நிலவொளியில் ஒரு குளியல் – 6

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_Venkateshகற்கும் அனுபவங்கள் சுகமானவையாகவும் நினைவில் நிற்பவையாகவும் சில சமயங்கள் அமைந்து விடுகின்றன. அது போன்ற ஒன்று தான் எங்கள் கிராமத்தில் நீச்சல் கற்ற அனுபவம். நீச்சல் கற்கக் கோடை காலங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பார்கள் என்று எனக்குச் சென்னை வந்த பின் தான் தெரியும். பத்து பைசா செலவில்லாமல் பல வகையான நீச்சல்கள் கற்ற, கற்பித்த அனுபவங்களை உங்களோடு இதோ பகிர்ந்து கொள்கிறேன்.

இதற்கு முன்னால் வந்த பத்திகளில் நான் குறிப்பிட்டது போன்று எங்கள் சிறிய கிராமத்தில் ஒரு அழகான குளமும் அதையொட்டி ஒரு சின்ன பிள்ளையார் கோவிலும் உண்டு. சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்த வயல்களுக்கும் அதிலிருந்து தான் பாசனம் என்பதால் சற்று நீர் வரத்து அதிகமாக இருக்கும் காலங்களும் உண்டு. உதாரணமாக ஆடி, ஆவணி மாதங்களில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டிருக்கும்.  காற்றில் அலைமோதி, பார்க்கவே ரம்யமாக இருக்கும். இந்தக் காலங்களில்தான் பொதுவாக நீச்சல் கற்றுக்கொள்வோம். குளிர், ஜலதோஷம், காய்ச்சல் இவையெல்லாம் நாங்கள் அறியாதவை. அப்படியே வந்தாலும் மருந்து மாத்திரைகள் எல்லாம் தர மாட்டார்கள். கண்டங்கத்திரி, தூதுவளை, துளசி எல்லாம் போட்டு கஷாயம் கொடுப்பார்கள். இரண்டு நாட்களில் சரியாகி விடும். அந்தக் கஷாயத்தைக் குடிக்க நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே அதைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். சரி விஷயத்திற்கு வருவோம்.

நீச்சல் கற்பவர்களுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் எதுவும் கிடையாது. முதலில் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது. ஆண்கள் என்றால் இரு காய்ந்த மட்டைத் தேங்காயில் கயிறு கட்டி இணைத்து அதை உபயோகித்து, நீச்சல் பழகுவார்கள். பெண்களுக்கு அதுவும் கிடையாது. ஒரு குடத்தை கவிழ்த்து வைத்து அதைப் பிடித்துக்கொண்டு கால்கள் அடித்துப் பழகிய பின்னர் குடத்தை விட்டுவிட்டு, கைகள் அடித்துப் பழக வேண்டும். இதற்கெல்லாம் குரு, ஆசான் யாரென்று நினைக்கிறீர்கள்? எங்களை விட இரண்டு மிஞ்சிப் போனால் மூன்று வயது பெரிய எங்கள் அக்காமார்கள் தான்.

ஒரு நல்ல நாளில் நானும் என் தோழிகளும் நீச்சல் கற்றே தீருவது என்ற வைராக்கியத்தோடு கையில் குடங்களோடு குளக்கரையை அடைந்தோம். எனக்கு சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை நந்தினி அக்கா ஏற்றுக்கொள்ள, என் தோழிகளும் அவ்வாறே ஆளுக்கு ஒரு அக்காவை பிடித்துக்கொண்டனர். கற்பவர்களை விட கற்றுக் கொடுப்பவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர்களில் யாருடைய மாணவி முதலில் கற்றுக்கொள்கிறாள் பார்க்கலாம் என்ற கவுரவப் பிரச்சனை வேறு. எனக்கு அப்போதே அடிவயிற்றில் கிலி. இவர்கள் போட்டியில் எங்கள் கதி என்ன ஆகுமோ என்ற கவலை, எனக்கு மட்டுமல்ல என் மற்ற தோழிகளுக்கும் இருந்தது என்பது அவர்கள் முழித்த முழியிலேயே தெரிந்தது. உரலுக்குள் தலையைக் கொடுத்தாச்சு. இடிக்கு பயந்தா முடியுமா? என்று என் பாட்டி சொல்லும் பழமொழியை இரகசியமாக என் தோழிகளுக்குச் சொல்லி, தைரியமூட்டினேன்(?).

குளிர்ந்த நீரில் இறங்கி, குடங்களைக் கவிழ்த்துப் போட்டு, எங்கள் ஆசான்களின் வார்த்தைக்குக் காத்து நின்றோம். நந்தினி அக்கா என்னைப் பார்த்து, “ஊம் காலைத் தூக்கி ஒரு கால் மாத்தி ஒரு கால் அடி” என்றார்கள். அவர்கள் சொன்னபடி அடிக்கத்தான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் கால்கள்தான் ஒத்துழைக்க மறுத்தன. ஒரு காலை நன்கு ஊன்றிக்கொண்டு மற்றொரு காலால் அடித்துக்கொண்டிருந்தேன் என்பது மற்ற அக்காமார்கள் என்னைப் பார்த்து சிரிக்கும் போதுதான் தெரிந்தது. என் தோழிகள் அனைவரும் கிடுகிடுவென முன்னேறி இரண்டு கால்களாலேயும் “சளார் பிளார்” என்று தண்ணீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தனர். மிகவும் அவமானமாக இருந்தது. அந்த அவமானம் தந்த வேகத்தில் நானும் இரண்டு கால்களாலேயும் அடிக்க ஆரம்பித்தேன்.

அப்படி இப்படியென இரண்டு நாட்களில் எல்லோருமே சுமாராகப் பழகிவிட்டோம். என் தோழிகள் எல்லாம் நூறு மீட்டர் தூரம் வரை அனாயாசமாக நீந்தினர். ஆனால் எனக்குப் பத்தடி தூரம் செல்வதற்குள் மூச்சு முட்டிற்று. இன்னும் வந்த நாட்களில் முங்கு நீச்சல் (under water swimming), மல்லாக்கு நீச்சல் (Breast stroke) இதெல்லாமும் பழகிவிட்டோம். அப்போதுதான் ஒரு அக்காவுக்கு விபரீதமான எண்ணம் தோன்றியது. அவர்களுக்குள் ஒரு பந்தயம் போட்டனர். என்னவென்றால் யார் முதலில் மறு கரையைத் தொடுகிறார்கள் என்பதே. மறுகரை என்பது எங்கள் கரையிலிருந்து எப்படியும் முக்கால் கிலோ மீட்டாராவது இருக்கும். தூரத்தையும் தன் இயலாமையையும் உணர்ந்த சிலர் போட்டியிலிருந்து பின் வாங்கினர். என் தோழிகளில் ஒருத்தி (பெயர் வேண்டாமே pls..), விளையாட்டுகளில் நல்ல பயிற்சி உள்ளவள், தானும் கலந்து கொள்வதாகத் தெரிவித்தாள். இதற்கு எங்கள் சீனியர் கோஷ்டியிலிருந்த ஒரு அக்காவிடமிருந்து பலத்த எதிர்ப்பு. குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகி விடுவாளோ என்ற பயம் தான் காரணம். ஆனால் நாங்கள் எல்லோரும் மிகவும் இந்தத் தீர்மானத்தை வரவேற்கவே ஒரு மாதிரி மானப் பிரச்சினையில் சரியென்று சொல்லி விட்டர்கள். போட்டியின் தீவிரம் எங்களுக்கு உரைக்கவே இல்லை. கிட்டத்தட்ட இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மாட்ச் அளவுக்கு ஓர் எதிர்பார்ப்பு.

போட்டியை உடனடியாக நடத்தக் கூடாது என்றும் முறையான பயிற்சி மேற்கொண்ட பிறகே நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி ஒப்புதலும் வாங்கி விட்டோம். போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் எங்கள் தோழிக்கு வீட்டிலிருந்து, நல்ல நல்ல தின்பண்டங்கள் எல்லாம் கொடுத்தோம், அவளுக்கு வலிமை சேர்க்க. நாங்கள் எல்லாரும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருந்தோம். அது என்னவென்றால் வேறு யாருக்கும் இதைப் பற்றிச் சொல்லவில்லை, குறிப்பாகப் பெரியவர்களுக்கு. நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. போட்டிக்கு முந்தைய நாள் யாரும் எதிர் பாராதது நடந்துவிட்டது. எங்கள் எல்லோருடைய பெற்றோர்களுக்கும் ஒரே நேரத்தில் விஷயம் தெரிந்துபோய்விட்டது. அவரவர் வீடுகளில் கிடைத்த திட்டும் ஏச்சும் போதாதென்று எங்களுடைய அம்மாமார்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அட்வைஸ் மழை வேறு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல அவர்கள் ஒரு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். அதாவது அன்று முதல் பெரியவர்கள் துணை இல்லாமல் எங்களைக் குளத்துப் பக்கம் தனியாக அனுப்பக் கூடாது என்பது தான் அது. எங்களுடைய தனி மனித உரிமையில் கை வைக்கக் கூடாது என்று எவ்வளவோ வாதாடிப் பார்தோம். அவர்கள் சர்வாதிகாரத்திற்கு முன் எதுவும் செல்லவில்லை.

எனக்கு மட்டும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. எப்படி எல்லோருடைய பெற்றோருக்கும் ஒரே சமயத்தில் தெரிந்து போனது என்பதே அது. நிச்சயமாக எங்களில் ஒருவர்தான் அந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். யார் அந்தக் கறுப்பு ஆடு? எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தேன். ஒரு வழி தெரிந்தது. அந்த யோசனையின்படி என் அம்மாவுக்கு ஜுரம் வரும் அளவுக்கு ஐஸ் வைத்தேன். காய் நறுக்கிக் கொடுத்தேன். சொன்ன வேலைகளை உடனே செய்தேன். அண்ணனோடு சண்டை போடாமல் இருந்தேன். இந்தத் தவத்தின் பயனாக, ஒருவழியாக அம்மாவிடம் வரம் பெற்று, நான் விரும்பிய விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அது வேறு யாருமில்லை. சீனியர்களோடு போட்டியில் உற்சாகமாக கலந்துகொள்ள முன்வந்த எங்கள் தோழியே தான் எல்லாரிடமும் விஷயத்தை உடைத்திருக்கிறாள். எனக்கு வந்த கோபத்தில் மற்ற தோழிகளிடம் விவரம் சொல்லி, அவளோடு ஒரு மாதம் போல பேசாமல் இருந்தோம். பிறகு நாளடைவில் எல்லாம் சரியானாலும் அந்தப் போட்டியை மட்டும் நாங்கள் மறுபடி நடத்தவேயில்லை.

இன்று அந்த நினைவுகளை உங்களோடு அசை போடுகையில், ஒரு வேளை அந்தப் போட்டி நடந்திருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்? இல்லை ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்கலாமோ? எப்படியாகிலும் அந்தப் போட்டி நடக்காதது இன்று வரை நிம்மதியாகவே இருக்கிறது.

அந்த நாளைய தண்ணீர் நினைவுகளில் நீச்சலடித்துக்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 6

  1. நீச்சல் கத்துக்கற விஷயத்த ரொம்ப அருமையாக சொன்னதற்கு பாராட்டுக்கள்.

  2. நீச்சல் செலவு இல்லாமல் கற்பது எப்படி என்று சொன்னதற்கு நன்றி. படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.

  3. குழந்தை பருவத்தில் நீச்சல் கற்று கொள்வது ரொம்ப அருமையான அனுபவம். அற்புதமாக எடுத்து சொன்னதற்கு வாழ்த்துக்கள்.

  4. ரொம்ப நல்ல எழுதறீங்க. பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *