சு.கோதண்டராமன் 

“நண்பர்களே, இன்று நம் பல்லிக்கூடத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் நம் இளம் மாணவனுக்கு நாம் அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளிப்போமாக.”

பல்லி ஆசிரியர் சொல்லி முடித்ததும், ஆங்காங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் ஒரே நேரத்தில் டக் டக் என்று ஒலி எழுப்பினர்.

ஆசிரியர் மாணவனை அருகில் அன்போடு அழைத்துப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்.

“தம்பி, நீ இன்று தான் முதல் முதலாக வெளி உலகிற்கு வந்திருக்கிறாய். இந்த உலகத்தைப் பற்றியும் சமூகத்தில் நமக்குள்ள கடமைகள் பற்றியும் நீ தெரிந்து கொள்வது அவசியம்,.

“இதோ பார்த்தாயா, பெரிதாக, பிரகாசமாக இருக்கிறது பார், இது தான் சூரியன். இது இப்போதுதான் மறைவிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இந்த இடத்திற்குக் கிழக்கு என்று பெயர். எதிர்ப்பக்கம் மேற்கு. வலது பக்கம் தெற்கு, இடது பக்கம் வடக்கு. இந்த சூரியன் வர வர மேலே போகும், மறுபடியும் மேற்கில் இறங்கி மறைந்து விடும். நாளை மறுபடியும் கிழக்கில் தோன்றும். இது ஒரு நாள். ஒவ்வொரு நாளுக்கும் பெயர் உண்டு. இன்று ஞாயிறு. நாளை திங்கள். அடுத்து செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று நாட்கள் வரிசையாக வரும். பிறகு மறுபடியும் ஞாயிறில் ஆரம்பிக்கும். இதை எல்லாம் நீ இன்றே நன்றாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சமூகத்தில் உன் கடமையை நன்றாகச் செய்ய முடியும்.”

“என் கடமை என்ன, சார்?”          

“நாம் மனி்த சமூகத்தோடு சேர்ந்து தான் வாழ வேண்டி இருக்கிறது. மனிதர்களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளைத் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கடவுள் நமக்குத் தான் கொடுத்திருக்கிறான். அதை அவர்களுக்கு எவ்வகையிலாவது தெரிவிப்பது தான் நம் கடமை.

“இதோ நிற்கிறானே இந்த மனிதன், இவன் முகத்தைப் பார். இவனுக்குத் தன லாபம் வரப் போகிறதென்று உனக்குத் தெரிகிறது அல்லவா? இதை அவனுக்கு முன் கூட்டியே தெரிவித்தால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான்!”

“அதை எப்படித் தெரிவிப்பது? அவனுக்கு நம் மொழி தெரியுமா?”

“கவலைப்பட வேண்டாம். கிழமையையும் திசையையும் வைத்து அவன் நாம் சொல்வதைப் புரிந்து கொள்வான்.”     

“இன்று ஞாயிறு அல்லவா? இந்த மனிதனுக்கு வடக்குத் திசையில் போய் இருந்து கொண்டு ‘டக் டக்’ என்று ஒலி எழுப்பு. அவன் பஞ்சாங்கத்தைப் பார்த்து தனக்குத் தனலாபம் வரப்போகிறதென்று தெரிந்து கொள்வான்.”

“சார், ஒரு சந்தேகம். இப்பொழுது இங்கு இன்னொருவர் வந்து விட்டார். நான் வடக்குத் திசையில் போய் நின்று ஒலி எழுப்பினால் அந்த இரண்டாவது மனிதரும் தனக்குப் பணம் வரப் போகிறதென்று தவறாக நினைத்து விடுவாரே?”

“அதற்காகத் தான் கடவுள் இன்னொரு வழி ஏற்படுத்தி இருக்கிறார். யாருக்குத் தனலாபமோ அவனுடைய கீழ் உதட்டில் போய் நீ விழுந்து விடவேண்டும். இப்பொழுது சந்தேகம் வரவே வராது. அதற்காக நீ குறி பார்த்துச் சரியான இடத்தில் விழுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.”

 “உதட்டில் விழுந்தால் அவன் என்னை விழுங்கி விட மாட்டானா?”

“மாட்டான். மனிதர்கள் நம்மைக் கண்டு பயப்படுவார்கள். நீ உதட்டில் விழுந்த அதே கணத்தில் அவன் பதறி அடித்துக் கொண்டு உன்னைக் கீழே தள்ளிவிடுவான். நீ அவர்கள் சாப்பிடும் உணவில் விழுந்ததாகச் சந்தேகம் வந்தால் போதும், உணவைக் கீழே கொட்டி விடுவான்.”  

“சரி சார்.”

“நல்லது, இன்றைக்குப் பாடம் போதும். நீ நாளைக்கு வா. எந்தெந்தப் பலன்களுக்கு எந்தந்தத் திசையில் எந்தெந்தக் கிழமைகளில் சத்தம் போட வேண்டும் என்றும் எங்கெங்கே விழ வேண்டும் என்றும் சொல்லித் தருகிறேன்.”

“வணக்கம் குருவே, போய் வருகிறேன்.“

 

படத்திற்கு நன்றி: http://www.kanavy.com/kanavy_ulakam/kandupidipukal/palli.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.