புத்தாண்டில் புத்துணர்வுச் சிந்தனைகள்!

1

பவள சங்கரி

புத்தாண்டு வந்தாலே நாம் பல உறுதி மொழிகளை எடுக்க எண்ணுகிறோம். அதில் சிலவற்றை நிறைவேற்ற முயற்சித்தாலும், பல முயற்சிகள் செயல்படுத்துவதில் தாமதமும், தொய்வும் ஏற்பட்டு வருட இறுதியில் வலுவிழந்து போவதும் உண்டு. ஆனாலும் சில முக்கியமான உறுதி மொழிகள் நம் அடிப்படை குணங்களில் ஒரு சில மாற்றங்களையாவது கொண்டுவரத்தான் செய்கின்றன. உதாரணமாக வாழ்க்கையில் இனி ஒருவர் மீது குறை சொல்வதோ அன்றி அதிகம் கோபம் கொள்வதோ அறவே விட்டொழிக்கப் போகிறேன் என்ற உறுதிமொழி எடுக்கும் போது அதை முழுமையாக நிறைவேற்ற இயலாவிட்டாலும், அடுத்தவர் மீது கோபம் கொள்ளவேண்டிய சூழ்நிலை வரும்போது நம் உறுதி மொழி அதனை எல்லை மீறாமலாவது காக்கலாம். நாளடைவில் நம் அடிப்படைக் குணத்தில் சிறுசிறு மாற்றங்களும் ஏற்படுத்தலாம். இவையனைத்தும் நாம் அந்த உறுதி மொழிக்குக் கொடுக்கப் போகும் முக்கியத்துவம் பொறுத்தே உள்ளது.

நம் அடிப்படைக் குணங்களில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய இத்தகைய உறுதிமொழிகள் நம் வாழ்க்கையையே மாற்றக் கூடியதாக இருக்கலாம். நல்ல நண்பர்களின் அன்பும், உறவினர்களின் நெருக்கமும் நம்மை பல சாதனைகளும் செய்ய வைக்கக் கூடியதாகவும், அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் அமையலாம்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு.

”என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே” என்று மொழிந்த, சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறம், ஆன்ம நேயம், மருத்துவக் கூறுகள் என அனைத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ள, கலைக்களஞ்சியம் என்ற பேறு பெற்ற திருமூலரின் திருமந்திரம் என்னும் மூவாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்…

” ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” ( பாடல் – 2104) என்றும்,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே (724)
என்றும் வாழ்வியல் கருத்துக்களை நயம்பட எடுத்துரைத்த அச்சித்தர் பெருமான்,

 

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
(திருமந்திரம் : -270)

அன்பே சிவம் , அன்பு மட்டுமே தவம், அன்பில்லாமல் இந்த உலகில் எந்த உயிரும் இல்லை. அன்பு மட்டுமே நித்தியம். வேறுபாடு இல்லாத ஒரே தன்மையதாய் உள்ள அந்த அன்பையே இவ்விடம் திருமூலரும் குறித்துள்ளார்.

காரைக்கால் அம்மையாரும் , இறைவனிடம் “ இறவாத இன்ப அன்பு” வேண்டும் என்ற வரமே வேண்டினார். அதாவது தீமை இல்லாததும், என்றும் நீங்காமல் நிலைத்து நிற்கக்கூடியதுமான அந்த அன்பே பேரின்பம் என்பதையே அவர் வேண்டுதல் உணர்த்துகிறது.

http://youtu.be/Bk3I9Pjhh_E

மனித வாழ்க்கை என்பது நிலையானதல்ல. இயற்கை மட்டுமே என்றுமே அழியாத நிரந்தரம்….
ஆல்ஃபிரெட் டெனிசன் என்ற ஆங்கிலக்கவியின் “For Men May Come And Men May Go, But I Go On Forever.” என்ற புகழ்பெற்ற கவிதையும் பெரும் வாழ்வியல் தத்துவம் நிறைந்தது என்றால் அது மிகையாகாது.

மலையிலும் பள்ளத்தாக்கிலும், குன்றிலும், குன்றின் முகட்டிலும், நாட்டிலும், காட்டிலும், பலப்பல பாலங்களிலும், ஆர்ப்பரிக்கும் ஆற்றில் கலக்கும் பொருட்டு , வளைந்து, நெளிந்து ஓடி ஓடி வருகிறேன்… மக்கள் வருவார்கள், போவார்கள், ஆனாலும் நான் மட்டும் போய்க்கொண்டே இருக்கிறேன். கல்லிலும் முட்டி மோதி, ஓயாமல் ஓசையிட்டுக்கொண்டு , பொங்கி, நுரைத்து, தோட்டத்திலும், வயல்வெளிகளிலும், செடிகளினூடேயும், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் கீழும் கூட முணுமுணுப்புடன் ஓடுகிறேன்…..
மனிதர் வரலாம், மனிதர் போகலாம், ஆனால் நான் மட்டும் எப்போதும் போய்க்கொண்டே இருப்பேனே!

http://chestofbooks.com/business/reference/Social-Business-Forms/For-Men-May-Come-And-Men-May-Go-But-I-Go-On-Forever.html

’தான்’ என்ற அகந்தை அழிந்த மனது ஆண்டவரின் ஆசனம் . அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அந்த ஆண்டவரைத் தங்க வைக்க விரும்பும் ஒருவர் தம் அகந்தைப் பேயை அறவே அழிப்பதோடு, தாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனருளாலே,அவன் தாள் வணங்கி செயலாற்றுவதாகவேக் கருதினாலும், அவரவர் எண்னம் போல் அவரவர் வாழ்வு அமைவதும் இயற்கை. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலமே வாழ்வில் அமைதியும் , நிம்மதியும் பெற முடியும் என்பதும் சத்தியம்.

இயேசுவைப் பற்றி சுப்பிரமணிய பாரதியார்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்பு காண் மரியாள் மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்,
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலேனா
ஆஹா!சாலப் பெருங்களி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்,
வண்மைப் பேருயிர்- யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியாள் மக்தலேனா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

ஒரு மனிதன் இன்னொருவருக்குக் கருணை காட்டவில்லையெனில் கடவுள் அவனுக்குக் கருணை காட்ட மாட்டார்.

மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி மனிதத் தன்மையுடன் வாழ்பவனே உண்மையான மனிதன்.
ஒரு மனிதன் மகானாக வாழாவிட்டாலும், குறைந்தபட்சம் நல்ல பண்புள்ள மனிதனாகவாவது வாழ வேண்டும்.

நல்ல அறிவுச் செல்வம் எந்த மூலையில் இருந்தாலும் அதை நாடிச் செல்ல வேண்டும்.

மௌனமாக இருப்பதை விட நல்லதை வெளியே சொல்லி விடுவது நல்லது; கெட்டதைச் சொல்வதை விட மௌனமாக இருந்து விடுவது நல்லது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!

 

https://www.google.com/search?sourceid=chrome&ie=UTF-8&q=thirumuular+photo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புத்தாண்டில் புத்துணர்வுச் சிந்தனைகள்!

  1. கெட்டதை சொல்லாமல் விட்டால், மனிதன் தன்னை திருத்திக் கொள்வது சற்று கடினம் அல்லவா? அதனால், கெட்டதை, அதன் தாக்கத்தை, மனம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அல்லது மனம் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லலாமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.