செய்தியை தீர்க்கமாக உணர்ந்தபின்னரும் நமக்கு என்ன கவலை, நடப்பதை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டு அமைதியாய் இருக்கலாமே.
ஆனால் முடியவில்லையே ,அதுதான் மனித குணம். தனக்குத்தானே கற்பனைகளை வளர்த்துக்கொண்டு அதிலேயே முழ்கி என்ன ஆகுமோ? என்று கவலைப்படுவது மனிதர்களின் இயல்பு. சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ ஏற்படின் அதனால் ஏற்படும் கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருக்க வீட்டிலே தர்ப்பைப் புல்லை வைப்பது நம் வழக்கம். அது போல சனிக் கோளினால் ஏற்படும் கதிர் வீச்சுக்கு மாற்றாக எதை வைத்துக்கொள்ளலாம் என்று ஆராயலாம். அதை விடுத்து எப்படிப்பட்ட பாதகங்கள் வருமோ என்று கவலைப்படுவது வீண் என்றே தோன்றுகிறது.
நம்மால் ஏற்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களால் ஏற்படும் கதிர் வீச்சையே தடுக்க நம்மால் முடியாத போது ப்ரபஞ்ச சுழற்சியில் இருக்கும் கிரகங்களின் கதிர்வீச்சை தடுக்க நம்மால் முடியுமா? பொதுவாக கிரகங்களில் சனிக்கிரகத்தை சனீஸ்வரர் என்று மரியாதையுடன் அழைக்கிறோம்.
ஈஸ்வர பட்டம் பெற்றவன் சனீஸ்வரன்.
காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது,
ஒரு முறை சிவபெருமானை சனீஸ்வரர் பிடிக்கும் வேளை வந்ததாம், அப்போது சனீஸ்வரர் சிவபெருமானிடம் சென்று வணங்கிவிட்டு இப்போது நான் உம்மைப் பிடிக்கும் வேளை வந்திருக்கிறது ஆகவே இயற்கையின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு நான் உம்மை பிடிக்கப் போகிறேன் என்றாராம்,
அதற்கு ஈசன் என்னை உன்னால் பிடிக்கமுடியாது என்று கூறிவிட்டு கையிலாயத்திலிருந்து கிளம்பி எங்கோ ஒரு பாதாளத்தில் போய் அமர்ந்துகொண்டாராம்,
சனீஸ்வரன் பிடித்து விடும் நேரம் வந்ததும் வெளியே வந்து என்ன சனீஸ்வரா என்னை உன்னால் பிடிக்க முடியவில்லையே என்றாராம்.
அதற்கு சனீஸ்வரர் சிரித்துவிட்டு இயற்கையின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது, நான் உம்மை பிடித்ததனால்தான் கையிலாயத்தில் சகல மரியாதையுடன் வீற்றிருக்கும் நீர் எங்கோ ஒரு பாதாளத்தில் போய் அமரவேண்டியதாயிற்று என்றாராம்.
ஆக ஆனானப்பட்ட ஈஸ்வரனே தப்பிக்க முடியாத சனீஸ்வரனின் பீடிப்புக்கு நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது? யாரால் நமக்கு பாதிப்பு வரும் என்று தோன்றுகிறதோ அவரிடமே சென்று ஈசா நீயே எனக்கு தெய்வம். உன் சோதனையை தாங்கும் வல்லமையை எனக்கு அருள்வாயாக என்று வேண்டிக்கொண்டு நம் வேலைகளைத் தொடர்ந்து செய்வோம்.
ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நம்மிடம் இருக்கும் பொறாமை, கோவம்,ஆத்திரம், போன்ற தீயகுணங்களுக்கும் கதிர் வீச்சு உண்டு.அவை எத்தனைப் பேரை பாதிக்கிறது என்றே தெரியாமல் நாம் அந்த தீய குணங்களுக்கு ஆட்பட்டிருக்கிறோம். நம்மால் அடுத்தவருக்கு துன்பம் தரக் கூடிய, பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தீய குணங்களை நம்மிடமிருந்து ஒவ்வொன்றாக களைவோம் என்று இந்த சனிப்பெயர்ச்சியிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
அது ஒன்றே பரிகாரம் சனிப்பெயர்ச்சியினால் நமக்கு எந்த பாதிப்பும் வராமலிருக்க
பொதுவாக நாம் செய்யும் பாவங்கள் நம்மை அறியாமல் மலைபோல் குவிந்து கொண்டே போகிறது .அந்தப் பாவங்களைக் குறைக்க சனிபகவான் நம்மை சிறு சிறு சோதனைகளுக்கு ஆட்படுத்தி நம் பாவங்களைக் குறைத்து நம்மை சமனப்படுத்துகிறான் என்பதே உண்மை. அதனால்தான் சனிபகவானுக்கு இன்னொரு பெயர் தர்மதேவதை. நம்மை நெறிப்படுத்தும் சனிபகவானைக் கண்டு பயப்படாமல் இன்றிலிருந்து அவன் தாள் பணிந்து அவனிடமே ,அவன் சன்னிதியில் தீயகுணங்களைக் களைவதாக உறுதி மொழி எடுப்போம்