நம்பிக்கையின் எதிரொலி

1

ச.சிறீசக்திSrisakthi_ASG

(சிறீசக்தி, கணினியில் இளநிலை, முதுநிலை, நிறைஞர் பட்டதாரி. இப்பொழுது (2010) முதுநிலைப் பொறியியலாளர் படிப்பு, எம்ஜிஆர் ஜானகி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சில ஆண்டுகள் விரிவுரையாளர். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனின் பெயர்த்தி. அவரின் நிழலில் தமிழும் சைவமும் கற்றவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், வெ.இறையன்பு ஆகியோரின் அன்புக்குரியவர். ஞானத் தேடல், இலக்கியச் சாரல் இதழ்களில் எழுதி வருபவர். சென்னையில் வசிக்கிறார்.)

வாழ்வில் பலவிதமான நம்பிக்கைகளை நாம் கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கை உண்மையானதா, உண்மை அற்றதா என்பதை ஆராயாமல் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. கண்மூடித்தனமான நம்பிக்கை என்பது பலவித துன்பங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். பல நேரங்களில் நமது நம்பிக்கை, வாழ்வின் உண்மைகளுக்கு அப்பாற்பட்டது. கண் மூடித்தனமான நம்பிக்கை கொண்ட மனிதன் ஒருவனைக் காண்போம்.

ஒரு கிராமத்தில் குடியானவன் ஒருவனின் வீடு, மயானத்தின் அருகே இருந்தது. தினமும் அந்த மயானத்தைக் கடந்து சென்றே அவன் தன் வீட்டை அடைய வேண்டியதாக இருந்தது. தினசரி அவ்வழியே செல்ல மிகவும் பயம் கொள்வான். அதன் காரணமாக மாலை நேரம் வருவதற்குள்ளே அவன் தன் வீட்டிற்குச் சென்று விடுவான்.

அதன் பின் எக்காரணத்திற்காகவும் அவன் தன் வீட்டை விட்டு வெளியே வர மாட்டான். அப்படி வரவேண்டிய சூழ்நிலை வந்தால், மிகவும் அச்சத்துடன் நடுங்கிக்கொண்டு வந்து தன் வேலைகளைச் செய்வான். இந்தப் பயம், மரணத்தை விடக் கொடுமையாக இருந்ததால் என்ன செய்வது என்பது தெரியாமல் இருந்தான்.

ஒரு நாள், தன் கிராமத்திற்குப் புதிதாக வந்த முனிவர் ஒருவரைச் சென்று பார்த்தான். இவன் கதையைக் கேட்டவுடன் அவர், ‘கவலைப்படாதே, இந்தா இந்தக் கயிற்றைக் கட்டிக்கொள். உன் கைகளில் இந்த கயிறு உள்ளவரை உன்னிடம் பேய்கள் வராது’ என்றார். அதை அவன் நம்பி அவ்வழியே பயமின்றிச் சென்றுகொண்டிருந்தான்.

ஒரு நாள், அவனுக்கு மற்றொரு பயம் வந்தது. இந்தக் கயிறு தன்னிடம் இருப்பதனால் தான் மயானத்தைத் தன்னால் தைரியமாகக் கடக்க முடிகிறது. அந்தக் கயிறு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? யாராவது அந்த கயிற்றைத் தன் கைகளில் இருந்து கழற்றிவிட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் பயம் கொண்டு பிதற்றத் தொடங்கிவிட்டான்.

எந்த வேலை செய்தாலும் அந்தக் கயிற்றின் மீதே தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான். உறங்கும் பொழுது யாராவது கழற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தன் உறக்கத்தை மறந்தான்.

முதலில் மயானமும் பேய்களும் தன் வாழ்வில் பயமாக இருந்தது. ஆனால் இப்போது பயத்தைப் போக்க வந்த கயிறே தன் வாழ்வாக எண்ண ஆரம்பித்தான். அவனுடைய பயமானது தொடர ஆரம்பித்தது.

மயானத்தில் இருந்த பயம், இப்போது கயிறாக மாறியுள்ளது. வேறு யாராவது அந்தக் கயிற்றின் இடத்தை மற்றொரு பொருளின் மூலம் மாற்றினால் அந்தப் பொருளின் மீது பயம் என்றாகிவிட்டது. பேய்கள், கயிறு என்று எதுவாக இருந்தால் என்ன? அவனின் பயம் மாறப் போவதில்லை.
இதற்குப் பதிலாக அவன் தன் பயத்தையே ஆராய்ந்து ஏதாவது ஒரு முடிவு எடுத்திருப்பானேயானால் அந்த முடிவு அவன் வாழ்வில் உதவி செய்திருக்கும்.

தன் மனத்தை மாற்றி நம்பிக்கைக் கொண்டு தைரியத்தை வளர்த்து வாழ்ந்திருக்கலாம்.

ஒரு கயிற்றின் மீது நம்பிக்கை கொண்டு கண்மூடித்தனமாகச் சிந்தித்ததற்கு மாறாக வீட்டை மாற்றி இருக்கலாம்.

இல்லையென்றால் வேறு ஏதாவது ஒரு வழியைச் சிந்தித்துச் செயல்படுத்தியிருக்கலாம்.

ஆனால் சற்றும் சிந்திக்காமல் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டான். நாமும் பல நேரங்களில் இப்படித்தான். சற்று நிதானமாக அமர்ந்து யோசிப்போமேயானால் உண்மை புரியும். யோசிப்போமா?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நம்பிக்கையின் எதிரொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.